உலகை கவனித்தல்
மத சுயாதீனம் மேன்மைப்படுத்தப்பட்டது
தற்காப்புக் கலைப் பயிற்சியில் பங்குகொள்ள மறுத்த காரணத்தால் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான குனிஹிடோ கோபாயாஷியை வெளியேற்றுவதன் மூலம் கோப் முனிசிப்பல் இன்டஸ்ட்ரியல் டெக்னிக்கல் காலேஜ் சட்டத்தை மீறியிருப்பதாக ஜப்பானின் உச்சநீதி மன்றம் மார்ச் 8, 1996-ல் தீர்ப்பளித்தது என்பதாக டோக்யோவின் தி டெய்லி யோமியுரி அறிக்கை செய்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், ஜப்பானின் உச்சநீதி மன்றம் கல்லூரியால் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து, எதிர்கால வழக்குகளுக்கு ஒரு முன்னோடியை ஸ்தாபித்தது. (கூடுதலான விவரங்களுக்கு அக்டோபர் 8, 1995 விழித்தெழு! பிரதியைக் காண்க.) கென்டோ தற்காப்பு கலை பயிற்சிகளில் பங்குகொள்ள மாணாக்கன் மறுத்ததற்கு காரணம் “மனப்பூர்வமானது என்பதாகவும்” அவனது விசுவாசத்தின் “இன்றியமையாத பாகத்தோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கிறது” என்பதாகவும் நீதிமன்றம் உணர்ந்தது. நீதிமன்றம் கோபாயாஷியை “தலைசிறந்த மாணவன்” என்பதாக அழைத்து, கென்டோவிற்குப் பதிலாக மாற்று உடற்பயிற்சி கல்வியை பள்ளி அளித்திருக்கலாம் என்பதாக சொன்னது.
நாஸ்திகம் அதிகரித்துவருகிறது
ஜெர்மனியில் “நாஸ்திகத்தினிடமாக வலிமையான ஈர்ப்பு” இருப்பதை ஜோயாச்சிம் மைஸ்னர் என்ற மதகுரு காண்கிறார். கம்யூனிஸம் பொருளாதார வகையில் தோல்வியுற்றிருக்கலாம், ஆனால் கொள்கையளவில் அது வெற்றி அடைந்திருப்பதாக தோன்றுகிறது என்பதாக மைஸ்னர் சொன்னார். அவர் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார்: “இந்தப் போக்கு புதிய [முன்னாளைய கம்யூனிஸ்ட்] கூட்டிணையரசுகளிலிருந்து பழைய [மேற்கு] கூட்டிணையரசுகளுக்கு பரவியிருப்பதாகத் தோன்றுகிறது.” வேசர் கூரிர் என்ற செய்தித்தாளின்படி, முன்னாளைய கிழக்கு ஜெர்மனியின் 1 கோடியே 60 லட்சம் குடியிருப்பாளர்களில் சுமார் 70 சதவீதத்தினர் எந்தச் சர்ச்சிலும் உறுப்பினர்களல்ல. அறிக்கை இவ்வாறு தொடர்கிறது: “தனக்கு வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை அறிவிக்க துணிச்சலான நடவடிக்கையெடுப்பதற்கான தைரியத்தை சர்ச் கொண்டில்லையென்றால், அது நம்பிக்கையற்று இருக்கிறது.”
தயவுசெய்து பூச்சிக்கறியை கொஞ்சம் இங்க கொடுங்க!
