மதிப்பீடுகளுக்கு என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது?
1948-ம் ஆண்டு போர் நிறுத்த தினத்தின்போது தாம் ஆற்றிய உரையில் தளபதி ஓமர் N. பிராட்லி சொன்னார்: “நாம் விஞ்ஞான மனிதர்களையே மிக அதிகமாகக் கொண்டிருக்கிறோம், கடவுள் பயமுள்ள மனிதரையோ மிகக் குறைவாகக் கொண்டிருக்கிறோம். நாம் அணுவின் இரகசியத்தைப் புரிந்திருக்கிறோம், மலைப்பிரசங்கத்தை நிராகரித்திருக்கிறோம். . . . நம்முடைய உலகம் அணு வல்லவர்களும் ஒழுக்க நெறியில் பாலகரும் நிறைந்த உலகம். நமக்குச் சமாதானத்தைவிட போரைப் பற்றியே அதிகம் தெரியும், உயிர்வாழ்வைவிட உயிர்க்கொலையைப் பற்றியே அதிகம் தெரியும்.” “மனிதகுலம் இன்றைய வளரிளமைப்பருவத்தினரின் நெறியில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறது,” என்றார்.
ஒரு காலத்தில் பைபிள் தகவலை ஆதாரமாகக் கொண்ட சம்பிரதாயமான உயர் மதிப்பீடுகள் இருந்தன. ஆனால் இனிமேலும் அவை இல்லை. அவை இனிமேலும் காலத்திற்கேற்ற புதுப் பாணியாக இல்லை என்பதாக ஒருபுறம் தள்ளி வைக்கப்படுகின்றன. புதிய வாழ்க்கைப் பாணிகள் நடப்பிலிருக்கின்றன. “உண்மை” என்பது சம்பந்தப்பட்ட ஒன்றாகும். சரி அல்லது தவறு என்பது இனிமேலும் இல்லை. பகுத்துணர்வுள்ளவராயிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் தனக்கென்று சொந்தமாக ஒரு தொகுதியான மதிப்பீடுகளைக் கொண்டவராய்த் தனக்கு எது சரி என்பதைத் தீர்மானித்து, தன்னுடைய சொந்த காரியத்தைச் செய்கின்றனர். விபசாரம் தவறில்லை. வேசித்தனம் தவறில்லை. விவாகரத்து தவறில்லை. பிள்ளையைப் புறக்கணிப்பது தவறில்லை—இதன் விளைவுகளாக ஏற்படும் உயர்ந்துவரும் பருவ வயது கருத்தரித்தலுக்கும், இலட்சக்கணக்கான கருச்சிதைவுகளுக்கும், பாழாக்கப்படும் பிள்ளைகளின் வாழ்க்கைக்கும் எவரும் குற்றஞ்சாட்டப்படப்போவதில்லை. தவறு என்றும் குற்றச்சாட்டு என்றும் எதுவுமில்லாததால், எந்தக் குற்றவுணர்வும் இல்லை. இவ்வகைகளில் உலகம் மெய்யான மதிப்பீடுகளைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிடுகிறது.
முதல் மனித தம்பதி எது சரி, எது தவறு என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்க முடிவுசெய்தனர். (ஆதியாகமம் 2:17; 3:5) இன்று இலட்சக்கணக்கானோர் சரி, தவறு என்பதாக ஒன்றும் கிடையாது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். தாங்கள் விரும்புகிறதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களாய், அவர்கள் சம்பிரதாயமான மதிப்பீடுகளை ஒரு பக்கமாக வீசியெறிந்துவிட்டு: “கடைசியாக விடுதலை! எந்தக் கட்டுப்பாடுமில்லை!” என்று கூப்பாடுப் போடுகிறார்கள். கட்டுப்பாடுகள் தூக்கி எறியப்படுகின்றன—பின்னர் துயரங்கள் அடுத்தடுத்து வந்து சேருகின்றன!
