உங்கள் உணவு—உங்களுக்கே விஷமாகுமா?
“உங்கள் இதயத் தமனியில் கிட்டத்தட்ட 95% அடைப்பு ஏற்பட்டிருக்கிறது . . . எந்த நிமிடத்திலும் மாரடைப்பு ஏற்படும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.”
இதய நோய் மருத்துவர் இந்த வார்த்தைகளைத் தன்னிடம் சொன்னபோது முப்பத்திரண்டு வயதான ஜோ என்பவரால் நம்பவே முடியவில்லை; அவருக்கு ஏன் நெஞ்சுவலி ஏற்படுகிறதென்பதைக் கண்டுபிடிக்க அந்த டாக்டர் அவரை பரிசோதனை செய்துகொண்டிருந்தார். இதய நோயால் சாகயிருப்போரில் கிட்டத்தட்ட பாதிபேர், தங்களுக்கு அப்படிப்பட்ட நோய் இருப்பதையே அறியாதவர்களாக இருக்கின்றனர்.
ஜோவிற்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டது? அவர் இப்படிப் புலம்புகிறார்: ‘32 வருடங்களாக நான் அமெரிக்கர்களுக்கே உரித்தான “இறைச்சியும் பாலும் நிறைந்த” உணவையே சாப்பிட்டேன். எப்படியோ, அமெரிக்க உணவுப் பழக்கம் என் உடலுக்கு ஆபத்தென்பதை அசட்டை செய்துவிட்டேன்.’
உங்கள் உணவும் இதய நோயும்
ஜோ சாப்பிட்ட உணவில் என்ன தவறு இருந்தது? அடிப்படையில் பார்த்தால், அதில் கொலஸ்ட்ராலும் கொழுப்புச்சத்தும், முக்கியமாக தெவிட்டிய கொழுப்பும் (saturated fat) அளவுக்கதிகமாக இருந்தன. இளைஞனாய் இருந்த சமயம் முதற்கொண்டே, ஜோ, தான் சாப்பிட்ட ஒவ்வொரு வாய் உணவினாலும் இதயத் தமனி நோயால் பாதிக்கப்படும் ஆபத்தை அதிகரித்துக்கொண்டார். உண்மையில், அதிக கொழுப்புச்சத்து நிறைந்த ஆகாரம், ஐக்கிய மாகாணங்களில் ஏற்படும் மரணங்களுக்கான பத்து முக்கிய காரணங்களில் ஐந்து காரணங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் முதலில் காணப்படுவது இதயத் தமனி நோயே.
40-க்கும் 49-க்கும் இடைப்பட்ட வயதினரில் ஏழு நாடுகளிலுள்ள சுமார் 12,000 ஆண்களைக்கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, உணவிற்கும் இதய நோயிற்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. மிதமிஞ்சிய வித்தியாசங்கள் முக்கியமாக வெளிப்படுகின்றன. 20 சதவீத கலோரிகளை தெவிட்டிய கொழுப்பாக உட்கொள்ளும் பின்லாந்தைச் சேர்ந்த ஆண்களுக்கு உயர்ந்தளவு இரத்த-கொலஸ்ட்ரால் காணப்படுவதாகவும், வெறுமனே 5 சதவீத கலோரிகளையே தெவிட்டிய கொழுப்பாக உட்கொள்ளும் ஜப்பானிய ஆண்களுக்கு குறைந்தளவு இரத்த-கொலஸ்ட்ரால் காணப்படுவதாகவும் அந்த ஆய்வு காட்டியது. ஜப்பானிய ஆண்களைவிட பின்லாந்தைச் சேர்ந்த ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் ஆறு மடங்கு அதிகமாக இருந்தது!
