சீக்கிரமான பிறப்பு, சிறுத்த பிறப்பு
உலகமுழுவதும் இலட்சக்கணக்கான தம்பதிகள் விலையுயர்ந்த “சிப்பம்” ஒன்றை எதிர்நோக்கியிருக்கின்றனர். தங்களுடைய குழந்தையின் வரவு எப்பொழுது இருக்கும் என்பதைப் பலர் அறிந்திருக்கின்றனர். என்றபோதிலும், சிலர் தங்களுடைய குழந்தை தாங்கள் எதிர்பார்த்ததற்கு முன்பே சீக்கிரமாகவும் சிறுத்தும் பிறந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.
மார்ச் 22, 1980 அன்று, நியு யார்க்கில் மிடில்டவுன் என்ற இடத்துக்கு அண்மையில் ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தை எதிர்பார்த்ததற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே பிறந்தது. அவளுடைய எடை 1 பவுண்டு 12 அவுன்ஸ் இருந்தது. நீளமோ 13 3/4 அங்குலங்கள், ஏறக்குறைய இந்த இரண்டு பக்கங்களின் அகல்வாக மட்டுமே இருந்தது.
பெற்றோர் அந்தச் சிறு குழந்தைக்குக்கு கெல்லி என்ற பெயர் சூட்டினார்கள். அவள் சீக்கிரமாகப் பிறந்தாள், சிறுத்து பிறந்தாள். சாதாரணமாக ஒரு குழந்தையின் பிறப்பு 40 வாரங்கள் கழித்து இருக்கும், ஆனால் கெல்லி தாயின் கருவில் வளர ஆரம்பித்து 26 வாரங்களுக்குள் பிறந்துவிட்டாள். கருவுற்றிருக்கும் இந்தக் காலப்பகுதி சாதாரணமாக தாயின் கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது.
இயல்பாக முழு வளர்ச்சியுறாத, மற்றும் எடை குறைந்த குழந்தைகள்
ஒரு குழந்தை மூன்று வாரங்கள் முன்னதாக, அல்லது கர்ப்பிணியாயிருக்கும் 37-வது வாரத்துக்கு முன்னதாகப் பிறந்தால் அது இயல்பாக முழு வளர்ச்சியுறாத குழந்தையாகும். முன்பெல்லாம் ஒரு குழந்தை பிறக்கும்போது 5 1/2 பவுண்டுக்கு குறைவான எடையுடையதாக இருந்தால் அது இயல்பாக முழு வளர்ச்சியுறாத குழந்தை என்று அழைக்கப்படும். ஆனால் அந்த விளக்கம் மாற்றப்பட்டது, ஏனென்றால் முழு காலப்பகுதிக்குப் பின் பிறந்த சில குழந்தைகளும் 5 1/2 பவுண்டு எடையுடன் பிறக்கின்றன. குறிப்பிடவேண்டிய ஒரு காரியம், பருவ வயதினருக்கும் அதற்கு முற்பட்ட வயதினருக்கும் பிறந்த குழந்தைகளில் பெரும்பான்மையான குழந்தைகள் எடைக்குறைவானவையாயிருந்தன.
ஐக்கிய மாகாணங்களில் உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் ஏறக்குறைய 10 சதவீதம் இயல்பாக முழுவளர்ச்சியுறாத குழந்தைகளாகும். ஆம், அப்படிப்பட்ட குழந்தைகள் 3,00,000 ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்றன! இந்தக் குழந்தைகள் தங்களுக்கு முழுமையாகப் பொருந்தாத சூழலில் வாழ தாயின் கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. கூடாரங்களும் உறங்குவதற்கான பைகளும் இல்லாமல் அனுப்பப்படும் வடதுருவ ஆய்வுப்பயணிகளுக்கு அக்குழந்தைகளை ஒப்பிடலாம்.
