பெற்றோரே—உங்கள் பிள்ளையின் விளையாட்டு பொம்மைகளை ஞானமாக தெரிந்தெடுங்கள்
பிள்ளைகள் “கர்த்தரால் வரும் சுதந்தரம்,” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 127:4) ஆகவே தேவபயமுள்ள பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பது தங்களது கடமை என்பதை உணரவேண்டும். (எபேசியர் 6:4) தங்களுடைய பிள்ளைகளின் ஆளுமைகளை உருவாக்கும் பொறுப்பை அவர்கள் பொம்மை உற்பத்தியாளர்களுக்கு விட்டுவிடுவதில்லை.
பிள்ளைகளின் மனது மற்றும் உணர்ச்சி சம்பந்தமான வளர்ச்சியைத் தூண்டிவிடுவதில் பொம்மைகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கலாம். எனினும், பெற்றோர் மிக நுட்பமான இயந்திரங்களில் அதிக பணத்தைக் கொட்டவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதில்லை. நற்பயன்களை விளைவிக்கும், ஆர்வத்தைக் கிளறிவிடும் பொம்மைகளில் சிலவற்றுக்கு அவ்வளவு பணம் ஒன்றும் தேவைப்படுவதில்லை.
சாதாரணமான ஒரு அட்டைப் பெட்டியை ஒரு விளையாட்டு வீடாகவோ ஆகாய விமானமாகவோ அல்லது பிள்ளையின் வளமான கற்பனாசக்திக்கு எட்டிய ஏதோவொன்றாகவோ வடிவமைக்கலாம். ஒரு வாளியும் ஒரு மண்வாரியும் (shovel) மணல் கோட்டைகளைக் கட்ட ஒரு பிள்ளைக்கு உதவும். அதேபோல எளிமையான அச்சுக்கட்டைகள் (blocks), புதிர்விளையாட்டு சாமான்கள், களிமண், வண்ணக்குச்சிகள் போன்றவை பயன் விளைவிக்கும் வகையில் மணிக்கணக்காக பொழுதைப்போக்க உதவுகின்றன. வளர்ந்த பிள்ளைகளுக்கு, ஓவியம் தீட்டுவதற்கான சாதனங்களும் பொழுதுபோக்கு சாதனங்கள் அடங்கிய பெட்டிகளும் பிரயோஜனமுள்ள திறமைகளைக் கற்பிக்கவல்லவையாய் இருக்கின்றன. இவை படைப்புத்திறனை வளர்த்துக்கொள்ளும் பயனுள்ள வழியாகவும், கம்ப்யூட்டர் உருவங்களைச் சுட்டுத்தள்ளுவதைவிட அளவுகடந்த திருப்தியைத் தருவனவாகவும் இருக்கின்றன.
சில விளையாட்டுக்களுக்கு விசேஷமான சாதனங்கள் ஒன்றுமே தேவைப்படுவதில்லை. காடுகளினூடே நடந்து போவது, முக்கியமாக தன்னோடு அதிக நேரம் செலவுசெய்யும் ஒரு அன்பான பெற்றோரோடு நடந்து போவது, ஒரு பிள்ளைக்குக் கிளர்ச்சியூட்டும் ஒரு சாதனையாக இருக்கலாம். ஏன், அடிப்படையான வீட்டுவேலைத் திறமைகளையும்கூட மனமகிழ் நடவடிக்கைகளாக கற்றுக்கொடுக்கலாம். “ஒரு கேக் தயார்பண்ணுவது அல்லது சாப்பாடு தயார்செய்வது, தோட்டத்தில் மண்ணைக் கொத்திவிடுவது, கார் சுத்தம் செய்வது, அல்லது உட்கூரைக்குப் பெயிண்ட் அடிப்பது, கடைக்குச் செல்வது, குழந்தையைக் குளிப்பாட்டிவிடுவது போன்றவையெல்லாம் உங்களுக்கு வேலையாக இருக்கலாம்; ஆனால் உங்களுடைய பிள்ளைக்கோ அவை மிகவும் விரும்பத்தக்க சில விளையாட்டு வகைகளாக இருக்கலாம்,” என்று யுவர் குரோயிங் சைல்டு என்ற தனது புத்தகத்தில் பெனெலப்பி லீச் எழுதுகிறார்.
