நல்ல ஆரோக்கியம் அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்?
“நவீன மருத்துவத்தின் ஒரு சில வியத்தகு வெற்றிகளின் விளைவாக, ஆரோக்கியம் என்பது ஒரு சமுதாயமும், தனிநபர்களும் தங்களுக்குத் தாங்களே முயன்று அடையப்பெறுவது என்பதற்குப் பதிலாக மருத்துவர்கள் மக்களுக்கு அளிக்கும் ஒன்று என்ற மனநிலை உலகின் பல பாகங்களிலும் பரவியுள்ளது.” இவ்வாறு உலக சுகாதாரம் என்ற உலக சுகாதார அமைப்பின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையில் டாக்டர் ஹாஃப்டன் மகலீர் எழுதினார்.
நிச்சயமாகவே, மருத்துவர்களும் மருத்துவமனைகளும் நம்முடைய ஆரோக்கியத்துக்கும் உடல்நலத்துக்கும் அதிகத்தை அளித்து உதவிசெய்கிறார்கள். என்றபோதிலும் அவர்கள் இன்றியமையாததாயுள்ள குணப்படுத்தும் காரியத்தையே செய்கின்றனர். ஏதாவது கோளறு ஏற்படுகையில் நாம் அவர்களின் சேவையை நாடுகிறோம், ஆனால் நாம் நலமுடன் இருக்கையில் அபூர்வமாகவே அவர்களைப் பற்றி நினைக்கிறோம். அப்படியென்றால், நமக்குநாமே நல்ல ஆரோக்கியத்தை முயன்றுப் பெற நாம் என்ன செய்யக்கூடும்?
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டி நியமங்கள்
பொதுவாக, நல்ல ஆரோக்கியம் மூன்று முக்கியக் காரியங்களின் மீது சார்ந்திருப்பதைப் பற்றியதில் நிபுணர்கள் கருத்து ஒருமித்தவர்களாக இருக்கின்றனர்: சமச்சீரான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி, பொறுப்புணர்ச்சியுள்ள வாழ்க்கை. இந்தப் பொருளின் பேரில் தகவலுக்கு நிச்சயமாகவே குறைவில்லை. அவற்றில் பெரும்பாலானவை நடைமுறையில் பயனுள்ளவையாகவும் பிரயோஜனமுள்ளவையாகவும் இருக்கின்றன. சீரான உணவும் உடற்பயிற்சியும் எவ்விதமாக நம்முடைய ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டவையாய் இருக்கின்றன என்பது பற்றிய பொருத்தமான மற்றும் இந்நாளைய கருத்துகள் “உங்கள் சீரான உணவும் உங்கள் ஆரோக்கியமும்” மற்றும் “உடற்பயிற்சி, உடற்கட்டு மற்றும் ஆரோக்கியம்” பெட்டிகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அதிக பயனுள்ளத் தகவல் கிடைக்கக்கூடியவையாக இருப்பினும், நல்ல ஆரோக்கியத்தை முயன்று அடைவது வருந்தத்தக்க வகையில் பெரும்பாலான மக்களுடைய முதல் முக்கியத்துவமுள்ளவைகளின் பட்டியலில் முதன்மையான இடத்தைப் பெறாதிருப்பதை உண்மைகள் காண்பிக்கின்றன. மற்றக் காரியங்களோடுகூட, “எடையைக் குறைப்பதற்கு தேவைப்படுவது என்ன என்பது அனைவருக்கும் தெரியும், என்றாலும் அளவுக்கு அதிகமான எடையுள்ளவர்களாய் இருப்பது மாறுவதாகத் தெரியவில்லை” என்கிறார் வாஷிங்டனில், நோய்த் தடை மற்றும் உடல்நல மேம்பாடு அலுவலகத்தின் டாக்டர் மேரியன் நெசில். அவளுடைய அலுவலகத்தின்படி, ஐக்கிய மாகாணங்களில் சுமார் 4 பேரில் 1 நபர் 20 சதவிகிதம் அதிகமான எடையுடையவராக இருக்கிறார்.
அதேவிதமாகவே, ஐ.மா. உடல்நல புள்ளிவிவரத்திற்கான தேசீய மையம் தெரிவிப்பதாவது: “பொதுவாக, 1977-க்கும் 1983-க்கும் இடையே, சாதகமற்ற உடல்நலப் பழக்கங்களில் அதிகரிப்பு இருந்துவந்திருப்பதாகத் தெரிகிறது.” இந்தச் “சாதகமற்ற உடல்நலப் பழக்கங்கள்” யாவை? ஊட்டச்சத்துக்குறை, கொள்ளைநோய் அல்லது தூய்மைக்கேடு போன்ற தனிப்பட்டவரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதப் பிரச்னைகளாக அவை இல்லை. மாறாக, அவை முற்றிலும் தனிப்பட்டவரின் பொறுப்பாக இருக்கும் காரியங்களாகும்—புகைபிடித்தல், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாகக் குடிப்பது, போதப் பொருள் துர்ப்பிரயோகம் போன்றப் பழக்கங்கள்.
நல்ல ஆரோக்கியத்தை முயன்று அடைய என்ன செய்வது என்பதன் பேரில் மருத்துவ அல்லது விஞ்ஞானத் தகவலைவிட அதிகம் தேவையாக இருப்பது தெளிவாக இருக்கிறது. நம்முடைய தனிப்பட்ட பொறுப்புகளுக்கேற்ப வாழ்வதற்கு அதிகப்படியாகச் செயல்தூண்டுதல் அவசியமாயிருக்கிறது. நல்ல ஆரோக்கியத்துக்கு உதவும் காரியங்களைச் செய்வதற்கு மாத்திரமல்ல, ஆனால் அதை அழித்துவிடக்கூடிய அந்தக் காரியங்களைத் தவிர்ப்பதற்கும்கூட நாம் தூண்டுதலளிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமுள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவி செய்வதற்கு இப்படிப்பட்ட செயல் தூண்டுதலையும் உந்துவிப்பையும் நாம் எங்கே காணமுடியும்?
