பாம்ப்பே—காலம் நகராமல் நின்ற இடம்
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
குடியிருப்பாளர்களற்ற, காலியான, கைவிடப்பட்ட ஒரு நகரத்தில், அடுப்பின்மீது வாணலிகள் வைக்கப்பட்டிருக்கும் சமயலறைகள், சாமான்கள் நிரம்பிய கடைகள், தண்ணீர் இல்லாத நீரூற்றுகள், பழுதாகாத தெருக்கள் ஆகிய அனைத்தும் இருந்தவாறே இருக்கின்றன. இதுதான் பாம்ப்பே, காலம் நகராமல் நின்றதாய் தோன்றும் ஓர் இடம்.
1,900 வருடங்களுக்கும் முன்னதாக, நேபிள்ஸ் விரிகுடாவை நோக்குவதாய் அமைந்துள்ள எரிமலையான மௌன்ட் வெஸுவியஸ், வெடித்த அந்த அழிவு நாளில் இருந்தவாறே அனைத்தும் இன்னும் இருக்கின்றன. பாம்ப்பேயையும் ஹெர்குலேனியத்தையும் ஸ்டாப்யாவையும் சுற்றுப்புறங்களிலிருந்த நாட்டுப்புறத்தையும் அதன் சாம்பலும் எரிமலைக் குழம்பும் புதைத்துவிட்டன.
பாம்ப்பே என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “பழங்காலத்திய ஜனங்கள், வெஸுவியஸின் எரிமலை இயல்பைக் குறித்து தெளிவற்று இருந்தனர்; ஆனந்தமளிக்கும் திராட்சைத் தோட்டங்களை நடுநடுவே கொண்டிருந்த காடுகளையுடைய ஒரு பசுமையான மலை என்று அதை வழக்கமாக கருதிவந்தனர்.” ஆனால் பொ.ச. 79-ல், ஆகஸ்ட் 24 அன்று, அநேக ஆண்டுகளாக உறங்கும் நிலையிலிருந்த பிற்பாடு, அந்த மலை பயங்கரமாக வெடித்து செயல்பட்டது.
பொ.ச. 79-ன் வெடிப்பு
வாயு, பாறைக் குழம்பு, டெப்ரா ஆகியவற்றை தூண் வடிவத்தில் எரிமலை வெளியேற்றியது; அவை வானத்தை இருளாக்கி, சாம்பல் மற்றும் லாபில்லியின் (எரிமலைக் குழம்பினுடைய சிறு துண்டுகள்) பயங்கரமான மழையை உண்டாக்கின. இரண்டு நாட்களுக்குள் பாம்ப்பேயும் நாட்டுப்புறத்தின் பெரும்பகுதியும் சராசரியாக இரண்டரை மீட்டர் ஆழத்துக்கு கெட்டியான பாய்வினால் மூடப்பட்டன. தீவிரமான நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்ட அதே சமயத்தில், கண்ணுக்குப் புலப்படாத ஆனால் உயிருக்கு ஆபத்தான விஷவாயுக்கள் நிறைந்த மிகப் பெரிய மேகம், நகரத்தை சூழ்ந்து, சாவுக்குரிய அரவணைப்பால் பிடித்துக்கொண்டிருந்தது. பாம்ப்பே மெதுவாக புதைந்துகொண்டுவந்த சமயத்தில், ஹெர்குலேனியம் ஒரே வினாடியில் மறைந்துபோனது. ரிஸ்கோப்ரிரா பாம்பேயி (பாம்ப்பேயை மறுபடியும் கண்டுபிடித்தல்) என்ற புத்தகத்தின்படி, ஹெர்குலேனியம் “கரைக்கு அருகாமையில் இருபத்திரண்டு மீட்டர் [72 அடி] ஆழத்தை எட்டிய சேறு மற்றும் எரிமலை டெப்ராவின்” பாய்வில் மூழ்கிவிட்டது.
