உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 6/8 பக். 30-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தேவதூஷண டயர்கள்?
  • ஒரு நல்ல வியாபாரம்
  • பண்டைக்கால எகிப்தில் போதை மருந்து
  • “ஈக்களில்லா நகரம்”
  • வன்முறை திரைப்படங்களின் விளைவு
  • “ஏராளத்தின் முரண்படும் மெய்ம்மை”
  • விலைமதிப்புள்ள ஈயம்
  • முதியோருக்கு மதிப்புக் காட்டுவதில் குறைவு
  • குழந்தைத் தொழிலாளர்கள்
  • நோயாளிகளைப் பற்றிய பயம்
  • வெற்றிலைப் பாக்கும் புற்றுநோயும்
  • போலிப்பொருட்கள் செய்யும் மோசடிக்காரர்கள்
  • ஈளை இறப்பு அதிகரிக்கிறது
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1996
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1995
  • உலகை வனித்தல்
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 6/8 பக். 30-31

உலகத்தைக் கவனித்தல்

தேவதூஷண டயர்கள்?

ஜப்பானின் யோகஹாமாவிலுள்ள ஒரு பெரிய ரப்பர் நிறுவனம், முஸ்லிம்கள் தங்களால் புண்படுத்தப்பட்டதால், வாகன டயர்களின் ஒரு தொகுதியின் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். டயர்களின் மேற்பரப்பில் உருவாக்கப்பட்டிருந்த வடிவமைப்பு “அல்லா” என்பதன் அரபிய வார்த்தையை ஒத்திருந்ததாக முஸ்லிம்கள் புகார் செய்தனர். அந்த நிறுவனம் தனக்கு இஸ்லாமைப்பற்றிய அறிவு இல்லாததைக் குறித்து ஒரு மன்னிப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது; மேலும், அது அதிகபட்ச சவாரிப் பாதுகாப்பிற்காக ஒரு கணிப்பொறியால் வடிவமைக்கப்பட்டது என விவரித்தது என்பதாக ஆஸாஹி ஈவ்னிங் நியூஸ் கூறிற்று. அல்லாவுக்கெதிராக எந்த ஒரு தூஷணத்தையோ புண்படுத்துதலையோ நோக்கங்கொண்டிருக்கவில்லை. இந்த நிறுவனம், இஸ்லாமிய நாடுகளிலுள்ள டயர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டும், மாற்றீடு செய்துகொண்டுமிருக்கிறது. (g93 3/8)

ஒரு நல்ல வியாபாரம்

அர்ஜன்டினாவில், விலங்குகள் மற்றும் மனிதர்களைப் பலியிடுவதைப்பற்றிய அறிக்கைகள் மக்களின் அக்கறையைத் தூண்டிவிட்டிருக்கிறது. க்ளேரின் செய்தித்தாளின்படி, அர்ஜன்டினாவில் 5,000 மதப்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் அநேகம் ஆவிக்கொள்கையினுள்ளும், சாத்தானிய கொள்கையினுள்ளும், மற்ற வகையான மாய மந்திரங்களிலும் அமிழ்ந்து கிடக்கின்றன. உருவ உபயோகம் இப்பிரிவுகளின் அநேகத்தில் காணப்படும் சிறப்பான அம்சமாகும். புவனாஸ் ஏரிஸில் பேய்களின் சிலைகளைக் காட்சிக்கு வைத்திருக்கிற அதே நிலைத்தட்டில் இயேசு கிறிஸ்துவின் உருவங்கள் மற்றும் கத்தோலிக்க “புனிதர்களின்” உருவங்களைக் காண்பதும் வழக்கத்திற்கு மாறான காரியமில்லை. புகழ்பெற்ற உருவங்களில் ஒன்று “கொடுமைகளின் தெய்வங்களுள் மிகக் கொடூரமும் மகா தலைவனுமான லூஸிஃபர்,” என்றறியப்படுகிறது. இந்தச் சாத்தானிய உருவங்களின் விநியோகஸ்தர்கள் கத்தோலிக்க உருவங்களையுங்கூட விநியோகிக்கின்றனர் என்று க்ளேரின் குறிப்பிடுகிறது. கத்தோலிக்க மற்றும் சாத்தானிய உருவங்களை விற்பது ஒரு “நல்ல விற்பனை,” என்று ஒரு கடையின் சொந்தக்காரர் ஒப்புக் கொண்டார். (g93 2/22)