அநேக ஆட்கள் இதைக் குறித்து ஒருவேளை அறியாமலிருந்தபோதிலும், இந்த நோய்களில் எதுவும் இல்லை என்ற தன்னுடைய புத்தகத்தின் முன்னுரையில் அதன் மருத்துவ-ஆசிரியர் S.I. மக்மில்லன் இவ்விதமாகக் குறிப்பிட்டார்: “பைபிளின் அறிவுரைகள், ஒருசில தொற்றுநோய்களிலிருந்தும், அநேக உயிரைப் போக்கவல்ல புற்றுநோய்களிலிருந்தும், எல்லா நவீன மருத்துவ முயற்சிகளின் மத்தியிலும் அதிகரித்துக்கொண்டு வரும் கவலைகளினால் உண்டாகும் நீளமான வரிசையான நோய்களிலிருந்தும் அவனை பாதுகாக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடிக்கையில் வாசகர் கிளர்ச்சியடைவார் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன் . . . சமாதானம் மருந்துறைகளில் வருவதில்லை.”
பைபிள் ஒரு மருத்துவப் பாடப்புத்தகமாக அல்லது உடல்நலக் கையேடாக இல்லாத போதிலும், ஆரோக்கியமானப் பழக்கங்களிலும் நல்ல ஆரோக்கியத்திலும் விளைவடையக்கூடிய நியமங்களையும் வழிகாட்டிக் குறிப்புகளையும் தருகிறது என்பதை நாம் இந்தக் குறிப்புகளிலிருந்து காண்கிறோம். இந்த நியமங்களில் சில யாவை?
உணர்ச்சிகளும் வாழ்க்கையைப் பற்றிய மனநிலையும்
உதாரணமாக, “பயம், வருத்தம், பொறாமை, மனக்கசப்பு, பகைமைப் போன்ற உணர்ச்சிகள் நம்முடைய நோய்களில் பெரும்பாலானவற்றிற்கு காரணமாயிருப்பதை மருத்துவ விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது” என்பதாக மேலே குறிப்பிடப்பட்ட டாக்டர் மக்மில்லன் சொன்னார். “மதிப்பீடுகள் 60 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரையாக வித்தியாசப்படுகின்றன.”
இதைக் குணப்படுத்த என்ன செய்யமுடியும்? சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக பைபிள் சுட்டிக் காண்பித்தது அக்கறையூட்டுவதாக இருக்கிறது: “அமைதலான இருதயம் (NW) உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.” (நீதிமொழிகள் 14:30) ஆனால் ஒருவர் எவ்விதமாக “அமைதலான இருதயத்தைப்” பெறுகிறார்? பைபிளின் புத்திமதி: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.” (எபேசியர் 4:31) வேறுவார்த்தைகளில் சொன்னால், நல்ல உடல் ஆரோக்கியத்தை அனுபவித்துக் களிக்க, நாம் நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இது நிச்சயமாகவே ஒருசில நவீன மனோதத்துவ ஞானிகளும் உளநூல் ஆய்வாளர்களும் கூறும் ஆலோசனைக்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது. நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதற்குப் பதிலாக அவைகளைச் செயலில் வெளிப்படுத்திவிட வேண்டும் என்று அடிக்கடி அவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அடக்கி வைத்த உணர்ச்சிகளை வெளியிடுவதும், ஒருவரின் கோபத்தை வெளிக்காட்டுவதும், வளைந்து சூழப்பட்டும் அமைதியிழந்தும் இருப்பவருக்குத் தற்காலிகமான நிம்மதியைக் கொண்டுவரக்கூடும். ஆனால் அவனைச் சுற்றியுள்ளவர்களோடு அவனுடைய உறவுக்கு அது என்ன செய்கிறது? அவர்களுடைய பங்கில் அது எந்தவிதமான பிரதிபலிப்பைத் தொடங்கி வைக்கக்கூடும்? அனைவருமே தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதற்கு மாறாக அதை செயலில் காட்டுவார்களேயானால், ஏற்படக்கூடிய மனஇறுக்கத்தையும் பலவீனப்பட்டுப் போகும் நரம்புகளையும் கற்பனை செய்வது கடினமல்ல. சாத்தியமான சரீரக் காயங்களைப் பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. அது வெறுமென ஒருபோதும் முடிவுறாத நச்சுச்சுழலை உருவாக்கி வைக்கிறது.
நிச்சயமாகவே தீங்கிழைக்கும் உணர்ச்சிகளை விசேஷமாக ஒருவர் கோபம் அல்லது சீற்றத்துக்கு இடமளிக்கும் மனச்சாய்வுடையவராக இருந்தால் இவைகளை அடக்கி ஆளுவது எளிதல்ல. இதன் காரணமாகவே பைபிள் தொடர்ந்து சொல்லுகிறது: “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (எபேசியர் 4:32) வேறு வார்த்தைகளில் சொன்னால் தீங்கிழைக்கும் எதிர்மறையான உணர்ச்சிகளை உடன்பாடானவற்றைக் கொண்டு மாற்றீடு செய்ய வேண்டும்.
