ஒரு லாஹாரிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டோம்!
கார்ஸியா குடும்பம் இதுவரைக்கும் அனுபவித்திருக்கும் நாட்களிலேயே அக்டோபர் 1, 1995, வித்தியாசமான ஒரு நாளாக இருந்தது. கார்ஸியா குடும்பத்தினர் யெகோவாவின் சுறுசுறுப்பான சாட்சிகள். பிலிப்பீன்ஸில் உள்ள பேம்பேங்கா மாநிலத்தில், பாகலர் நகராட்சியிலிருக்கும் கேபலேன்டியேனில் உள்ள ஒரு வளர்ச்சியடைந்த பகுதியில் அவர்களுடைய வீடு உள்ளது. பினட்டூபோ சிகரத்தின் லாஹார்களால் பாதிக்கப்படும் இடங்களுக்கு அருகே அவர்களுடைய வீடு அமைந்திருந்தாலும், அதுவரையாக அது நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கவில்லை. லாஹாரைத் தடுப்பதற்கென்று அரசாங்கம் கட்டியிருக்கும் அணைக்கட்டுகளால் கேபலேன்டியேன் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் காரியங்கள் விரைவாக மாறப்போவதாக இருந்தன.
பினட்டூபோ சிகரத்தில் ஒரு கடும் வெப்பமண்டலப் புயல் 216 மில்லிமீட்டர் அளவான மழையைக் கொட்டியிருந்தது. அதிகாலையில், கார்ஸியாவின் வீட்டில் தொலைபேசி மணியடித்தது. அது, எவரோ ஒருவரிடமிருந்து வந்த ராங் நம்பர், ஆனால் ஒரு அணைக்கட்டு உடைந்துவிட்டதாகவும் வெள்ளப்பெருக்குக்கு குடும்பம் தயாராயிருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
கடும் சோதனை ஆரம்பமாகிறது
அந்தக் குடும்பத்தின் தகப்பனும், வில்யா ரோஸ்மெரி சபையின் நடத்தும் கண்காணியுமான நோனான்டோ கார்ஸியா இவ்வாறு விவரிக்கிறார்: “ஞாயிறு காலை ஐந்து மணிக்கு முன்பு, எங்கள் வீட்டைச் சுற்றி தண்ணீர் பெருக ஆரம்பித்தது.
“வெறும் ஒரு வெள்ளப்பெருக்கைத்தான் எதிர்ப்படப்போகிறோம் என்று நான் நினைத்தேன், ஆகவே எங்களுடைய மூட்டைமுடிச்சுகளை மாடிக்கு கொண்டுசெல்ல ஆரம்பித்தோம். ஆனால் காலை பத்து மணிக்கு பிறகு, தண்ணீரோடு லாஹார் சேறும் கலந்திருப்பதை நான் கண்டேன். பாய்பொருள், கனமாக ஆகும்வரைக்கும், அதனுடனே கற்பாளங்களைக் கொண்டுவரும்வரைக்கும், அதிக உயரமாகவும் அதிக வலுவாகவும் ஆகிக்கொண்டுவந்தது. நாங்கள் கூரையின்மீது ஏறினோம்.
“பின்பு, கார்களும் வீடுகளும்கூட பாய்பொருளினால் இழுத்துச்செல்லப்பட்டன. ஒரு பெரிய கற்பாளத்தினால் தாக்கப்பட்டிருந்த ஒரு வீடு இடிந்துவிழுந்து அடித்துச் செல்லப்பட்டது. அதன் கூரை எங்கள் வீட்டின் அருகே லாஹாரினால் கிடத்தப்பட்டது. கூரையின்மீது ஜனங்கள் இருந்தனர். நான் அவர்களை அழைத்து எங்கள் வீட்டின் கூரைக்கு இடம்மாறிவிடும்படி தூண்டினேன். அவ்வாறு செய்ய, அவர்களிடம் வீசப்பட்ட கயிறைப் பிடித்துக்கொண்டார்கள். இது என் உடம்போடு கட்டப்பட்டது, ஒருவரொருவராக அவர்களை நான் என்பக்கம் இழுத்தேன். மூடப்பட்டிருந்த மற்ற கூரைகளிலிருந்து இன்னுமதிக ஜனங்கள் இடம்மாறினர். இந்த எல்லா சமயத்தின்போதும் மழை தொடர்ந்து பெய்தது.
