ஜீப்னி பிலிப்பைன்ஸின் மக்கள் ஊர்தி
பிலிப்பைன்ஸ் விழித்தெழு! நிருபர்
பிலிப்பைன்ஸிலுள்ள மனிலாவின் தெருக்களில் எடுப்பான வண்ணங்கள், பறக்கும் கொடிகள் இன்னும் கண்கவரும் அணிகளின் திரள் ஆகியவற்றோடுகூடிய ஜீப்னி ஒரு வழக்கமான காட்சியாகும். உலகெங்கும் தேசங்கள் போரடிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னையாகிய பொது மக்கள் போக்குவரத்துக்கு இது ஒரு தனித்தன்மை வாய்ந்த பிலிப்பீனோ தீர்வாகும். இருப்பினும், பிலிப்பைன்ஸுக்கு ஒருபோது சென்றிராத எவருக்கும் “ஜீப்னி” என்னும் சொல்லே விசித்திரமாயிருக்கிறது. அதிகாரிகள் அது “ஜீப்” மற்றும் “ஜிட்னி” (சிறிய பஸ்) எனும் சொற்களின் இணைவு என்கிறார்கள். இந்தக் கவர்ந்திழுக்கும் வாகனத்திற்கு உங்களை அறிமுகப்படுத்த எங்களை அனுமதியுங்கள்.
‘நகர பொது மக்கள் போக்குவரத்து’ எனும் அவரது புத்தகத்தில் ஜார்ஜ் M. ஸ்மெர்க், பொதுமக்கள் போக்குவரத்து முறைகளிலுள்ள ஒரு வழக்கமான பிரச்னையைக் குறிப்பிடுகிறார்: “பொதுமக்கள் போக்குவரத்து முறை மாற்றப்படமுடியாத ஒன்று என அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது, பொதுவாக ஒரு போக்குவரத்துத் தடம் நாளடைவில் மக்கள் பெருக்கத்தின் மாறும் தேவைகளுக்கேற்ப மாற்றப்படமுடியாதது.” இருப்பினும், இது ஜீப்னியைப் பற்றியதில் மெய்யல்ல. ஜீப்னி தன்னை மாற்றப்படக்கூடியதாக, சிக்கனமானதாக, எளிதாக செயல்படுகின்றதாகக் காண்பிக்கிறது. நாம் ஒரு ஜீப்னியில் பயணம் செய்து காரணத்தைப் பார்ப்போம்.
ஒரு ஜீப்னியில் பயணம்
வெப்பமண்டல உஷ்ணத்தில் மனிலாவின் முக்கிய பொதுவழிகள் ஒன்றின் அருகே நீங்கள் நிற்கும்போது, இரு பக்கங்களிலும் ஓசையுடன் பாய்ந்து செல்லும் ஜீப்னிகளின் ஆறு போன்ற தோற்றத்தால் நீங்கள் திணறடிக்கப்பட்டவர்களாக உணரலாம். ஒரு ராணுவ பாணி ஜீப்பை ஒத்த, ஆனால் அதில் பயணிகளுக்கு இடவசதி அளிக்க நன்கு நீளமாக்கப்பட்ட அவை ஒவ்வொன்றும் வானவில் வண்ணங்களுடன் எல்லாப் பக்கங்களிலும் சித்திரங்களும், வரைபடங்களும், தீட்டப்பட்டனவையாக இருக்கின்றன. இரு பக்கங்களிலும், பின்னுமாகத் தொங்கும் சேற்றுத் தடுப்பிதழ்கள், “தலைமைக் கப்பலோட்டி” அல்லது “ஜீப்னி அரசன்” போன்ற சுலோகங்களைக் கொண்டிருக்கலாம்.
பெரும்பாலான ஜீப்னிகள் பிற பளபளக்கும் இணைதுணுக்குகளாலும் அணிசெய்யப்பட்டிருக்கின்றன—காற்றாடிகள், க்ரோம் பூசப்பட்ட குதிரைகள், கொடிகள், நீண்ட வானிலைக் கொடிகள் (அந்த ஜீப்னி ஒரு வானொலியைக் கொண்டிராவிடினும்)—அவை யாவுமே பயணிகளைக் கவர்ந்திட அமைக்கப்பட்டவை. நீங்கள் ஒருவேளை 12, 14 அல்லது இன்னுமதிகக் கண்ணாடிகளை அதன் முகட்டில் கொண்ட ஒரு ஜீப்னியைப் பார்க்கலாம் (அதுவும் எவ்வித நடைமுறை பயனுக்கென தோன்றவில்லை) தான் எங்கே சென்றுகொண்டிருக்கிறார் என்பதை அவ்வலங்கார பின்னலினூடே ஓட்டுநர் பார்க்கமுடியுமா என நீங்கள் வியப்படையலாம். ஆனால் அவர் சமாளித்துவிடுவதாகத் தோன்றுகிறது.