சுமார் 15,000 பாம்ப்பே குடிமக்களுடைய பிரதிபலிப்புகள் பலவிதமாக இருந்தன. உடனடியாக தப்பி ஓடியவர்களால் மாத்திரம்தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. எனினும், சிலர் தங்களது வீடுகளையும் எல்லா உடைமைகளையும் விட்டுச்செல்ல விரும்பாமல், ஆபத்தைத் தவிர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அங்கேயே தங்கிவிட்டனர். மற்றவர்கள், தங்களது விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாக்கும் கவலையில் தப்பி ஓடுவதற்குமுன் தயங்கினர்; ஆனால் சாம்பல்களின் பாரத்தினால் இடிந்துவிழுந்த தங்கள் வீட்டுக் கூரைகளினால் நசுங்கிச் செத்தனர்.
ஓர் உதாரணம், தனது சொத்துக்களை விட்டுச்செல்ல மனமில்லாத “ஃபான் வீட்டின்” உரிமையாளர் ஆவார். லா வி காடிடையன் எ பான்ப்பே (பாம்ப்பேயில் தினசரி வாழ்க்கை) என்ற தன்னுடைய புத்தகத்தில் ராபர் ஏடியன் இவ்வாறு சொல்கிறார்: “அந்த வீட்டின் சொந்தக்காரி மிகவும் அவசரமாக அவளது மிக விலைமதிப்புள்ள நகைகளை—பாம்புகளின் வடிவிலிருந்த தங்க வளையல்கள், மோதிரங்கள், ஹேர்பின்கள், தோடுகள், வெள்ளிக் கண்ணாடி, பை நிறைய தங்கக்காசுகள் ஆகியவற்றை—எடுத்துக்கொண்டு தப்பி ஓட தயாரானாள்.” விழுந்துகொண்டிருந்த சாம்பலைக் குறித்து ஒருவேளை பீதியடைந்து, அவள் வீட்டிலேயே தங்கிவிட்டாள். ஏடியன் தொடர்கிறார்: “சிறிது நேரத்திலேயே, கூரை இடிந்துவிழுந்து, அந்த அபாக்கியவதியையும் அவளது பொக்கிஷங்களையும் புதைத்தது.” மற்றவர்கள், எங்கும் பரவியிருந்த விஷவாயுக்களால் மூச்சுத்திணறி செத்தனர்.
தயங்கியவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க, அதற்குள் உருவாகியிருந்த சாம்பல் பாய்வின்மீது ஓட வேண்டியதாக இருந்தது. விஷவாயுக்களால் அவர்கள் மூச்சுத்திணறி இறந்து, இடைவிடாது பொழிந்த நுண் சாம்பல் மழையினால் மூடப்பட்டபடி, விழுந்த இடத்திலேயே கிடந்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவர்களது பரிதாபப்படத்தக்க எஞ்சிய உடல்களும் இன்னும் அவற்றின் பக்கத்தில் இருக்கும் அவர்களது விலைமதிப்புள்ள பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. நகரமும் அதன் குடிமக்களும் 20 அடிகளுக்கும் அதிகமான ஆழத்தில் சாம்பலின்கீழ் புதையுண்டுபோயிருந்தனர்.
இருந்தபோதிலும், அந்த ஆபத்தான மழையின் காரணமாக நகரத்தின் குடிமக்களும்கூட மறுபடியும் தோன்றியிருக்கின்றனர். எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த பக்கத்திலுள்ள புகைப்படத்தில் அவர்களது உடல்களின் வார்ப்புருவங்களை கவனியுங்கள். அவை எவ்வாறு செய்யப்பட்டன? அழுகிய மாம்சத்தினால் சாம்பலில் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடங்களுக்குள் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸை ஊற்றுவதன்மூலம், பாதிக்கப்பட்டோரான அபாக்கியவான்களின் கடைசி சோக செய்கைகளை நாம் பார்க்கும்படி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உதவியிருக்கின்றனர்—“இளம்பெண் தனது தலையை கைகளின்மீது வைத்துக்கொண்டு கிடக்கிறாள்; தூசி மற்றும் விஷவாயுக்கள் சுவாசிக்கப்படுவதை தடுக்க இயலாத கைக்குட்டையால் ஓர் ஆள் தன் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்; ஆரோக்கிய மையங்களின் அட்டன்டன்டுகள், மூச்சுத் திணறலினால் ஏற்பட்ட இழுப்புகள் மற்றும் உதறல்களால் பார்க்க சகிக்காத விதங்களில் விழுந்துகிடக்கின்றனர்; . . . ஒரு தாய் தனது சிறுமியை கடைசி தடவையாக சோகமான, பயனற்ற தழுவுதலோடு அணைத்துக்கொண்டிருக்கிறாள்.”—ஆர்கேயோ.