“பிற்பகலில் ஹெலிகாப்டர்கள் பறக்க ஆரம்பித்தன. ஆனால், நாங்கள் பதற்றத்துடன் கைகளை அசைத்தும்கூட எங்களைக் காப்பாற்றுவதற்கு எதுவுமே கீழிறங்கவில்லை. இன்னும் அதிக தேவையிலிருக்கும் ஜனங்கள் இருப்பார்கள், அவர்களிடம் முதலில் செல்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். சீக்கிரத்தில் ஏற்றிக்கொள்ளப்படுவோம் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் வீடுகளின் கூரைகளில் அநேகர் விடப்பட்டிருந்தார்கள்.
“அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையின்போது ஜெபம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. மிக ஆபத்தான சமயங்களின்போதும்கூட நீங்கள் ஜெபம் செய்துவிட்ட பிறகு பயப்படுவதில்லை. யெகோவா ஒரு அற்புதத்தைச் செய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபம் செய்யவில்லை, ஆனால் எந்த ஒரு நபரும் சேதத்தினால் பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தவர்களாக அவருடைய சித்தம் எதுவோ அதற்காக விண்ணப்பித்தோம். ஆனால் பலத்தையும், தைரியத்தையும், ஞானத்தையும் நான் கேட்டேன். இவையனைத்தும் அப்போதிருந்த சூழ்நிலையை எதிர்ப்பட எங்களுக்கு உதவியது.”
நோனான்டோவின் மனைவி கேர்மென் இதற்கு ஒப்புதல் தெரிவித்தார்: “ஜெபத்தைக் குறித்து என் கணவர் சொல்வது நிச்சயமாகவே உண்மை. நான் நேசிக்கும் அன்பானவர்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கும் ஒரு சூழ்நிலையில் மிகவும் பதட்டமாக உணரும் சுபாவம் எனக்கிருக்கிறது. கூரை லாஹாரினால் நிரம்புவதையும், கற்பாளங்களால் மோதப்படுவதையும் நான் பார்த்தபோது, ‘நமக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாதிருப்பதுபோல் தோன்றுகிறது,’ என்று என் கணவரிடம் சொன்னேன். ஆனால் அவர் என்னை உற்சாகப்படுத்தி, ‘ஜெபம் செய்யலாம்,’ என்று கூறினார்.”
நோனான்டோ தொடர்ந்து கூறினார்: “பிற்பகல் நான்கு மணிக்கு லாஹார் பாய்பொருள் இன்னும் அதிக வலுவுடன் வந்தது. வீட்டை பெரிய பாறைகள் மோதின. லாஹார் இடிபொருள் குப்பைகள், கூரையைப் பாதியளவுக்கு மூடியிருந்தன. சாயங்காலம் சீக்கிரத்தில் வந்துவிடும், பின்பு பயணம் செய்வது மிகவும் கடினமாகிவிடும் என்பதாக நான் நினைக்க ஆரம்பித்தேன். ஆகவே வெளிச்சம் இன்னும் இருக்கும்போதே நாங்கள் அங்கிருந்து புறப்பட தீர்மானித்தோம்.
“மூழ்குகிறதா என்று பார்ப்பதற்கு நாற்காலி ஒன்றை லாஹார் சேற்றிலே தூக்கியெறிய முயற்சி செய்தேன், அதன்மீது ஏறவும்கூட செய்தேன் ஆனால் அது அமிழவில்லை. ஆகவே சேற்றை குத்திப்பார்ப்பதற்கு ஒரு நீண்ட மரத்துண்டை எடுத்தேன். நடந்து செல்வதற்காக கெட்டியான இடங்களைக் கண்டுபிடிக்க இதை நான் பயன்படுத்தினேன். இவ்வாறு எங்களாலும், எங்கள் அயலகத்தார் அநேகராலும், சேற்றிலே நடக்க ஆரம்பிக்க முடிந்தது. நாங்கள் மொத்தம் 26 பேர் இருந்தோம்.
“தொலைவில் இருந்த அதிக உயரமான கூரையை நோக்கி சென்றோம். மரத்துண்டைப் பயன்படுத்தி, எங்கே கால் வைக்கலாம் என்பதைக் கண்டுபிடிக்க நாங்கள் சேற்றை குத்திக்கொண்டு வந்தோம். இன்னும் மிகவும் மிருதுவாக இருந்த இடங்களில், நாங்கள் தவழ்ந்து சென்றோம்.”
கண்களில் கண்ணீருடன், கேர்மென் விவரிக்கிறார்: “சில இடங்களில் லாஹார் பாய்பொருளின் விளிம்பில் நாங்கள் இருந்தோம், மிகவும் குறுகலான தரையில் ஓரமாக நடக்க வேண்டியதாக இருந்தது. ஒரு சமயத்தில், நான் மார்பு வரையாக மூழ்கிவிட்டேன், ‘இனிமேலும் என்னால் முடியாது. நான் மரிக்கப்போகிறேன்,’ என்பதாக என் கணவரிடம் கூறினேன். ‘இல்லை, உன்னால் முடியும். எழுந்திரு,’ என்பதாக அவர் சொன்னார். யெகோவாவின் உதவியோடு, நாங்கள் தொடர்ந்து நகர்ந்து சென்றோம்.”
