இன்றைய விளையாட்டு பொம்மைகள்—நம் பிள்ளைகளுக்கு எதைக் கற்பிக்கின்றன?
குழந்தைகளுக்கு விளையாடவேண்டும் என்ற இயல்பான உந்துவித்தல் இருக்கிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளைத் தெரிந்தெடுத்தல் (Choosing Toys for Children) என்ற புத்தகம் சொல்கிறபடி, ஆரோக்கியமான குழந்தைகள் “தாங்களாகவே தங்களுடைய சொந்த ஆராய்ச்சி உலகத்தையும் கற்பனை உலகத்தையும் உருவாக்கிக்கொள்கின்றனர்.” பூர்வகாலங்களிலும் குழந்தைகள் இவ்வாறுதான் செய்துவந்தனர். அந்தக் காலங்களிலெல்லாம் பிள்ளைகள் ‘தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பதை’ பார்ப்பது சர்வசாதாரணமாக இருந்தது. (சகரியா 8:5) அத்தகைய விளையாட்டு பெரும்பாலும் புதியதாக ஏதேனும் கண்டுபிடிக்கும் விளையாட்டுக்களையும் கற்பனைகள் நிறைந்த விளையாட்டுக்களையும் உட்படுத்தியது.—மத்தேயு 11:16, 17-ஐ ஒப்பிடவும்.
அப்படியானால், விளையாட்டு பொருத்தமாகவே குழந்தையின் வேலை என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இது உண்மையானால், விளையாட்டு பொம்மைகள் ஒரு குழந்தையின் கருவிகள் என்று சொல்லப்படலாம். பேரண்ட்ஸ் பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “குழந்தைகள் உலகத்தைப்பற்றி அறிந்துகொள்வதற்கான வழி விளையாட்டுதான். . . . விளையாட்டு பொம்மைகளைக் கொண்டு விளையாடுவது உலகத்தை குழந்தையின் அளவுகளுக்கு—குழந்தையால் கையாளப்பட்டு, கட்டுப்படுத்தப்பட முடிந்த ஒரு உலகமாக—சுருக்குகிறது. விளையாட்டு தசைகளையும் ஒத்திசைவையும் வளரச்செய்து, சகஜமாக பழகுவதை அதிகரிக்கிறது, நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள தடைகளை ஆய்வுசெய்கிறது. மேலும் ஒருவரோடொருவர் பேச்சுத்தொடர்புகொள்ள, காரியங்களைச் செய்வதில் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க, பகிர்ந்துகொள்ள கற்றுக்கொள்வதற்குப் பிள்ளைகளுக்கு உதவிசெய்கிறது. விளையாட்டு கற்பனாசக்தியைத் தூண்டிவிட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திறமைகளில் அனுபவத்தைத் தருகிறது.”
பைபிள் காலங்களிலும் விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளுக்கு முக்கியமானவையாக இருந்தன. இஸ்ரேலில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள் அடங்கியிருந்த, விலைமதிக்கத்தக்க ஒரு புதையலைத் தோண்டி எடுத்திருக்கின்றன. அதில் சில, கிலுகிலுப்பைகள், ஊதல்கள், சிறிய மண் குடங்கள், ரதங்கள் போன்ற விளையாட்டுப் பொருட்களாகும். தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “பண்டையகால ஆப்பிரிக்காவில், குழந்தைகள் பந்துகளையும், பொம்மை விலங்குகளையும், இழுத்து விளையாடும் பொம்மைகளையும் வைத்து விளையாடி மகிழ்ந்தனர். பூர்வகால கிரேக்க மற்றும் ரோமர்களின் குழந்தைகள் படகுகள், சக்கர வண்டிகள், வளையங்கள், பம்பரங்கள் போன்றவற்றை வைத்து விளையாடி திளைத்தனர். ஐரோப்பாவில் இடைக்காலங்களின்போது, பிரபலமான விளையாட்டுச் சாமான்கள் களிமண் கோலிகுண்டுகள், கிலுகிலுப்பைகள், பொம்மைகள் போன்றவற்றை உள்ளடக்கியவையாக இருந்தன.”