ஹெர்குலேனியத்தில் பாதுகாப்பு இருக்கவில்லை
பாம்ப்பேயிலிருந்து ஒருசில கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹெர்குலேனியத்தில், உடனடியாக தப்பி ஓடாதவர்கள் மாட்டிக்கொண்டனர். அநேகர் கடற்கரைக்கு விரைந்தனர், கடல் வழியாக தப்பிப்பிழைக்கலாம் என்று ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்; ஆனால் ஒரு தீவிர கடலடி நடுக்கமானது படகுகள் கடலுக்குள் இறக்கப்படுவதை தடைசெய்தது. ஹெர்குலேனியத்திலுள்ள பூர்வ கடற்கரையில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்மூலம் 300-க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கடலை நோக்குவதாய் அமைந்துள்ள ஒரு கூரையின்கீழ் அடைக்கலம் புகுந்திருக்கையில், சேறு மற்றும் எரிமலை டெப்ராவின் பயங்கரமான ஒரு பாய்வினால் இந்த ஜனங்கள் உயிரோடு புதைக்கப்பட்டனர். இங்கேயும்கூட, அநேகர் மிக விலைமதிப்புள்ள தங்களது உடைமைகளை பாதுகாக்க முயன்றிருந்தனர்: தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், அறுவை சிகிச்சை கருவியின் ஒரு முழுத்தொகுதி—இவையனைத்தும் இன்னும் அங்கே பயனற்று, அவற்றின் உரிமையாளர்களின் எலும்புக்கூடுகளுக்கு அருகாமையில் கிடக்கின்றன.
காலம் நகராமல் நின்றது
இயற்கை சக்திகளை எதிர்ப்படுகையில் வாழ்க்கைக்கு இருக்கும் வலுவற்ற தன்மைக்கு பாம்ப்பே திறம்பெற்ற சாட்சியளிக்கிறது. மற்ற தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைப்போல் இல்லாமல், பாம்ப்பே மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களின் இடிபாடுகள், பொ.ச. முதல் நூற்றாண்டின் தினசரி வாழ்க்கையை நவீன கல்விமான்களும் ஆர்வமுள்ளோரும் ஆழமாக ஆராய்வதற்கு சுருக்கமான மனக்காட்சியை அளிக்கின்றன.
அந்த இடத்தின் செழிப்பு, வேளாண்மையின் பேரிலும் தொழிலின்பேரிலும் வர்த்தகத்தின்பேரிலும் முக்கியமாக சார்ந்திருந்தது. அநேக வேலையாட்களை பணியில் அமர்த்துவதன் மூலம்—தினமும் அடிமைகளையும் சுதந்திர ஆட்களையும் கூலிக்கு ஒப்பந்தம் செய்வதன் மூலம்—வளமான நாட்டுப்புறம் ஏராளமான விளைச்சலைக் கொடுத்தது. நகரத்தின் நடவடிக்கைகளில் அநேகம் உணவுப்பொருட்களை வாணிகம் செய்வதோடு சம்பந்தப்பட்டிருந்தது. பாம்ப்பேயை பார்க்க வரும் எவரும், சோழத்தை அரைப்பதற்கான இயந்திரசாலைகளையும் காய்கறி மார்கெட்டையும் பழ வியாபாரிகள் மற்றும் திராட்சைரச வியாபாரிகளின் கடைகளையும் இன்னும் காணலாம். வர்த்தகத்திற்காக ஒரு சமயத்தில் பயன்படுத்தப்பட்ட—கம்பளி மற்றும் நார் துணியை தயாரிப்பதற்கும் தொழில்ரீதியில் துணியை நூற்பதற்கும் நெசவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட—கட்டடங்களையும் நீங்கள் பார்க்கலாம். நகைக்காரர்களின் பட்டறையிலிருந்து இரும்புச் சாமான்கள் கடைவரையாக டஜன் கணக்கான மற்ற சிறுதொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தக் கட்டடங்கள், மற்ற வீடுகளோடு சேர்ந்து ஒரு நகரமாக செயல்பட்டன.