மற்றவர்களிடமாக இப்படிப்பட்ட உடன்பாடான உணர்ச்சிகள் நமக்கு என்ன செய்கின்றன? “அன்பு காட்டுவது இயற்கையாக இருக்கிறது” என்று நொறுங்கிய இதயம் என்ற தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் ஜேம்ஸ் லின்ச் எழுதுகிறார். “‘உன்னைப் போல உன் அயலானை நேசி’ என்ற கட்டளை வெறுமென ஒரு தார்மீகக் கட்டளையாக இல்லை—அது உடல் சார்ந்த ஒன்றாகும்.” இப்படிப்பட்ட உடன்பாடான உறவுகள் கொண்டுவரும் நன்மைகளைப் பற்றி ராபர்ட் டேய்லர் என்ற மனோதத்துவர் கூடுதலாக இவ்விதமாகச் சொல்லுகிறார்: “நெருக்கடி ஏற்படுகையில் நீங்கள் தஞ்சம் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்று அறிந்திருப்பது, பாதுகாப்பு, எல்லாம் நன்மைக்கே என்ற திடநம்பிக்கை மற்றும் நம்பிக்கை என்ற சில அதிக முக்கியமான உணர்வுகளை அளிக்கக்கூடும்—இவை அனைத்துமே அழுத்தத்துக்குச் சிறப்பான மாற்றுமருந்துகளாக இருக்கக்கூடும்.” இதன் காரணமாக நவீன மருத்துவம் கவலைகளினால் ஏற்படும் நோய்கள் என்றழைக்கப்படும் சிலவற்றிற்கு நிவாரணத்தைக் கொண்டுவர முயற்சி செய்கையில், பைபிளின் எளிய நெறிமுறைகள் முதலிடத்தில் அது ஏற்படாமலே அதைத் தவிர்க்க உதவி செய்யக்கூடும். பைபிளின் வழிகாட்டி நியமங்களைப் பின்பற்ற மனமுள்ள எவருமே, உணர்ச்சிகளின் பிரகாரமாயும் சரீரப்பிரகாரமாயும் நன்மையடைவர்.
பழக்கவழக்கங்களும் கெட்டப் பழக்கத்துக்கு அடிமையாதலும்
நம்முடைய உணர்ச்சி சம்பந்தமான மற்றும் சரீர நலனைப் பாதிக்கும் வேறு ஒரு காரியம், நாம் நம்முடைய உடலை நடத்தும் முறையாக இருக்கிறது. நம்முடைய பங்கில், நியாயமான முயற்சி இருக்கையில்—சரியாகச் சாப்பிடுதல், தேவையான உடற்பயிற்சியையும் ஓய்வையும் பெற்றுக்கொள்ளுதல், சுத்தமாக இருத்தல் போன்ற மற்றும் பல—நம்முடைய உடல், தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும். என்றபோதிலும், நாம் வழக்கமாக அதைத் துர்ப்பிரயோகம் செய்தால், விரைவிலோ அல்லது தாமதமாகவோ, அது சீர்குலைந்துவிடும், நாம் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
பைபிளின் ஆலோசனை: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசி”யையும் நீக்கிவிடுவோமாக. (2 கொரிந்தியர் 7:1) இந்த ஆலோசனையை நாம் எவ்விதமாகப் பொருத்தலாம்? நன்மைகள் யாவை? வாஷிங்டனிலுள்ள உவர்ல்ட்வாட்ச் நிறுவனத்தின் பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள்: “புகைபிடித்தல், ஆண்டுதோறும் 2.1 சதவிகிதம் அதிகரித்துவரும் உலக மக்கள் தொகயைவிட வேகமாக அதிகரித்துவரும் ஒரு கொள்ளைநோயாக இருக்கிறது . . . புகையிலை உபயோகம் எண்பதுகளின் ஆரம்பத்தில் முக்கியமாகப் பொருளாதார காரணங்களுக்காக குறுகியக் காலத்துக்கு மந்தமாக இருந்தது, ஆனால் அதன் வேகமான அதிகரிப்பு இப்பொழுது மீண்டும் தொடங்கி இருக்கிறது.” நூறு கோடி மக்களுக்கும் மேல் இப்பொழுது புகைபிடிக்கிறார்கள். ஆண்டுதோறும் சுமார் ஐநூறு ஆயிரம் கோடி சிகரெட்டுகளை அவர்கள் புகைக்கிறார்கள், இது சராசரியாக நாளொன்றுக்கு அரை பாக்கெட்டுக்கு மேலாகிறது.
இந்த ‘வளர்ந்துவரும் கொள்ளைநோயின்’ பாதிப்பு என்னவாக இருந்திருக்கிறது? இதோடு இணைந்துவரும் பெட்டி சிந்தனைக்குக் கொஞ்சம் அறிவுதெளிவுள்ள உணவளிப்பதாக இருக்கிறது. இந்தப் பட்டியல் எவ்வகயிலும், விவரமனைத்தையும் கொண்ட விளக்கமான பட்டியலாக இல்லை, ஆனால் செய்தி தெளிவாக உள்ளது: புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாதல் சக்திவாய்ந்ததாயும் பெருஞ்செலவு பிடிப்பதாயும் இருக்கிறது. இது அடிமையாகிவிடுகிறவர்களின் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் சேதப்படுத்தும் ஒரு கறைப்படுத்தும் பழக்கமாகும்.
