கிறிஸ்மஸ் பாரம்பரியங்கள் அவற்றின் ஆரம்பம் என்ன?
நில உலகின் வட அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகளின் மத்தியில் ஒன்றுபோல, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மிகப் பிரபலமானவற்றின் பட்டியலில் இடம்பெறுகின்றது. கிறிஸ்தவமல்லாத ஷின்டோ மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்களாக இருக்கும் ஜப்பானில், மற்ற கொண்டாட்டங்களோடுகூட கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. இது கட்டுப்பாடற்றக் களியாட்டத்துக்கும் வியாபாரத்துக்குரியதுமான ஒரு காலமாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் எப்போதும் இத்தனை மதசார்பற்றதாக இருந்திருக்கிறதா? இந்தப் பருவக் காலத்துக்குரிய விழா எவ்விதமாக ஆரம்பமானது?
நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் ஆயிரம் வருடங்களில் கிறிஸ்மஸ் எவ்விதமாகக் கொண்டாடப்பட்டது என்பதைப் பார்வையிடுவது கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட ஊற்றுமூலங்களில் அதன் ஆரம்பம் இருந்ததைக் கண்டுபிடிக்க உதவி செய்கிறது. இன்று சரித்திரம் (History Today) பத்திரிகையில் எழுதுகையில், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் முரே, வரலாற்றின் இடைநிலைக்கால மனிதன் “அப்போதிருந்த புறமத நடுகுளிர்க்கால சடங்குகளின் அம்சங்களை, வளர்ந்து வந்த கிறிஸ்தவ இறையியலோடு கலந்து ஒன்றாக்கினான்” என்பதாகத் தெரிவிக்கிறார். இது எவ்விதமாக மற்றும் ஏன் செய்யப்பட்டது?
கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட ஆரம்பங்கள்
பூர்வ ஐரோப்பிய நாகரீகங்களின் மக்கள், சூரியன் மெதுவாக மீண்டும் உயர வானத்திற்குப் போவதற்கு முன்பாக தெற்கே அடிவானத்தின் அருகே எவ்விதமாக நடுகுளிர்காலத்தில் அசையாது நிற்பதுபோல தோற்றமளித்தது என்பதைக் கவனித்தார்கள். இந்தக் குளிர்கால கதிர்த்திருப்பம் (“சூரியன்” மற்றும் “அசையாது நில்” என்பதற்குரிய இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது) ஜூலியன் நாட்காட்டியின் பிரகாரம், ஆரம்பத்தில் டிசம்பர் 25-ம் தேதியிலிருந்தது. இதே ஆட்கள், உயிரின் ஊற்றுமூலரும் அதைக் காப்பவருமாக, சூரியனுக்கும் கடவுளுக்குமிடையே ஓர் ஒப்புவமையைக் காண்பதை எளிதாகக் கண்டார்கள். பொ.ச. 274-ல் ரோமப் பேரரசன், சோல் இன்விக்டஸ் என்ற வெல்லப்படாத சூரியனைப் பேரரசின் முக்கிய காவல் தெய்வமாக அறிவித்தான். இதை அவன் டிசம்பர் 25-ல் செய்தான். இவ்விதமாக மித்திரஸ்-சிற்கு ஒளிக்கடவுளாகிய பகலவனுக்குச் சிறப்புச் செய்தான்.
புதிய அரசு மதமாகக் கிறிஸ்தவமண்டலம் தோன்றியதைக் குறித்து முரே எழுதுகிறார்: “பேரளவான ஐயப்பாட்டு நிலைக்குப் பின்பு, வெற்றி அதன் [பகலவ தெய்வத்தை வழிபட்ட சமயத்தவர், மித்திரேயிசம்] முக்கிய போட்டி மதமான கிறிஸ்தவத்துக்குச் செல்லும். ஆனால் 300-ம் வருடம் போல், இந்தப் போட்டிச் சமயம் இன்னும் நயமாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்போதுதானே கிறிஸ்துவின் பிறப்புக்கு ஒரு விழாவை உண்டுபண்ண சர்ச் தீர்மானித்தது. (லத்தீன்: nativitas) (மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இருந்து வந்த பட்டியலில் இப்படிப்பட்ட ஒரு விழா சேர்க்கப்படவில்லை, புதிய விழா, ஒரு பத்திரத்தில் முதல்முதலாக 336-ல் பதிவு செய்யப்பட்டது.)” இந்த விழாவுக்கு என்ன தேதி தெரிந்துகொள்ளப்பட்டது? கிறிஸ்மஸ் பழக்கங்களையும் மக்கள் மரபு ஆராய்ச்சியையும் கண்டுபிடித்தல் புத்தகத்தின்படி “பூர்வ சர்ச் தந்தைமார்களின் பங்கில் புத்திசாலித்தனமானதும் நடைமுறைக்குப் பொருத்தமானதுமான ஒரு முடிவின்” விளைவாக டிசம்பர் 25 தெரிந்து கொள்ளப்பட்டது. ஏன் அப்படி?
