லாஹார்கள்—பினட்டூபோ சிகரத்தின் பின்விளைவு
பிலிப்பீன்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
வீடுகள் மூழ்கடிக்கப்பட்டன. தொழில்கள் வீழ்ச்சியுற்றன. வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கட்டடங்கள் மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோடும்படி வற்புறுத்தப்பட்டனர். மற்றவர்கள் சிக்கிக் கொண்டதால், தப்பியோட முடியவில்லை. இவ்வாறெல்லாம் நடப்பதற்கு எது காரணமாயிருந்தது? பூமியதிர்ச்சியா? பனிப்பாறைச் சரிவா? இல்லை. இது லாஹார்களால் ஏற்படுத்தப்படும் தொடர்ச்சியான சம்பவங்கள். அவை யாவை? லாஹார்கள் என்பவை நீரையும், உதிரிச் சாம்பல், ஃபியூமிஸ் ஆகியவை உள்ளிட்ட எரிமலையின் மண்டியையும், தற்போது வெடித்ததனாலோ அல்லது முன்பு வெடித்ததனாலோ உண்டாயிருந்த இடிபொருட்களின் குப்பைகளையும் கொண்ட பாய்பொருள்களாகும்.
ஒரு பத்தாண்டுக்கு முன்பெல்லாம் பிலிப்பீன்ஸின் பினட்டூபோ சிகரத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கவும்கூட மாட்டீர்கள் என்றே சொல்லப்படலாம். ஆனால் ஜூன் 15, 1991-ல் ஏற்பட்ட ஒரு மாபெரும் வெடிப்புக்குப் பிறகு, “பினட்டூபோ” உலகின் பல பகுதிகளிலும் நன்கறியப்பட்ட ஒரு வார்த்தையாக ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக தூங்கியதற்குப் பிறகு, இந் நூற்றாண்டின் மிகப் பிரமாண்டமான காளான் வடிவ மேகங்களை உருவாக்குகையில், அதன் எரிமலைப் பொருள்களை பினட்டூபோ சிகரம் வெளித்தள்ளியது. சாம்பல், மணல், பாறைகள் ஆகியவை அந்த எரிமலையிலிருந்து கக்கப்பட்டு, மனிதர் கண்டிராத அளவில் நிலத்தின்மீது மழையாகப் பொழிந்தன.a
அந்த எரிமலை, பூமியின் வளிமண்டலத்திற்குள் 20 கிலோமீட்டருக்கும் மேலான உயரத்தில் பிரமாண்டமான கன அளவைக் கொண்ட பொருள்களை வெளியே எறிந்தது. இவற்றுள் சில பூமிக்குத் திரும்பி வந்தபோதிலும், அதிகளவான தூசி—தூசி மட்டுமல்ல, சுமார் இரண்டு கோடி டன் எடையுள்ள மிகப்பெரிய அளவுகளில் சல்பர் டை ஆக்ஸைட்—ஆகாயத்திலேயே தங்கிவிட்டன!