சிந்திக்கத் தூண்டும், ஆர்வமூட்டும், கற்றுக் கொடுக்கும் விளையாட்டு பொம்மைகள் இன்றும்கூட ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. எனினும், சந்தேகத்திற்குரிய பயன்களைக்கொண்ட, திடீரென அதிகரித்த ஏராளமான விளையாட்டுப் பொருட்கள் இன்று விற்பனையில் இருக்கின்றன. டைம் பத்திரிகையில் வந்த 1992-ம் வருடத்திய கட்டுரை ஒன்று இவ்வாறு சொல்கிறது: “நல்ல, அசிங்கமில்லாத விளையாட்டுக்கள் ஏதாவது தேடுகிறீர்களென்றால், இந்த வருடம் வெளியிடப்படும் புதிய விளையாட்டுப் பொருட்களுக்காக காத்திருக்காதீர்கள். பெரும்பாலும் ஒவ்வொரு பெரிய உற்பத்தியாளரும் அருவருப்பூட்டுபவற்றையே சிறப்பித்துக் காட்டுகிறார்.” ஒரு குறிப்பிட்ட வகையான பொம்மைகளின் கூட்டத்தில் நிஜ மண்டையோட்டின் அளவுள்ள பிளாஸ்டிக் மண்டையோடும் இருக்கிறது. இதைப் பிள்ளைகள் “பார்க்க சகிக்காதவகையில் எப்படியெல்லாம் பொருத்தியமைக்க முடியுமோ அப்படியெல்லாம்” பொருத்தியமைக்கலாம். வாந்தியெடுத்தல் போன்ற உடலின் செயல்பாடுகளைக் காப்பியடிக்கும் பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளன. இந்த விளையாட்டு பொம்மைகளை வாங்கும்படி பெற்றோரும் பிள்ளைகளுமாகிய இருசாராருமே சமாளிக்கமுடியாத அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
பிள்ளைகளுக்கு விற்பது
பண்டைய காலத்து “ஒரு பிள்ளைக்கு எதையாவது விற்பது மரண தண்டனைக்கேதுவான குற்றம் என்பதாக ஹம்முராபியின் நெறிமுறை விதித்தது,” என்று பிடியாட்ரிக்ஸ் இன் ரிவ்யூ என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. இருந்தாலும், இன்றைய விளையாட்டு பொம்மை உற்பத்தியாளர்களும் விளம்பரதாரர்களுமோவென்றால் தங்களுடைய விலையுயர்ந்த உற்பத்திப் பொருட்களை கபடமற்ற பிள்ளைகளுக்குமுன் குவித்து வியாபாரம் நடத்துவதற்கு வெட்கப்படுவதேயில்லை. புத்திக்கூர்மையுள்ள ஆராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி, பொம்மை தயாரிப்பாளர்கள் பிள்ளைகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்கின்றனர். தங்களுடைய உற்பத்திப் பொருட்களில் தொடர்ந்து புதிய புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், போன வருட மாடலை பழையதாக தோன்றச்செய்து, இந்த வருட மாடலை இன்றியமையாத ஒன்றாக ஆக்க அவர்களால் முடியும்.
விளையாட்டு பொம்மை உற்பத்தித் தொழில் தொலைக்காட்சியின் வல்லமையையும் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்கிறது. ஐக்கிய மாகாணங்களில், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முழுவதும் விளையாட்டு பொம்மைகளின் வர்த்தக விளம்பரங்களால் நிறைந்திருக்கின்றன. கண்கவரும் கேமரா நுணுக்கங்கள், விசேஷ விளைவுகள் (special effects), உள்ளத்தைக் கிளர்ச்சியடையச் செய்யும் இசை ஆகியவற்றை உபயோகித்து, அந்த விளம்பரங்கள் காண சகிக்காத பொம்மைகளைக்கூட மந்திர சக்தியுள்ளவையாயும் திளைப்பூட்டுபவையாயும் தோன்றச் செய்கின்றன. அப்படிப்பட்ட ஏமாற்று தந்திரங்களைப் பெரும்பாலான பெரியோர்களால் காணமுடிந்தாலும், “சிறு பிள்ளைகள் விளம்பரங்கள் உண்மையைத்தான் சொல்கின்றன என்று நம்புகின்றனர்.”—பிடியாட்ரிக்ஸ் இன் ரிவ்யூ.