நடுகுளிர்க் காலம் ஏற்கெனவே, வேளாண்மை தெய்வத்திற்குப் பண்டைய ரோமர் எடுத்த ஏழுநாள் நெருப்பு மற்றும் வெளிச்சமாகிய சாட்டுநாலியா பெருவிழாவின் களியாட்ட வெறிக் கூத்துக்குப் பேர் போனதாக இருந்தது. பின்னர், ரோமன் ஆண்டின் முதல் மாதம் காலண்ட்ஸ் அல்லது ஜனவரியிலிருந்து ஓர் ஆண்டுக்குப் பணிபுரிந்த ரோம நிர்வாக அதிகாரிகளின் நியமிப்பை கொண்டாடுவதற்கு மூன்று நாள் விழா ஒன்று நடத்தப்பட்டது. இவ்விதமாக வேளாண்மை தெய்வத்துக்குப் பண்டைய ரோமர் எடுத்த பெருவிழா, ரோமன் ஆண்டில் முதல் மாத கொண்டாட்டம் மற்றும் வெற்றிக் கொள்ளப்படாத சூரியனின் பிறந்த நாள் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் குறுகிய காலப்பகுதிக்குள் வருவதால், டிசம்பர் 25-ம் தேதி “கிறிஸ்துவின் பிறப்பின்” கொண்டாட்டத்துக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட தேதியானது. ரோமப் பேரரசின் புதிய அரசாங்க மதத்துக்கு மதம் மாறும்படியாக புறமத மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் இது செய்யப்பட்டது.
காலப்போக்கில், புறமத ஜெர்மானிய நடு–குளிர்க்கால விழாவான யூலி கிறிஸ்மஸ் பண்டிகை விருந்துண்பது, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், பரிசுகளைக் கொடுப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டு இதற்கு வலுவூட்டியது. மெழுகுவர்த்திகள், மரத்துண்டுகள், பசுமையான அலங்காரங்கள் மற்றும் மரங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் முக்கியத்துவம் பெற்றன. ஆனால் புறமதப் பாரம்பரியங்களோடு பிற்காலத்தில் எந்தத் தொடர்புகளும் ஏற்படுவதற்கு முன்பு கிறிஸ்தவர்கள் மத்தியில் கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டம் முக்கியத்துவமுள்ளதாக இருந்திருக்க வேண்டும் என்பதாகச் சிலர் விவாதிக்கக்கூடும். இது அவ்விதமாக இருக்கிறதா?
பூர்வ கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படவில்லை
பைபிள், கிறிஸ்து பிறந்த தேதியைத் துல்லியமாக தெரியப்படுத்துவதில்லை. அதற்கும் மேலாக “பூர்வ கிறிஸ்தவர்கள், அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடவில்லை” என்கிறது தி உவர்ல்ட் புக் என்சைக்ளோபீடியா. ஏன் கொண்டாடவில்லை? “ஏனென்றால் எவருடைய பிறந்தநாளையும் கொண்டாடுவதை அவர்கள் புறமதப் பழக்கமாகக் கருதினர்.” முதல் மூன்று நூற்றாண்டுகளின்போது கிறிஸ்தவ மதத்தின் மற்றும் சர்ச்சின் வரலாறு புத்தகத்தில் அகஸ்டஸ் நியாண்டர் இவ்விதமாக ஒப்புக்கொள்கிறார்: “பொதுவாக இந்தக் காலப் பகுதியிலிருந்த கிறிஸ்தவர்களின் கருத்துக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற எண்ணம் வெகுதூரமாயிருந்தது.”