பூகோள அளவில் அது ஏற்படுத்திய விளைவுகள் சிலவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்களேன். சிறிது காலமாக தனிச்சிறப்புள்ள அழகிய சூரிய அஸ்தமனங்கள்; 1991-ல் மெக்ஸிகோவிலும் அதற்கருகிலுள்ள பகுதிகளிலும் ஏற்பட்ட வழக்கத்துக்கு மாறான பிரகாசமான முழு சூரிய கிரகணம்; வட கோளார்த்தப் பகுதிகளில் குளிர்ச்சியடைந்தது உட்பட மாற்றமடைந்த காலநிலைப் பாங்குகள்; பூமியின் ஓஸோன் அடுக்கு தொடர்ந்து நாசமடைவது ஆகியவை. அல்லது அந்த வெடிப்பினால் இடமாற்றம் செய்யப்பட்ட மக்களைப் பாதித்த அதிகரிக்கப்பட்ட பசியையும் நோயையும் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
நீடித்து நிலைத்திருக்கும் பின்விளைவு
பினட்டூபோவின் வெடிப்பினால் ஏற்பட்ட பின்விளைவுகளில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியவற்றில் ஒன்றும், ஒருவேளை உலகின் பெரும்பகுதியினர் அறியவராத ஒன்றுமாய் இருந்தது, லாஹார் என்றறியப்படும் ஓர் இயல் நிகழ்ச்சியாகும். இக் கட்டுரையின் ஆரம்பப் பத்தியில் குறிப்பிட்டிருந்தபடி, லாஹார்கள் இலட்சக்கணக்கான மக்கள் துன்புறும்படியான விளைவை ஏற்படுத்தியுள்ளன. லாஹார்களால், பினட்டூபோ சிகரத்தின் வெடிப்பினால் ஏற்பட்ட பின்விளைவுகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒன்றாய் மட்டும் போய்விடவில்லை. தற்போதும்கூட அவை அனுபவிக்கப்படுகின்றன. நீங்கள் தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டிராமல் இருக்கலாம், ஆனால் பினட்டூபோ சிகரத்துக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில், தொழில்கள், வேலைகள், வீடுகள், வாழ்க்கைகள், மற்றும் முழு நகரங்களும்கூட தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. குற்றவாளிகளாய் இருப்பவை பினட்டூபோவின் லாஹார்களே.
பல, வழக்கத்துக்கு மாறான அளவுடைய மண்டியைக் கொண்ட சேறு நிறைந்த ஆறுகளைப் போன்று செயல்பட்டாலும், லாஹார் 60 சதவீத மண்டிக்கு மேல் கொண்டிருக்கையில், அது பாய்ந்தோடும் காரையின் தன்மையைக் கொண்டிருக்க ஆரம்பிக்கிறது. இது அளவுக்கு மிஞ்சின வகையில் பாழாக்கும் தன்மையுடையதாய் இருக்கக்கூடும். எ டெக்னிக்கல் பிரைமர் ஆன் பினட்டூபோ லாஹார்ஸ் கூறுகிறது: “இந் நீர்மக் கலவைகள் அவ்வளவு அடர்த்தியாக (நீரின் அடர்த்தியைப் போல் இரு மடங்குக்கும் மேல்) இருப்பதால் கற்பாளங்கள், அரண் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பாறைநிறைந்த கட்டுமானப் பொருட்கள், வாகனங்கள், காரைக் கட்டடங்கள், மற்றும் பாலங்களும்கூட தகர்க்கப்பட்டு மிதக்கும்படி செய்யப்படுகின்றன.”
லாஹார்கள் எப்படி உருவாகின்றன? பினட்டூபோ சிகரம் வெடிக்கையில் ஏராளமான பொருட்களை வெளியே எறிந்தது பற்றி உங்களுக்கு ஞாபகமிருக்கும். அவற்றுள் சில வளிமண்டலத்திற்குள் சென்றன, ஆனால் பெரும்பாலானவை சிகரத்திலும், அதற்கு அருகாமையிலும் துண்டுதுண்டாக்கப்பட்ட பாய்பொருள் படிவுகளாக (எரிமலை செயலால் உருவாக்கப்பட்டவை) தங்கிவிட்டன. எந்தளவுக்குத் தங்கின? பிலிப்பீனைச் சேர்ந்த எரிமலையியல் மற்றும் நிலநடுக்க ஆய்வுநூல் பற்றிய அறிக்கை ஒன்றின்படி, 665 கோடி கன மீட்டரளவு. “நான்கு வரிசையில் வாகனங்கள் தடையின்றி செல்லும் வழியை ஐ.மா.-வுக்குக் குறுக்கே இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாகக் குறைந்தபட்சம் 10 தடவை உருவாக்க போதுமானளவு பொருள்களின் குப்பைகள் இருந்தன” என்பதாக ஐ.மா. எரிமலையியல் வல்லுநர் சி. ஜி. நியூஹோல் கூறுகிறார். இதில், 345 கோடி கன மீட்டர் அளவு அரித்துச் செல்லப்படும் நிலையில் இருந்தது—தாழ்வான பகுதிக்கு அடித்துச் செல்லப்படும்படி மழை வருவதற்குக் காத்துக்கொண்டிருந்து, லாஹார்களை உருவாக்கும். பிலிப்பீன்ஸில், வெப்ப மண்டலப் புயல்களும் சூறாவளிகளும் கூடுதலான தொல்லைக்குக் காரணமாகலாம். குறைந்த காலப் பகுதியில் ஏராளமான மழை பெய்யலாம், அதனால் பிரமாண்டமான அளவுள்ள லாஹார்களை உருவாக்குவதில் விளைவடையலாம்.