ஒருகாலத்தில் ஜேஜேவென்று இருந்த குறுகிய தெருக்களில் இப்போது கற்பாளங்களால் தளம் போடப்பட்டுள்ளது. அவற்றின் இருபுறங்களும் உயர்த்தப்பட்ட நடைபாதைகளையும் திறமையான நீர்க்குழாய் அமைப்பால் இயங்கும் பொதுவிட நீரூற்றுகளையும் கொண்டிருக்கின்றன. முக்கிய தெருக்களின் முனைகளில் அபூர்வமான வேலைப்பாடு காணப்படுகிறது. நவீன பாதசாரிகள் கடக்குமிடங்களுக்கு இணையாக பூர்வத்தில் உபயோகத்தில் இருந்ததுபோல், தெருக்களின் நடுவே வைக்கப்பட்டிருந்த பெரிய கற்களின் உயர்த்தப்பட்ட அடுக்குகள் பாதசாரிகள் சுலபமாக செல்வதற்கும் மழை பெய்யும்போது அவர்களது பாதங்கள் நனைந்துவிடாமலிருக்கவும் உதவியது. நகரத்தில் கட்டைவண்டிகளை ஓட்டிச்சென்றவர்கள், உயர்த்தப்பட்ட அந்த கற்களை தவிர்ப்பதற்கு கொஞ்சம் சாமர்த்தியத்தைப் பெற்றிருக்கவேண்டியதாய் இருந்தது. அவை இன்னும் இருக்கின்றன! எதுவும் மாறவில்லை.
தனிப்பட்ட வாழ்க்கை
பாம்ப்பே மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சூழ்ந்திருந்த கட்டுப்பாடும்கூட நவீன காலங்களிலுள்ள ஜனங்களால் உற்றுநோக்கப்படுவதை தடுக்க முடியவில்லை. சிப்பாய்கள் வசிக்கும் இடத்திலுள்ள சண்டைவீரனின் கரங்களில் மிக அழகான நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெண் இறந்துகிடக்கிறாள். வீடுகள் மற்றும் கடைகளின் கதவுகள் அகலமாக திறந்துகிடக்கின்றன. ஒருசில நிமிடங்களுக்கு முன்புதான் கைவிடப்பட்டதுபோல் சமையலறைகள் காணப்படுகின்றன; அடுப்பின்மீது வாணலிகள் வைக்கப்பட்டிருக்கின்றன, சூளையில் இன்னும் சமைக்கப்படாத அப்பம் இருக்கிறது, பெரிய ஜாடிகள் சுவரில் சாய்ந்தவாறு இருக்கின்றன. அற்புதமான ப்ளாஸ்டர் வேலைப்பாடுகள், சுவர் சித்திரங்கள், மொசைக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அறைகள் இருக்கின்றன; இங்கே செல்வந்தர் வெள்ளிக் கிண்ணங்களையும் ஆச்சரியமான நுணுக்கவேலைப்பாடுள்ள பாத்திரங்களையும் உபயோகித்து சௌகரியமாக விருந்துண்டனர். அமைதலான உட்புற தோட்டங்கள் மரங்களின் வரிசைகளால் சூழப்பட்டு, இப்போது செயலற்றிருக்கும் நீரூற்றுகளால் அழகூட்டப்பட்டிருக்கின்றன. நேர்த்தியான வேலைப்பாடுள்ள பளிங்கு சிலைகளும் வெண்கல சிலைகளும் குடும்ப கடவுட்களின் பீடங்களும்கூட காணப்படுகின்றன.