பிரபல பத்திரிகை ஒன்றின் தலைப்புச் செய்தி “பொய்யர்களின் ஒரு தேசமா?” என்று கேட்டுவிட்டு தொடர்ந்து பின்வருமாறு பிரசுரித்திருந்தது: “அரசாங்க அதிகாரிகள் வேஷம் போடுகிறார்கள். விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை மாற்றி மோசடி செய்கிறார்கள். தொழிலாளிகள் வேலையைப் பெற்றுக் கொள்ள சான்றிதழ்களில் திருத்தங்களைச் செய்கிறார்கள். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? இதற்குப் பதில் அடிப்படையான நாணயத்தில் கவலைக்கிடமான கீழ்நோக்கியச் சரிவு என்பதாக வளர்ந்துவரும் எண்ணிக்கையில் சமுதாய ஆய்வாளர்கள் கவலைத் தெரிவிக்கிறார்கள்.”
மற்றொரு முக்கிய பத்திரிகை, ஒழுக்க நெறிப் பற்றி பின்வரும் செய்தித் துணுக்குகளைப் போன்றவற்றுடன் தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது: ஊழல் மலிந்த வியாபார பேரங்கள், பொதுமக்கள் நம்பிக்கை குலைவு, மனித குறைபாடுகளின் முழு அளவையும் உட்படுத்தும் மீறுதல்கள். தவறுகள் ஒப்புக் கொள்ளப்படுகின்றன, ஆனால் மோசமான தவறுகள் அல்ல, பாவங்கள் என்பதாகக் கண்டனம் செய்யப்படும் ஒன்று எதுவுமில்லை.
அத்தொடர் கட்டுரையின் முடிவுரை வருமாறு: “அமெரிக்க நாட்டவர், மெய்யான ஒழுக்கநெறி சார்ந்த சமநிலையை சென்றெட்ட விரும்பினால், சமுதாயம் அவர்களுக்கு முன்னால் அத்தனை கவர்ச்சியாக விளம்பரம் செய்யும் மதிப்பீடுகளை மறுஆய்வு செய்வது அவசியமாக இருக்கலாம்: உயர் பதவி, அரசியல் செல்வாக்கு, பாலினக் கவர்ச்சி, உயர்ந்த மாடிக் கட்டிடங்களில் அல்லது ஏரிப் பரப்புக்கு முன் ஒரு வீடு, சந்தைவெளியில் ஒரு கொலை. தேவைகளை மீண்டும் தொகுத்துரைப்பதே அப்பொழுது மெய்யான சவாலாக இருக்கும். சமுதாயத்துக்கும் தனக்கும் பயன்படும்படியாக வழிமுறையை வழிநடத்துகிறதாயும் அதே சமயத்தில் நேர்மையான நோக்கத்தை நிறைவேற்றுகிறதாயும் இருக்கும் வகையில் தனியொரு நல்லொழுக்கம் தொகுத்துரைக்கப்பட வேண்டும்.”
பின்வரும் தலைப்புச் செய்தி தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது: “மாநிலம் முழுவதிலுமுள்ள அரசாங்க அதிகாரிகள் மொத்தமாக வழங்கப்பட்ட 106 கையூட்டுகளில் 105 கையூட்டுகளை அல்லது இலஞ்சங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாக புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது” 106-வது கையூட்டு நாணயமான மனிதனுக்கு வழங்கப்பட்டதா? இல்லை, “தொகை போதுமானது என்பதாக அவன் நினைக்கவில்லை.”
நியு யார்க் நகர குவின்ஸிலுள்ள முன்னாள் நகராட்சிக்கழக உறுப்பினரும் மக்களாட்சி கட்சி தலைவருமான மேத்யூ ட்ராய் “அரசாங்கத்தில் இலஞ்ச ஊழலும் நேர்மையும்” என்ற தலைப்பின் பேரில் பேசுகிறவராய் இலஞ்ச ஊழல்கள் மிகச் சாதாரணமாகும் என்பதாக பல்கலைக்கழக வகுப்பு ஒன்றில் சொன்னார். சட்டமன்ற ஓட்டுகளை நீதிபதி பதவிகளுக்காக மாற்றிக்கொள்ளுகிறார்கள். “அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பதவியின் பொதுவான விலை 12,75,000 ரூபாயும் கீழ் நீதிமன்றத்தில் பதவியின் விலை 5,95,000 ரூபாய் வரையாகவும் இருக்கிறது.”