உண்மைதான், இயல்பாக முழுவளர்ச்சியுறா குழந்தைகளாக இவை இருந்தாலும், உடலின் எல்லா உறுப்புகளையும் பெற்றிருக்கின்றன. உண்மை என்னவெனில், கருவுற்று 15-வது வாரத்துக்குள் ஒரு குழந்தையின் இருதயம், மூளை, சிறுநீரகங்கள், மற்றும் செரிமான உறுப்புகள் உருபெற்று கண்டுபிடிக்குமளவுக்கு இருக்கின்றன. ஏன், மூன்று வாரங்களில், பகுதி வளர்ச்சியுற்றிருக்கும் இருதயம் துடிக்கவும் ஆரம்பிக்கிறது!
ஆனால், உண்மைதான், கருவுற்றிருக்கும் அந்த ஆரம்ப காலப் பகுதிகளில் குழந்தை தாயின் கருவுக்கு வெளியே பிழைத்திருக்க முடியாது. என்றபோதிலும், மருத்துவ விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால், கருவுற்ற 22-வது வாரத்தில் பிறந்த குழந்தைகளும் இப்பொழுது பாதுகாக்கப்படுகின்றன. என்றபோதிலும், இது ஓர் இரண்டக நிலையை ஏற்படுத்தியிருப்பதோடு அதிக செலவை உட்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. இது எப்படி ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
அண்மையில் ஏற்பட்டிருக்கும் மருத்துவ முன்னேற்றங்கள்
1960-களின் ஆரம்ப வருடங்களில் இரண்டு முதல் மூன்று பவுண்டு எடையை கொண்ட இயல்பாக முழு வளர்ச்சியுறாத குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவை மரித்துவிட்டன. 1963-ல் மூன்று பவுண்டு எடையுடையதாய்ப் பிறந்த ஐ.மா.-வின் ஜனாதிபதி ஜான் F. கென்னடியின் குழந்தை பாட்ரிக்கை தேசத்திலேயே நிபுணர்களாகத் திகழ்ந்த மருத்துவர்களால் பாதுகாக்க முடியவில்லை.
உண்மை என்னவெனில், அண்மைக் காலங்கள் வரை இயல்பாக முழு வளர்ச்சியுறாத குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு அவ்வளவாகக் கொடுக்கப்படவில்லை. வெகுவாகப் பின்தங்கிய வளர்ச்சியுற்ற அல்லது நோய்ப்பட்டிருந்த குழந்தைகள் அப்படியே மரித்துவிட அனுமதிக்கப்பட்டன. அக்குழந்தைகள் போஷிக்கப்பட்டன, கவனிக்கப்பட்டன என்பது உண்மைதான், ஆனால் தீவிர சிகிச்சை ஏதும் அளிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. பின்பு, ஊக்கமுள்ள மருத்துவ துறையினர் இந்தப் பிறந்த குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க முயலும் ஒரு வாழ்க்கைப் பணியை மேற்கொள்ள தீர்மானித்தனர்.
1975-ல் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் கவனிப்பு, வளர்ச்சி மற்றும் நோய்த்தீர்ப்பு சம்பந்தமாக ஒரு புதிய மருத்துவப் பிரிவு அமெரிக்க சிசு நோய் மருத்துவக் கழகத்தினரால் ஏற்படுத்தப்பட்டது. கருவின் சில இயக்கங்களைத் தூண்டிட பிறந்த குழந்தைக்கு ஒரு மாத கால தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (NICU) ஏற்படுத்தப்பட்டன. இப்பொழுது இரண்டு முதல் மூன்று பவுண்டு எடை கொண்ட குழந்தைகளில் ஏறக்குறைய 90 சதவீதம் உயிர்ப்பிழைத்துக் கொள்கின்றன!