இந்த ஆய்விலிருந்து, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், புறமதப் பழக்கங்களில் தங்கள் வேர்களைக் கொண்டிருப்பதை நீங்கள் காணமுடியும். பொருளியல் ஆய்வாளர் விளக்குகிறபடி, பின்னால்தானே, மதப்பற்றுள்ள “பத்திரிகையாளர்கள், ‘கிறிஸ்து உலகத்தின் ஒளியாக இருப்பதால் இந்த ஒளியின் கொண்டாட்டத்தை [வெற்றிக் கொள்ளப்படாத சூரியனின் பிறந்தநாளை]’ தங்களுடையதாக்கிக் கொண்டு குழந்தை இயேசு டிசம்பரில் பிறந்தார் என்பதாகப் பாசாங்கு (விளம்பரத்தில் உண்மையை ஆதரிப்பவர்களால் அங்கீகரிக்கப்படாத அத்தாட்சியில்லாமையோடு) செய்தார்கள். இதன் காரணமாகவே ஸ்கட்லாந்து திருச்சபை நீண்ட காலமாகவும் பிரிட்டனிலிருந்த புராட்டஸ்டன்டு சமயத்தவர் தயக்கத்தோடும் கிறிஸ்மஸைப் புறக்கணித்துவந்தனர், வியாபாரக் கவர்ச்சி அதை மீண்டும் உண்டுபண்ணும்வரையாக அவ்விதமாகச் செய்தனர்.”
கிறிஸ்மஸ் பாரம்பரியங்கள் புதுப்பிக்கப்படுகின்றன
விக்டோரியா அரசி ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் (1837–1901), கிறிஸ்மஸின் கடந்தகாலம் புத்தகத்தின் ஆசிரியர்களான காவின் வேய்ட்மேன் மற்றும் ஸ்டீவ் ஹம்ஃபிரீஸின்படி, “கிறிஸ்மஸுக்கு முந்தின தினம் எந்தப் பிரிட்டன் நாட்டுக் குழந்தையும் தங்கள் காலுறைகளை அடுப்படியில் தொங்கவிடவில்லை; கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி எவரும் கேள்விப்பட்டதில்லை; கிறிஸ்மஸ் வெடிவகைகள் இருக்கவில்லை; மிகவும் வெகுசில ஆட்களே கிறிஸ்மஸ் தினத்தன்று வான்கோழி சாப்பிட்டார்கள்; பரிசுகளை வழங்கும் பழக்கம் அங்கில்லை; அலங்கரிக்கப்பட்ட மின்னுகின்ற கிறிஸ்மஸ் மரம் அரசவை வெளியே அறியப்படாதிருந்தது. உண்மையில் கிறிஸ்மஸ் நாள், எந்த வகையான சமுதாய சடங்குகளுக்கும், நாள்காட்டியில் அதிமுக்கியமான தேதியாக இருக்கவில்லை.” அப்படியென்றால் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஆர்வத்தைப் பொதுமக்களிடையே புதுப்பிக்க என்ன சம்பவித்தது?
“பழங்காலத்திய விழாக் கொண்டாட்டங்களை, சிறிய, மதிப்புக்குரிய குடும்ப நிகழ்ச்சிகளாக மாற்றுவது 1830-களில் ஆரம்பமானது. . . . அது 1870-களில் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது. அப்போதுதானே பிரிட்டனில் முதல் முதலாக கிறிஸ்மஸ் தாத்தா உருவம் தோன்றியது” என்கிறது கிறிஸ்மஸின் கடந்தகாலம். அதே சமயத்தில் கஞ்சத்தனமாக இருந்த வயதான ஒரு மனிதன் கிறிஸ்மஸ் ஆவிக்கு மாறியதைப் பற்றிய சார்லஸ் டிக்கன்சின் ஒரு கிறிஸ்மஸ் கேரல் என்ற கதை பிரசுரிக்கப்பட்டது. இது எளியவர்களிடமாக ஓர் இரக்க மனப்பான்மையைத் தூண்டிவிட்டது. தொழில்புரட்சியினால் உருவான அழுக்கடைந்த நிலைமைகளிலும் பொருளாதார கஷ்டத்திலும் நகரங்களில் வாழும் மக்களின் நிலைமை, ஒருவித தார்மீக அறப்போரை மேற்கொள்ளும்படி விக்டோரியா அரசி காலத்தில் வாழ்ந்தவர்களைத் தூண்டியது. இது பின்னால் எட்வர்ட் அரசர் காலத்தில் ‘மதிப்புக்குரிய’ எளியவர்களுக்கு மாத்திரமே அறம் கொண்டுவரும்படியாக மாற்றியமைக்கப்பட்டது.