அநேக ஜனங்கள், அனைவரும் இல்லாவிட்டாலும், பூச்சிகளை சாப்பிடுவதன்மூலம் நோய்களை சுகப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பை அருவருக்கத்தக்கதாக கருதுவர். இருந்தபோதிலும், ஏஷியாவீக் பத்திரிகையின்படி இந்தக் கருத்து ஒன்றும் புதிதானதல்ல. சிங்கப்பூரிலுள்ள இம்பீரியல் ஹெர்பல் ரெஸ்டாரன்ட், எறும்புகள் மற்றும் தேள்கள் போன்ற பூச்சிகளாலான உணவு வகைகளை பரிமாறுகிறது; அவை ஊட்டச்சத்துள்ளவையாக மட்டுமல்ல குணப்படுத்துபவையாகவும் இருப்பதற்கு பேர்போனவை. எறும்புகள் கீல்வாத நோயிற்கு நல்லவை என்பதாகவும் தேளின் விஷம் நரம்புகளுக்கு இளைப்பாறுதலளித்து ஒற்றைத் தலைவலிகளிலிருந்து விடுவிக்கிறது என்பதாகவும் ரெஸ்டாரன்ட்டின் உரிமையாளரான திருமதி டி இங் வாங்-லி சொல்கிறார். மற்ற பூச்சி மருந்துகள் கீழ்க்காண்பவற்றை உள்ளடக்குகின்றன: வலியை போக்குவதற்கு காய்ந்த புழுக்கள்; வாயுத்தொல்லைக்கும் வாய் கொப்புளங்கள் மற்றும் தட்டம்மையைக் குணப்படுத்துவதற்கும் சிள்வண்டு புழு; ஒட்டுண்ணிகளைக் கொல்வதற்கு காய்ந்த மலைக்குளவி கூடு. இந்தப் பூச்சிகள் சுவைப்பதற்கு எவ்வாறிருக்கும்? எறும்புகள் உறைப்பான, வினிகரைப்போன்ற சுவையைப் பெற்றிருக்கின்றன; தேள்கள் சவ்வுபோல் இருக்கின்றன. திருமதி வாங்-லி இவ்வாறு சுட்டிக்காண்பிக்கிறார்: “அது பழகிவிட்டபின் வரும் சுவை.”
சோர்வுக்கு முடிவுகட்டுங்கள்!
எல்லா வகையான அழுத்தங்களும் அதிகரித்துவருகின்றன; எலன் மஜ்ராஃப் என்ற உளவியல் மருத்துவர் ஹெல்த் என்ற ஐ.மா. பத்திரிகையில் எழுதுபவராய், அழுத்தம் உங்கள் வாழ்க்கையில் சோர்வாக மாறிவிடுவதைத் தவிர்ப்பதற்கு சில யோசனைகளை அளிக்கிறார்.
▪ ஏதாவதொரு விதமான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்: பத்துநிமிடம் நடந்திடுங்கள் அல்லது ஐந்து நிமிடத்திற்கு அமைதலாகவும் நன்றாக இழுத்தும் மூச்சுவிடுங்கள். வாசிப்பதற்கோ சிந்தனை செய்வதற்கோ ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் முடிவிலும் 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள்.
▪ வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள்: உங்களை புன்னகைக்க வைக்கும் காரியங்களான போட்டோக்கள், பூக்கள் அல்லது நினைவுப்பொருட்கள் போன்றவற்றை உங்களைச் சுற்றி வையுங்கள். உங்களது அட்டவணையை திட்டமிட முன்முயற்சி எடுத்து, முக்கியமான காரியங்களைச் செய்வதற்கு அதிக சோர்வில்லாத நேரங்களை தேர்ந்தெடுங்கள்.
▪ நன்றாக சாப்பிடுங்கள்: நீங்கள் எவ்வளவு வேலையாக இருந்தாலும், மிகவும் பசியெடுக்கும்வரை வேலை செய்துகொண்டிருக்காதீர்கள் அல்லது பசியைத் தீர்ப்பதற்கு ஏதாவதொரு நொறுக்குத்தீனியோடு திருப்தியடைந்துவிடாதீர்கள். முக்கியமாய் பழவகைகளையும் காய்கறிகளையும் கொண்டுள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது களைப்பை தவிர்த்திட உங்களுக்கு உதவும்.
▪ நடமாடிக்கொண்டே இருங்கள்: சுறுசுறுப்பான உடற்பயிற்சி சோர்வை குறைத்து மனதிருப்தியையும் கட்டுப்பாட்டு உணர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. அதை அனுபவிக்கத்தக்கதாக ஆக்குங்கள்!