ஆனாலும், இதயத் தமனி நோய் இனியும் ஜப்பானில் அரிதாக இல்லை. கடந்த பல வருடங்களில், மேற்கத்திய-பாணி விரைவு-உணவு வகைகள் அங்கே பிரபலமாகியிருப்பதால், மாமிச கொழுப்புச்சத்தை உட்கொள்வது 800 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கிறது. இப்போது, ஜப்பானிய சிறுவர்களுக்கு, அதே வயதைச் சேர்ந்த அமெரிக்க சிறுவர்களைக் காட்டிலும் அதிக இரத்த-கொலஸ்ட்ரால் இருக்கிறது! தெளிவாகவே, உணவிலுள்ள கொழுப்புச்சத்தும் கொலஸ்ட்ராலும் உயிருக்கு ஆபத்தை, முக்கியமாக இதய நோயை விளைவிக்கின்றன.
கொலஸ்ட்ரால் வகிக்கும் பங்கு
கொலஸ்ட்ரால் என்பது உயிர்வாழ அத்தியாவசியமான வெண்மையான, மெழுகுபோன்ற பொருளாகும். எல்லா மனித மற்றும் மிருக செல்களில் இது காணப்படுகிறது. நமது ஈரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது; நாம் உண்ணும் உணவிலும் அது வெவ்வேறு அளவுகளில் காணப்படுகிறது. லிப்போ புரதங்கள் என்ற மாலிக்யூல்களில் இரத்தம், கொலஸ்ட்ராலை செல்களுக்கு எடுத்துச்செல்கிறது; லிப்போ புரதங்களில் கொலஸ்ட்ராலும், கொழுப்புகளும், புரதங்களும் இருக்கின்றன. பெரும்பாலான இரத்த-கொலஸ்ட்ராலை எடுத்துச்செல்லும் இருவகையான லிப்போ புரதங்கள், குறை-அடர்த்தி லிப்போ புரதங்கள் (LDL) மற்றும் உயர்-அடர்த்தி லிப்போ புரதங்கள் (HDL) ஆகும்.
LDL-களில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது. அவை இரத்தவோட்டத்தில் செல்லுகையில், செல்லின் சுவரிலுள்ள LDL உள்வாங்கிகளின் மூலம் செல்களுக்குள் நுழைகின்றன; அங்கே, அந்த செல் அவற்றை சிதைத்து உபயோகப்படுத்திக்கொள்கிறது. உடலிலுள்ள பெரும்பாலான செல்களில் அப்படிப்பட்ட உள்வாங்கிகள் இருக்கின்றன; அவை சில LDL-களை உள்ளே எடுத்துக்கொள்கின்றன. ஆனால் இரத்தவோட்டத்திலிருந்து LDL-களை LDL உள்வாங்கிகள் எடுத்துக்கொள்ளும் செயலில் 70 சதவீதம் ஈரலில் நடைபெறும்படியே அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மறுபட்சத்தில், HDL-கள் கொலஸ்ட்ரால்-தாகமுள்ள மாலிக்யூல்கள். இரத்தவோட்டத்தில் செல்கையில், அளவுக்கதிகமான கொலஸ்ட்ராலை அவை உறிஞ்சிக்கொண்டு ஈரலுக்கு எடுத்துச்செல்கின்றன. அங்கு கொலஸ்ட்ரால் எரிக்கப்பட்டு உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு தேவையான கொலஸ்ட்ராலை பயன்படுத்திக்கொண்டு மற்றதை வெளியேற்றும்படி நமது உடல் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இரத்தத்தில் அளவுக்கதிகமான LDL இருக்கும்போது பிரச்சினை ஏற்படுகிறது. இது தமனி சுவர்கள் தடிப்பாகும் சாத்தியத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு தடிப்பு அதிகரிக்கையில், தமனிகள் மெல்லியதாவதால் ஆக்ஸிஜன் எடுத்துச்செல்லும் இரத்தம் அவற்றினுள் குறைந்தளவே செல்லமுடியும். இதுதான் பெருந்தமனித் தடிப்பு என அழைக்கப்படுகிறது. இது மெதுவாகவும் அறிகுறியின்றியும் தொடர்ந்து நடைபெறும்; அதன் அறிகுறிகள் தெரிவதற்கு பல பத்தாண்டுகள் எடுக்கும். ஒரு அறிகுறி, ஜோ அனுபவித்தது போன்ற இதயக்குத்தல் அல்லது இதயவலி ஆகும்.