இப்போது பல ஆண்டுகளாக இதுவே நடைபெற்று வருகிறது. திரும்பத்திரும்ப, புயல்கள் எரிமலை சார்ந்த இடிபொருள் குப்பையை நீரில் ஊறச் செய்து, அது நகரும்படி செய்துள்ளது. லாஹார்கள் நல்ல விளைநிலங்களை தரிசு நிலங்களாகவும் நகரங்களை நில மட்டத்துக்கு மேலே ஒட்டிக்கொள்ளும்படியும் மாற்றியிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், ஒரே இரவிற்குள் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மக்கள் தங்களது சொந்த ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு, மற்றொரு பகுதியில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும்படி வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர். 1995-ன் ஆரம்பம் வரையில், துண்டுதுண்டாக்கப்பட்ட பாய்பொருள் படிவுகளில் 63 சதவீதப் பொருள்களை லாஹார்கள் தாழ்வான பகுதிகளுக்குள் நகரச் செய்திருந்தன, ஆனால் 37 சதவீதப் பொருள்கள் எதிர்கால நாசத்தை உருவாக்குவதற்குக் காத்துக்கொண்டிருப்பவையாய் அந்தச் சிகரத்தின் மேலேயே தங்கிவிட்டன. மேலும் ஏற்கெனவே கீழே வந்துவிட்டிருக்கும் 63 சதவீதப் பொருள்களில் பெரும்பகுதியும் பயமுறுத்தும் ஒன்றாகவே உள்ளது. பலத்த மழையினால் ஏற்படும் நீர்ப்பெருக்கு, முன்பு படியப்பெற்ற பொருள்களின் தொடக்கப்பகுதியிலிருந்து கால்வாய்களை ஏற்படுத்தி, நீரோடையாக்குகிறது, இது லாஹார்கள் மீண்டும் ஓடுவதற்குக் காரணமாய் அமைந்து, நீரோடையின் திசையிலுள்ள உயிர்களையும் உடைமைகளையும் அபாயத்திற்குள்ளாக்குகிறது. ஜூலை 1995-ல் மணிலா புல்லட்டின் பத்திரிகை அறிக்கை செய்தது: “தொண்ணூற்றொரு பாராங்கிகள் (கிராமங்கள்) . . . எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட டன்கணக்கான இடிபொருள் குப்பைகளுக்குள் புதைக்கப்படுவதன் மூலம் மத்திப லூஜானின் வரைபடத்திலிருந்தே அழிக்கப்பட்டுள்ளன.”