பண்டைக்கால எகிப்தில் போதை மருந்து

“ம்யூனிச் மற்றும் உல்ம் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள், எகிப்திய மம்மிகளில் ஹஷீஷ், கொக்கெயின், நிக்கோட்டின் போன்றவை இருந்ததற்கான அடையாளங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர்,” என்று ஃப்ராங்க்ஃபுர்டர் ஆல்ஜிமின ட்ஸிட்யூன் அறிக்கை செய்கிறது. ஆராய்ச்சியாளர்கள் பொ.ச.மு. 1070-க்கும் பொ.ச. 395-க்கும் இடைப்பட்ட காலத்திய மம்மிகள் பலவற்றிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பு, முடி, மற்றும் திசு போன்றவற்றின் மாதிரிகளைச் சோதித்துப்பார்த்தனர். இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் பண்டைக்கால எகிப்திய வாழ்க்கையைப்பற்றி நமக்கு என்ன கூறுகின்றன? “எகிப்தியர்கள் தெளிவாகவே, அழும் பிள்ளைகளை அமைதிப்படுத்துவதற்கும்கூட, போதை மருந்துகளை உபயோகித்து வந்திருக்கின்றனர்,” அந்தச் செய்தித்தாள் கூறுகிறது. விஞ்ஞானிகளுக்கு இது எப்படி தெரியும்? ஈக்களின் கழிவுப்பொருட்கள், கசகசா விதைகள் போன்றவற்றாலான ஒரு கலவையை அமைதிப்படுத்தும் ஒரு நல்ல மருந்து என ஒரு நாணல் சுவடி விவரிக்கிறது. (g93 3/8)

“ஈக்களில்லா நகரம்”

சீனாவின் பீஜிங்கில் குடியிருப்பவர்கள், ஈக்களுக்கு எதிராக முழுமூச்சான போரைப் பிரகடனம் செய்திருப்பதாக இண்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் அறிக்கை செய்கிறது. “எமது குறிக்கோள் ஈக்களில்லாத ஒரு நகரத்தை உருவாக்குவதே. ஆனால் நாங்கள் வெறுமனே ஈக்களைக் கொல்லமாட்டோம். சுத்தமான நகரங்களை உருவாக்க விரும்புகிறோம்,” என்று ஒரு முதுநிலை சுகாதார அலுவலர் கூறினார். “பொதுமக்களைத் திரட்டும்” ஒரு முயற்சியில், நகரமக்கள் விளம்பரப் பட்டிகைகளை ஒட்டி, இருபது லட்சம் துண்டு வெளியீடுகளை வழங்கி, செயல் திட்டத்தை அறிவித்தனர். அதைத் தொடர்ந்து வந்த ஒரு விசேஷித்த “தாக்குதல் வாரத்தின்”போது, அந்நகரம் சுமார் 15 டன் பூச்சிக் கொல்லிகளையும், 2,00,000 ஈக்கொல்லிகளையும் விநியோகித்தனர். அதற்கடுத்த மாதம் இன்னொரு தாக்குதல் வாரத்தில், முதியோர்கள் மற்றும் சிறு பிள்ளைகளாலான 1,000 அணிகள், 8,000 கிலோகிராம் விஷ மருந்துகளைக்கொண்டு ஈக்களுக்கு எதிராக போராடின. ஜூன் மாதத்தில் பீஜிங்கின் சில பகுதிகள் ஓர் அறைக்கு 33 என்ற அதிக எண்ணிக்கையில் ஈக்களைக்கொண்டிருந்து குமுறின. ஈக்களின் அடர்த்தியை 100 அறைகளுக்கு இரண்டு ஈக்கள் என்ற அளவுக்குக் குறைப்பதே குறிக்கோளாக இருக்கிறது. (g93 3/8)

