உலகத்தைக் கவனித்தல்
கங்கை தூய்மைக்கேடு
இந்தியாவிலுள்ள 1,500 மைல் நீளமான கங்கை நதி இந்துக்களுக்கு மிகப் புனிதமான நதியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பிணங்கள் அதன் கரை நெடுகிலும் மரக்கட்டைகளில் எழுப்பப்பட்ட சிதைகளில் எரிக்கப்பட்டு, அந்தச் சாம்பல் சடங்குமுறைப்படி நதியில் கலக்கப்படுகிறது. ஆனால், விறகு, பணம் ஆகியவற்றின் பற்றாக்குறையால் பகுதியாக எரிந்த ஆயிரக்கணக்கான உடல்கள் இப்போது அதன் தண்ணீர்களில் போடப்பட்டுவருகின்றன. இந்த உடல்களும், இவற்றுடன் ஏராளமான செத்த விலங்குகளின் உடல்களும் ஒரு கவலைக்கிடமான சுகாதார அபாயத்தை ஏற்படுத்துகிறது. லண்டன் தி டைம்ஸ் பத்திரிகைக்கு தில்லியிலுள்ள நிருபர் எழுதுகிறார்: “இந்து யாத்திரிகர் மாசுபட்ட புனித நீரைத் தெளித்துக்கொண்டும் அதில் மூழ்கி எழுவதுமாயிருக்க, அவர்கள் பக்கமாய் பிணந்தின்னிக் கழுகுகள் நீரில் ஊறி உப்பிய செத்த உடல்கள் மேலே அமர்ந்தவண்ணம் சென்றுகொண்டிருக்கின்றன.” இந்த நெருக்கடியைக் கையாளும் ஒரு முயற்சியில், உத்தரப்பிரதேச அரசு அந்த நதியில் இயல்பாய் காணப்படும் ஊன் உண்ணும் ஆமைகளைப் பாதுகாத்து இனவிருத்தி செய்துவருகின்றனர். “இந்தச் சிறிய ஆமைகள் சிறிய ஊனையும் மீனையும் உண்ண ஆரம்பிக்கின்றன. படிப்படியாக, அவை சிதையும் உடல்களிடமாகக் செல்லும்” என்று தலைமை வனவிலங்கு பாதுகாவலர் உரிமைப்பாராட்டுகிறார். ஆனால் அவை நீந்துபவர்களை அச்சுறுத்தாது என்கிறார். (g90 8/22)
சாவுக்கேதுவான பறவை வியாபாரம்
காட்டுப்பறவைகளைப் பிடித்து வியாபாரம் செய்வது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பறவைகளின் இறப்புக்குக் காரணமாயிருக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. “உயிரோடு விற்கப்படும் ஒவ்வொரு காட்டுப் பறவைக்கும் குறைந்தபட்சம் ஐந்து இறந்துவிடுகிறது,” என்று ஆளுமை என்ற தென் ஆப்பிரிக்க பத்திரிகை உரிமைப்பாராட்டுகிறது. அயல்நாட்டுப் பறவைகளைப் பிடிப்பதற்காக சில வியாபாரிகள் பறவைகள் கூடுகட்டும் மரங்களை வெட்டி, கீழே விழும் உயிர்தப்பிய குஞ்சுகளைப் பிடித்துக்கொள்கின்றனர். மற்றொரு முறை, குறும்பந்துகளைக் கொண்டு ஒரு பறவைக்கூட்டத்தைச் சுடுவதும், இறக்கைகளில் சற்றே காயமடைந்த பறவைகளை எடுத்துக்கொள்ளுவதுமாகும். பின்னர் அந்தப் பறவைகளை உயிரோடு வைக்கும் பணி தொடருகிறது. இவற்றை தூர தேசங்களுக்கு விமானத்தில் அனுப்பிட, இவை பெரும்பாலும் செத்து சேருகின்றன. அதில் என்ன இலாபம் இருக்க முடியும்? ஆளுமை விளக்குகிறது: “விற்கப்படும் பறவைகள் ஆண்டுக்கு 50 லட்சம் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால் இது கடத்தப்படும் ஏராளமான பறவைகளை உட்படுத்துவதில்லை. . . . பறவைப் பிரியர்களும் அவற்றை சேகரிப்பவர்களும் அதிகமாக விரும்பப்பட்ட ஆனால் பாதுகாக்கப்பட்ட பறவை இனத்துக்கு $2,50,000 வரை கொடுக்க தயாராயிருக்கின்றனர்.” (g90 5/22)
சிறுபிள்ளைகளுக்கு அழுத்தம்