உதவும் ஏழு வழிமுறைகள்
உற்பத்திசெய்யப்பட்ட பொம்மைகளுக்கு தகுந்த இடம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குடும்ப வரவுசெலவுத் திட்டம் இடமளிக்குமானால், எதையும் வாங்குவதற்குமுன் கீழ்க்கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ள விரும்பலாம்:
1. இந்தப் பொம்மை அறிவைப் பெறுவதற்கான என்னுடைய பிள்ளையின் வாஞ்சையையும் கற்பனாசக்தியையும் உண்மையிலேயே தூண்டிவிடுமா? இல்லையென்றால் அது அவனுக்கு சீக்கிரத்தில் சலித்துப் போய்விடும். டிவி வர்த்தக விளம்பரத்தில் என்னவோ ஒரு பொம்மை நல்லதாக தோன்றலாம், ஆனால் இதை ஞாபகத்தில் வையுங்கள்: அந்தப் பொம்மையினால் கிளர்ச்சியடைந்ததைப் போல் நடிப்பதற்கு அந்தக் குழந்தை நடிகநடிகைகள் பணம் கொடுக்கப்பட்டிருக்கின்றனர். உங்களுடைய குழந்தை அதேபோல கிளர்ச்சியடையாமல் போகலாம். அவன் விளையாடும்போதோ பொம்மைக் கடையில் இருக்கும்போதோ அவனைக் கவனிக்க முயலுங்கள். எவ்வகையான விளையாட்டுச் சாமான்களால் அவன் கவர்ந்திழுக்கப்படுகிறான்?
ஒரு பொம்மை “கற்றுத் தருவதாக” இல்லையென்றால் அதற்கு மதிப்பே கிடையாது என்பதாக பெற்றோர் சிலசமயங்களில் யோசிக்கின்றனர். எனினும், பேராசிரியர் ஜேனஸ் T. கிப்ஸன் நமக்கு இவ்வாறு நினைவூட்டுகிறார்: “பிள்ளைகள் தாங்கள் வைத்து விளையாடும் எல்லா பொம்மைகளில் இருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். முக்கியமானது என்னவென்றால், தங்களுக்கு நன்மையான வழிகளிலெல்லாம் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும்படி அவர்கள் மகிழ்ச்சியடையவேண்டும் என்பதே.”
2. என்னுடைய பிள்ளையின் சரீர மற்றும் அறிவுத்திறனுக்கு இந்தப் பொம்மை ஏற்றதுதானா? குறிப்பிட்ட ஒரு விளையாட்டுப் பொருளை வைத்து விளையாட சிலசமயங்களில் ஒரு குழந்தை போதுமானளவு பலமானதாகவோ போதுமானளவு பொறுமையாகவோ அல்லது போதுமானளவு அறிவுத்திறமிக்கதாகவோ இல்லாமல் இருக்கிறது. இருந்தாலும் தனக்கு அதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது என்பதால் ஒரு பெற்றோர் அதை வாங்குவதற்கான மனச்சாய்வைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு மூன்று வயது பையன் உண்மையிலேயே ஒரு மாடல் மின்சார ரயிலை இயக்கமுடியுமா—அல்லது தளக்கட்டுப் பந்து மட்டையை ஓங்கி அடிக்கமுடியுமா? உங்கள் குழந்தை அத்தகைய விளையாட்டுச் சாமான்களை மதித்துணருமளவுக்கு வளரும்வரை நீங்கள் ஏன் காத்திருக்கக்கூடாது?