இரத்தக் கட்டியினால் இதயத் தமனி முழுமையாக அடைபடும்போது, அந்தத் தமனிமூலம் இரத்தத்தைப் பெறும் இதயப் பகுதி செத்துப்போகிறது. அதன் விளைவுதான், திடீரென்று தோன்றி அடிக்கடி உயிரைப் பறிக்கும் இதயத்திசு இறப்பு, அல்லது மாரடைப்பு என பொதுவாக அறியப்பட்டிருப்பதாகும். இதயத் தமனி பகுதியளவே அடைபட்டிருந்தாலும், இதயத் திசுவின் இறப்பிற்கு அது வழிநடத்தலாம்; அது ஒருவேளை குறிப்பிடத்தக்க உடல் அசௌகரியத்தை உண்டாக்காமலேகூட இருந்திருக்கலாம். உடலின் மற்ற பகுதிகளிலுள்ள தமனிகள் அடைபடுவது, ஸ்ட்ரோக்குகள், கால்கள் அழுகல், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றையும்கூட உண்டாக்கலாம்.
ஆக, LDL கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் HDL நல்ல கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுவதில் ஆச்சரியமல்லவே. LDL அதிகமாயிருந்தாலோ HDL குறைவாயிருந்தாலோ இதயநோய் ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. a இதயக்குத்தல் போன்ற வெளிப்படையான அறிகுறிகள் தோன்றுவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே, ஓர் எளிய இரத்த பரிசோதனை, வரவிருக்கும் ஆபத்தைக் குறித்து சொல்லிவிடலாம். ஆகவே உங்களது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காதபடி பார்த்துக்கொள்வது முக்கியம். நீங்கள் சாப்பிடும் உணவு எவ்வாறு இதைக் கட்டுப்படுத்துமென்பதை இப்போது நாம் பார்ப்போமாக.
இரத்த-கொலஸ்ட்ராலும் உணவும்
மாமிசப் பண்டங்களில் கொலஸ்ட்ரால் இயற்கையாகவே இருக்கிறது. கறி, முட்டைகள், மீன், கோழி, பால் பண்டங்கள் ஆகிய அனைத்திலும் கொலஸ்ட்ரால் இருக்கிறது. மறுபட்சத்தில், தாவர உணவில் கொலஸ்ட்ரால் இல்லை.
தேவைப்படும் எல்லா கொலஸ்ட்ராலையும் உடலே உற்பத்தி செய்துகொள்கிறது; ஆகவே உணவின்மூலம் உட்கொள்ளப்படும் கொலஸ்ட்ரால் மிஞ்சியது. உணவில் கிடைக்கும் கொலஸ்ட்ராலின் பெரும் பகுதி ஈரலுக்கு சென்றுவிடுகிறது. சாதாரணமாக, இப்படிப்பட்ட உணவு-கொலஸ்ட்ரால் ஈரலுக்குள் நுழையும்போது, ஈரல் அதை ஜீரணித்துக்கொண்டு, அதன் கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துக்கொள்கிறது. இப்படியாக இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் மொத்த அளவு எப்போதும் சீராக வைக்கப்படுகிறது.
ஆனாலும், உணவில் அளவுக்கதிகமாக கொலஸ்ட்ரால் இருக்கையில் ஈரலால் அதை சீக்கிரத்தில் ஜீரணிக்க முடியாத நிலை ஏற்படும்போது என்ன? கொலஸ்ட்ரால் தமனி சுவரின் செல்களுக்குள் நேரடியாகவே நுழைந்துவிடும் சாத்தியம் அதிகமாகிறது. அது அவ்வாறு செய்கையில்தான் பெருந்தமனித் தடிப்பு ஏற்படுகிறது. உணவின்மூலம் உட்கொள்ளப்படும் கொலஸ்ட்ரால் அளவைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உடல் அதே அளவில் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும்போது நிலைமை படுமோசமாகிறது. ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு இந்நிலை ஏற்படுகிறது.