பிரிட்டனின் கத்தோலிக்கத் தூதுவன் பத்திரிகையில் ஓர் எழுத்தாளர் குறிப்பிட்டதாவது: “படிப்படியாக, பொதுவாக செல்வப்பெருக்கோடு நடுத்தர வர்க்கத்தினரின் கிறிஸ்மஸ் சடங்குகளின் துர்அதிஷ்டமான அநேக அம்சங்கள் மிகப்பரவலாகிவிட்டிருக்கிறது. எளிமையும் தாராள குணமும் மாறி போட்டியும் பிறரைப் பயன்படுத்திக்கொள்வதும் திடீரென்று ஏற்பட்டிருக்கிறது. உண்மையான ஒரு விருந்துணவாக ஒரு சமயம் இருந்த எளிய விருந்து சாப்பாட்டுக்குப் பதிலாக ஏராளமான பலமான சாப்பாடு அதைச் சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டமாக மாற்றிவிட்டிருக்கிறது. இந்தப் புதிய பாரம்பரியத்தினால் குடும்பங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒன்றாகச் சேர்ந்து ஒருசில நாட்களைக் கழிக்கவும், அவர்களில் சிலர் இழிவாகக் கருதும் விளையாட்டுகளை விளையாடவும், அவர்களில் சிலர் வெறுக்கும் டெலிவிஷனைப் பார்க்கவும் நல்லெண்ணமும் பொதுவான நட்புணர்வும் மேலோங்கியிருப்பதாகக் கருதப்படும் அந்த ஒரு சமயத்தில் அயலகத்தாரோடும் வெளியிலிருப்பவர்களோடும் தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ளவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
“ஒருவர் வியாபாரத்தை அல்லது வெறுமென அதன் சமூக வழக்க முறைமையைக் குற்றங்காண முனைகிறார் என்பதாக ஒருவர் சொன்னால் அவர் கஞ்சன் என்பதாக பெயர் வைக்கப்படுகிறார். சமீப ஆண்டுகளில் கிறிஸ்மஸ் பயங்கரமாக தவறாகிவிட்டிருக்கிறது என்றே என் மனதுக்குத் தோன்றுகிறது.”
இந்தக் கருத்தை நீங்கள் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், கிறிஸ்மஸ் சமயத்தில் நீங்கள் வாழுமிடத்தில் என்ன நடக்கக்கூடும்?
கிறிஸ்மஸ்—ஆபத்தான ஒரு சமயம்
சில ஆட்கள், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் இந்தச் சமயத்தை பயன்படுத்துவதை நீங்கள் காண்கிறீர்களா? குடிபோதையின் விளைவான போக்கிரித்தனமான நடத்தை உங்கள் சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கிறதா? அநேக உண்மை மனதுள்ள ஆட்கள் கிறிஸ்மஸ் சமயத்தில் குறிப்பிடத்தக்க தயவையும் கரிசனையையும் காண்பித்தபோதிலும் அவர்களுடைய முயற்சி இந்தச் சமயத்தில் குடும்ப உறவுகளில் சாதாரணமாக ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க முடிகிறதில்லை.
அப்படியென்றால், ‘கிறிஸ்மஸ் ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக மோசமான நடத்தையை உண்டுபண்ணுகிறது?’ என்பதாக நீங்கள் கேட்கக்கூடும். அடிப்படையில் அது கிறிஸ்தவமல்லாததாக, புறமதத்துக்குரியதாக இருப்பதே காரணமாயிருக்கிறது. கிறிஸ்து இவைகளில் பிரியப்படுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? நிச்சயமாக இல்லை. ஆம், வெளிப்படையாகவே பைபிள் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் [சாத்தான்] இசைவேது?”—2 கொரிந்தியர் 6:14, 15.