வன்முறை திரைப்படங்களின் விளைவு

வேழா என்ற பிரேஸிலின் பத்திரிகையால் காணப்பட்ட பேட்டியில், பொழுதுபோக்குகளில் வன்முறை அதைக் காண்பவர்கள் மீது கொண்டிருக்கக்கூடிய பாதிப்பைப்பற்றி திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பெல்பர்க் கேட்கப்பட்டார். ஸ்பெல்பர்க் இவ்வாறு கூறினார்: “திரைப்படங்களிலோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ வன்முறையைக் காண்பது, அவற்றை நேரில் அல்லது தொலைக்காட்சி செய்திகளில் காண்பதைவிட, எதைக் காண்கிறார்களோ அதைச் செய்யும்படி காண்பவர்களை அதிகம் தூண்டிவிடுகிறது. திரைப்படங்களில், வன்முறை பரிபூரண விளக்கங்களுடனும், பகட்டான காட்சிகளுடனும், படிப்படியாகக் காணும்வகையில் மெதுவாகவும், காதல் உணர்ச்சிகளோடும்கூட படமாக்கப்படுகிறது. எனினும், செய்திகளில் காணும்போது, வன்முறை எவ்வளவு பயங்கரமானதாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி பொதுமக்கள் அதிக புரிந்துகொள்ளுதலைக் கொண்டிருக்கின்றனர். மேலும் செய்திகளில் இவை திரைப்படங்களில் இல்லாத குறிக்கோள்களோடு பயன்படுத்தப்படுகின்றன.” தன்னுடைய நன்கு அறியப்பட்ட திரைப்படங்களில் சிலவற்றை (Jaws, the Indiana Jones series) இதுவரை தன்னுடைய இளம் மகன் காணும்படி அனுமதிக்கவில்லை; காரணம் அதில் காண்பிக்கப்பட்ட இரத்தம் மற்றும் வன்முறை ஆகியவற்றின் அளவே என்பதாக ஸ்பெல்பர்க் மேலும் கூறினார். (g93 3/8)

“ஏராளத்தின் முரண்படும் மெய்ம்மை”

ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவாவில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், ஐ.நா. பிரதிநிதிகள் இருவர், “உலகளாவிய உணவு போதாக் குறைவுக்கு எதிராக முன்னொருபோதும் செய்த எந்தத் தாக்குதல்களுக்கும் மேலான மிகப் பெரிய தாக்குதலைச்” செய்வதில் தங்கள் முயற்சிகளை ஒன்றுபடுத்துவார்களென அறிவிப்பு செய்தார்கள். உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும் உலக சுகாதார அமைப்பும் “ஏராளத்தின் முரண்படும் மெய்ம்மை” எனத் தாங்கள் அழைப்பதை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பரென்று கூறினரென பாரிஸ் செய்தித்தாள் லா மான்டி அறிவித்தது. மனித குடும்பம் முழுவதின் உணவு தேவைகளைத் திருப்தி செய்வதற்குப் போதிய உணவை இந்தப் பூமி விளைவிக்கிறபோதிலும், இந்தத் தேவைகளுக்கேற்ற முறையில் இந்த உணவுப்பொருள்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறதில்லை. ஆப்பிரிக்காவில், பஞ்சம் ஒவ்வொரு நாளும் 4 கோடி ஆட்களின் உயிர்களை பயமுறுத்துகிறது. உணவு ஊட்டப் போதாக்குறை பத்தொன்பது கோடி 20 லட்சம் பிள்ளைகளைப் பாதிக்கிறது, ஒவ்வொரு நாளும் அவர்களில் 40,000 பேர் சாகின்றனர். (g93 2/22)