மீண்டும் பேரழிவு
செப்டம்பர் 30, 1995, சனிக்கிழமை மாலை, கடும் வெப்பமண்டலப் புயல் மாமங்கு (சிபல் என்று உலகளவில் அறியப்படுவது) லூஜானைப் பாதித்தது. மிக அதிகளவு மழை பினட்டூபோ சிகரப் பகுதியில் பெய்தது. இது பேரழிவை ஏற்படுத்தியது. லாஹார்கள் மீண்டும் பாயத் துவங்கின. அவற்றின் வழியில் உள்ள பொருள் எதுவாயிருந்தாலும் நீரால் சூழப்பட்டது. ஒரு பகுதியில் ஓர் அணைக்கட்டு உடைந்தது, அதன் காரணமாக, முன்பெல்லாம் தொந்தரவுக்குள்ளாகாத பகுதிகளும் ஆறு மீட்டர் ஆழம் வரையான லாஹார்களால் பாதிக்கப்பட்டன. இரண்டு அடுக்குக்கும் குறைவான உயரமுள்ள வீடுகள் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டன. மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு கூரையின் மேற்பகுதிக்குத் தொற்றிச் சென்றனர். லாஹார் எங்கே அதிக அடர்த்தியாய் ஓடியதோ, அங்கே அது கற்பாளங்களையும், வாகனங்களையும், வீடுகளையும்கூட தன்னோடு எடுத்துச் சென்றது.
வெள்ளப் பெருக்கு லாஹார்களின் மற்றொரு விளைவாகும், ஏனெனில் அவை ஆறுகள் மற்றும் நீர் வடிகால் ஆகியவற்றின் போக்கை மாற்றுகின்றன. யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பங்களின் சொந்த வீடுகளும் எண்ணற்ற ராஜ்ய மன்றங்களும் உட்பட, ஆயிரக்கணக்கான வீடுகள் நீரால் சூழப்பட்டன.
மற்றவர்கள் இன்னும் அதிக சாதகமற்ற அனுபவங்களைப் பெற்றிருந்தனர். பாய்ந்து செல்லும் ஒரு லாஹாரிலோ, சமீபத்தில் படியப்பெற்ற ஒரு லாஹாரின் சேற்றிலோ ஒருவர் சிக்கிக்கொண்டால், அவர் மூழ்கிவிடுவார், ஆகவே தப்புவது மிகக் கடினம். பல மணிநேரங்கள் அல்லது நாட்கள் கழித்துத்தான் அப்பொருள்கள் நடந்துசெல்லுவதற்கு ஏற்றாற்போல் உறுதியாகும். மக்கள் எவ்வாறு தப்பினர்? சிலர் கூரையின்மேல் தங்கினர், அல்லது நடப்பது சாத்தியப்படும் வரையில் லாஹாருக்கு மேல் தெரியும் மரங்களில் தங்கினர். மற்றவர்கள் தொலைபேசி இணைப்புகளுக்கென்று போடப்பட்டுள்ள கேபிள்களில் தொங்கிக்கொண்டு அல்லது அதன்மீது நடந்துகொண்டிருந்தனர், ஏனெனில் லாஹார் அந்த உயரம் வரை எட்டியிருந்தது. சிலர் லாஹாரால் விடப்பட்ட பாதியளவு உறுதியான சேற்றின்மீது தவழ்ந்தனர். சிலர் தங்கள் உயிரை இழந்தனர். கூரையின்மேலிருந்து மக்களை ஏற்றிவரும்படியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்கு அந்த அரசு ஹெலிகாப்டர்களை அனுப்பியது.—மேலுமான விவரங்களுக்கு, இதனுடன் சேர்ந்த “ஒரு லாஹாரிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டோம்!” என்ற கட்டுரையைக் காண்க.
அன்பு உதவும்படி பிறரை உந்துவிக்கிறது
பல வீடுகளும் சில ராஜ்ய மன்றங்களும் இழக்கப்பட்டபோதிலும் அல்லது சேதமடைந்தபோதிலும், தங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் எவரும் தங்கள் உயிரை இழக்காததை அறியவந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியடைந்தனர். என்றபோதிலும், லாஹார்களாலோ அல்லது வெள்ளத்தாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகளவான தேவை இருந்தது தெளிவாயிருந்தது. சாட்சிகளில் சிலர் தாங்கள் உடுத்தியிருந்த உடைகளோடு மட்டும் தப்பினர், அவையும் லாஹாரின் சேற்றில் ஊறியிருந்தன. அவர்களுக்குத் தேவையான உதவியளிக்க உடன் கிறிஸ்தவர்கள் எவ்விதம் பிரதிபலித்தனர்?