பழக்கத்தை நிறுத்துவதற்கு செய்யப்படும் முயற்சிகளைப் பற்றி என்ன? புகைபிடித்தலுக்கு எதிராகச் செய்யப்படும் எல்லாப் போரட்டங்களின் மத்தியிலும் உலகளாவிய அளவில் வெற்றி மிகக் குறைவாகவே இருந்திருக்கிறது. இது ஏனென்றால், புகையிலைப் பழக்கத்தை மேற்கொள்வது, விடாமுயற்சியைத் தேவைப்படுத்தும் கடினமானப் போரட்டமாக இருக்கிறது. புகைபிடிப்பவர்களில் நான்கில் ஒருவர் மாத்திரமே பழக்கத்தை விட்டுவிடுவதில் வெற்றிபெறுவதாக ஆராய்ச்சி காண்பிக்கிறது. புகைபிடித்தல் உடல்நலத்துக்கு ஆபத்து என்ற எச்சரிப்புகள் எல்லாம் போதிய தூண்டுதலாக இல்லை.
என்றபோதிலும், மேலே மேற்கோள் காண்பிக்கப்பட்ட பைபிள் புத்திமதி, தங்களைப் போலவே தங்கள் அயலாரையும் நேசிக்க வேண்டும் என்ற கிறிஸ்தவர்களுக்கானக் கட்டளையோடுகூடச் சேர்ந்து இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் ஆயிரக்கணக்கானோரைப் புகைபிடித்தலை நிறுத்திவிடச் செய்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் பலமணிநேரங்களுக்கு அவர்கள் கூடிவரும் ராஜ்ய மன்றமாக இருந்தாலும் சரி அல்லது பலநாட்களுக்கு அவர்களில் ஆயிரக்கணக்கானோர் கூடிவரும் அவர்களுடைய மாநாடுகளானாலும் சரி, அவர்களில் எவரையும் ஒரு சிகரெட்டோடு நீங்கள் காணமாட்டீர்கள். பைபிளின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அதைப் பொருத்துவதற்கு அவர்கள் மனமுள்ளவர்களாய் இருப்பது, மற்றவர்கள் முயன்று அடைய தவறியதைச் செய்ய தேவையான மனஉறுதியை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.
தீங்கிழைக்கும் மற்றப் பழக்க வழக்கங்களில், சாராயத்தை அளவுக்கு அதிகமாகக் குடித்தல், போத மருந்து துர்ப்பிரயோகம், சாவுக்கேதுவான வியாதிகளில் விளைவடையக்கூடிய வரைமுறையற்ற பாலுறவு மற்றும் தொந்தரவு தரும் உடல்நிலையும் சமுதாயப் பிரச்னைகளும் உள்ளடங்கும். உடல்நல நிபுணர்கள் இந்தப் பிரச்னைகளைக் கையாள இக்கட்டான நிலையில் இருந்தபோதிலும், பைபிள் நியாயமானதாகவும் அதே சமயத்தில் நடைமுறைக்கு ஏற்றதாயுமுள்ள ஆலோசனையை வழங்குகிறது.a—நீதிமொழிகள் 20:1; அப்போஸ்தலர் 15:20, 29; 1 கொரிந்தியர் 6:13, 18.
எல்லா நோய்களும் முடிவுக்கு வரும்போது
நல்ல உடல் ஆரோக்கியத்தை நாம் காத்துக்கொள்ள எவ்வளவு முயற்சி செய்தபோதிலும், இப்பொழுது நாம் நோயுற்று மரித்துவிடுவோம் என்ற திட்டவட்டமான உண்மை தொடர்ந்திருக்கிறது. என்றபோதிலும் மனிதனின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் மனிதன் ஏன் நோயுற்று மரிக்கிறான் என்பதை நமக்குச் சொல்வது மாத்திரமல்லாமல், எல்லா நோய்களும் மரணமும்கூட வெற்றிக்கொள்ளப்படப் போகும் காலம் விரைவில் வந்துகொண்டிருப்பதை நமக்குச் சொல்லுகிறார்.—ரோமர் 5:12.
ஏசாயா 33:24-லுள்ள ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் வாக்களிக்கிறது: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” வெளிப்படுத்துதல் 21:4 பின்வருமாறும்கூட வாக்களிக்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” ஆம் சிருஷ்டிகரின் வாக்கு இதே பூமியின் மீது ஒரு புதிய உலகமாகும். இங்கே மனிதவர்க்கம், கிளர்ச்சியூட்டும் ஆரோக்கியத்தோடு மனித பரிபூரணத்துக்கு உயர்த்தப்படும். நித்திய ஜீவனே மனிதகுடும்பத்தின் பாக்கியமாக இருக்கும்!—ஏசாயா 65:17–25. (g89 12/8)
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு, தயவுசெய்து, உவாட்ச்டவர் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட மகிழ்ச்சி—அதை எவ்விதமாகக் கண்டடைவது (Happiness—How to Find It) என்ற ஆங்கில புத்தகத்தில் அதிகாரம் 10-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 8, 9-ன் பெட்டி]
உங்கள் சீரான உணவும் உங்கள் ஆரோக்கியமும்
“நீங்கள் . . . புகைக்காமலும் அளவுக்கு அதிகமாகக் குடிக்காமலும் இருந்தால், நீங்கள் தெரிந்துகொள்ளும் சீரான உணவு நீங்கள் எடுக்கக்கூடிய வேறு எந்த நடவடிக்கையைக் காட்டிலும் உங்களுடைய நீண்டகால உடல்நல எதிர்பார்ப்புகளின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடும்.”—டாக்டர் C. எவரட் கூப், முன்னாள் ஐ.மா. பொது அறுவை மருத்துவர்.