3. இந்தப் பொம்மை பாதுகாப்பானதுதானா? தத்துநடைபோடும் சிறு குழந்தைகளுக்குக் கைக்குக் கிடைப்பதையெல்லாம் வாயில் வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஆகவே சிறிய மரத் துண்டுகளோ பிளாஸ்டிக் துண்டுகளோ எளிதில் தொண்டையில் அடைத்துக்கொள்ளலாம். கூர் நுனிகளையுடைய பொருட்கள் எந்த வயது குழந்தைகளுக்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் பொம்மை தூக்கி எறியப்பட அல்லது உடன்பிறந்த ஒருவருக்கெதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறதா என்றும்கூட உங்களையே கேட்டுக்கொள்ள நீங்கள் விரும்பலாம்.
ஐக்கிய மாகாணங்களில், சில பொம்மைகள் எந்தெந்த குறிப்பிட்ட வயது வரம்பினருக்குத் தயாரிக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அத்தகைய சிபாரிசுகளை நீங்கள் பின்பற்றுவது உங்களுடைய குழந்தையைக் காயங்களிலிருந்து பாதுகாக்கக்கூடும். ஒரு பொம்மையைப்பற்றி சந்தேகம் இருக்குமானால், அது வேலைசெய்யும் முறையை நீங்கள் பரிசோதித்து பார்ப்பதற்கு ஒரு மாடல் கிடைக்குமா என்று கடைக்காரரிடம் கேட்டுப் பாருங்கள்.
4. இந்தப் பொம்மை நன்கு வடிவமைக்கப்பட்டதா, நீடித்துழைக்குமா? “நீடித்துழைக்காத பொம்மைகளாக இருக்குமானால், எதை எடுத்தாலும் கீழேபோட்டு, தூக்கியெறிந்து, வாயில் வைத்து சப்ப விரும்பும் தத்துநடைபோடும் சிறுபிள்ளைகள் அவற்றை நாசமாக்கிவிடக்கூடும்,” என்று பேரண்ட்ஸ் பத்திரிகை நமக்கு நினைவுபடுத்துகிறது.
5. இந்தப் பொம்மை கொடுக்கிற பணத்துக்குத் தகுமா? டிவி வர்த்தக விளம்பரங்களில் விலையைப்பற்றி ஒன்றுமே சொல்லப்படுவதில்லை, ஆனால் பொம்மைகளுக்கு அதிக விலை இருக்கிறது. கொடுக்கக்கூடிய பணத்தின் பெரும்பகுதி அந்தப் பொம்மை செய்யப்பட்டுள்ள பொருளைவிட அதன் வர்த்தக பெயருக்கே போகிறது. மேலுமாக, வர்த்தக விளம்பரங்கள் நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்பார்ப்புகளை பிள்ளைகளில் ஏற்படுத்திவிடுகின்றன; அவை இறுதியில் பெருத்த ஏமாற்றத்திலேயே முடிவடையக்கூடும்.
பொருட்களை வாங்குவதில் விவரமுள்ளவர்களாக இருக்க உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நீதிமொழிகள் 14:15 சொல்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” “சிலசமயங்களில் குறிப்பிட்ட ஒரு பொம்மை ஏன் தரத்துடன் உண்டாக்கப்படவில்லை அல்லது ஏமாற்றுவழியில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை உங்களால் முன்கூட்டியே தெரிவிக்கமுடியும்,” என்று தி நியூ யார்க் டைம்ஸ்-ல் ஒரு கட்டுரை கூறியது. டைம்ஸ் தொடர்ந்து கூறியதாவது: “பணம் உங்களுடைய பாக்கெட்டிலிருந்து வராமல் பிள்ளைகளுடைய பாக்கெட்டிலிருந்து வருமானால், அவர்கள் அதிக விவரமுடன் வாங்குபவர்களாக ஆகிறார்கள்.”