கதை ஆசிரியர் ஜேம்ஸ் A. மிச்செனர் பின்வரும் இப்படிப்பட்ட மோசடிகளை உயர்த்திக்காண்பிக்கிறார்: பொருளாதாரத்தில் துணிச்சலான செயல்களை மேற்கொண்டு மற்ற ஆட்களுடைய பணத்தை இலட்சக்கணக்கில் சேர்த்துக் கொள்ளும் ஆட்களைப் புகழ்ந்து பேசுவது, இரகசியங்களை அறிந்துகொண்டு உள்ளிருந்தே வியாபாரத்தில் நாணயக்கேடு செய்வது, ஒன்றாகச் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றுவது, பணத்துக்காக பித்துப்பிடித்தலையும் கண்டிக்கத்தக்க மதசம்பந்தமான சக்திகள், பொதுமக்களை பயமுறுத்தும் எய்ட்ஸ், சமுதாயத்தில் பிரிவுண்டாக்கும் பயங்கரவாதம், தேசீய பூங்காக்களைக் கடுமையாக தாக்குதல் செய்து உயிரின வாழ்க்கைச்சூழலில் விபத்துக்களை கொண்டுவரும் அரசியல்வாதிகள், வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட விரோதிக்குப் போரயுதங்களை விற்று இலாபங்களை சட்டவிரோத முறையில் ஒரு மத்திய அமெரிக்க புரட்சிக்கு பயன்படுத்தும் ஒரு நிர்வாகம்.
அனைத்தையும் உள்ளிட்ட மிச்செனரின் முடிவு: “இத்தனை அநேக வெறுக்கத்தக்க காரியங்கள் வெளியரங்கமாகிவிட்டிருப்பதால் 1980-கள் அருவருப்பான பத்தாண்டாக நினைவுகூரப்பட வேண்டும்.” இவை அனைத்துக்கும் ஓர் எளியக் காரணம்: மெய்யான மதிப்பீடுகள் குப்பைக்கூடைக்குள் தூக்கி எறியப்பட்டுவிட்டன.
அப்போதைய ஐ.மா. கல்வி செயலர் வில்லியம் J. பென்னட், பள்ளியில் தார்மீக மதிப்பீடுகள் கற்பிக்கப்படாதிருப்பதைக் குறைக்கூறி, இந்தக் கடமைப் புறக்கணிப்பினால் ஏற்பட்டிருக்கும் பருவ வயதுப் பிரச்னைகளை வகைவகையாகச் சொல்லுகிறார்:
“வகை: இன்றுள்ள 14 வயது பிள்ளைகளில் சுமார் 40 சதவிகிதத்தினர், இருபது வயதுக்கு முன்பாக குறைந்தப் பட்சம் ஒரு முறையாவது கருவுற்றிருப்பர். இவைகளில் பாதிக்கும் மேல் முறைகேடான பிறப்புகளாக இருக்கும்.
“வகை: பருவ வயது தற்கொலை உச்ச எல்லையைக் கடந்த உயர்நிலையிலுள்ளது. இது பருவ வயது மரணங்களுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும்.
“வகை: தொழில்துறையில் முன்னேறியுள்ள உலகில் போதப் பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்களின் சதவிகிதத்தில் ஐக்கிய மாகாணங்கள் முதன்மை நிலையில் இருக்கிறது.
“நமது பள்ளிகள் இந்தப் பிரச்னைகளைத் ‘தீர்க்க’ முடியுமா? முடியாது. அவைகள் உதவக்கூடுமா? கூடும். உதவி செய்ய அவை இயன்றதைச் செய்து வருகின்றனவா? இல்லை.