விலைமதிப்புள்ள ஈயம்

இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் சார்டீனியா கடலோரப்பகுதியில் மூழ்கிய ஒரு ரோம கப்பலின் அழிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வார்க்கப்பட்ட ஈயக்கட்டிகளாலான கப்பல் சரக்கு, “தங்கத்தைப் போல் விலைமதிப்புள்ளதாய்” இருக்கிறது என இத்தாலிய செய்தித்தாள் இல் மெஸாஜேரோ குறிப்பிடுகிறது. இச்சரக்கின் உண்மையான சேருமிடம் என்று கருதப்பட்ட, பண்டைக்கால ரோமில், இந்த உலோகம் “குழாய்கள், ஒட்டவைக்கப்பட்ட குழாய்க் கால்வாய்கள், வார்த்துருவாக்கப்பட்ட எடைக்கற்கள் போன்றவற்றை உண்டாக்கவே” மதிப்புள்ளதாய் இருந்திருக்கும். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு அதைவிட அதிக விலைமதிப்புள்ளது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த வார்ப்புகள் கடலடி தரையில் புதைந்து கிடப்பதனால், அண்டக்கதிர்களின் பாதிப்புகளிலிருந்து “கனமான மணல் போர்வையால்” பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இதனால் காலம், மிகச் சிறியளவு ரேடியோக் கதிரியக்கத்தையுங்கூட தடைசெய்திருக்கிறது. மற்றெங்கும் காண்பதற்கரிய இத்தகைய சுத்தமான ஈயம், தங்களுடைய பரிசோதனை நிலையத்தில் நிறைவேற்றப்பட்ட மிக நுண்ணிய அளவீடுகளின் மேல் பாதிப்பைக் கொண்டிராத பாதுகாப்பு அறைக்காக இயற்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு விலைமதிக்கமுடியாத மதிப்புடையதாய் இருக்கிறது. (g93 3/8)

முதியோருக்கு மதிப்புக் காட்டுவதில் குறைவு

ஆசியாவில் முதியோரின் ஜனத்தொகை குறிப்பிடத்தக்க வகையில் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஜப்பானில் 65-ம் அதற்கு மேற்பட்ட வயதினருமான ஆட்களின் எண்ணிக்கை, அடுத்த 30 ஆண்டுகளுக்குள், தற்போதைய 1.55 கோடியிலிருந்து 3 கோடியே 20 லட்சத்துக்கு பெருகிவிடுமென சிலர் எதிர்பார்க்கின்றனர். ஏஷியாவீக் பத்திரிகையின்படி, 2020-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு 4 ஜப்பானியர்களிலும் ஒருவர் முதியோராக இருப்பர். “சிங்கப்பூர் நாட்டவரில் 9%-த்துக்கும் மேற்பட்ட ஆட்கள் தங்கள் 60-ம் பிறந்தநாளை எட்டிவிட்டனர். தற்போதைய நூற்றாண்டு முடிவதற்குள், ஏறக்குறைய 15 லட்சம் மலேசியா நாட்டவர்கள் வேலையினின்று ஓய்வுபெற்ற முதியோராகத் தகுதிபெறுவர்,” என ஏஷியாவீக் பத்திரிகை மேலும் குறிப்பிட்டது. இந்தப் பெருக்கம், முதியோருக்குக் கொடுக்கவேண்டிய கவனிப்பும் மதிப்பும் படிப்படியாக அற்றுப்போன ஒரு காலத்தில் உண்டாகிறது. சிங்கப்பூரில், ஓய்வுபெற்ற முதிய குடிமக்களுக்குரிய வழக்கறிஞர் ஹென்ரி லிம், பின்வருமாறு கூறினார்: “முதியோரான ஆட்களுக்கு மதிப்புக் கொடுப்பது குறைந்துகொண்டே வரும் ஒரு போக்கு இருந்துவருகிறது.” அவர் மேலும் தொடர்ந்து, பெரும்பாலும் இளைஞருக்குத் “தங்கள் பெற்றோரைப் பார்க்கிலும் சடைநாய்களுக்கே செலவிட அதிக நேரம் உள்ளது” எனக் கூறினார். (g93 2/22)