எனினும், பெரும்பான்மையோரின் வாழ்க்கைப் பாணி அதிக எளிமையாக இருந்தது. வீட்டில் சமைப்பதற்கான வசதிகளைக் கொண்டிராத அநேகர், அங்கிருந்த அநேக ஓட்டல்களுக்கு அடிக்கடி சென்றனர். அங்கே, அதிகப் பணம் செலுத்தாமல், அவர்களால் வீண்பேச்சு பேசவும் சூதாடவும் அல்லது உணவையும் பானத்தையும் வாங்கவும் முடிந்தது. இவற்றில் சில இடங்கள், மோசமான பேர்பெற்ற இடங்களாக இருந்திருக்க வேண்டும்; அங்கே வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் அளித்தபின்பு, மேசைப் பணிப்பெண்கள், அடிக்கடி அடிமைப் பெண்கள், வேசிகளாக பணிபுரிந்தனர். இவ்வகையான எண்ணமுடியாத ஓட்டல்களோடுகூட, இருபதுக்கும் அதிகமான மற்ற வேசி இல்லங்களை அகழ்வாராய்ச்சிகள் வெளிப்படுத்தியிருக்கின்றன; இவ்விடங்கள் படு ஆபாசமான சித்திரங்களாலும் எழுத்துக்களாலும் அடிக்கடி அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன.
நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே சமயம்
பாம்ப்பேயின் திடீர் அழிவு ஒருவரை யோசிக்கச் செய்கிறது. தெளிவாகவே, அங்கே அழிந்துபோன ஆயிரக்கணக்கானோர், சமீபத்தில் வரவிருந்த அழிவின் எச்சரிப்பு அடையாளங்களுக்கு—தொடர்ச்சியான நிலநடுக்கங்கள், எரிமலையின் வெடிப்புகள், பயங்கரமான லாப்பில்லி மழை ஆகியவற்றிற்கு—போதுமானளவு சுறுசுறுப்புடன் பிரதிபலிக்கவில்லை. அவர்களது சௌகரியமான வாழ்க்கையையும் உடைமைகளையும் விட்டுச்செல்ல ஒருவேளை விரும்பாததன் காரணமாக அவர்கள் தயங்கினர். ஆபத்து விலகிச்சென்றுவிடும் அல்லது நிலைமை மிக மோசமாகும்போது தப்பி ஓடுவதற்கு இன்னும் சமயம் இருக்கும் என்று அவர்கள் ஒருவேளை எதிர்பார்த்திருப்பார்கள். துக்ககரமாக, அவர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தனர்.
இன்று உலகம் முழுவதும் அதே நிலைமையில் இருக்கிறது என்பதாக வேதவாக்கியங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. நாம் வாழ்ந்துவரும் இந்த சீர்கெட்ட சமுதாயம் கடவுளிடமிருந்து பிரிந்திருக்கிறது. அது திடீரென அழிந்துபோகும் தறுவாயிலில் இருக்கிறது. (2 பேதுரு 3:10-12; எபேசியர் 4:17-19) அனைத்து அத்தாட்சிகளுமே காலம் சமீபித்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. (மத்தேயு 24:3-42; மாற்கு 13:3-37; லூக்கா 21:7-36) பாம்ப்பேயின் சோகமூட்டும் எச்சங்கள், தயக்கத்தின் முட்டாள்தனத்திற்கு மௌனமாக சாட்சியளிக்கின்றன.
[பக்கம் 24-ன் பெட்டி]
கிறிஸ்தவ சிலுவைகள்?