ஆகவே, உணவின்மூலம் உட்கொள்ளப்படும் கொலஸ்ட்ராலை குறைப்பது ஞானமானது. ஆனால் நமது உணவிலுள்ள மற்றொரு பொருள் இரத்த-கொலஸ்ட்ரால் அளவை அதிகளவு பாதிக்கிறது—அதுதான் தெவிட்டிய கொழுப்புகள்.
கொழுப்புச்சத்துகளும் கொலஸ்ட்ராலும்
கொழுப்புச்சத்துகளை இரு வகையாக பிரிக்கலாம்: தெவிட்டியவை, தெவிட்டாதவை. தெவிட்டாத கொழுப்புகள் (unsaturated fat), மோனோ அல்லது பாலி என இரு வகைப்படும். தெவிட்டிய கொழுப்பைக் காட்டிலும் தெவிட்டாத கொழுப்பு உங்கள் உடலுக்கு நல்லது, ஏனெனில் தெவிட்டிய கொழுப்பை உட்கொள்வது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. தெவிட்டிய கொழுப்பு இதை இரு விதத்தில் செய்கிறது: அது ஈரலில் அதிக கொலஸ்ட்ரால் உண்டாகும்படி செய்கிறது, மேலும் ஈரல் செல்களிலுள்ள LDL உள்வாங்கிகளை அது செயலிழக்கச் செய்கிறது; இவ்வாறு இரத்தத்திலிருந்து LDL அகற்றப்படும் வேகம் குறைகிறது.
தெவிட்டிய கொழுப்புகள், மிருகங்களிலிருந்து பெறும் பொருட்களான வெண்ணெய், முட்டைக் கரு, பன்றிக்கொழுப்பு, பால், ஐஸ்க்ரீம், கறி, கோழி போன்ற உணவுகளில் முக்கியமாக காணப்படுகின்றன. அவை சாக்லேட், தேங்காய், தேங்காய் எண்ணெய், டால்டா, பாமாயில் போன்றவற்றிலும் இருக்கின்றன. தெவிட்டிய கொழுப்புகள் அறை சீதோஷ்ண நிலையில் கெட்டியாக இருக்கின்றன.
மறுபட்சத்தில் தெவிட்டாத கொழுப்புகள் அறை சீதோஷ்ண நிலையில் திரவமாக இருக்கின்றன. தெவிட்டாத கொழுப்புகளுள்ள உணவுகளை, தெவிட்டிய கொழுப்புகளுள்ள உணவுகளுக்கு பதிலாக உண்டால் உங்களது இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும். b சோள எண்ணெய்யிலும் சூரியகாந்தி-விதையின் எண்ணெய்யிலும் காணப்படும் பாலி வகையைச் சேர்ந்த தெவிட்டாத கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ராலையும் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றன; ஆனால் ஆலிவ் எண்ணெய்யிலும் கனோலா எண்ணெய்யிலும் காணப்படும் மோனோ வகையைச் சேர்ந்த தெவிட்டாத கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ராலை பாதிக்காமல் வெறுமனே கெட்ட கொலஸ்ட்ராலை மட்டும்தான் குறைக்கின்றன.
கொழுப்புகள், நாம் உட்கொள்ளும் உணவில் முக்கியமான பங்குவகிக்கின்றன. உதாரணத்திற்கு அவை இல்லையென்றால், வைட்டமின் ஏ, டி, ஈ, கே போன்றவற்றை உடல் ஈர்த்துக்கொள்ள முடியாது. எனினும், உடலுக்கு மிகக் குறைந்தளவு கொழுப்பே தேவைப்படுகிறது. காய்கறிகள், பயறு, தானியங்கள், பழவகைகள் போன்றவற்றை சாப்பிடுவதன்மூலமே அந்தளவைப் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே தெவிட்டிய கொழுப்புகளை உட்கொள்வதைக் குறைப்பது, தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைப்பதைத் தடைசெய்வதில்லை.