என்றபோதிலும், அளிக்கப்படும் சிகிச்சை இன்பமான, அழகான ஒன்று அல்ல. இயல்பாய் முழு வளர்ச்சியுறாத குழந்தையின் உடலில் அரை டஜன் குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கக்கூடும், மற்றும் ஊசிகள் பொருத்தப்படுவதனால் அதன் தோல் நீலநிறமாகக் காணக்கூடும். டிஸ்கவர் (DISCOVER) என்ற ஓர் அறிவியல் பத்திரிகை ஒரு நவீன NICU குறித்து இப்படியாக விளக்குகிறது:
“பெரும்பான்மையான குழந்தைகள் மெத்தென அமைந்த மின்சாரத்தால் அனலூட்டப்பட்ட மேசைகளில் ஆடையின்றி படுத்திருக்கின்றன. இந்த மேசைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் புட்டிகளுக்கும் இயந்திரங்களுக்கும் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் அதனதன் செவிலியர்களைக் கொண்டிருக்கின்றன. . . . அவற்றின் நெஞ்சுகள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றன; அவற்றின் விலா எலும்புகளும் நெஞ்சு எலும்புகளும் அவ்வளவு மென்மையாக இருப்பதால், ஒவ்வொரு முறை மூச்சு விடும் போதும் அவை உள்ளே வளைகின்றன. அவற்றை கண்காணித்துவரும் கருவிகள்படி, அக்குழந்தைகள் ஒரு நிமிடத்துக்கு 150 இருதய துடிப்புகளை உடையவையாயிருக்கின்றன, மற்றும் அந்தச் சமயத்தில் அவை 30 முதல் 90 வரை மூச்சு இழுக்கவும் செய்கின்றன.”
உண்மையிலேயே ஓர் இரண்டக நிலை
ஓர் ஆய்வின்படி, இரண்டு பவுண்டுகளுக்கும் குறைந்த எடையுடைய இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் சுமார் 17,000 பிள்ளைகள் இப்பொழுது ஆண்டுதோறும் ஐக்கிய மாகாணங்களில் இயங்கும் நூற்றுக்கணக்கான குழந்தை கவனிப்பு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுவருகின்றனர். இப்பொழுது இந்த மிகச் சிறு சிசுக்களுங்கூட உயிர்ப்பிழைப்பதன் வாய்ப்பு 70 சதவீதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது! ஆனால் என்ன செலவில்?
இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் பிள்ளைகளில் காணப்படும் மிகக் கடுமையான மனம் மற்றும் சரீர ஊனங்கள் 5 முதல் 20 சதவீதமாக இருக்கிறது, இது முழு வளர்ச்சிகாலத்தையுடைய சிசுக்களில் காணப்படுவதைவிட அதிகமாக இருக்கிறது. ஆம், குழந்தை எவ்வளவுக்குச் சிறுத்து இருக்கிறதோ, அவ்வளவுக்கு ஊனங்களைக் கொண்டிருக்கும் சாத்தியம் அதிகமாக இருக்கின்றன. மன வளர்ச்சியின்மை, செவிப் பிரச்னைகள், பார்வைப் பிரச்னைகள் மற்றும் மூளைக் கோளறுகள் ஆகியவை ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது. ஆனால் அதுமட்டுமல்ல. இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தை நூல் என்ற புத்தகத்தின் ஆசிரியர் சொல்கிறார்: “1500 கிராம் [3 பவுண்டு 5 அவுன்ஸ்] எடைக்கு உள்ளாகப் பிறந்த சிசுக்களுக்குப் பார்வைப் பிரச்னைகள், நடந்துகொள்ளும் விதத்தில் பிரச்னைகள் அல்லது ‘சிறியவை’ என்று மருத்துவர்கள் குறிப்பிடும் பிரச்னைகளை நான் பார்த்திருக்கிறேன்.”
சுகமாக இருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் குறிப்பிடும் இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளுங்கூட பிரச்னைகளைக் கொண்டிருக்கின்றனர். சியாட்டிலில் உவாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிசுக்களைப் பாதிக்கும் வாய்ப்புகளைக் குறைத்திட செயல்படும் திட்டத்தின் இயக்குனர் டாக்டர் ஃபாரஸ்ட் C. பெனட் பின்வருமாறு கூறினார்: “இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளில் நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டவை நல்ல விதத்தில் வளர்ந்துவந்தன. ஆனால் இந்தக் குழந்தைகள் தங்களுடைய சகோதரர் சகோதரிகளிலிருந்து வித்தியாசமாக இருந்தனர் என்று பெற்றோர் எங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்கள் குறைவாக சிரித்தனர், தங்கள் தாய்மார்களிடம் குறைவாகப் பேசினர், ஒளிக்கும் ஒலிக்கும் குறைந்த கவனம் செலுத்தினர், மற்ற பிள்ளைகளைவிட அற்பக் காரியங்களுக்கு அதிகமாக ஆர்ப்பாட்டம் செய்கிறவர்களாக இருந்தனர். அவர்கள் வளர்ந்து பள்ளிக்குச் சென்றபோது, அவ்வளவு நன்றாகப் படிக்கவில்லை.”
