அக்கறைகொள்ளும் ஜனங்கள்
யெகோவாவின் சாட்சிகள், உலகமுழுவதும் 69,000-க்கும் அதிகமான சபைகளாக அமைக்கப்பட்டுள்ள நாற்பது லட்சத்திற்கும் அதிகமான பைபிள் மாணாக்கர்களாலான ஒரு சர்வதேச அமைப்பாகும். இவர்கள் கடவுளுடைய நோக்கங்களை மக்கள் அதிகம் அறிந்துகொள்ளும்படி அவர்களுக்கு உதவிசெய்ய தங்களை அர்ப்பணித்திருப்பது மட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்து கட்டளையிட்டபடி ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். (யோவான் 13:34, 35) இந்த அன்பு நடைமுறையான வழிகளில் வெளிக்காட்டப்படுகிறது.
உதாரணமாக, சிறிது காலத்திற்கு முன் கலிபோர்னியாவின் சான் மார்கோஸ் சபையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 சாட்சிகள் காலை உணவுக்காக ஒரு சனிக்கிழமையன்று காலை ஆறு மணிக்கு ஒன்றுகூடிவந்தனர். அவர்கள் மனதில் விசேஷித்த ஒரு திட்டத்தைக் கொண்டிருந்தனர்—அதாவது சபையில் தங்களுடைய வீட்டைப் பராமரிப்பதில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிசெய்வது.
ஒற்றை பெற்றோர், விதவைகள், வயதான தம்பதிகள் போன்றோர் உதவி தேவைப்பட்டவர்களில் சிலர். தங்களுடைய வீடுகளின் கூரைகளைப் பழுதுபார்த்தல், வண்டிப்பாதையின் புகைக்கீலின்மேல் பாதுகாப்புப் பூச்சுக் கொடுத்தல், பாதுகாப்பு விளக்குகளை அமைத்தல், வண்டிக்கொட்டிலுக்குக் கதவு பொருத்துதல், வர்ணம் பூசுதல், மரங்களைக் கத்தரித்தல், மற்ற வேலைகள் போன்றவை அவர்களின் தேவைகளில் உட்பட்டிருந்தன. தேவைகளை அடையாளங் கண்டுகொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இவ்வேலைகளுக்கான தயாரிப்புத் தொடங்கப்பட்டு, தேவையான பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
நியமிக்கப்பட்ட அந்தச் சனிக்கிழமை, காலை உணவின்போது இறுதி தயாரிப்புகள் செய்யப்பட்டன. பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட பணிகள் கிடைக்கப் பெற்றன. பெண்கள் ஒரு மதிய உணவு உட்பட்ட, உணவு ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த நாளின் நடவடிக்கை, யாருடைய வீடுகள் பழுதுபார்க்கப்பட்டதோ அவர்கள்மீது மட்டுமல்லாமல், சபையிலுள்ள ஒவ்வொருவர்மீதும் ஆச்சரியகரமான ஒரு பாதிப்பைக் கொண்டிருந்தது. (g93 2/22)