அந்தக் குடும்பத்தின் ஒரு உறவினரான நோரா மெங்கூல்யோ கூடுதலாக இவ்வாறு சொல்கிறார்: “தவழ்ந்து செல்வதற்கு மிகவும் மிருதுவாக இருந்த இடங்களில், மல்லாக்க படுத்துக்கொண்டு கால்களால் உந்தித் தள்ளிக்கொண்டு சென்றோம். சில சமயங்களில், மிக ஆழமாக மூழ்கிவிட்டோம், ஆனால் ஒருவரையொருவர், முக்கியமாக பிள்ளைகளை, தூக்கிவிடுவதற்கு நாங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்தோம்.”
மீட்பு—கடைசியில்!
நோனான்டோ இவ்வாறு தொடருகிறார்: “நாங்கள் லாஹாரின் விளிம்பில் சலிக்காமல் தவழ்ந்து சென்றுகொண்டிருந்தபோது, மேலே பறந்த ஒரு ஹெலிகாப்டர் எங்களுடைய ஆபத்தான நிலையை—ஒரு கூரையின்மீது அல்ல ஆனால் லாஹார் இடிபொருள் குப்பைகளின் மத்தியில் நாங்கள் இருந்த நிலையை—பார்த்தது. மீட்பவர்கள் எங்கள் மோசமான நிலையைப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், எங்கள் கூட்டாளி ஒருவர் தன் எட்டு மாத பிள்ளையை உயரமாக ஏந்திப் பிடித்திருந்தார். எங்களை கூட்டிக்கொண்டு போவதற்கு அவர்கள் தரையிறங்கினார்கள். நாங்கள் அனைவரும் உள்ளே செல்ல முடியாததன் காரணமாக, பிள்ளைகளையும் பெண்களையும் முதலில் உள்ளே அனுப்பினோம்.
“கடைசியாக, நாங்களும் ஏற்றப்பட்டு ஒரு வெளியேற்ற மையத்திற்கு கொண்டுவரப்பட்டோம். எங்களுடைய ஆடைகள் அனைத்தும் முழுவதுமாக லாஹார் சேறாகியிருந்தபோதிலும், அணிந்துகொள்வதற்கு எந்த விதமான உடைகளையும் எங்களுக்கு கொடுக்க அங்கேயிருந்த ஜனங்களால் முடியவில்லை. என் குடும்பம் ஒரு ராஜ்ய மன்றத்திற்கு செல்ல விரும்பியதால், மற்றவர்களுடன் சேர்ந்து வெளியேற்ற மையத்திற்கு செல்லமாட்டோம் என்பதாக நான் அவர்களிடம் சொன்னேன். நாங்கள் ராஜ்ய மன்றத்திற்கு சென்றபோது, உடனடியாக உடையளிக்கப்பட்டோம், உணவளிக்கப்பட்டோம், மற்ற உதவிகளும் அளிக்கப்பட்டோம். சபையிலிருந்து இன்னும் அதிக சகோதரர்கள் வந்தார்கள், அவர்களும்கூட எங்களுக்கு உதவி செய்தார்கள்.”
கேர்மென் கூடுதலாக கூறினார்: “மற்ற இடங்களிலிருந்து உதவியை நாங்கள் எதிர்பார்க்க முடியாத போதிலும், எங்கள் கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் ஆசீர்வாதத்தை உணர்ந்தோம்.”
அவர்களது வீடு, முழுவதுமாக லாஹாரினால் மூடப்பட்டிருந்தபோதிலும்கூட, அவர்களும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளான லவ்லி, சார்மி, சார்லி ஆகியோரும், அந்தப் பகுதியிலிருந்த மற்ற சாட்சிகளுடன் சேர்ந்து அந்தக் கொடுமையான அனுபவத்திலிருந்து தப்பினார்கள் என்பதை அறிவது நம்மை மகிழ்விக்கிறது.
[பக்கம் 23-ன் படங்கள்]
சிறிதளவு தோண்டியெடுக்கப்பட்ட கார்ஸியா வீட்டின் இரண்டாம் மாடி
புதையுண்ட தங்கள் வீட்டின் முன்பு நோனான்டோ கார்ஸியாவின் குடும்பம்