குழந்தை நச்சூட்டப்படுவதைத் தவிர்த்திடுங்கள்
சிறு பிள்ளைகள், தங்களுக்குரியதல்லாத மருந்துகளில் வெறும் ஒரே ஒரு மாத்திரையை சாப்பிடுவதன் மூலமாகக்கூட தங்களுடைய வீடுகளிலேயே நச்சூட்டப்படுவதன் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதாக எஃப்டிஏ கன்ஸ்யூமர் பத்திரிகை சொல்கிறது. மாத்திரைகள், வீட்டிலுள்ள இரசாயனங்கள் மற்றும் மதுபானங்களை விழுங்குவது ஒரு சிறுபிள்ளைக்கு சுகவீனத்தையும் இறப்பையும்கூட உண்டுபண்ணலாம். ஆகவே, இப்படிப்பட்ட பொருட்கள் அவர்களது கைக்கு எட்டாதபடியும் பார்வைக்குத் தென்படாதபடியும் வைக்கப்பட வேண்டும். அளவுக்கதிகமான இரும்புசத்து மருந்துகள், பிள்ளைகளின் வைட்டமின் மாத்திரைகளும் உட்பட, முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. “[குழந்தைகளுக்குரிய வைட்டமின்கள்] மிட்டாய்களைப் போன்றும் கார்ட்டூன் படங்களைப்போன்றும் தோன்றும்படிக்கு விற்பனை செய்யப்படுவதன் காரணமாக, அது பார்ப்பதற்கு மாத்திரையைப்போல் அல்லாமல் மிட்டாயைப் போன்று தோன்றுகிறது,” என்பதாக அ.ஐ.மா.-வின் கென்டக்கி ரீஜனல் பாய்சனிங் சென்ட்டரைச் சேர்ந்த டாக்டர் ஜார்ஜ் ராட்ஜர்ஸ் விளக்குகிறார். பிள்ளை, இயல்பு மாறின கண் அசைவுகள் அல்லது அளவுக்கதிகமான தூக்கத்தைக் கொண்டிருந்தாலோ மாத்திரை பாட்டில் திறந்துகிடந்தாலோ, ஒரு டாக்டரையோ விஷக் கட்டுப்பாடு மையத்தையோ உடனடியாக அழைத்து, அவர்களது அறிவுரையை முழுமையாகவே பின்பற்றுங்கள் என்பதாக நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
வாசித்தல்—“மெதுவான மரணமா”?
சிறிய பிரசுரிக்கும் அமைப்புகளின் சங்கத்திற்காக இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, சென்ற வருடம் 80 சதவீத இத்தாலியர்கள் “புத்தகத்தைத் திறக்கவே இல்லை, அவ்வாறு திறந்திருந்தாலும், அந்தப் புத்தகத்தின் தலைப்பையோ ஆசிரியரின் பெயரையோகூட அவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை.” பாரம்பரியமாக, இத்தாலியர்களின் நடத்தையும் செயல்களும் வாழ்க்கையும் வாசிக்கப்படும் விஷயங்களைக் காட்டிலும் தொலைக்காட்சி உட்பட படக்காட்சிகளினால் பாதிக்கப்படுகின்றன என்பதாக ரோமின் லா ரேபூப்ளிகா என்ற செய்தித்தாள் குறிப்பிட்டது. “இத்தாலியர்கள் வாசிப்பதில்லை, முக்கியமான எவற்றையாவது தாங்கள் இழந்துவருகிறார்கள் என்பதை அவர்கள் உணருவதில்லை,” என்பதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது. இத்தாலியர்களில் அநேகர், புத்தகங்கள் வாசித்தலை “ ‘உள்ளார்ந்த’ மனித உறவுகளை ஏற்படுத்த தகுதியற்ற” ஒன்று என்றும் “உணர்ச்சியற்ற” ஒன்று என்றும் சொல்கின்றனர் என்பதாகவும் அந்தச் சுற்றாய்வு காண்பித்தது. வாசிக்காதவர்கள், “வாசிப்பது வெறும் நேரத்தை வீணாக்கும் ஒன்று,” அது ‘வயதானவர்களுக்குரிய ஒன்று’ அல்லது “அது ‘மெதுவான மரணத்தை’ உண்டுபண்ணுகிறது” என்பதாகவும்கூட சொல்லி “திருப்தியடைந்திருக்கின்றனர்.”