சிறு பிள்ளைகள் மட்டுக்குமீறிய அழுத்தத்திற்கு விலகியவர்களாயில்லை. உலக சுகாதார நிறுவனத்தின்படி “மேற்கத்திய உலகில் ஒவ்வொரு ஐந்து சிறுவரில் ஒருவர் அழுத்தத்தின்கீழ் வருகின்றனர் என்று பிரேசில் பத்திரிகை சூப்பரின்டரெசன்ட் அறிக்கை செய்கிறது. பிள்ளைகளின் அழுத்தத்திற்கு மிகப் பொதுவாய் இருக்கும் காரணம், “பெற்றோரின் பிரிவும் அளவுக்குமிஞ்சிய பள்ளிப்பாடமும்” என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது. அது சவோ பாலோ பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியராகிய ஃப்ரான்சிஸ்கோ தெ ஃப்யோர் என்பவரை மேற்கோள் காட்டுகிறது. அவர் விளக்குகிறபடி, “இருதயக் கோளறுகள் சிறுபிள்ளைகளில் காணப்படுவதில்லை, ஏனெனில், இன்னும் வளர்ந்துகொண்டிருக்கும் இருதயம் அழுத்தத்தின் அளவுக்கு மிஞ்சிய சுமையைக் கையாள முடியும். இருப்பினும், உடலில் வயிறு மற்றும் நோய்த்தடைக் காப்பு அமைப்பு முறையில் இவ்வாறு இருப்பதில்லை. எனவே சிறுபிள்ளைகளில் அழுத்தம் பொதுவாக ஜீரணக் கோளறுகள், அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், இன்னும் எல்லா வகையான அலர்ஜி அல்லது ஒவ்வாமைப் பிரச்னைகளோடு தொடர்புடையது.” (g90 9/8)
கத்தோலிக்கரும் பைபிளும்
சிட்னியின் டெய்லி மிரர் குறிப்பிடுகிறபடி, கத்தோலிக்கர்கள் பாரம்பரியமாக பைபிள் பற்றிய அறிவு உடையவர்கள் அல்ல என்று ஆஸ்திரேலியாவில் சிட்னியிலுள்ள பங்கு குரு வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் பைபிள் அறிவின்மையை நிவிர்த்தி செய்ய கத்தோலிக்க சர்ச் சிட்னி முழுவதும் பத்து புறநகர் மையங்களில் பைபிள் பயிற்சிகளை அளிக்க தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டமிடப்பட்ட பயிற்சி 4 ஐந்து-வார பிரிவு பயிற்சியாக இருக்கும். ஏறக்குறைய 2,000 பேர் சேர்ந்துகொள்வார்கள் என்று நம்பப்படுகிறது. “அநேக வணக்கத்தாருக்குக் கத்தோலிக்க சர்ச்சும் பைபிளும் உடன் செல்வதில்லை” என்று டெய்லி மிரர் குறிப்பிட்டது மட்டுமின்றி, “உண்மையுள்ளவர்களுக்காகத் திரும்ப அடிப்படைகளுக்குத் திரும்புகிறது,” என்று தன் கட்டுரைக்குப் பொருத்தமாக தலைப்பிட்டது. (g90 9/8)
கெட்டிக்கார குழந்தைகள்
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் திறமைகளைத் தீர்மானிப்பதில் விஞ்ஞானிகள் அதிக தேர்ச்சியடைவது, “புதிதாய்ப் பிறந்த குழந்தையை “தகுதிவாய்ந்த குழந்தை”யாக மதித்துணர்வதற்கு வழிநடத்தியிருக்கிறது,” என்று தி டைம்ஸ் என்ற லண்டன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “குழந்தைகள் உயர்ந்தளவு புத்திக்கூர்மையுடன் பிறக்கின்றன என்ற நம்பிக்கைக்கு முரணாயிருக்கிறது. பிறந்த குழந்தைகள் பார்ப்பதை விரைவாய்ப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றன. எக்ஸீட்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரில் ஒருவரான டாக்டர் ஆலன் ஸ்லட்டர் கூறுகிறார்: “குழந்தைகள் தாங்கள் பிறந்த கணத்திலிருந்தே உலகத்தைப்பற்றி கற்றுக்கெள்ள முடியும் புதிதாய்ப் பிறந்த குழந்தை தன் தாயையும் பிறரையும் பார்வை, ஒலி மற்றும் வாசனையால் அறிந்துகொள்கின்றன. கருப்பையில் இருக்கும்போது அதிகமாகக் கற்றுக்கொள்கிறது என்றும் அத்தாட்சி சுட்டிக்காட்டுகிறது.” அநேக சர்வதேச ஆய்வுகள் காண்பிக்கிறபடி, குழந்தைகள் “போஷிக்கப்படக் காத்திருக்கும் புறத்தூண்டுதலால் நேரிடும் தன்னியக்கச்செயலின் ஒரு சிறிய மூட்டை அல்ல,” என்றும் ஆரம்ப வயதிலேயே தேர்வாய்வுத் தோல்வி முறையில் ஒரு காரியத்தைச் செய்வதற்கு மாறாக திட்டமிட்டுச் செய்யக்கூடும் என்றும் தி டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. (g90 5/22)