“ஏன் இல்லை? ஒரு காரணம், அவைகள் கல்வியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகிய நல்லொழுக்கக் கல்வியில் ஈடுபடுத்திக்கொள்ள தயங்குகின்றன. உதாரணத்துக்கு ‘ஒழுக்கம் சம்பந்தமாக எது சரி எது தவறு என்பதை மாணவர்களுக்குச் சொல்வதை வேண்டுமென்றே தவிர்ப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும்’ நியு யார்க் பகுதியில் கல்வித் துறையிலுள்ளப் பலரை மேற்கோள் காட்டி அண்மையில் வெளியான ஒரு கட்டுரையை எடுத்துக் கொள்ளுங்கள்.
“கட்டுரை, உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பதினைந்து இளையவர்களையும் முதியவர்களையும் வைத்து உண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆலோசனை வகுப்பைப் பற்றி பேசுகிறது. வகுப்பின் போது பள்ளியில் உடன்மாணவி ஒருத்தி பணப்பையில் தான் கண்டெடுத்த 17,000 ரூபாயை உரியவரிடம் சென்று சேர்த்தது ஒரு முட்டாள்தனம் என்ற முடிவுக்கு மாணவர்கள் வந்தார்கள்.” ஆலோசகர் அவர்கள் தீர்மானித்து செய்த முடிவின் பேரில் தீர்ப்புக்கூறாமல் பின்வருமாறு விளக்கினார்: “எது சரி, எது தவறு என்ற ஸ்தனத்திலிருந்து நான் வந்தால், அப்போது நான் அவர்களுடைய ஆலோசகர் இல்லை.”
பென்னட்டின் கருத்து: “ஒரு காலத்தில் ஆலோசகர் ஆலோசனை வழங்கினார். அவர் மாணவர்களுக்கு அநேக விஷயங்களைப் பற்றி அறிவுரை கூறினார்—சரி மற்றும் தவறு பற்றிய விஷயம் அவைகளில் இடம்பெற்றிருந்தது.”
வீடுகள், பள்ளிகள், சர்ச்சுகளின் தோல்வி
மதிப்பீடுகள் கற்பிக்கப்படுதலைப் பொறுத்தமட்டில், வீடு வேகமாக பயனற்ற ஓர் இடமாக மாறிக்கொண்டு வருகிறது. குடும்பங்களின் சிதைவு வீட்டைப் பரிதாபமான ஒரு பள்ளி அறையாக மாற்றிவருகிறது—பெற்றோரில் இருவரும் வேலைபார்ப்பது, விவாகரத்துகள், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களும் அந்த ஒற்றைப் பெற்றோரும் வேலைப்பார்ப்பவராக இருப்பது, பெற்றோரில்லாத சமயத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பேற்பவரிடம் அல்லது இப்பணியைச் செய்யும் பள்ளிகளில் அல்லது டிவியை துணையாகக் கொண்டு எவருமில்லாத வீட்டில் தனியாகப் பிள்ளைகள் விடப்படுவது, பாலுறவில் தமாஷூக்காக ஈடுபடுவது, வன்முறையை பிரச்னைகளுக்குப் பரிகாரமாகக் கற்பிப்பது. பத்திரிகையில் விளம்பரப்படுத்துவதற்கென்று அமைந்த குழுவைச் சேர்ந்த பத்திரிகை எழுத்தாளர் நார்மன் போட்ஹோர்ஸ் விளைவுகளைக் குறித்து தன் கருத்தைச் சேர்க்கிறார்: “குற்ற நடத்தையில் ஓர் அதிகரிப்பு; போத வஸ்து மற்றும் குடி உபயோகத்தில் ஓர் அதிகரிப்பு; பருவ வயது கருத்தரித்தலில், கருச்சிதைவில் மற்றும் மேகநோய்களில் ஓர் அதிகரிப்பு, இயல்பல்லாத காரணங்களினால் (மனித கொலை, மோட்டார் வாகன விபத்துகள், தற்கொலை) வளரிளமைப் பருவத்தில் ஏற்படும் மரண விகிதத்தில் ஓர் அதிகரிப்பு ஆகியவை இந்த விளைவுகளில் அடங்கும். குறைந்திருக்கும் ஒரே காரியம் கல்வி அளவில் சாதனை ஆகும்.”