ஏன் கொழுப்புச்சத்துக்களையும் கொலஸ்ட்ராலையும் குறைக்கவேண்டும்
கொழுப்பும் கொலஸ்ட்ராலும் நிறைந்த உணவு எப்போதுமே இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரிக்குமா? அவசியமாக இல்லை. ஆரம்பக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த தாமஸ் என்பவர், விழித்தெழு!-விற்கு பேட்டியளித்த பிற்பாடு இரத்த பரிசோதனை செய்துகொள்ள தீர்மானித்தார். அவரது கொலஸ்ட்ரால் சரியான அளவிலிருந்ததாக ரிஸல்ட் காண்பித்தது. அவரது ஈரல், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறன் பெற்றிருந்தது.
ஆனாலும் இது, தாமஸுக்கு எந்த விதமான ஆபத்தும் நேரிடாது என அர்த்தப்படுத்துவதில்லை. உணவில் உட்கொள்ளப்படும் கொலஸ்ட்ரால், இரத்த-கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமலேகூட இதயத் தமனி நோயை உண்டாக்கலாம் என சமீப ஆராய்ச்சிகள் காண்பித்திருக்கின்றன. “குறைந்த இரத்த-கொலஸ்ட்ராலுள்ள நபர்களுக்கும்கூட, கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் இதய நோய் ஏற்படலாம்” என நார்த்வெஸ்டர்ன் யூனிவர்ஸிட்டியைச் சேர்ந்த டாக்டர் ஜெரமையா ஸ்டாம்லர் சொல்கிறார். “ஆகவேதான் தங்களது இரத்தத்தில் எந்தளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் குறைந்தளவு கொலஸ்ட்ரால் உள்ளவற்றையே உண்பதற்கு மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.”
அதுமட்டுமல்லாமல், உணவில் எந்தளவு கொழுப்பு இருக்கிறதென்பதும் உட்பட்டிருக்கிறது. இரத்தத்தில் அளவுக்கதிகமான கொழுப்பு இருக்குமானால், அது உணவில் தெவிட்டிய வடிவிலிருந்தாலும்சரி தெவிட்டாத வடிவிலிருந்தாலும்சரி, சிகப்பு இரத்த அணுக்களை ஒன்றுசேர்த்துவிடுகிறது. இப்படிப்பட்ட உறைந்த இரத்தம், குறுகிய இரத்த குழாய்கள் வழியே செல்வதில்லை, ஆகவே தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் திசுக்களுக்கு கிடைப்பதில்லை. தமனிகளினூடே செல்லும் ஒன்றுசேர்ந்த செல்கள், தமனி சுவர்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடைசெய்து, மேற்புற சேதத்தை விளைவிக்கின்றன; இங்குதான் தடிப்பு எளிதில் ஏற்பட ஆரம்பிக்கலாம். ஆனால் அளவுக்கதிகமான கொழுப்புச்சத்துமிக்க உணவை சாப்பிடுவதில் மற்றொரு ஆபத்து இருக்கிறது.
புற்றுநோயும் உணவும்
“எல்லா கொழுப்புகளும்—தெவிட்டியதும் தெவிட்டாததும்—ஏதோவொரு விதமான புற்றுநோய் செல்கள் வளர்வதில் உட்பட்டிருக்கின்றன” என டாக்டர் ஜான் ஏ. மக்டூகல் சொல்கிறார். உலகம் முழுவதும் காணப்படும் மலக்குடல் புற்றுநோயையும் மார்பக புற்றுநோயையும் பற்றிய ஓர் ஆராய்ச்சி, கொழுப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் மேற்கத்திய நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் இடையே உள்ள பெரும் வித்தியாசத்தை காண்பித்தது. உதாரணத்திற்கு, ஐக்கிய மாகாணங்களில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே மிக அதிகமாக காணப்படும் புற்றுநோய்களில் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாக இருக்கிறது; பெண்களை மாத்திரம் எடுத்துக்கொண்டால், மார்பக புற்றுநோயே மிக அதிகமாக காணப்படுகிறது.