உதவிக்கான தொலைபேசி அழைப்புகள்
கனடாவில் தேசம் முழுவதிலும் சோர்வுற்ற இளைஞருக்காக இருக்கும் கட்டணமில்லாத ஹாட் லைன், நாள் ஒன்றிற்கு 4,000 அழைப்புகளைப் பெறுகிறது என்பதாக தி க்ளோப் அண்ட் மெயில் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இது “முன்னொருபோதும் இல்லாத அதிக அளவிலான மனமுறிவை” காண்பிப்பதாய் இருக்கிறது. இத்திட்டத்தின் ஆலோசனை சேவையின் இயக்குனரான கிறிஸ்டின் சிம்மின்ஸ்-ஃபிசிக் என்பவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “உலகத்தில் நடைபெறும் இந்தப் [பொருளாதார] மாற்றம் வயதுவந்தவர்களுக்கிடையே நிச்சயமற்ற உணர்வை உருவாக்குகிறது, இது சிறு பிள்ளைகளையும் பாதித்துவருகிறது.” பெறப்படும் அழைப்புகளில் கிட்டத்தட்ட பாதியளவானது உறவுகளைப் பற்றியது; 78 சதவீதம், உதவிக்காக கேட்பதை பையன்களைக்காட்டிலும் சுலபமாக காணும் பெண் பிள்ளைகளிடமிருந்து வருகிறது. வயதுவந்த ஒருவரால் தங்கள் பிரச்சினைகள் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பைப் பெறுவதன் காரணமாக இளைஞர் அழைக்கின்றனர் என்பதாக சிம்மின்ஸ்-ஃபிசிக் சொல்கிறார். அடிக்கடி பெற்றோர்களும் மற்ற வயதுவந்தோரும் “பிள்ளைகளின் பிரச்சினைகளை தற்காலிகமான ஒன்றாக நினைத்து புறக்கணித்துவிடுகின்றனர்—அவர்கள் வளரவளர சரியாகிவிடும் என்பதாக சொல்கின்றனர்; அந்த மனப்பான்மையை நீங்கள் வெளிக்காட்டினால், மறுபடியும் உங்களிடம் உதவிக்காக வரமாட்டார்கள் என்பதில் நீங்கள் நிச்சயமாக இருக்கலாம்” என்பதாக அவர் மேலுமாகச் சொன்னார்.
பட்டாம்பூச்சி பிரயாணிகள்
ஒவ்வொரு மார்ச் மாதமும் மொனார்க் பட்டாம்பூச்சிகள் 800 கிலோமீட்டர் பரப்பளவுள்ள திறந்த சமுத்திரத்தின் வழியே கூட்டம் கூட்டமாக பிரயாணம் செய்கின்றன; மெக்ஸிகோவிலிருந்து அ.ஐ.மா.-வின் லூயிஸியானா கரையின் ஒரு சிறிய பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. பின்பு மொனார்க்குகள் வடக்கை நோக்கி செல்கின்றன; அவற்றில் சில கனடாவரை செல்கின்றன. அதைத் தொடர்ந்து வரும் அக்டோபரில் அவற்றின் ஐந்தாவது சந்ததி அதே வழியாக மெக்ஸிகோவிற்குத் திரும்புகின்றன. ஆனால் குண்டூசித் தலை போன்ற அளவுள்ள மிகச் சிறிய மூளையுடன், எங்கே பறப்பது என்பதை அவை எவ்வாறு அறிந்திருக்கின்றன? அது இன்னும் ஒரு மர்மமாக இருக்கிறது. பூச்சிகள் காந்தசக்தியினால் வழிநடத்தப்படக்கூடும் என்று பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளரான டாக்டர் காரி நோயெல் ராஸ் நம்புவதாக கலிபோர்னியாவிலுள்ள சிகோவின் என்டர்ப்ரைஸ்-ரெக்கார்ட் அறிக்கை செய்கிறது. திகைப்பூட்டுகிற கேள்வி என்னவென்றால், மெக்ஸிகோவிற்கு திரும்பிச்செல்லும் பயணத்திற்கான பறக்கும் திட்டம் ஐந்து சந்ததிகளுக்கு எவ்வாறு கடத்தப்படுகிறது? “இந்த நுணுக்கம் புரிந்துகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டது,” என்பதாக டாக்டர் ராஸ் சொன்னார்.