போட்ஹோர்ஸ் தொடர்ந்து சொல்லுகிறார்: “வெறுமென சுற்றிலும் பார்ப்பதிலிருந்தே நாம் அனைவரும் அறிந்திருக்கும் காரியத்துக்காக இரண்டு மனித சமுதாய வளர்ச்சி ஆய்வாளர்கள் எளிதாயிராத புள்ளிவிவர அத்தாட்சியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் மற்ற எல்லா மதிப்பீடுகளுக்கும் மேலாக ‘சுய-சாதனை’ உணர்வை அதிக முக்கியமானதாகக் கருதும் அதிகமதிகமான ஆட்களைக் காண்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகளின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் தங்களைத்தாங்களே அல்லது தங்கள் சொந்த செளகரியங்களையும்கூட தியாகம் செய்வதில் நம்பிக்கையுடையவர்கள் குறைந்து கொண்டே போவதைக் காண்கிறார்கள். ஆச்சரியம் தரும் வகையில் ‘தங்கள் பிள்ளைகளோடு குறைந்தளவான நேரத்தையே செலவழிப்பதை அது அர்த்தப்படுத்தினாலும்கூட பெற்றோர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ உரிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்’ என்பதாக மூன்றில் இரண்டு பங்கு எல்லா அமெரிக்க பெற்றோர் நினைக்கிறார்கள்.”
கான்சாஸில் ஃபோர்ட் ஹேய்ஸ் அரசு பல்கலைக்கழகத்தில் போதனை முதல்வராக இருந்தபோது ஜான் டி. கார்உட் மெய்யான மதிப்பீடுகளின் இழப்பைக் குறித்து இவ்விதமாகக் கருத்து தெரிவித்தார்: “நமது வீடுகளும் பள்ளிகளும் சர்ச்சுகளும் அவை செல்வாக்கு செலுத்துகிறவர்களுக்கு நம்பத்தகுந்த நிலையான மதிப்பீட்டு அமைப்பைக் கடத்த தவறியிருப்பது, இன்று நம்முடைய பிரச்னைகளில் பலவற்றை உருவாக்கியிருக்கிறது. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல சரித்திராசிரியர் ஆர்னால்ட் டாயன்பீ, நாணயத்தில் குறைவையும், தேசீய செயல் நோக்கத்தில் குறைபாட்டையும், பொருள்பற்றில் அழிவுண்டாக்கும் அழுத்தத்தையும், வேலைத் திறனின் பெருமையுணர்ச்சியில் குறைவையும், சுயதிருப்தியின் மீது முக்கியத்துவம் வைக்கும் உயர் பயனீட்டளவுக்கு முழு இருதயப்பூர்வமான ஈடுபாட்டையுமே இன்று மேற்கத்திய உலகில் காண்கிறார். அவர் ரோம பேரரசின் வீழ்ச்சிக்கு வழிநடத்திய அநேக அம்சங்களை நம்முடைய தேசத்தின் வாழ்க்கைப் பாணியில் காண்கிறார்.”
மெய்யான மதிப்பீடுகளைக் குப்பைத்தொட்டியில் தூக்கியெறிந்துவிட்டிருப்பது, எண்ணிப்பாராமல் அனைத்தையும் அதிகமாக நாடும் ஓர் உலகமாக இதை விட்டுச்சென்றிருக்கிறது. பொருட்களில் ஐசுவரியவானாக ஆவியில் ஏழ்மையானவனாக, மனிதன் தடுமாறிக் கொண்டு, வழிகாட்ட எவருமின்றிவிடப்பட்டிருக்கிறான். மெய்யான மதிப்பீடுகளின் ஊற்றுமூலத்துக்குத் திரும்புவதில்தானே அவனுடைய மீட்பு சார்ந்திருக்கிறது. (g89 3/22)