சந்தேகமின்றி, ஒரு பொம்மையின் உண்மையான மதிப்பு அது உண்டுபண்ணப்பட்டிருக்கும் பொருட்கள் அல்லது வேலைத்திறன் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பால் செல்கிறது. முக்கியமான அம்சங்கள் எவையென்றால், உங்களுடைய பிள்ளை எந்தளவுக்கு அதை உபயோகப்படுத்துவான் மற்றும் அது எந்தளவுக்கு அவனை சந்தோஷப்படுத்தும் என்பவையே. கொல்லைப்புறத்தில் ஒரு ஊஞ்சல் அமைப்பதற்கு, ஒப்பிடுகையில் செலவு அதிகம் ஆகலாம். ஆனால் அது பல மணி நேரங்களுக்கு வருஷக் கணக்கில் மகிழ்ச்சியைத் தரலாம். சீக்கிரத்தில் தூக்கியெறியப்படும் மலிவான ஒரு விளையாட்டு சாதனம், காலப்போக்கில் வீணான ஒரு முதலீடாக மாறிவிடலாம்.
6. இந்தப் பொம்மை என்னென்ன மதிப்பீடுகளையும் தராதரங்களையும் கற்றுக் கொடுக்கிறது? “பொம்மைகள் பிள்ளைகளின் கற்பனாசக்தியை எதிர்மறையான வழிகளில் அல்ல, ஆனால் வளமூட்டும் வழிகளிலேயே தூண்டிவிடவேண்டும்,” என்று எச்சரிக்கிறார் குழந்தை ஆராய்ச்சியின் பேராசிரியர் டேவிட் எல்கைன்ட். கொடூரமான பொம்மைகளையும், தெளிவாகவே வன்முறையை ஊக்குவிக்கிற அல்லது சூதாட்டம் போன்ற பெரியோர்கள் ஈடுபடும் அக்கிரமங்களைக் காப்பியடிக்கும் பொம்மைகளையும் தவிர்த்துவிடுங்கள்.
பிரபலமான கட்டுக் கதைகள் அல்லது விஞ்ஞான-புனைவுக் கதைகள் ஆகியவற்றில் வரும் கதாபாத்திரங்களை ஆதாரமாகக்கொண்டு படைக்கப்பட்ட பொம்மைகளைப்பற்றி என்ன? அத்தகைய கதைகள் பொதுவாகவே நன்மை தீமையை வெல்லுவதைப் பற்றியதாகவே இருக்கின்றன. இதனால் சில பெற்றோர் இந்தக் கதைகளில் உள்ள ‘மாய ஜாலங்கள்’ ஏதோ குழந்தைத்தன கற்பனைகள் என்று கருதுகிறார்கள். ஆகவே தங்களுடைய பிள்ளைகள் அவற்றைப் பார்த்து ரசிக்க அனுமதிப்பதில் எந்தவித தீங்கையும் அவர்கள் காண்பதில்லை. இந்தக் கதைகள் மாயவித்தைகளில் அக்கறையைத் தூண்டிவிட்டுவிடுமோ என்று மற்றவர்கள் பயப்படலாம். (உபாகமம் 18:10-13) மற்றவர்களை நியாயம்தீர்க்காமல், பெற்றோர் இந்த விஷயத்தில் தங்களுடைய சொந்த தீர்மானங்களை எடுக்கவேண்டும். இதைச்செய்ய அத்தகைய கதைகள்—அவற்றை ஆதாரமாகக்கொண்டு படைக்கப்பட்ட ஏதேனும் பொம்மைகள்—தங்களுடைய பிள்ளைகளின்மேல் கொண்டிருக்கும் பாதிப்புகளைப்பற்றி சிந்திக்கவேண்டும்.