வித்தியாசமான ஒரு கருத்து
இந்தக் கிறிஸ்மஸ் காலத்தின்போது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்களை வந்து சந்திக்கக்கூடும். அவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாதிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். ஒருவேளை அவர்களுடையப் பிள்ளைகள் கொண்டாட்டங்களை இழக்கிறார்கள் என்பதாக நீங்கள் ஒருவேளை அக்கறையோடு சொல்லக்கூடும். ஆனால் செளத்ஹாம்டனில் (இங்கிலாந்து) சதர்ன் ஈவினிங் எக்கோ-வுக்கு அளித்த பேட்டியில் சாட்சியாக இருக்கும் இரண்டு பிள்ளைகளின் தகப்பன் இந்த நம்பிக்கையூட்டும் பதிலை அளித்தார்: “அவர்கள் உண்மையில் எதையும் இழப்பதாக உணருவதில்லை என்று என்னால் உறுதியாக உங்களிடம் சொல்லமுடியும்” என்கிறார் ஜான். ‘யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை ஊக்குவிப்பதில் மிகவும் ஊக்கந்தளராமல் இருக்கிறார்கள். வருடம் முழுவதிலுமாக எங்களுடைய பிள்ளைகளுக்கு நாங்கள் அநேக பரிசுகளைக் கொடுப்பதோடுகூட நாங்கள் மிக அதிக மதிப்புள்ள ஒன்றையும் [அதாவது] எங்களுடைய நேரத்தையும் அன்பையும் அவர்களுக்குக் கொடுக்கிறோம்.’”
நிச்சயமாகவே, இப்படிப்பட்ட உண்மையான அன்பும் அக்கறையும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு அதிகமாக உதவி செய்கிறது. ஆகவே புறமத ஆரம்பத்தையுடைய கிறிஸ்மஸ் பாரம்பரியங்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும், ஆம், அந்நியர்களிடமும்கூட வருடம் முழுவதுமாக மெய்யான, கிறிஸ்து காட்டியது போன்ற ஆவியை வெளிக்காட்டுவதன் மூலம் ஒவ்வொருவரும் இயேசுவைக் கனப்படுத்துவார்களானால், அது மேன்மையானதாக இருக்குமல்லவா? (g89 12/8)
[பக்கம் 14-ன் பெட்டி/படம்]
கிறிஸ்மஸ் தாத்தா, மறுபெயர் சான்டா க்ளாஸ்
கிறிஸ்மஸ் தாத்தா “இயேசு கிறிஸ்து காலம் முதற்கொண்டு அதிக வெற்றிகரமான ஒரு முன்னேற்றக் கதையாக” வருணிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் யாராக இருந்தார்? பிரிட்டனின் பழக்கவழக்கங்களும் சமயசடங்குகளும் (The Customs and Ceremonies of Britain) புத்தகத்தின்படி, அவர் “குறைந்த பட்சம் 15-ம் நூற்றாண்டு முதற்கொண்டு [கிறிஸ்மஸ்] காலத்தின் தெளிவற்ற ஓர் உருவமாக அறியப்பட்டிருந்தார் . . . 1653-ன் மரசெதுக்கு ஓவியத்தில் ஏறக்குறைய அவருடைய நவீன ஆடையில் தோற்றமளிக்கிறார்: ஆனால் ‘சான்டாவின்’ கிறிஸ்மஸ் முன்தின சந்திப்புகள், காலுறைகளை நிரப்ப (அல்லது அதிக பேராசையுடன் தலையணை உறைகளை நிரப்ப) புகைபோக்கி வழியாக இறங்கி வரும் பழக்கம், கலைமானால் இழுக்கப்படும் பனி சறுக்கு வண்டி, பாரம்பரியங்களின் உருக்கு குகையாகிய அ.ஐ. மாகாணங்களிலிருந்து பெறப்பட்டது. நான்காவது நூற்றாண்டு மைராவின் புனிதர் நிக்கோலஸ் (நடு இரவில் வந்து வரதட்சணைப் பணம் கொடுத்து மூன்று கன்னிப்பெண்களை விலைமாதர் தொழிலிலிருந்து பாதுகாத்தவரும், சான்டா க்ளாஸாக (Sinte Klaas) தன்னுடைய விழா நாளான டிசம்பர் 6-ம் தேதி ஆலந்து அமெரிக்க பிள்ளைகளின் காலணிகளை நிரப்பியவர்) பற்றிய ஐரோப்பிய கட்டுக்கதைகளிலிருந்தும்; ஜெர்மன் அமெரிக்க க்ரிஸ்ரிங்கல் (Krisskringle) (நல்ல பிள்ளைகளுக்கு வெகுமதியளித்து கெட்ட பிள்ளைகளைத் தண்டித்தவர்) வடதுருவத்தில் வாழும் மந்திரவாதிகளைப் பற்றிய ஸ்காண்டிநேவிய அல்லது ருஷ்ய கதைகளிலிருந்தும் அவருடைய சிறப்பியல்புகள் நயமாக இணைக்கப்பட்ட ஒன்றாகும். . . . இந்தக் கூட்டு அமெரிக்க சான்டா, 1870-களில் அட்லாண்டிக்கை மீண்டும் கடந்து சென்றது: அப்போது முதற்கொண்டு அவருடைய நற்பெயர் எண்ணற்ற வியாபாரிகளால் சேதப்படுத்தப்படாமல் இருந்து வந்திருக்கிறது. ‘பிள்ளைகளின் கிறிஸ்மஸ்’ மீது அதிகமதிகமாக உலகியல் சார்ந்த முக்கியத்துவத்தையே அளித்திருக்கிறார்கள்.”