புதிய துணிமணிகள் எச்சரிக்கை
துணிமணிகளை தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் ஆபத்துக்களைக் குறித்து பிரான்ஸிலும் இங்கிலாந்திலும் தாய்லாந்திலும் எச்சரிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன என்பதாக ஏஷியாவீக் பத்திரிகை அறிக்கை செய்கிறது. சாயப்பொருட்களில் பயன்படுத்தப்படும் ஆற்றல்வாய்ந்த பதனப்பொருளான ஃபார்மால்டிஹைடு, அநேக துணிகளில் இருக்கிறது; அது தோல், கண் மற்றும் சுவாச பிரச்சினைகளை உண்டாக்குவதாக சொல்லப்படுகிறது. அறிக்கையின்படி, நெசவுத் தொழிற்சாலைகள் நன்கு காற்றோட்டமாகவும் ஈரப்பதமில்லாதவையாகவும் இல்லையென்றால் அங்குள்ள வேலையாட்கள் ஆபத்தில் இருக்கலாம்; எந்தக் கேடுள்ள விளைவுகளையும் தவிர்ப்பதற்கு, எந்தப் புது துணியையும் அணிந்துகொள்வதற்கு முன் நுகர்வோர் அதைத் துவைக்க வேண்டும்.
குற்றச்செயலும் ரஷ்யாவின் பருவவயதினரும்
ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், “சிறுவர் குற்றச்செயல் அதிக கொடுமையானதாகவும் வேண்டுமென்றே செய்யப்படுவதாகவும் ஆகிவருகிறது,” என்பதாக தி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ப்ரெஸ் அறிக்கை செய்கிறது. உதாரணத்திற்கு, 1995-ல் ஒரு நகரப்பள்ளியில், 13-வயது பையன் முழுப் பரிட்சையை முடித்தவுடனேயே கட்டிவைக்கப்பட்டு சாகும்வரை அடிக்கப்பட்டான். பள்ளியில் நடைபெறும் வன்குற்றச்செயலைக் குறித்து பெற்றோர் பங்கிலும் ஆசிரியர்கள் பங்கிலும் காண்பிக்கப்பட்ட கவலை, பள்ளிமாணவர்களுக்கு “தப்பிப்பிழைப்பதன் அடிப்படைகள்” என்பதன்பேரிலும் சிறுமிகளுக்கு “மருத்துவ அடிப்படைகள்” என்பதன்பேரிலும் ஒரு விசேஷ படிப்புத் திட்டத்தை ஆரம்பிக்கும்படி தூண்டியது. அந்தப் படிப்பின் ஆசிரியர்களுக்கான ஒரு கருத்தரங்கில், நகரத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிச் சிறுமிகளில் 25 சதவீதத்தினர் விபசாரத்தை ரஷ்ய வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாக கருதுகிறார்கள் என வெளிப்படுத்தப்பட்டது. மேலும், ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதிப் பத்திரிகையான போபூலி-யின்படி, கடந்த ஐந்து வருடங்களில் 17 வயதும் அதற்கு கீழுமுள்ள சிறுமிகளுக்கிடையே கருச்சிதைவின் எண்ணிக்கை இரட்டிப்பாக ஆகியிருக்கிறது.