பிள்ளைகளுக்கென்று காண்பிக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அநேகம், வழக்கமான நிகழ்ச்சியைவிட நீளமான விளம்பரங்களே. குழந்தை மருத்துவத்திலுள்ள தற்கால பிரச்சினைகள் (Current Problems in Pediatrics) என்ற பிரசுரம் சொல்கிறபடி, அத்தகைய நிகழ்ச்சிகளெல்லாம் “ஒரு பொம்மையின் விற்பனையை பெருக்குவதற்காக அமைக்கப்பட்டவையேயல்லாமல், பிள்ளைகளின் வாழ்க்கையில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவோ வளமூட்டுவதற்காகவோ அல்ல.” உதாரணமாக, டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்சா டர்ட்டிள்ஸ் என்ற நிகழ்ச்சி “70-க்கும் அதிகமான பொருட்களையும், ஒரு தானியக்கலவை காலையுணவையும், ஒரு திரைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.”
பிடியாட்ரிக்ஸ் இன் ரிவ்யூ சொல்கிறபடி, “வர்த்தக விளம்பரங்களைப் பார்க்கும் பிள்ளைகள் விளம்பரம் செய்யப்பட்ட அந்தப் பொம்மைகளை வாங்கித்தந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர் என்பதாக பல ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.” ஒரு சர்வதேசிய பொம்மை உற்பத்தி நிறுவனத்தின் ஸ்தாபகர் சொல்கிறார்: “பிள்ளைகள் அப்பாவுடைய சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டிருப்பதை நீங்கள் சும்மா பாருங்கள். அப்பொழுது அவர்கள் சொல்கிறதைப் புரிந்துகொள்வீர்கள்: ‘இந்தப் பொம்மைய எனக்கு வாங்கித் தரலேன்னா நான் செத்துப்போயிடுவேன்.’” அப்படியானால், கனடாவில் மட்டும் கடைக்குப் போகிறவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நண்பர்களுக்கும் விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதற்காக ஒவ்வொரு வருடமும் 120 கோடி டாலர்களைச் செலவழிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமேதுமில்லை.
போர் விளையாட்டுகள்
விளையாட்டு பொம்மை உற்பத்தித் தொழிலில் வீடியோ போர் விளையாட்டுக்கள் முதலிடம் வகிக்கின்றன. அத்தகைய விளையாட்டுக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திறமைகளை வளர்த்து, கண் பார்த்து கை செய்யும் வேலையில் நல்ல ஒத்திசைவை ஏற்படுத்தி, தசையின் திறமைகளை அபிவிருத்தி செய்ய உதவுகின்றனவென்றும், அறிவைப் பெறுவதற்கான வாஞ்சையைத் தூண்டிவிடுகின்றனவென்றும் அவற்றின் ஆதரவாளர்கள் வாதாடுகின்றனர். “தகுந்தமாதிரி பயன்படுத்தினால்,” தி டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளின் ஒரு கட்டுரை சொல்கிறது, “ஒரு எலக்ட்ரானிக் விளையாட்டுச் சாமான் கேடற்றதாக இருக்கலாம், அறிவு புகட்டுவதாகவும்கூட இருக்கலாம்.” ‘ஆனால்,’ அந்தச் செய்தித்தாள் ஒப்புக்கொள்கிறது, ‘பெரும்பாலும் இது குழந்தையைத் தனிமையில் இருக்கவைக்கும் ஒரு விளையாட்டாக, அடிமையாக்கும் ஒன்றாகக்கூட இருக்கிறது.’
வீடியோ போர் விளையாட்டு விளையாடுவதில் வெறிபிடித்தவனாக மாறிய ஒரு பையனைப்பற்றி யோசித்துப் பாருங்கள். அவனுடைய தாய் சொல்கிறாள்: “அவன் அவ்வளவு சாதாரணமானவன் அல்ல—எல்லாரையும் கொன்றாலொழிய அவன் அந்தத் திரையைவிட்டு நகர்வது கிடையாது.” இந்தக் குழந்தைக்கு எத்தனை வயதாகிறது? இரண்டே இரண்டு வயது! ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் பட்டன்களை அழுத்தி அழுத்தி அவனுடைய பிஞ்சு கட்டைவிரலெல்லாம் கொப்புளமாகிக் கிடக்கிறது. அப்படியிருந்தும் அந்தத் தாய்க்கு அக்கறையே இல்லாததுபோல் தெரிகிறது. “எனக்கு இருக்கும் ஒரே கவலை என்னவென்றால், அவன் எல்லா காரியத்தையும் ஒரு நொடியில் செய்யவேண்டும் என்று விரும்புகிறானே என்பதுதான்,” என்று சொடக்குப்போட்டு அவள் சொல்கிறாள். விளையாட்டு “நல்ல வேகமானதுதான் . . . , ஆனால் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு வேகமாக இருக்க முடிவதில்லையே.”