[பக்கம் 15-ன் பெட்டி/படம்]
கிறிஸ்மஸ் பசுமை
கிறிஸ்மஸ் அலங்காரங்களில் பிரபலமாக இருப்பது “பட்டுப்போகும் காலத்தில் கனிகொடுக்கும் மந்திர செடிகள்” என்பதாக வருணிக்கப்படும் முள் இலைகளையும் பசிய சிறு மலர்களையும் சிவப்பு பழங்களையும் உடைய இலையுதிர்க்காத புதர்செடி, (holly) பளபளப்பான திண்பச்சை உதிரா இலைகளையுடைய படர்கொடி வகை (ivy) மற்றும் புல்லுருவியுமாகும். (mistletoe) ஆனால் ஏன் இந்தக் குறிப்பிட்ட பசுமையானவை மாத்திரம்? சிவப்புப் பழங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தையும் அதன் முள் இலைகள் பொந்தியு பிலாத்துவின் போர்சேவகர்கள் இயேசுவின் தலை மீது இகழ்சியோடு வைத்த “முள்ளுகளால் பின்னிய கிரீடத்தை” பிரதிநிதித்துவம் செய்வதாக சிலர் நம்பியபோதிலும், புறமதஸ்தவர்கள், பளபளப்பான இலைகளையும் பழங்களையும் நித்திய ஜீவனுக்கு ஓர் ஆண்பாலுக்குரிய அடையாளமாகக் கருதினர். (மத்தேயு 27:29) பளபளப்பான திண்பச்சை உதிரா இலைகளையுடைய படர் கொடியை, சாவாமைக்கு பெண்பாலுக்குரிய உயிர்ச் சின்னமாகக் கருதினர். முள் இலைகளையும் பசிய சிறு மலர்களையும் சிவப்புப் பழங்களையுமுடைய இலையுதிர்க்காத புதர்ச்செடியும் பளபளப்பான திண்பச்சை உதிரா இலைகளையுடைய படர்செடியும் சேர்ந்து அவர்களுடைய கருவளச் சின்னமானது. புல்லுருவியின் புறமதத் தொடர்புகள் இன்னும் அத்தனை பலமானதாக இருப்பதால், பிரிட்டனின் பழக்கவழக்கங்களும் சமயசடங்குகளும் (The Customs and Ceremonies of Britain) புத்தகம் பின்வருமாறு சொல்லுகிறது: “யார்க் மினிஸ்டரில் தவிர சர்ச்சுக்கு அழகு செய்யும் எந்த ஒரு நபரும் அதைச் சகித்துக்கொள்ளமாட்டார்.” எல்லாப் பசுமையானவைகளிலும் அதிக பிரபலமானது கிறிஸ்மஸ் மரமாகும். இது ஜெர்மன் பாரம்பரியங்களில் நீண்டகாலமாக சிறப்பித்துக்காட்டப்பட்டிருந்தது. விக்டோரியா அரசியின் கணவரான இளவரசன் ஆல்பர்டினால் பிரிட்டனில் மக்கள் விரும்பும்படிச் செய்யப்பட்டது. இது குடும்பங்களில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின்போது முக்கிய கவனத்துக்குரியதானது. 1947 முதற்கொண்டு நார்வேயின் தலைநகரம் ஆஸ்லோ, லண்டனின் ட்ரஃப்பால்கர் ஸ்குயரில் காட்சிக்கு வைப்பதற்காக பரிசாக கிறிஸ்மஸ் மரத்தை அனுப்பி வைத்தது.
[பக்கம் 16-ன் படம்]
பிரிட்டனுக்கு நார்வேயின் வருடாந்தர கிறிஸ்மஸ் மரம் பரிசு