தொழில்துறையில் முன்னேறியுள்ள தேசங்களின் சீரான உணவின் ஒருசில அம்சங்கள், மக்களின் ஆரோக்கியத்தின் மீது கொண்டுவரும் தீங்கிழைக்கும் பாதிப்புகளைப் பற்றி உடல் நல நிபுணர்கள் சமீப ஆண்டுகளில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். புகையிலை, சாராயம், உப்பு, சர்க்கரைப் போன்ற பொருட்களிடமாக கவனத்தைத் திருப்புவதைத் தவிர, அநேக ஆட்களின் உணவில் கொழுப்புச் சத்தும் கொலஸ்ட்ராலும் அளவுக்கு மிக அதிகமாகவும் நார்ப்பொருள் மிகக் குறைவாகவும் இருக்கும் உண்மைக்கு விசேஷித்த கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.
“மிகப் பெரிய அக்கறைக்குரிய காரியமானது உணவில் நாம் அளவுக்கு அதிகமாக கொழுப்புச் சத்தை உட்கொள்வதும் கரோனரி இருதய நோய், ஒரு சில வகையான புற்றுநோய்கள், சர்க்கரை வியாதி, உயர் இரத்தக் கொதிப்பு, வலிப்புகள் மற்றும் ஊளைச் சதை போன்ற நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்படும் சாத்தியத்தோடு அவை சம்பந்தப்பட்டிருப்பதுமாகும்” என்று தொடர்ந்து கூறுகிறார் டாக்டர் கூப். அதேவிதமாகவே, உணவில் நார்ப்பொருள் குறைவுக்கும் இருதயநோய், குடல் புற்று நோய்கள், இரைப்பை–குடல் கோளாறுகள், சர்க்கரை வியாதி இன்னும் மற்ற நோய்களுக்குமிடையேயுள்ள தொடர்புக்கும் பிரிட்டிஷ் அறுவை மருத்துவர் டாக்டர் டென்னிஸ் பர்கிட்டும் மற்றவர்களும் கவனத்தைத் திருப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
நம்முடைய உணவு எவ்விதமாக நம்முடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பது பற்றிய எல்லா விவரங்களும் புரிந்து கொள்ளப்படவில்லை. இது குறித்து உடல்நல நிபுணர்கள் மத்தியிலும் முழுமையாக ஒருமித்தக் கருத்துமில்லை. என்றபோதிலும், நாம் சிந்திப்பதற்கு தகுதியாயுள்ள ஒருசில மருத்துவ உண்மைகள் இருக்கின்றன.
கொழுப்புச்சத்தைக் குறைத்துவிடுங்கள்
இரத்தத்தில் உயர்ந்த அளவு கொலஸ்ட்ராலும் கொழுப்புள்ள சாராயமும், இருதய நோயின் அபாயநேர்வோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது. இருதயநோயுள்ளவர்களும் அல்லது குடும்பத்தில் இந்நோயைக் கொண்ட எவரையாவது கொண்டிருப்பவர்களும், அபாயநேர்வைக் குறைத்துக்கொள்ள விரும்புகிறவர்களும் இரத்தத்தில் கொலஸ்ட்ராலைப் பாதுகாப்பான அளவில் வைத்துக்கொள்வது நல்லது. என்ன செய்யப்படலாம்?
தற்காப்புக்குப் பொதுவாகப் பரிந்துரை செய்யப்படுவது கொலஸ்ட்ரால் குறைந்த உணவை உட்கொள்வதாகும். இது தாவர உணவில் அல்ல, ஆனால் இறைச்சி, முட்டை, பால் பண்ணைப்பொருட்கள் போன்ற எல்லா மாம்ச உணவுகளிலும் காணப்படுகிறது. என்றபோதிலும், கொலஸ்ட்ரால்–சத்து அதிகமாயுள்ள உணவுப்பொருட்களைச் சாப்பிடுவது, ஒருவருடைய இரத்த கொலஸ்ட்ரால் அளவில் ஒரு மட்டானப் பாதிப்பையே கொண்டிருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன. ஆனால் உணவு, பூரிதக்கொழுப்போடுகூட (மாம்ச கொழுப்பு, காய்கறிவகைகளில் சேர்க்கப்படும் கொழுப்பு, பனை மற்றும் தேங்காய் எண்ணை) சத்துள்ளதாக இருக்குமேயானால், இரத்த கொலஸ்ட்ராலின் உயர்வு பெரும்பாலான ஆட்களில் கணிசமாக உள்ளது. இதன் காரணமாக, இப்பொழுதெல்லாம் ‘கொழுப்புச் சத்தைக் குறைத்துக் கொள்’ என்பதில்தானே அழுத்தம் வைக்கப்படுகிறது. குறைவான மற்றும் கொழுப்பில்லாத இறைச்சியைச் சாப்பிட்டு, வெளிப்படையாகத் தெரியும் கொழுப்புச் சத்தைக் குறைத்து, வளர்ப்புப் பறவைகளிலிருந்து மேல் தோல் நீக்கி, முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய் நீக்கப்படாத பால், கெட்டியான உறைபாலேடு மற்றும் பனை அல்லது தேங்காய் எண்ணைக் கொண்ட பதனஞ் செய்த உணவு உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
பூரிதக் கொழுப்புகள் இரத்த கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தும் போக்குடையதாக இருக்கையில், அபூரிதத் திரவ எண்ணெய்கள் (ஆலிவ், சோயா, மொச்சை, குசும்பச் செடி, மக்காச் சோளம், இன்னும் மற்ற தாவர எண்ணெய்கள்) கொழுப்புள்ள மீன்கள் மற்றும் சிப்பிநண்டின நீர்வாழ் உயிர்கள் இதற்கு நேர் எதிர்மாறான வகையில் செயல்படுகிறது. இவற்றில் சில இரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால், HDL (உயர்–செறிவுள்ள லிப்போப்ரோட்டின்), என்றழைக்கப்படுவதன் அளவை உயர்த்தவும் அல்லது சேதப்படுத்துகின்ற வகையான கொலஸ்ட்ராலின் (குறைந்த–செறிவுள்ள லிப்போப்ரோட்டின்) அளவை குறைக்கவும் உதவியாக இருக்கின்றன.