தி டோரன்டோ ஸ்டார் சொல்கிறபடி, வீடியோ விளையாட்டுக்களை ஆதரிக்காத சிலர் “பிள்ளைகள் கற்பனைகளினால் தங்களைத்தாங்களே மகிழ்வித்துக்கொள்ள கற்றுக் கொள்வதிலும், வாசிப்பதிலோ வழிவழியாய் வரும் பொழுதுபோக்குகளை மேற்கொள்வதிலோ இந்த விளையாட்டுக்கள் உற்சாகமிழக்கச் செய்கின்றன. மேலும் பிள்ளைகள் பள்ளி வீட்டுப்பாடங்களைச் செய்யாமல் டிமிக்கி கொடுக்கப் பார்க்கும்படி செய்கின்றன,” என்று கருதுகின்றனர். ‘வீடியோ விளையாட்டுக்கள் வசீகரிக்கும் ஒரு அபாயமாக இருக்கின்றன, மேலும் பிள்ளைகளில் வன்முறையான மற்றும் தனிமையை விரும்பும் நடத்தைகளை வளர்த்துவிடக்கூடியனவாகவும் இருக்கின்றன,’ என்றும்கூட குழந்தைக் கல்வி நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
1991-ல் பாரசீக வளைகுடா போர் சமயத்தில் நடந்த குண்டு வெடிப்புகளின் செய்தியைத் தொலைக்காட்சியில் காட்டியதுதானே, அதேபோன்ற விளையாட்டு போர்க்கருவிகளுக்கான பெரிய டிமான்டை தூண்டிவிட்டது. அதிகம் கேட்டு வாங்கப்படும் போர்க்கருவிகளின் பட்டியலில் முதலில் இருப்பவை, அப்ராம்ஸ் டாங்குகள், ஸ்கட் ஏவுகணைகள், ஹின்ட் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் மாடல்களாகும். அத்தகைய பொம்மைகளை வைத்து விளையாடுவது வம்புச்சண்டையை உற்சாகப்படுத்தலாம் அல்லது ஒருவேளை பிள்ளைகளுக்கு வன்முறையைப் பற்றிய உணர்ச்சியை மரத்துப்போகச் செய்துவிடலாம் என்று வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். இவ்வாறு செய்வது, குறைந்தபட்சம், ஏசாயா 2:4-ல் சொல்லப்பட்ட பைபிள் வசனத்தின் உண்மை அர்த்தத்திற்கு எதிராக இருக்கிறது. அவ்வசனம் கடவுளுடைய ஜனங்கள் “போருக்காக மீண்டும் இனி ஒருபோதும் பயிற்றுவிக்கப்படப் போவதில்லை,” என்று முன்னறிவித்தது.—தி நியூ இங்லிஷ் பைபிள்.
அதிக சக்திவாய்ந்த நீர்த் துப்பாக்கிகள் போன்ற தத்ரூபமாக தோன்றும் பொம்மைகள் அவ்வப்போது உண்மையிலேயே வன்முறையைக் கிளறிவிட்டிருப்பதுமுண்டு. வடக்கு அமெரிக்க நகர் ஒன்றில், அதிக சக்திவாய்ந்த பிளாஸ்டிக் நீர்த் துப்பாக்கி சண்டை, நிஜமான சண்டையாக மாறி ஒரு 15-வயது பையனின் மரணத்தில் முடிவடைந்தது. மற்றொரு சம்பவத்தில், நீர்த் துப்பாக்கிகளால் முழுவதுமாக நனைக்கப்பட்டு, சீற்றமடைந்த ஒரு துப்பாக்கிக்காரனால் இருவர் காயப்படுத்தப்பட்டனர். தீங்கே விளைவிக்காததுபோல் தோன்றும் நீர்த் துப்பாக்கி சண்டைகள் மற்றுமநேக வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிட்டிருக்கின்றன.