நீங்கள் செல்லுமிடத்திற்கு எந்த ஜீப்னி உங்களை எடுத்துச் செல்லும் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அவற்றின் செல்வழிகளைக் காட்டும் அறிவிப்புப் பலகைகளை முன்னும் பக்கங்களிலும் அவை ஏந்திச் செல்கின்றன. அவ்விரையும் ஜீப்னிகளை உங்களுக்காக எப்படி நிறுத்துவீர்கள்? அது கடினமல்ல. நீங்கள் அவரது ஜீப்னியில் பயணம் செய்ய சற்றே ஆர்வமுள்ளவர் போல் தோன்றினால், ஒரு சராசரி ஓட்டுநர் நின்று, உங்களை ஏற்றிக்கொள்ள மிகவும் விரும்புவார். நீங்கள் அவருக்கு உங்கள் கையால் சைகை செய்யலாம். அல்லது அவர் தனது ஒலிப்பானை ஒலிக்கச் செய்வதன் மூலம் உங்கள் கவனத்தைக் கவரலாம்—வெறுமென பாம்-பாம் என ஒலிக்கும் ஒலிப்பான் அல்ல, ஆனால் கவர்ச்சியான இனிய ராகம் எழுப்பும் ஒன்று.
இப்போது நாம் ஜீப்னியில் ஏறலாம். பின்னிருந்து நீங்கள் உட்புகும்போது, ஜீப்பினியின் இருபக்கமும் திண்டு போடப்பட்ட நீள் இருக்கைகளைக் கவனிக்கிறீர்கள். பயணிகள் நெருக்கமாக, சிறிய நடைவழியின் எதிர்புறங்களில் ஒருவரையொருவர் பார்க்கும்விதம் அவர்கள் முழங்கால்கள் தொட்டுவிடுமோ என்றபடி அமர்ந்திருக்கிறார்கள். கூரை அதிக தாழ்வாயிருப்பதால் நீங்கள் குனிந்து நுழைந்து ஒரு காலியிடத்திற்குச் சென்று அதில் அமர்கிறீர்கள். சுமைகளுடன் ஜனங்கள் ஏறும்போது, உங்கள் முன்னிருக்கும் குறுகிய நடைவழி பெட்டிகள், கோழிகள், பிள்ளைகள், அல்லது காய்க்கறிப் பைகளால் நிரம்பலாம். காற்றுக்காப்புத் தட்டியின் மேலுள்ள ஒரு நீண்ட கண்ணாடி, பின்னே போக்குவரத்தைக் கவனிக்கவும் யார் ஏறுகிறார்கள் அல்லது இறங்குகிறார்கள், யார் பயணத் தொகயை செலுத்தியிருக்கின்றனர் அல்லது செலுத்தவில்லை என்பதையும் ஓட்டுநர் பார்த்துக்கொள்ள வழி செய்கிறது.
உங்கள் பயணத் தொக எவ்வளவு? நாங்கள் ஏற்கெனவே, அது குறைவானது எனக் கூறினோம். மனிலாவில் 75 சென்டாவாஸ் (4¢, ஐ.மா.)-க்கு மட்டுமே நீங்கள் இரண்டரை மைல்களுக்குப் பயணம் செய்யலாம். அதினும் நீண்ட சவாரிகளுக்குப் பயணத் தொக படிப்படியாக அதிகரிக்கிறது. பல ஓட்டுநர்கள் “யார் பணம் கொடுக்கவில்லை என்பது கடவுளுக்குத் தெரியும்” (“God Knows Judas Not Pay)”a என்னும் வாசகத்தை எடுப்பாகத் தெரியும் வகையில் வைப்பதன் மூலம் பயணிகள் பயணத் தொகயைக் கொடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். கண்ணாடியின் மேல் அல்லது அதனருகில் ஓட்டுநரின் சொந்த வழிபாட்டு பீடம் மற்றும்/அல்லது நங்கையின் படம் இருக்கலாம்.
நீங்கள் இப்போது சாய்ந்து அமர்ந்து, எப்போது நீங்கள் இறங்க விரும்புகிறீர்களென ஓட்டுநருக்குச் சொல்ல நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதில் எப்போதும் பார்வையை வைத்துக்கொண்டே உங்கள் பயணத்தை அனுபவிக்கலாம். ஓட்டுநர் இன்னொரு ஜீப்னியை ஒரு சில அங்குலங்களில் தவறவிட்டதையே கவனிக்காதவர் போல, நெரிசலான போக்குவரத்தினூடே வளைத்து வளைத்து ஓட்ட, அவ்வாகனம் எவ்வளவு விரைவாக நகருகிறது என நீங்கள் வியப்படையலாம்.