கூடுதலாக, ஓர் இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தையை ஒருவேளை பல மைல் தூரத்தில் இருக்கும் NICU-வில் வைப்பதும் பல முறை போய் பார்ப்பதும்—இப்படியாக அந்தக் குழந்தை கஷ்டப்படுவதைத்தானேப் பார்ப்பதும் குடும்பங்களுக்குக் கடினமாக இருக்கிறது. பின்பு கடைசியில் அந்தச் சிறு குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் காரியங்கள் விசேஷமாகக் கடினமாக இருக்கக்கூடும். பெற்றோர் கவனிப்பு என்ற ஓர் இயக்கத்தின் தலைவர் சாண்டி E. காரண்டு குறிப்பிடுகிறார்:
“குழந்தையை இரண்டு மூன்று மாதங்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கவனிப்பதற்கு மருத்துவமனைகள் ரூ.45 இலட்சம் செலவழிப்பதை நம்புவது கடினமாக உள்ளது, ஆனால் குழந்தை வீடு திரும்பியதும், குழந்தை ஊனமுற்றிருக்கும் என்பதையும் அறியாதவர்களாய் பெற்றோர் ஆதரவின்றி விடப்படுகின்றனர். அது அதிகமான தனிமை உணர்வை ஏற்படுத்துகிறது. குடும்பங்கள் அழுத்தத்திற்குள் வருகின்றன. விவாகங்களும் அழுத்தத்திற்குள் வருகின்றன.”
இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறந்த ஒரு குழந்தையின் தந்தை இப்படியாகச் சொல்லத் தூண்டப்பட்டார்: “அவள் மரித்துவிடுவாளோ என்று பயந்த நேரமும் இருந்தது. இப்பொழுதோ, அவள் பிழைத்துக் கொள்வாளோ என்று பயப்படும் சமயங்களும் உண்டு. இந்தத் தொழில் நுட்பம் இருந்திராவிட்டால், அவளுக்கு இயற்கையாகவே மரணம் ஏற்பட்டிருக்கும். நாங்கள் எங்களை இந்தக் கேள்விகள் கேட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஒருவேளை அது நல்லதாகவும் இருந்திருக்கும்.”
உவாஷிங்டன் D.C.-யில் நோய்ப்பட்ட பிள்ளைகளுக்கான மருத்துவமனையின் மருத்துவ இயக்குனராக தான் “நல்ல நோக்கத்துக்காக அளிக்கப்படும் சிகிச்சையின் கவலைக்கிடமான பலன்களில் முழு கவனத்தையும் ஈடுபடுத்தியிருப்பதாக” டாக்டர் கான்ஸ்டன்ஸ் பேட்டல் கூறுகிறார். சிசு நோய் கவனிக்கும் மருத்துவர்களுக்கு அவளுடைய அறிவுரை என்ன? “நீங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் பார்க்காத ஒன்றை பார்க்கும்போது அதைக் குறித்து சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் குழந்தை அனுபவிக்கும் நரக வேதனையை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது.”
இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் இவ்வளவு அநேக குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன சம்பந்தப்பட்ட விளைவுகள் அந்தளவுக்கு அநிச்சயமாருப்பதாலும், அதற்கான செலவினம் அவ்வளவு அதிகமாக இருப்பதாலும், ஒரு பத்திரிகை இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளை “200 கோடி டாலர் இரண்டக நிலை” என்று ஏன் அழைக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளக்கூடும்.
