பெற்றோரே—உங்கள் பிள்ளை எதை வைத்து விளையாடுகிறது?
“வேலை மட்டும்தான், விளையாட்டே இல்லை என்பது ஜேக்கை மந்தமாக்குகிறது.” இவ்வாறு சொல்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாட்டு எப்போதுமே ஒரு முக்கிய பாகமாக இருந்து வந்திருக்கிறது. விளையாட்டின் மூலமாகத்தான் குழந்தைகள் தங்களுடைய அறிவையும் உடலையும் வளர்த்து, முக்கியமான திறமைகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். இருந்தபோதிலும், பிள்ளைகளின் விளையாட்டு இன்று பெரிய வியாபாரமாக மாறியிருக்கிறது. பொம்மை உலகம், பிள்ளைகளாலோ பெற்றோராலோ அல்ல, ஆனால் உற்பத்தியாளர்கள், சில்லறை வியாபாரிகள், விளம்பரதாரர்கள், தந்திரமுள்ள விற்பனை ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களாலே ஆளப்படுகிறது. பொம்மை உற்பத்திசெய்யும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியாலும், வல்லமைவாய்ந்த தகவல்தொடர்புத் துறையின் ஆதரவாலும், அவர்கள் விளையாட்டு உலகத்திற்கு மாற்று விளக்கமளிக்கின்றனர். அது பெற்றோர், பிள்ளைகள் இருவருக்குமே மோசமான விளைவுகளைக் கொண்டுவருகிறது.
பொம்மை உற்பத்தி துறையில் உள்ள அநேகருக்குக் குழந்தைகளின் நலனில் உண்மையான அக்கறை இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. என்னதான் இருந்தாலும், கிடைக்கும் லாபமே அடிக்கடி பிரதானமாகிவிடுகிறது. அவர்களுடைய முக்கிய விவாதமே, எது பிள்ளைகளுடைய அறிவை வளர்க்கும் அல்லது அவர்களுடைய சிந்தனாசக்தியைத் தூண்டிவிடும் என்பதல்ல, ஆனால் எது நன்றாக விற்பனையாகும் என்பதாக ஆகிவிடுகிறது. மேலும் எது விற்பனையாகிறதோ அது ஏதோ சமீபத்திய காலத்தில் இருந்துவந்த சாதாரண துணி, மரம், பிளாஸ்டிக் போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் அல்ல. ஆனால், உயர்ந்த தொழில்நுட்பத்தோடு செய்யப்பட்ட தத்ரூபமான விளையாட்டு பொம்மைகளாகும். இவை அவ்வளவு தத்ரூபமாக இருப்பதால், குழந்தையின் சிந்தனாசக்தியைத் தூண்டிவிடுவதற்கு அதிகத்தை அல்லது எதையுமே விட்டுவைப்பதில்லை.
உதாரணமாக, ஒரு உற்பத்தியாளர், சிறிய பொம்மை மனிதர்களைக் கொண்டுள்ள ஒரு ஜோடி பொம்மைக் கார்களை விற்பனை செய்கிறார். மோதினால் அவை சிதறக்கூடியவை. அந்தக் கார்கள் மோதும்போது, அந்தப் பொம்மை மனிதர்களின் கைகால்களும் தலைகளும் சிறிய கார்களின் ஜன்னல் வழியே சிதறுகின்றன. தத்ரூபமான இன்னொரு பொம்மை கருத்தரித்தலை பாவனையாய் நடிக்க முயற்சிக்கிறது. ஒரு சிறு பெண்பிள்ளையின் வயிற்றைச் சுற்றி இருக்கும்படி அமைக்கப்பட்ட ஒரு பையைப்போன்ற அமைப்பானது, வளரும் சிசு மென்மையாக உதைப்பதுபோலவும் அதன் இதயம் துடிப்பதுபோலவும் பாவனையாய் நடிக்கிறது.
அத்தகைய பொம்மைகள் கற்றுக் கொடுப்பதற்குப் பயன்படுகின்றன என்பதாக சிலர் கருதுகின்றனர். ஒரு பொம்மை உற்பத்தி நிறுவனத்தின் தகவல்தொடர்பு இயக்குநராக இருக்கும் டாணா கிப்ஸ், அந்தக் கருத்தரிப்பை பாவனையாய் நடிக்கும் பொம்மையை, “அம்மா அனுபவிப்பதை [சிறு பெண்களுக்கு] விளையாட்டாக சொல்லிக்கொடுக்கும் ஒரு வழி” என்று அழைக்கிறார். எனினும், எல்லாருமே இவரைப்போல ஆர்வ மனப்பான்மையைக் காண்பிக்கிறதில்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவத் துறை பேராசிரியர், டாக்டர் T. பெரி ப்ரேஸல்டன், இந்தப் பொம்மையை, “தங்கள் பிள்ளைகளிடம் அருமையான ஒன்றைப்பற்றி சொல்வதற்கான பெற்றோரின் வாய்ப்பை ஆக்கிரமித்தல்” என்று அழைக்கிறார். குழந்தை ஆராய்ச்சியின் பேராசிரியர், டாக்டர் டேவிட் எல்கைன்ட், “இந்தப் பொம்மைகள் வரம்புமீறிப் போகின்றன,” என்று வாதாடுகிறார். ஒரு சிசுவாக பாவனையாய் நடிக்கும் ஒரு பொம்மை, “[பிள்ளைகள்] புரிந்துகொள்வதற்கு அல்லது மதித்துணருவதற்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது,” என்று அவர் சொல்கிறார். கோரமான வாகன விபத்தை அப்படியே அசலாக பாவனையாய் நடிக்கும் பொம்மைகளைப் பொருத்தவரை, தொலைக்காட்சி ஏற்கெனவே வன்முறையால் நிறைந்திருப்பதால், “இந்த மாதிரி பொம்மைகளைக்கொண்டு அதை ஏன் இன்னும் ஆணித்தரமாக பதியவைக்கவேண்டும்?” என்று அவர் மேலுமாகக் கேட்கிறார்.—தி க்ளோப் அண்ட் மெய்ல், பிப்ரவரி 8, 1992.
வீடியோ போர் விளையாட்டுக்கள், அதிசக்தி வாய்ந்த நீர்த் துப்பாக்கி விளையாட்டுக்களைப் போன்ற பிரபலமான மற்ற விளையாட்டுக்களைப் பற்றியும் கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. அமெரிக்க பொம்மை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சொல்கிறபடி, “எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்திலும் சந்தையில் 1,50,000 பொம்மைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கின்றன.” இதைப் பார்க்கும்போது, எந்தப் பொம்மைகளை வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கும் ஒரு கடுமையான சவால் பெற்றோருக்கு இருக்கிறது. இந்த விஷயத்தில் பெற்றோரை வழிநடத்த வேண்டியது எது? இன்றையதின பொம்மைகளில் சிலவற்றைப்பற்றி கவலைகொள்வதற்கு நியாயமான காரணம் இருக்கிறதா? இந்தக் கேள்விகளையும் சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளையும் அடுத்துவரும் கட்டுரைகள் ஆராயும்.