அதிகமாக நார்ப்பொருள் உட்கொள்ளுங்கள்
கொழுப்புச் சத்தைக் குறைப்பது கதையின் ஒரு பகுதியாக மாத்திரமே இருக்கிறது. வெள்ளைமாவு, சர்க்கரை, வேதியல் கூட்டுப்பொருட்களால் நிறைந்த பதப்படுத்தப்பட்ட, வெகுவாக சுவையூட்டப்பட்ட உணவுபொருட்கள் முற்றிலுமாக நார்ப்பொருளில் குறைவுபடுகின்றன. விளைவு நாகரீக நோய்கள் என்றழைக்கப்படுகிறவையாக இருக்கின்றது: மலச்சிக்கல், ஆசனவழிப் பகுதியில் நாளத்தின் வீக்கமும் இரத்தப்போக்கும், குடலிறக்கம், பெருங்குழாயிலிருந்து வரும் பையின் வீக்கம், பெருங்குடல் புற்றுநோய், சர்க்கரை வியாதி, இருதய நோய் இன்னும் மற்றவை. “உணவில் குறைந்த அளவு நார்ப்பொருளையே உட்கொள்கிற ஆண்கள், அதிகமான நார்ப்பொருளை உட்கொள்கிற ஆண்களைக் காட்டிலும் எல்லாக் காரணங்களினாலும் மரிப்பதற்கு மூன்று மடங்கு அதிகமான அபாயநேர்வைக் கொண்டிருக்கின்றனர்” என்கிறது லான்செட்டில் ஓர் அறிக்கை.
உணவில் நார்ப்பொருள் இரண்டு வழிகளில் செயல்படுகிறது. நம்முடைய செரிமான மண்டலத்தினூடாகக் கடந்து போகையில் அது தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு செரிமானப் பகுதியை வேகமாகக் கடந்து போகிறது. அது தன்னோடு அநேக தீங்கிழைக்கும் பொருட்களை எடுத்துச் சென்று உடலிலிருந்து அவை நீக்கப்படுவதைத் துரிதப்படுத்துவதாக உடல்நல நிபுணர்கள் கருதுகிறார்கள். கறைந்துவிடக்கூடிய ஒருசில நார்ப்பொருட்கள் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் LDL கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்துவிடுவது கவனிக்கப்பட்டிருக்கிறது—சர்க்கரை மற்றும் இருதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.
நார்ப்பொருளைப் பற்றிய இந்த அறிவிலிருந்து நீங்கள் எவ்விதம் நன்மையடையலாம்? கூடுமானால் உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு–தானிய உணவுப் பொருட்களின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். வெள்ளை ரொட்டிக்குப் பதில் முழு–கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு காலை உணவில் முழு–தானிய பலகாரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மொச்சைகளும்கூட நார்ப்பொருள் மிகுந்தவை. மாச்சத்து—உருளைக்கிழங்கும் அரிசியும்—புற்றுநோய்க்கு எதிரான பொதுப்பண்புகளைக் கொண்டிருக்கக்கூடும்.
நிச்சயமாகவே உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய அநேக மற்ற அம்சங்களும் உண்டு. என்றபோதிலும் கொழுப்புச் சத்தைக் குறைத்து, நார்ப்பொருளை அதிகரிப்பது அநேக ஆட்களின் உணவு பழக்கத்தில் அவசரமான கவனத்தைத் தேவைப்படுத்தும் இரண்டு பகுதிகளாகும்.
[பக்கம் 10, 11-ன் பெட்டி]
உடற்பயிற்சி, உடற்கட்டு மற்றும் ஆரோக்கியம்
சுமார் 17,000 ஆண்களை வைத்து செய்யப்பட்ட 40 ஆண்டுகால ஆய்வு, வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்கள் போல் குறைவாக உடற்பயிற்சி செய்தவர்கள் (சுமார் 500 கலோரிகளைப் பயன்படுத்திவிடுகிறவர்கள்) உடற்பயிற்சியே செய்யாதவர்களைவிட 15-லிருந்து 20 சதவீதம் என்ற அளவில் மரணத்தைக் குறைவாகக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தது. மும்முரமாக உடற்பயிற்சி செய்தவர்கள் (2,000 கலோரிகளைப் பயன்படுத்திவிட்டவர்கள்) மூன்றில் ஒரு பங்கு குறைவான மரணவிகிதத்தைக் கொண்டிருந்தனர். மற்ற ஆய்வுகளும் இதே முடிவுக்கே வந்திருக்கின்றன: ஒழுங்கான உடற்பயிற்சி, உயர் இரத்த அழுத்தம், இருதய நாள நோய் மற்றும் ஒருவேளை புற்றுநோய் அபாயநேர்வையும்கூட குறைத்துவிடுகிறது. ஒழுங்கான உடற்பயிற்சி தேவைக்கு மேற்பட்ட எடை, குறைவான தன்மதிப்பு, அழுத்தம், கவலை, சோர்வு ஆகிவற்றை எதிர்த்துப் போராடவும்கூட உதவுகிறது.