தங்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்றும் இடத்தைக் காலி செய்வதற்கு ஏதாகிலும் உதவி தேவைப்படுகிறதா என்றும் கண்டறிவதற்காக அதையடுத்த பகுதிகளிலிருந்த சபை மூப்பர்கள் முயற்சிகள் செய்தனர். இது மிகவும் சிரமத்தோடு செய்யப்பட்டது, ஏனெனில் லாஹார் படிவுகள் இன்னும் பல பகுதிகளில் மிருதுவாக இருந்தன. பாக்கலோர் சபையின் ஒரு மூப்பரான கீல்யெர்மோ டுங்கோல் கூறினார்: “நாங்கள் உதவச் சென்றோம். சகோதரர்களைச் சென்றெட்டுவதற்காக தொலைபேசி இணைப்புக்காகப் போடப்பட்டிருந்த கேபிள்களின்மீது நடந்தோம்.” அதே சபையைச் சேர்ந்த முழுநேர ஊழியரான வில்ஸன் ஊயி, மேலும் கூறினார்: “எங்களால் கிட்டத்தட்ட அங்குச் செல்லவே முடியவில்லை, ஏனெனில் மிகவும் வேகமாகப் பாய்ந்துகொண்டிருந்த மார்பளவு தண்ணீரைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது.” ஆனால், கவனத்துடன், எப்படியோ அவர்கள் சமாளித்தனர், மேலும், சபை உறுப்பினர்களின் நிலையை அவர்களால் கண்டறிய முடிந்தது, சாத்தியமான இடங்களில் உதவவும் முடிந்தது.
அக்டோபர் 2, திங்கட்கிழமை காலைப்பொழுதில், உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகம் அந்தத் தேவையைப் பற்றி நன்கு அறிந்துகொண்டது. அந்தக் கிளையிலிருந்த 345 விருப்பார்வ ஊழியர்கள் உதவ முடிந்ததா? ஆம்! உடனடியாகச் செயல்பட்டனர். காலை பத்து மணியளவில், இவ்வூழியர்கள் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு டன் அளவு உடையைத் தங்களது துன்புறும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இது கொஞ்சம் உணவோடும் நிதியோடும்கூட ஒரு லாரியில் அனுப்பப்பட்டது, அந்த லாரி அந்தப் பொருள்களை அதே நாளில் கொண்டுபோய்ச் சேர்த்தது.
சில நாட்களில், பெருநகரான மணிலாவிலிருந்த சபைகள் தேவையைப் பற்றி அறியவந்தன. தேவையான மற்ற பொருள்களோடு சேர்த்து ஐந்து டன்னுக்கும் மேலான அதிகப்படியான உடைகள் விரைவில் அனுப்பப்பட்டன. பேரழிவின்போது, ஜப்பானிலிருந்து வந்த சாட்சி ஒருவர் பிலிப்பீன்ஸைப் பார்வையிட வந்திருந்தார். அவர் அப்போதுதான் ஹாங்காங்கிலிருந்து வந்திருந்தார், அங்கு அவர் தனக்கென்று சில துணிமணிகளை வாங்கியிருந்தார். பினட்டூபோ சிகரத்துக்கு அருகில் வாழும் தன் உடன் கிறிஸ்தவர்களின் பரிதாப நிலையைக் கண்டபோது, தான் வாங்கியிருந்த எல்லா துணிமணிகளையும் கொடுத்துவிட்டு, தனக்கென்று ஒன்றையும் எடுத்துக்கொள்ளாமல் திரும்பினார். மெய்க் கிறிஸ்தவர்கள் தேவையிலிருப்பவர்களுக்கு—வெறுமனே அவர்கள் நலம்பெற வேண்டுமென்று கூறுவதோடல்லாமல், ‘சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம்’—அன்பைக் காட்டுவது எவ்வளவு ஆறுதலளிப்பதாய் இருக்கிறது.—யாக்கோபு 2:16.