நீங்கள் அனுப்பும் செய்தி
பொறுப்புள்ள பெற்றோர் எவரும் அபூர்வமாகவே உண்மையில் வன்முறையை அங்கீகரிக்கின்றனர். இருந்தபோதிலும், போர்-பொம்மை உற்பத்தித் தொழில் செழித்து வளருகிறது. சிலசமயங்களில் குழந்தை பிணங்குவதைப் பார்ப்பதைவிட பெற்றோர் தங்களுடைய சொந்த நம்பிக்கைகளை விட்டுக்கொடுத்துவிடுகின்றனர். அவ்வாறு செய்வதனால் அவர்கள் குழந்தைக்கு சொல்லித்தீராத தீங்கை விளைவிக்கின்றனர். “நாம் பிள்ளைகளுக்கு விளையாட்டு பொம்மைகளைக் கொடுக்கையில், அந்தப் பொம்மை எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறதோ அதற்கான அங்கீகாரத்தை நாம் தெரியப்படுத்துகிறோம்,” என்று கனடாவைச் சேர்ந்த மனநல ஆராய்ச்சியாளர் சூசன் கோல்ட்பெர்க் விவாதிக்கிறார். சில பிள்ளைகள் சில சமயங்களில் ஓரளவு வம்புச்சண்டை போடுவது இயற்கையானதே. “துப்பாக்கி இல்லையென்றால் பிள்ளைகள், தங்களுடைய விரல்களைக்கூட பயன்படுத்தி, சொந்த துப்பாக்கிகளை உருவாக்கிக்கொள்வார்கள்,” என்று வாதாடுகிறார் மனநல நிபுணர் ஒருவர். செய்தாலும் செய்வார்கள். ஆனால் வன்முறை ஆயுதங்களின் பொம்மைகளைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதன்மூலம் வம்புச்சண்டையை பெற்றோர் உற்சாகப்படுத்தவேண்டுமா?
ஒரு பொம்மைத் துப்பாக்கியை வைத்து விளையாடிய ஒரே காரணத்துக்காக எந்தப் பிள்ளைகளும் உண்மையிலேயே குற்றவாளிகளாக வாழ்க்கையை மேற்கொள்வது அபூர்வமே என்பதும் உண்மைதான். ஆனால் உங்களுடைய பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட பொம்மைகளைக் கொடுப்பீர்களென்றால், நீங்கள் என்ன செய்தியை அனுப்புகிறீர்கள்? வன்முறை மகிழ்விக்கக்கூடியது என்றோ கொல்லுவதும் போரிடுவதும் கிளர்ச்சியூட்டக்கூடியவை என்றோ அவர்கள் கருதவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? கடவுளுடைய தராதரங்களுக்கான மரியாதையை அவர்களுக்குக் கற்பிக்கிறீர்களா? அவருடைய வார்த்தை சொல்கிறது: “வன்முறையை விரும்பும் எவனையும் [கடவுளுடைய] உள்ளம் நிச்சயமாகவே வெறுக்கிறது.”—சங்கீதம் 11:5.
‘பெற்றோரின் மறைமுக அனுமதியுடன் பிள்ளைகள் எவ்வளவதிகம் வன்முறை விளையாட்டை விளையாடுகின்றனரோ, அவ்வளவதிகம் அவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முரட்டுத்தனத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது,’ என்று சூசன் கோல்ட்பெர்க் தொடர்ந்து கூறுகிறார். கலாத்தியர் 6:7-ல் பைபிள் சொல்கிறது: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” வன்முறை விளையாட்டிலிருந்து ஒரு பிள்ளை நல்ல ஆளுமை குணாதிசயங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
நியாயமாகப் பார்த்தால், பிள்ளைகள் அனைவரும் வித்தியாசமானவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு பிள்ளை வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகலாம், ஆனால் மற்றொரு பிள்ளை அடிமையாகாமல் இருக்கலாம். வீடியோ திரையில் காணும் வன்முறையைப் பிள்ளைகள் உண்மையாவே நிஜ-வாழ்க்கை வன்முறையோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்களா என்பது சர்ச்சைக்குரியது. ஆகவே தங்களுடைய சொந்த பிள்ளைகளுக்கு மிகச் சிறந்தது எது என்பதை பெற்றோர் தீர்மானித்து, தங்களுடைய குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளைத் தெரிந்தெடுப்பதில் அதிக கவனமாக இருக்கவேண்டும்.
[பக்கம் 6-ன் படம்]
விளையாடுவது பிள்ளைகள் ஒருவரோடொருவர் பழகக் கற்றுக் கொள்வதற்கு உதவுகிறது