ஒன்று கொரிந்தியர் 10:23-ல் உள்ள நியமத்தையும்கூட நினைவில் வைத்திருங்கள்: “எதையும் செய்ய உரிமையுண்டு . . . ஆனால் எல்லாமே பயன் தராது.” (தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) பிரபலமான ஒரு பொம்மை ஒருவேளை உங்களுக்கு ஆட்சேபனைக்கு உரியதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை வாங்குவதனால் ஏதேனும் பயன் இருக்கிறதா? அது மற்றவர்களுக்கு எதிரானதாக அல்லது இடறலாக இருக்கக்கூடுமா?
அறிவுபுகட்டும் பொம்மைகளாக சொல்லப்படுபவையும்கூட பெற்றோரின் சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். முக்கியமாக அவை பாலியல் விஷயங்களையும் கருத்தரித்தலையும் பிள்ளைகளுக்குக் கற்றுகொடுப்பதற்காக இருக்குமானால் அவ்வாறு உட்படுத்தப்படவேண்டும். அத்தகைய தகவல்களைப் பெற அந்தப் பிள்ளை தயாராக இருக்கிறதா? அந்தத் தகவல்களை நீங்கள் உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் இடையிலான உரையாடலின்மூலம் தெரிவித்தால் நன்மை பயக்குவதாக இருக்குமா?a சில பொம்மைகள் அந்த விஷயங்களைப் பற்றிய சரீரப்பிரகாரமான அம்சங்களை அறிவிப்பதாக இருக்கலாம்; ஆனால் அவை தகுதியான ஒழுக்கத் தராதரமுள்ள மனப்பான்மையையும் கற்றுத் தருகின்றனவா?
7. என் பிள்ளை இந்தப் பொம்மையை வைத்திருக்கவேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேனா? உங்களுடைய பிள்ளைக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட பொம்மைகள் இருக்கின்றன என்றோ உங்களுடைய சூழ்நிலைக்கு பொம்மை வாங்குவதென்பது நடைமுறையற்ற காரியம் என்றோ அல்லது அந்தப் பொம்மை உங்களால் சகிக்க முடிந்ததைவிட அதிக சப்தம் எழுப்புகிறது என்றோ நீங்கள் யோசிக்கலாம். அத்தகைய பிரச்சினைகள் தீர்க்க முடியாதவையானால், வாங்கித்தர முடியாது என்று சொல்வதைவிட உங்களுக்கு வேறுவழியே இல்லை. இது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் உங்கள் பிள்ளையின் ஒவ்வொரு ஆசைக்கும், அடம்பிடித்தலுக்கும் வளைந்து கொடுப்பது, உங்களுடைய பிள்ளை ஒரு சமநிலையான ஆளாக வளர்ந்துவர உதவிசெய்யாது. நீதிமொழிகள் 29:21-ல் (NW) உள்ள நியமத்தைக் கவனியுங்கள்: “ஒருவன் தன்னுடைய வேலைக்காரனை [அல்லது குழந்தையை] சிறுவயது முதல் செல்லம்கொடுத்து வந்தால், அவன் தன்னுடைய பிற்கால வாழ்க்கையில் ஒரு நன்றிகெட்டவனாகவும்கூட ஆகிவிடுவான்.”
அதற்காக ஒரு பெற்றோராக, முரட்டுப் பிடிவாதத்தோடும் அநியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவது கிடையாது. இது உங்கள் பிள்ளைக்கு கோபமூட்டி அவனை எதிர்ப்பவனாகவே மாற்றும். “பரத்திலிருந்து வருகிற ஞானமோ . . . நியாயமானத் தன்மை உடையது.” (யாக்கோபு 3:17, NW) குழந்தைப் பராமரிப்பு நிபுணர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “குறிப்பிட்ட ஒருசில விளையாட்டு பொம்மைகளை அவனுக்குக் கொடுக்க நீங்கள் ஏன் விரும்புகிறதில்லை என்பதை உங்களுடைய குழந்தையோடு உட்கார்ந்து கவனமாக விளக்கவேண்டும்.”