குழந்தைத் தொழிலாளர்கள்

“பிரேஸிலின் குழந்தைகளுக்கும் வளரிளமைப் பருவத்தினருக்கும் 80-கள் சாதகமானவையாக இல்லை என்பதாக பிரேஸிலின் புவியியல் மற்றும் புள்ளியியல் நிலைய நிறுவனம் (Foundation of Brazilian Institute of Geography and Statistics) முடிவுக்கு வந்தது,” என ஸார்னால் டா டார்டெ அறிக்கை செய்கிறது. அந்த அறிக்கை, 5.97 கோடி குழந்தைகளில் 3.2 கோடி குழந்தைகள், குறைந்தபட்ச ஊதியமாகிய சுமார் 40 ஐ.மா. டாலர்களில் பாதிக்கும் குறைவான சராசரி வருடாந்தர தலா வருமானத்தைக் கொண்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகும் என காட்டுகிறது. பள்ளிக்குச் செல்வதைவிட, 10-க்கும் 14-க்கும் இடைப்பட்ட வயதுடைய 17.2 சதவீத—சுமார் ஒரு கோடி—பிரேஸிலிய குழந்தைகள், அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் தங்களுடைய குடும்பத்திற்கு உதவ உலகப்பிரகாரமான வேலை செய்கின்றனர். அதன் விளைவு? சமூகவியல் நிபுணர் ரோஸ ரிபேரோ இவ்வாறு கூறினார்: “இது அதிகரிக்கும் மற்றும் நீடித்திருக்கும் வறுமையில் முடிவடைகிறது. போதுமான பள்ளிப் படிப்பின்றி, தனது சமுதாய நிலையை மாற்றிக்கொள்ள குழந்தைக்கு வாய்ப்பே இல்லை.” (g93 3/8)

நோயாளிகளைப் பற்றிய பயம்

தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின்படி, தங்கள் நோயாளிகளிடமிருந்து நோய்கள் தொற்றிக்கொள்ளும் பயம் சுகாதார கவனிப்பு வேலையாட்களின் நடத்தையை வினைமையாகப் பாதித்துக்கொண்டிருக்கலாம். நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்கையில் தற்செயலாக மருத்துவ கருவிகளைக் கொண்டு தங்கள் தோலைக் குத்திக்கொள்வதால் அல்லது கீறிக்கொள்வதால் எய்ட்ஸ் அல்லது கல்லீரல் அழற்சி நோய்கள் தொற்றிக்கொள்ளும் பயத்தை உடையோராகப் பல மருத்துவர் இருக்கின்றனர். இந்தப் பயம் ஆதாரமற்றதாக இல்லை என்பது தெளிவாயிருக்கிறது. எலும்புருக்கி நோய்க்கொண்ட நோயாளிகளுக்கு நிலையாகச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களில் 60 சதவீதமானோர் தாங்கள்தாமே அந்த நோய்த் தொற்றிக்கொண்டவர்களாகி இருக்கின்றனரென நியூ யார்க் நகர மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி வெளிப்படுத்தினது. மேலும், சுகாதார கவனிப்பு வேலையாளர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏறக்குறைய 12,000 பேர் தங்கள் நோயாளிகளிடமிருந்து கல்லீரல் அழற்சி நோய்த் தொற்றிக்கொள்கின்றனர். எய்ட்ஸ் பெருவாரி தொற்றுநோய் தொடங்கினது முதற்கொண்டு, ஐக்கிய மாகாணங்களில் ஏறக்குறைய 47 சுகாதார கவனிப்பு வேலையாட்கள் தங்கள் நோயாளிகளிடமிருந்து இந்த நோய்த் தொற்றிக்கொண்டிருக்கின்றனர். (g93 2/22)

வெற்றிலைப் பாக்கும் புற்றுநோயும்

“சவைப்பதா அல்லது சவைக்க வேண்டாமா . . . இதுவே கேள்வி.” வெற்றிலைப் பாக்கு சவைப்பதைக் குறித்த இந்தக் கேள்வி, பாப்வா நியூ கினீயிலுள்ள போஸ்ட்-கோரியர் என்ற ஒரு செய்தித்தாளில் எழுப்பப்பட்டது. “பாப்வா நியூ கினீயிலுள்ள இரண்டு பெரிய பிரச்னைகள் குறிப்பிட்ட சூழல்களுக்குரிய மலேரியாவும் வாய்க்குள் உண்டாகும் புற்றுநோயுமே எனத் தோன்றுகிறது, பின் குறிப்பிடப்பட்டது வெற்றிலைப்பாக்கு சவைப்பதோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டது,” என்று டாக்டர் பாரி மில்ராய் அறுவை மருத்துவ நிபுணர் மற்றும் வெற்றிலைப்பாக்கு சவைப்போரைச் சிகிச்சை செய்வதில் அனுபவமுள்ளவர் குறிப்பிட்டார். பழக்கமாய் வெற்றிலைப்பாக்கு சவைப்போருக்குள் இளம் பிள்ளைகளுங்கூட உள்ளனர். ‘ஒருவர் வெற்றிலைப்பாக்கு சவைப்பவரென்றால் அவருக்குப் புற்றுநோய் உண்டாகுமா என்பதல்ல, எப்பொழுது உண்டாகும் என்பதே கேள்வியாகும்’ என்று டாக்டர் மில்ராய் கூறினார். அத்தகையோர் அந்தப் பழக்கத்தை விட்டால்தவிர, “மருத்துவமுறையில் அவர்களுக்கு அதிக உதவி எதுவும் இல்லை” என்றார். (g93 2/22)