யெகோவாவின் சாட்சிகள் அத்தகைய நிகழ்வுகள் தங்களது ஆவிக்குரிய காரியங்களுக்கான வைராக்கியத்தைக் குறைக்க அனுமதிக்காதது போற்றப்பட வேண்டிய மற்றொரு விஷயமாகும். கிறிஸ்தவக் கூட்டங்கள் தொடரப்பட்டன—ராஜ்ய மன்றத்தினுள்ளேயே கணுக்கால் அளவு தண்ணீர் இருந்த இடத்திலும்கூட ஒரு சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்டன. பைபிளின் செய்தி மற்றவர்களுக்குச் சென்றெட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாய், இக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கித்தனர். சிலர் தாங்கள் சாட்சி கொடுக்கவேண்டிய இடங்களுக்கு—அவ்வளவாய் வெள்ளத்தால் பாதிக்கப்படாத பகுதிக்குச்—செல்லுவதற்காகத் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டியதாயிருந்தது. அவர்கள் துணிமணிகளைத் தங்களோடு எடுத்துச் சென்று, காய்ந்த பகுதிக்குப் போய், அதை மாற்றிக்கொண்டனர். ஆகவே இக் கிறிஸ்தவர்கள் தாங்கள்தாமே துன்பமனுபவித்தபோதிலும், பிறருக்குக் கரிசனை காட்டுவதிலிருந்து இது தங்களைத் தடை செய்ய அனுமதிக்கவில்லை.
ஆம், பினட்டூபோவின் பின்விளைவு, அது எவ்விதமாய் இருக்கும் என்று பலர் நினைப்பதைக் காட்டிலும் அதிகமானது. அது எதிர்காலத்தில் பல ஆண்டுகளாகத் தொடரவிருக்கும் ஒரு கதை. லாஹார்களைக் கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சியெடுக்கப்பட்டுள்ளன, ஆனால் சில சமயங்களில் அது மனிதனின் திறமைக்கும் அப்பால் செல்லுகிறது. அத்தகைய சூழ்நிலைகள் எழும்புகையில், மெய்க் கிறிஸ்தவர்கள் கடவுள்மீதும் அயலான்மீதும் உள்ள தங்கள் அன்பைக் காட்டுவதற்கு அவற்றை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதைக் காண்பது எவ்வளவு இன்பமூட்டுவதாய் உள்ளது!
[அடிக்குறிப்பு]
a மேலுமான தகவலுக்கு, அவ்வெடிப்பைப் பற்றி பிப்ரவரி 8, 1992 ஆங்கில இதழ் விழித்தெழு!-வில் வெளிவந்திருந்த மூல அறிக்கையான, “மணல் மழையாகப் பொழிந்த நாள்” என்ற கட்டுரையில் பக்கங்கள் 15-17-ஐக் காண்க.
[பக்கம் 21-ன் பெட்டி/படம்]
பினட்டூபோ சிகரம் உலகை பாதித்தது எப்படி
பினட்டூபோ சிகரம் ஒரு முறை வெடித்ததென்றால் முடிந்த அதன் பின்விளைவும் அதோடு முடிந்துவிடுகிறது. அது சரிதானா? இல்லவே இல்லை! இன்னும் இருந்துகொண்டிருக்கும் பூகோள அளவிலான பின்விளைவுகளில் சிலவற்றைக் கவனியுங்கள்.
◼ வெடித்ததற்குப் பிறகு சிறிது காலமாக தனிச்சிறப்புள்ள அழகிய சூரிய அஸ்தமனங்களை நீங்கள் கண்டிருக்கலாம்.