ஒழுங்கான உடற்பயிற்சி இவை அனைத்தையும் செய்வதாகத் தோன்றுவதற்குக் காரணம், அது ஒரு நபரின் சரீரத் திறமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்டுகிறது. வேறு வார்த்தையில் சொன்னால் ஒழுங்கான உடற்பயிற்சி ஒருவரை உடற்கட்டுள்ளவராகச் செய்கிறது. உடற்கட்டு நல்ல ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்காவிட்டாலும், சரீரப்பிரகாரமாக நல்ல உடற்கட்டு நோய்களுக்கு எளிதில் ஆளாவதில்லை. அவ்விதமாக அது நோயுற்றாலும் வேகமாக குணமடைகிறது. சரீரப்பிரகாரமான நல்ல உடற்கட்டு ஒருவரின் மனது சம்பந்தமான மற்றும் உணர்ச்சி சம்பந்தமான நலனுக்கு உதவக்கூடும், மேலும் வயதின் காரணமாக ஏற்படும் பதிப்புகளைத் தாமதமாக்கக்கூடும்.
என்ன மற்றும் எவ்வளவு?
உடற்பயிற்சியைப் பற்றிய வழக்கமான கேள்விகள், என்னவிதமான உடற்பயிற்சி மற்றும் எவ்வளவு என்பதாகும். அது உண்மையில் ஒருவர் எதை சாதிக்க விரும்புகிறார் என்பதன் பேரில் சார்ந்திருக்கிறது. ஒலிம்பிக் விளையாட்டு வீரன் உடற்கட்டுடன் இருப்பதற்காக நீண்டகாலமும் கடினமாகவும் பயிற்சி செய்ய வேண்டும். பெரும்பாலான ஆட்களுக்கு இலக்கு எடை இழப்பதாக, நல்ல வடிவம் பெறுவதாக, மேம்பட்ட ஆரோக்கியத்தை அனுபவிப்பதாக அல்லது வெறுமென நலமாக உணருவதாக இருக்கிறது. அவர்களுக்கு, உடற்கட்டுடன் இருப்பதற்கு வாரத்துக்கு மூன்று முறை 20-லிருந்து 30 நிமிட உடற்பயிற்சி தேவையாக இருப்பதைப் பெரும்பாலான உடல்நல நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் என்னவிதமான உடற்பயிற்சி?
உடற்கட்டு ஒருவரின் உடல் திறமை, வயது, சகிப்புத்தன்மையை உட்படுத்துகிறது. ஆகவே உடற்பயிற்சி, பயிற்சியின் சமயத்தில் ஒருவரின் இதயத்துடிப்பு வேகத்தையும் சுவாசித்தலையும் மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். இதுதானே பொதுவாக ஏரோபிக் (பிராணவாயுவின் பயனீட்டளவை அதிகரிக்கும்) உடற்பயிற்சி என்றழைக்கப்படுகிறது. ஓடுதல், விரைவாக நடத்தல், ஏரோபிக் நடனம், கயிறு கொண்டு குதியாட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை சாதாரணமான ஒருசில ஏரோபிக் உடற்பயிற்சிகளாகும். இவை ஒவ்வொன்றும் செளகரியம், வசதி மற்றும் கருவிகளின் செலவு, காயமடைவதற்கான சாத்தியம் போன்ற காரியங்களில் நன்மைகளையும் தீமைகளையும் கொண்டிருக்கின்றன.
மற்ற வகையான உடற்பயிற்சிகள் தசைகளுக்கு முறுக்கேற்றி உடலுக்கு வடிவம் கொடுக்கின்றன. இவைகளில் உடற்பயிற்சி இயந்திரங்களோடும் எடைகளை வைத்தும் பயிற்சி செய்வது உட்படுகிறது. இப்படிப்பட்ட உடற்பயிற்சிகள் ஒருவரின் சரீர பெலத்தையும் சகிப்புத்தன்மையையும் கூட்டி ஒருவருடைய உடலமைப்பையும் தோற்றத்தையும் மேம்படுத்தக்கூடும்—இவை அனைத்துமே உடற்கட்டை நாடுவதில் சாதகமானவையாக இருக்கின்றன.
நம்மில் பலர் பள்ளிநாட்களிலிருந்தே நாம் நன்றாக அறிந்திருக்கும் அந்த உடற்பயிற்சியைப் பற்றி என்ன? அந்தச் சமயத்தில் அதை மதித்துணர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அவை நமக்குப் பெருமளவில் நன்மையாக இருந்திருக்கின்றன. நீட்டுதலும், திருப்புதலும், பின்னி முறுக்குவதும் எளிதில் உடலை வளையும்படிச் செய்கிறது. குதிப்பதும் உதைப்பதும் இருதய துடிப்பின் வேகத்தைப் பெருக்குகிறது. நேராக உட்காருவது, குப்புறப் படுத்துக்கொண்டு தோள்களுக்குக் கீழே கைகளையும் உள்ளங்கையையும் வைத்தபடி உடலை மேலே தள்ளிக் கொண்டுச் செல்லுதல், மற்றும் கம்பிக்கு மேலே முகவாய்க் கட்டை வரும் வரையாக கிடைநிலையிலுள்ள ஒரு கம்பியிலிருந்து தொங்கிக் கொண்டு பற்றி இழுத்தல் ஆகியவை தசைகளுக்கு முறுக்கேற்றுகின்றன. ஒருவருக்கு வயதாகும்போது இதுபோன்ற நீட்டும் உடற்பயிற்சியிலுள்ள மிகப் பெரிய அனுகூலமானது, ஒருவர் உடலை எளிதில் வளையும்படி வைத்துக்கொள்ளவும், நீண்டகாலம் சுறுசுறுப்பாகத் தொடர்ந்திருக்கவும் உதவி செய்கிறது
கடைசியாக, பொழுதுபோக்கு விளையாட்டுகள்—வரிபந்தாட்டம், நாற்கட்டப் பந்தாட்டம், மென் பந்தாட்டம், பனி மீது சறுக்கிச் செல்லுதல் இன்னும் மற்ற அநேக நடவடிக்கைகள். இப்படிப்பட்ட நடவடிக்கைகளின் அனுகூலம் என்னவென்றால், சலிப்பூட்டுகிற உடற்பயிற்சியைவிட அதிக வேடிக்கையாக இருக்கின்றன. ஆகவே ஒருவர் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதற்குத் தேவையானது இதுவாகவே இருக்கலாம். ஒருவர் எத்தனை திறமையோடும் மும்முரமாகவும் இவைகளை நாடுகிறார் என்பதைப் பொறுத்து, இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மற்ற வகையான உடற்பயிற்சியைப் போன்று தளராத சக்தி அளவை அளிக்கவோ அல்லது அளிக்காமலோ இருக்கலாம். இருந்தாலும், அவை உடலை நன்னிலையாக்கவும் ஒத்திசைவை மேம்படுத்தவும் எளிதில் வளைந்துகொடுக்கும் தன்மையையும் விரைவான இயக்கத்தையும் உயர்த்தச் செய்யவும் உதவக்கூடும்.