போலிப்பொருட்கள் செய்யும் மோசடிக்காரர்கள்

“சந்தேகிக்கப்படாத ஒரு கடைக்காரர் அல்லது வங்கி விரைவு காசாளர் போலி நாணயத்தைக் கடந்துபோகச் செய்வது ஒரு காரியம். கூட்டிணைவு சேமிப்பு வங்கியில் செலவாணி பணத்தைக் கையாளும் சிக்கலான நவீன சாதனத்தை ஏமாற்றுவது முற்றிலும் மாறான வேறொரு காரியம்” என்று தி உவால் ஸ்டிரீட் ஜர்னல் குறிப்பிடுகிறது. எனினும், அவை அதே காரியத்தையே செய்கின்றன. ஐ.மா. தாள் நாணயத்தில் 100 டாலர்களை எவரோ உண்டுபண்ணிக்கொண்டிருந்தார். மிகைப்பட்ட “முறையில் நன்றாக” இருந்ததென அழைக்கப்பட்ட அந்தப் போலி தாள் நாணயம் பூகோளம் முழுவதும் திடீரென தோன்றிகொண்டிருந்தன. எழும்பிய பதிவைப் பயன்படுத்தி அதை அச்சடிப்பதன் கடினமான முறை, அதன் சிவப்பு மற்றும் நீலநிற உள்ளநிலைக் காட்டும் துணியை அடிப்படையாகக் கொண்ட காகிதம், அந்தத் தனித்தன்மையான காந்த இயல்புடைய மை ஆகிய யாவும் மிகத் திறம்பட்ட முறையில் சரியாக நகல் எடுக்கப்பட்டிருந்தன. அந்தப் போலிப் பணம் அவ்வளவு நன்றாக இருந்ததனால், கள்ள தாள் நாணயத்துக்காக வங்கிகளைக் குற்றஞ்சாட்டும் வழக்கமான நடவடிக்கைக்குப் பதிலாக அவை கவனிக்கப்படாமற் கடந்துசெல்கின்றன, ஐ.மா. அரசாங்கம் அந்த இழப்பை ஏற்கிறது. அந்தப் போலி தாள் நாணயங்கள் பயங்கரவாதி தொகுதி அல்லது சிநேகப்பான்மையற்ற அயல்நாட்டு அரசாங்கம் ஒன்றின் வேலையென பதவிப்பொறுப்புகளிலுள்ள சிலர் பயப்படுகின்றனர். (g93 2/22)

ஈளை இறப்பு அதிகரிக்கிறது

“ஈளை நோய் தாக்குதலால் [ஜெர்மனியில்] மரிப்பவர்களுடைய எண்ணிக்கை திடீரென அதிகரித்திருக்கிறது,” என சூட்டாய்ச்ச ட்ஸிடுங் தினசரி குறிப்பிடுகிறது. ஜெர்மானிய மூச்சுக் குழல் சங்க அமைப்பின்படி (German Respiratory Tract League organisation), 1991-ல் 5,000-க்கும் மேற்பட்ட ஆட்கள் அந்நாட்டில் சுவாச நோயின் விளைவாக மரித்தனர். இந்த எண்ணிக்கை 1970-களின் இடைக்காலத்தில் வருடத்திற்குச் சுமார் 2,000 என்று இருந்தது. ஜெர்மனியில் வசிக்கும் சுமார் 2 கோடி ஆட்கள் ஒவ்வாமையினாலும், மூன்றிலொருவர் சுவாச ஒவ்வாமையினாலும் துன்பப்படுகின்றனர். (g93 2/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்