அமெரிக்க புற்றுநோய் கழகத்தின்படி, புற்றுநோய் பரவலாக காணப்படும் ஒரு நாட்டிற்கு தொகுதிகளாக புதிதாய் குடியேறும் மக்கள், இறுதியில் அதே அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; இது, அந்தப் புதிய வாழ்க்கை பாணியையும் உணவையும் கடைப்பிடிக்க எவ்வளவு காலம் பிடிக்கிறதென்பதைச் சார்ந்திருக்கிறது. அந்தப் புற்றுநோய் கழகத்தின் சமையற்கலைப் புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஹவாயிற்கு குடியேறும் ஜப்பானியர்கள், மேற்கத்திய நாடுகளில் காணப்படுவதுபோலவே மலக்குடல் மற்றும் மார்பக புற்றுநோயால் அதிகமாகவும் வயிற்றுப் புற்றுநோயால் குறைவாகவும் பாதிக்கப்படுகின்றனர்; இது ஜப்பானில் காணப்படுவதற்கு எதிர்மாறாக இருக்கிறது.” தெளிவாகவே, புற்றுநோயிற்கும் உணவுக்கும் சம்பந்தமிருக்கிறது.
மொத்த கொழுப்புச்சத்து, தெவிட்டிய கொழுப்பு, கொலஸ்ட்ரால், கலோரிகள் ஆகியவற்றால் உங்கள் உணவு நிறைந்திருந்தால், நீங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. நல்ல உணவுப் பழக்கம், நல்ல ஆரோக்கியத்தை அளித்து, மோசமான உணவுப் பழக்கத்தால் உண்டாயிருக்கும் தீய விளைவுகளைக்கூட நீக்கிவிடலாம். 40,000 டாலரோ அதற்கும் அதிகமோ செலவாகும் வேதனைமிக்க பைபாஸ் சர்ஜரியை (bypass surgery) நினைத்துப் பார்க்கும்போது இது எவ்வளவோ மேல்.
என்ன சாப்பிடுகிறீர்களென்பதை ஞானமாக தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களால் இளைக்க முடியும், உங்கள் உணர்வை மேம்படுத்த முடியும், சில வியாதிகளை தவிர்க்கவோ குணப்படுத்தவோ உங்களுக்கு நீங்களே உதவ முடியும். இதன்பேரில் அடுத்த கட்டுரை ஆலோசனை அளிக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a கொலஸ்ட்ரால், ஒரு டெசிலிட்டருக்கு இவ்வளவு மில்லிகிராம் என்ற கணக்கில் அளவிடப்படுகிறது. LDL, HDL, இரத்தத்திலுள்ள மற்ற லிப்போ புரதங்களின் கொலஸ்ட்ரால்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்த மொத்த கொலஸ்ட்ராலின் ஏற்கத்தக்க அளவு, ஒவ்வொரு டெசிலிட்டருக்கும் 200-க்கும் குறைவான மில்லிகிராம் ஆகும். HDL அளவு, ஒவ்வொரு டெசிலிட்டருக்கும் 45 மில்லிகிராமாக அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் நல்லது.
b அமெரிக்கர்களுக்கான 1995-ன் உணவு வழிகாட்டி, தினசரி உட்கொள்ளப்படும் கலோரிகளில் 30 சதவீதம் மாத்திரமே மொத்தமான கொழுப்பிலிருந்து பெறப்பட வேண்டும் என்றும், அவற்றில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தெவிட்டிய கொழுப்பிலிருந்து பெறப்பட வேண்டுமென்றும் பரிந்துரைக்கிறது. தெவிட்டிய கொழுப்பிலிருந்து பெறப்படும் கலோரி வெறுமனே ஒரு சதவீதத்திற்கு குறைந்தாலே, இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் ஒவ்வொரு டெசிலிட்டருக்கும் 3 மில்லிகிராம் என்ற அளவில் குறையும்.
[பக்கம் 8-ன் படம்]
இதயத் தமனிகளின் குறுக்குவெட்டுத் தோற்றம்: (1) சிறிதும் அடைப்படாதது, (2) பகுதியளவு அடைப்பட்டிருப்பது, (3) ஏறக்குறைய முழுமையாகவே அடைப்பட்டிருப்பது