இத்தனை அநேக வகையான உடற்பயிற்சிகளிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும் காரணத்தால், நீங்கள் அனுபவித்துக் களிக்கக்கூடிய ஒன்றை அல்லது அவைகளில் சிலவற்றைச் சேர்த்து தேர்ந்தெடுப்பதில் தானே வெற்றியின் இரகசியம் இருக்கிறது. இது நீங்கள் உங்கள் எண்ணத்தில் உறுதியாக இருக்க உதவி செய்யும். ஏனென்றால், உடற்பயிற்சி ஆரம்பிக்கும் வயது வந்தவர்களில் 60 முதல் 70 சதவிகிதத்தினர் ஒரு மாதத்துக்குள் அதை நிறுத்திவிடுவதை ஆய்வுகள் காண்பிக்கின்றன. வெறுமென உடற்பயிற்சியின் அளவு அல்ல, ஆனால் தவறாமல் ஒழுங்காகச் செய்வதே முக்கியத்துவமுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பல்வேறு சமயங்களில் பல்வேறு வகையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம், நீங்கள் உங்கள் உடலுக்கு முழுமையான வளர்ச்சியைக் கொடுத்து சமநிலையான முறையில் உடற்கட்டுள்ளவர்களாவீர்கள்.
நீங்கள் தெரிந்துகொள்ளும் நடவடிக்கை உங்கள் வயதாலும் உங்கள் பொதுவான உடல்நலத்தாலும்கூட முதலாவதாக நெறிப்படுத்தப்பட வேண்டும். நிச்சயமாக உடல்நலப் பிரச்னையுள்ளவர்கள் உடற்பயிற்சி திட்டத்தில் இறங்குவதற்கு முன்பு தங்கள் மருத்துவரிடம் கலந்து பேச வேண்டும். எப்படியாக இருந்தாலும், முதலில் மெதுவாக ஆரம்பித்து, முன்னேற்றம் செய்கையில் அதிகமாக்குங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளும் உடற்பயிற்சியைக் குறித்துக் கற்றறியுங்கள்—இவ்விஷயத்தின் பேரில் புத்தகங்களுக்கும் அறிவுரைகளுக்கும் குறைவே இல்லை—அப்பொழுது நீங்கள் அவற்றை அனுபவித்துச் செய்யவும் முடியும், உங்கள் முயற்சியிலிருந்து பயனடையவும் முடியும்.
[பக்கம் 12-ன் பெட்டி]
புகைபிடித்தலின் விலை
◻ சுற்றுப்புறச் சூழலிலுள்ள வேறு எந்தப் பொருளைக் காட்டிலும் புகையிலையே வயதுவந்தவர்கள் மத்தியில் அதிகமான துன்பத்தையும் மரணத்தையும் விளைவிக்கிறது.
◻ உலகம் முழுவதிலும் இப்பொழுது உயிர்ச்சேதம் ஆண்டுக்கு 25 இலட்சத்தை நெருங்கிவருகிறது, எல்லா மரணங்களிலும் இது சுமார் 5 சதவிகிதமாக இருக்கிறது.
◻ [ஐக்கிய மாகாணங்களில்] உடல் நலம் பேணுவதற்காகும் செலவுகளும் பொருளாதார இழப்பும் 38 ஆயிரம் மில்லியன் டாலர்களிலிருந்து 95 ஆயிரம் மில்லியன் வரையாகச் செல்கிறது, அல்லது ஒரு பாக்கெட்டுக்கு 1.25 டாலரிலிருந்து 3.15 டாலராக இருக்கிறது. இந்த மொத்தத் தொகைகளில் புகையிலைக்காகும் செலவு—ஆண்டுக்கு மூவாயிரம் கோடி டாலர் சேர்க்கப்படவில்லை.
◻ மற்றவர்கள் புகைக்கும் புகையை உட்கொள்ளும் ஆட்களுக்கு நுரையீரல் புற்றுநோயால் மரிக்கும் வாய்ப்பு ஒருவேளை அவர்கள் புகையின் பாதிப்புக்கு உட்படுத்தப்படாதிருந்தால் ஏற்படுவதைவிட மூன்று மடங்கு அதிமாக இருக்கிறது.
◻ புகைபிடிக்கும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் சரீர மற்றும் மனதின் செயல்திறமைகளைக் குறைத்துவிடுகிறார்கள். அநேக தேசங்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமானப் பிள்ளைகள் இது போன்று புகையின் பாதிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.