பாம்ப்பேயில் பேக்கரி ஒன்றின் சுவரில் ப்ளாஸ்டர் வேலைப்பாட்டாலான சிலுவை உட்பட வெவ்வேறு சிலுவைகள் மீட்கப்பட்டதானது, பொ.ச. 79-ல் நகரம் அழிக்கப்பட்டதற்கு முன்பாக கிறிஸ்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக இருப்பதாக சிலரால் விளக்கப்பட்டிருக்கிறது. இது நியாயமான ஓர் ஊகமா?
நிச்சயமாகவே இல்லை. ஆன்டான்யோ வாரோன் என்பவர், ப்ரிசென்ஸெ க்விடாயிகெ ஏ க்ரிஸ்ட்யானெ ஆ பாம்ப்பே (பாம்ப்பேயில் யூத மற்றும் கிறிஸ்தவ பிரசன்னம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு பொருளாக சிலுவை வணக்கத்தைப்பற்றி முழுமையாக” கண்டுபிடிப்பதற்கு, “நான்காவது நூற்றாண்டுவரையாக நாம் காத்திருக்க வேண்டும்; அந்தச் சமயத்தில் கான்ஸ்டென்டைன் பேரரசனும் புறஜாதிக் கூட்டத்தினரும் மதம் மாறியபோது, அவர்களது மதப்பற்றுக்கு அப்படிப்பட்ட வணக்கம் அதிக பொருத்தமாயிருந்தது.” வாரோன் இவ்வாறு கூடுதலாக சொல்கிறார்: “இரண்டாவது மற்றும் மூன்றாவது நூற்றாண்டுகளிலும் கான்ஸ்டென்டைனின் காலம்வரையாகவும்கூட அப்படிப்பட்ட ஒரு சின்னம் கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்பட்டிருந்ததைக் காண்பது மிகவும் அரிது.”
அப்படிப்பட்ட சின்னங்கள் கிறிஸ்தவ மூலத்தைக் கொண்டில்லையென்றால், அவை எவ்வாறு தோன்றின? சிலுவை என்று நினைக்கப்பட்ட இந்தச் சின்னத்தை அடையாளங்காண்பதைக் குறித்தும் அதே பேக்கரியில் சர்ப்பத்தின் வடிவிலுள்ள ஒரு தெய்வத்தின் சித்திரம் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறித்தும் சந்தேகங்கள் எழும்பியிருப்பது மாத்திரமல்லாமல், “பேக்கரியின் குத்தகைக்காரருடைய ஊகிக்கப்படும் கிறிஸ்தவ மதப்பற்றோடு ஒருபோதும் ஒத்துப்போகாத மற்ற படுமோசமான ஆபாச பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன,” என்பதாக வாரோன் சொல்கிறார். அவர் இவ்வாறு கூடுதலாக சொல்கிறார்: “நாகரிகத்தின் ஆரம்பம் முதற்கொண்டே, மீட்பின் சின்னமாக ஆவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, சிலுவை-வடிவிலான சின்னம் தெளிவாகவே மாயவித்தை மற்றும் சடங்கு முக்கியத்துவத்தோடு பயன்படுத்தப்பட்டது.” பூர்வ காலங்களில், தீய செல்வாக்குகளை விரட்டுவதற்கோ அழிப்பதற்கோ சக்திபெற்றுள்ளதாய் சிலுவை கருதப்பட்டு முக்கியமாக ஒரு தாயத்தாக பயன்படுத்தப்பட்டது என்று இந்தக் கல்விமான் விளக்குகிறார்.
[பக்கம் 23-ன் படம்]
வெஸுவியஸ் மலையைப் பின்னணியாகக் கொண்ட கலிகுலா வளைவு
[பக்கம் 23-ன் படம்]
மேலே: பாம்ப்பே குடிமக்களின் ப்ளாஸ்டர் வார்ப்புருவங்கள்
இடதுபக்கம்: நீரோ வளைவு மற்றும் ஜூப்பிட்டர் கோவிலுடைய ஒரு பகுதியின் காட்சி
[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]
Vertical borders: Glazier
Photos on pages 2 (bottom), 22, and 23: Soprintendenza Archeologica di Pompei