பச்சை ஒளிச்சிதறல் ஒன்றை—நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
ஓர் அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதன் மூலமாக மற்றுமொரு நாளுக்கு விடை கொடுத்து அனுப்புவது எவ்வளவு அனுபவிக்கத்தக்கதாய் உள்ளது! பூமியின் வாயு மண்டத்தினூடே ஒளி பாய்ந்து செல்லும்போது சூரியனின் மிதவெப்பமான பிரகாசம் அதிசயத்தக்க ஒரு வர்ணக் காட்சியை அளிக்கிறது. இந்தத் திகைக்கவைக்கும் சம்பவத்திற்கு இன்னும் மெருகூட்டுவது, பச்சை ஒளிச்சிதறல் என்ற ஒரு அசாதாரணமான நிகழ்வாகும். சூழ்நிலைகள் ஏற்றதாக இருந்தால், மரகத ஒளியின் இந்தச் சிதறல் சூரிய அஸ்தமனத்தின் கடைசி வினாடியில் நிகழ்கிறது. இதைக் காட்டிலும் அபூர்வமான ஒரு நிகழ்ச்சியான நீலச் சிதறல் இன்னுமதிக அழகானதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பல வர்ணங்களிலுள்ள இப்படிப்பட்ட சிதறல்களை எது உண்டுபண்ணுகிறது? ஏன் அவை வெறும் ஒரு நொடியே நீடித்திருக்கின்றன? ஏன் அவை அவ்வளவு அரிதாக இருக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க, சூரியவெளிச்சத்திற்கும் பூமியின் வாயு மண்டலத்திற்கும் இடையே உள்ள செயலாற்றலின் ஒரு அடிப்படைப் புரிந்துகொள்ளுதலை நாம் பெற்றிருக்க வேண்டும்.
பூமியை நோக்கி ஊடுருவிவரும் சூரிய ஒளி வானவில்லின் அனைத்து நிறங்களையுமே பெற்றிருக்கிறது. இந்த ஒளி பூமியின் வாயு மண்டலத்தை எட்டும்போது, வாயு மண்டலம் ஒரு பெரிய பட்டகையைப் போல் செயல்பட்டு ஒளியைச் சிதறடிக்கிறது அல்லது பரப்புகிறது. எனினும், ஒளி அலைகள் எந்த அளவிற்கு பரவுகிறது என்பது அதன் அலைநீளத்தைப் பொருத்தது.
நீல ஒளி அலைகள் குறுகிய அலைநீளத்தை உடையவை, வாயு மண்டலத்தைச் சுற்றி முழுவதுமாக பரவலாக சிதறடிக்கப்படுகின்றன. ஆகவேதான் தெளிவான ஒரு நாளில் சூரியன் அடிவானத்திற்கு மிகவும் மேலே இருக்கும்போது வானம் நீலநிறமாகத் தோன்றுகிறது. ஆனால் சூரியன் அடிவானத்தின் அருகே இருக்கும்போது—உதாரணத்திற்கு சூரிய அஸ்தமனத்தின்போது—சூரிய ஒளி நம் கண்களை எட்ட இன்னுமதிக தூரம் வாயு மண்டலத்தின் வழியே பயணம் செய்ய வேண்டும். அதன் விளைவாக, மிகவும் சிதறடிக்கப்பட்டிருக்கும் நீல ஒளி நம்மை எட்டுவதில்லை. மறுபட்சத்தில், சிகப்பைப் போன்ற அதிக அலைநீளத்தைக் கொண்டிருக்கும் அலைகள், அடர்த்தியான வாயு மண்டலத்தை இன்னும் சுலபமாக ஊடுருவிச் செல்ல முடியும். இது சூரிய அஸ்தமனத்திற்கு அதன் வழக்கமான சிகப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தைத் தருகிறது.a
எனினும், குறிப்பிட்ட சில சமயங்களில் ஒரு பச்சை ஒளிச்சிதறலோ அல்லது ஒரு நீல ஒளிச்சிதறலோ சூரிய அஸ்தமனத்தின்போது தென்படலாம். இவை எவ்வாறு நடைபெறுகின்றன? சூரியனின் விளிம்பு அடிவானத்திற்கு கீழே மறையும்போது, சூரியனின் ஒளி வானவில்லைப்போல் நிறமாலையாக பிளவுறுகிறது. நிறமாலையின் கீழ்ப்புறத்தில் சிகப்பு ஒளி தோன்றுகிறது, மேற்பகுதியில் நீல ஒளி தோன்றுகிறது. சூரியன் தொடர்ந்து மறையும்போது, நிறமாலையின் சிகப்புப் பகுதி அடிவானத்திற்கு கீழே இறங்குகிறது, நீலப் பகுதி வாயு மண்டலத்தினால் பொதுவாக சிதறடிக்கப்படுகிறது. இந்த நொடியில்தான் காணக்கூடிய ஒளியின் கடைசிப் பகுதி பச்சை ஒளியை சிதறச்செய்ய முடியும். ஆனால் ஏன் பச்சை? ஏனென்றால் பச்சைதான் ஒளியின் மற்றுமொரு தலையாய நிறம்.
வானம் மிக அதிகமாக அசுத்தமாக்கப்பட்டிருக்கும்போது, பச்சை ஒளிச்சிதறல் பொதுவாக காணப்படுவதில்லை, மேலும் வாயு மண்டலம் மிகவும் தெளிவாக இருக்கும்போதும், போதுமானளவு நீல ஒளி வானத்தை ஊடுருவிச் சென்று ஒரு பிரகாசிக்கும் ஒளிச்சிதறலை தோன்றச் செய்யும்போதுதான் நீல ஒளிச்சிதறல் உண்டாகிறது.
[அடிக்குறிப்பு]
a சூரிய அஸ்தமனத்தின் பேரில் கூடுதலான தகவலுக்கு ஆங்கில விழித்தெழு!, டிசம்பர் 8, 1987, பக்கம் 16-ஐக் காண்க.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Sunset: ©Pekka Parviainen/SPL/Photo Researchers