ஜீப்னி எங்கிருந்து வந்தது?
ஸால் லாக்ஹார்ட், பிலிப்பைன்ஸுக்கு முழுமையான வழிகாட்டி என்ற பிரதியில் இதற்குப் பதிலளிக்கிறார்: “இரண்டாம் உலகப் போரில் மிஞ்சியிருந்த தேவைக்கதிகமான ஜீப்களில் தன் தோற்றத்தை ஜீப்னி கொண்டுள்ளது; அவை பயணிகளை சுமந்து செல்லும் வாகனங்களாக மாற்றப்பட்டன.” ஆரம்ப ஜீப்கள் மிகச் சிறியனவாயிருந்தன. அப்போதிருந்து, ஜீப்னிகள் நீளமாகவும், அதிக கொள்திறமுடையதாகவும், இப்போது 17 பயணிகள் வரை ஏற்றிக் கொள்ளும் வகையிலும் உண்டுபண்ணப்பட்டுவருகின்றன.
மோரிஷியோ தெ கெயா 1948-ல் ஜீப்னிகளை ஓட்ட ஆரம்பித்தார். ஆனால் 1979-ல் தனது நேர அட்டவணையை பாதிநாள் மட்டுமே வேலை செய்ய மாற்றினார். இவ்வாறு அவர் தன் குடும்பத்தினர் ஏழுபேரைக் கவனித்துவந்தார்; மற்றும் பிற்பகல்களையும் ஞாயிற்றுக்கிழமைகளையும் ஒரு முழுநேர ஊழியராக வேலை செய்வதில் கழித்தார். பிற ஓட்டுநர்கள் ராக் அல்லது சினிமா நட்சத்திரங்களின் படங்களைத் தங்கள் ஜீப்னிகளில் மாட்டியிருக்கின்றனர். ஆனால் மொரிஷியோ சொல்கிறார்: “பயணிகள் வாசிக்கும் வகையில் பைபிள் வசனங்களை என் ஜீப்னியின் உட்கூரையில் ஒட்டிவைத்தேன்.”
பயணிகள் எவ்வாறு பிரதிபலித்தனர்? அவர் கூறுகிறார்: “சிலர் என் மதம் என்னவெனக் கேட்டனர். அதனால் நான் அவர்களுக்குப் பிரசங்கிக்க முடிந்தது; அவர்களும் நன்மையடைந்தனர். என் ஜீப்னியின் அநேக பயணிகள் தாங்கள் வாசித்தவற்றைக் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறினர், ‘உங்கள் ஜீப்னி உண்மையிலேயே அருமையாயிருக்கிறது. எல்லா ஜீப்னிகளும் இவ்வாறிருந்தால் நன்றாயிருக்கும். அற்பத்தனமான எதையும் ஒட்டாமல், சிந்திக்க ஒன்றைக் கொண்டிருக்கும் வகையில் தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் அங்கே வைத்திருந்தால் நன்றாயிருக்கும்.’”
ஜீப்னியை செயல்திறமுள்ள, நடைமுறையான மக்கள் போக்குவரத்து முறையாக்குவது எது என உங்களால் காண முடிகிறதா? சிலர் அதற்கிசையாது, தேவையற்ற நெருக்கடி, தூய்மைக்கேடு ஆகியவற்றை முக்கியமாக மனிலாவில் ஏற்படுத்துவதாக ஜீப்னியைக் குற்றஞ்சாட்டலாம். சிலர், வேறு பொதுபோக்குவரத்து முறைகள் அவற்றை மாற்றீடு செய்வதைப் பார்க்கவும் விரும்புகின்றனர். இவ்வாறு, மனிலாவின் புலட்டின் டுடே என்ற பத்திரிகையில் “ஜீப் ஒழிப்பு ஆய்வின் கீழ்” எனும் தலைப்பிட்ட ஒரு கட்டுரை தோன்றியது. எனினும் அப்படிப்பட்ட காரியம் சமீப எதிர்காலத்தில் நிகழ்வது சாத்தியமற்றது. இலட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட போக்குவரத்திற்காக மட்டுமின்றி, தங்கள் பிழைப்புக்காகவும் ஜீப்னியை நம்பியிருக்கிறார்கள். (g89 11/22)
[அடிக்குறிப்புகள்]
a இது ஓர் ஆங்கிலம்/டேகலாக் சொல்திரிபு. அவ்வட்டார மொழியாகிய டேகலாகில் “Judas” என்பது ஆங்கில சொற்களாகிய “who does” போன்றே உச்சரிக்கப்படுகிறது.