விளையாட்டு பொம்மைகளைவிட அதிமுக்கியமான சில காரியங்கள்
பொம்மைகள் அறிவுபுகட்டுவதற்கும் மகிழ்விப்பதற்கும் விலைமதிப்புள்ளவையாக இருந்தபோதிலும் அவை ஜடப்பொருட்களே. ஒரு குழந்தை ஒரு பொம்மைக்கு ஒருவேளை அன்பு காட்டலாம், ஆனால் ஒரு பொம்மை ஒரு குழந்தைக்கு அன்பு காட்ட முடியாது. பெற்றோரால் மட்டுமே கொடுக்கப்பட முடிந்த அன்போடுகூடிய கவனம் பிள்ளைகளுக்குத் தேவைப்படுகிறது. “முக்கியமாக ஒரு பெற்றோரே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தலைசிறந்த விளையாட்டு பொம்மையாக இருக்கிறார்,” என்று டாக்டர் மேக்தலீனா கிரே சொல்கிறார். பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளோடு விளையாடும்போது, அவர்கள் ஒரு நெருங்கிய உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை உறுதியாக்க உதவுகின்றனர். மேலும் இது ஆரோக்கியமான மனப்பான்மைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவியளிக்கிறது.
ஆம், பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான விளையாட்டு தேவைப்படுகிறது. ஆனால் அதைவிட அதிக முக்கியமாக, அவர்களுக்கு ஒழுக்கத்தராதர மற்றும் ஆவிக்குரிய வழிநடத்துதல் தேவைப்படுகிறது. “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்,” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 17:3) ஜீவனைக் காப்பாற்றும் இந்த அறிவைப் பெற்றுக்கொள்ள தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதில் பெற்றோர் ஒரு பெரும்பங்கை வகிக்கலாம். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் உள்ள குடும்பங்கள் பைபிள் படிப்பதை தங்கள் அனுதின வாழ்க்கையின் ஒரு பாகமாக ஆக்க முயற்சிக்கின்றனர். அதை அவர்கள் பெரும்பாலும் என்னுடைய பைபிள் கதை புத்தகம், பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்b போன்ற இளம் பிள்ளைகளுக்காவே முக்கியமாக எழுதப்பட்ட பிரசுரங்களின் உதவியோடு படிக்கின்றனர். இந்தப் புத்தகங்கள் வெறுமனே மகிழ்விப்பது மட்டும் கிடையாது. ஆயிரக்கணக்கான பிள்ளைகள் கடவுளில் உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள இவை உதவியிருக்கின்றன. பைபிள் நாடகங்கள் மற்றும் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்* போன்ற பிரசுரங்களின் ஆடியோ கேசட் பதிவுகளையும் பிள்ளைகள் மதித்துணருகின்றனர்.
உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பிள்ளைகளோடு விளையாடுவதைவிட அதிகத்தைச் செய்கின்றனர். அவர்களோடு சேர்ந்து ஜெபிக்கின்றனர், சேர்ந்து படிக்கின்றனர், பேசுகின்றனர். அன்போடுகூடிய அத்தகைய கவனத்தைத் தருவது நேரத்தையும் முயற்சியையும் தேவைப்படுத்துகிறது. ஆனால் காலப்போக்கில், அது ஒரு பிள்ளைக்கு எந்த விளையாட்டோ, மினுமினுக்கும் எந்த விளையாட்டு பொம்மையோ கொண்டுவரக்கூடியதைவிட நீடித்த மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது!
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில விழித்தெழு! பிப்ரவரி 22, 1992 இதழில் பாலியல் கல்வியின் பேரிலான கட்டுரைகளைப் பாருங்கள்.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டவை.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
வீட்டில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு பொம்மைகளை வைத்து பிள்ளைகள் விளையாடி மகிழ்கின்றனர்—துணி துவைப்பதற்கான கூடைகள் கார்களாகவும்; ஷூ பெட்டிகள் ரயில்களாகவும் மாறுகின்றன