◼ ஜூலை 11, 1991-ல் ஏற்பட்ட வழக்கத்துக்கு மாறான பிரகாசமான முழு சூரிய கிரகணத்தைக் கண்ட மெக்ஸிகோவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் வியப்புற்றனர். அதன் காரணம்? பினட்டூபோ சிகரத்தின் வெடிப்பு. அதன் தூசித் துகள்கள் சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை வழக்கத்துக்கு அதிகமாய் சிதறடித்தன.
◼ வானிலையும்கூட பாதிக்கப்பட்டது. அந்த வெடிப்பு நிகழ்ந்து மூன்று மாதங்கள் கழித்து, ஜப்பானின் டோக்கியோ வழக்கமாகப் பெறுவதைவிட 10 சதவீதம் குறைந்த அளவில் நேரடியாக சூரிய ஒளியைப் பெற்றுவந்ததாக அறிக்கை செய்யப்பட்டது. எரிமலை வெடிப்பின்போது வெளிவந்த சாம்பல் சூரிய ஒளியின் ஒரு பகுதியை அடைத்துவிட்டது. வட கோளார்த்தத்தைச் சேர்ந்த பகுதிகளில் சராசரியாகப் பெறும் வெப்பநிலையில் சுமார் 1 டிகிரி செல்ஸியஸ் குறைந்திருந்ததாக ஸயன்ஸ் நியூஸ் குறிப்பிட்டுக் காட்டியது.
◼ மற்றொரு விளைவானது, பூமியின் ஓஸோன் அடுக்கு அழிக்கப்படுவதில் அதிகரிப்பு. எரிமலை வெடிப்பின் விளைவால் வளிமண்டலத்தில் கலந்திருந்த கந்தக அமிலமும் மனிதர் உற்பத்தி செய்யும் குளோரின்களும் சேர்ந்து ஓஸோன் அளவில் குறைவை ஏற்படுத்தின. பொதுவாக ஓஸோன் அடுக்கானது புற்று நோயைப் பெறுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்படி உதவும் ஓர் வளிமண்டலக் கேடயமாகச் செயல்படுகிறது. அந்த வெடிப்பிற்குப் பிறகு, அன்டார்க்டிக் பகுதியிலிருந்த ஓஸோன் அளவுகள் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைந்தன; பூமத்தியரேகைப் பகுதியில், அந்த அளவானது 20 சதவீதம் வரையாகக் குறைந்தது.
◼ பசியும் நோயும் மேலுமான எதிர்மறை விளைவுகளாகும். எரிமலையால் இடமாற்றம் செய்யப்பட்ட மக்கள் தற்காலிகமாக வெளியேற்ற மையங்களில் வாழும்படியாக வற்புறுத்தப்பட்டனர், அங்கே நோய் தீவிரமாகப் பரவியது. குறிப்பாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், வெடிப்பின் காரணமாக தங்கள் தேசத்திலிருந்து வெளியேறி, தங்களுக்குப் பழக்கமிராத வேறொரு சூழலில் வாழும்படி வற்புறுத்தப்பட்டவர்களான பூர்வீகமாய்க் குடியிருந்த ஏட்டா இனத்தவர் ஆவர்.
[படம்]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அல்லது லாஹாரால் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்
[பக்கம் 18-ன் படம்]
லாஹார் ஒன்றால் அடித்துச் செல்லப்பட்ட வீடு
[பக்கம் 18-ன் படம்]
கூரை வரை மூடப்பட்ட இரண்டு அடுக்குக் கட்டடங்கள்
[பக்கம் 18-ன் படம்]
மிகவும் வளமான விளைநிலம் லாஹார்களால் தரிசு நிலமாக மாறியது
[பக்கம் 19-ன் படங்கள்]
மேலே: லாஹார் ஒன்றால் பாதி மூடப்பட்ட பாக்கலோர், பம்பங்காவிலுள்ள வங்கிக் கட்டடம், மார்ச் 1995
கீழே: அதே கரை பின்னால் தோன்றிய லாஹார் ஒன்றால் மூடப்பட்டுள்ளது, செப்டம்பர் 1995