இந்த இரண்டக நிலையின் இன்னொரு அம்சம்
ஒரு குழந்தை எப்பொழுது ஒரு நபராகக் கருதப்படுகிறது? சில குழந்தைகள் தாயின் கர்ப்பத்தில் உருவாக ஆரம்பித்து 24 வாரங்கள் வரையாகவும் சட்டப்பூர்வமாக கருச்சிதைவு செய்யப்படுகிறார்கள், அதே வயதிலுள்ள மற்றவர்கள் உயிர்ப்பிழைக்கச் செய்யப்படுகிறார்கள். எனவே ஓம்னி என்ற ஆங்கில பத்திரிகை கூறுகிறது: “கருச்சிதைவுக்கும் உயிர்பிழைக்கச்செய்வதற்குமான இடை கோடு சிறுத்துக்கொண்டே போகிறது—அநேக மருத்துவமனைகளில் ஒரு பிரிவு கருக்கலைப்புச் செய்வதிலும், மறு பிரிவு அதைவிட ஒரு சில வாரங்கள் மூத்திருக்கும் இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளை உயிர்பிழைக்கச் செய்வதிலும் ஈடுபடுமளவுக்குச் சிறுத்துவிட்டிருக்கிறது.”
இந்த இரண்டக நிலையை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் காரியத்தை அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது: “இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் 16 முதல் 20 வாரங்களான சிசுக்களில் இயங்காத உறுப்பு நுரையீரல் மட்டுமே. இப்படியாக உயர் அழுத்தமுடைய அறைகள் அல்லது ECMO என்பதன் மூலம் (இரத்தத்தில் பிராண வாயுவைக் கூட்டுவதன் மூலம்) உயிர்வாழக்கூடிய வாய்ப்பு இன்னொரு அடியை எடுத்துவைக்கிறது,” இப்படியாக சிறு குழந்தைகளுங்கூட பாதுகாக்கப்படக்கூடும். ஆம், ஜூலை 27, 1985 அன்று, 22 வாரங்கள் கர்ப்பிணியாயிருந்த ஒரு தாய்க்குப் பிறந்த 12 அவுன்ஸ் குழந்தையின் உயிர் பாதுகாக்கப்பட்டது, அது இன்னும் உயிருடன் இருக்கிறது!
கருக்கலைப்பு செய்யப்பட்ட ஒரு குழந்தையின் இருதயம் ஒரு சில வினாடிகளுக்குத் தொடர்ந்து அடிக்கும் போது, சில மருத்துவமனைகளில் அது NICU-விடம் எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கே அது மரிக்கும் வரையாக அனலுடன் வசதியாக வைக்கப்படுகிறது. என்றபோதிலும், பாஸ்டன் நகர மருத்துவமனையில் டாக்டர் எலிசபெத் பிரெளன் விளக்குகிறபடி, அப்படி கருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தைகளில் ஒன்று உயிர்பிழைத்தது மட்டுமின்றி, பின்னால் தத்தெடுக்கவும்பட்டது. அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த தாயைக் குறித்து டாக்டர் பிரெளன் குறிப்பிடுவதாவது: “குழந்தை உயிருடனிருந்தது என்பது குறித்து அவள் அதிகம் மகிழ்ச்சியடைந்தாள்.”
ஆம் உயிர் விலையேறப்பெற்றது. தங்களுடைய குழந்தை உயிரோடிருப்பதையும், அது ஒரு மகிழ்ச்சியுள்ள ஆரோக்கியமான குழந்தையாக ஆவதைப் பார்ப்பதிலும் இருக்கும் மகிழ்ச்சியைவிட வேறு மகிழ்ச்சி விசேஷமாக ஒரு தாய்க்கும் ஒரு தகப்பனுக்கும் இருக்க முடியாது. குழந்தை முழு வளர்ச்சிபெற்று பிறந்தாலும் அல்லது இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறந்தாலும் இது உண்மையாயிருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கெல்லியின் விஷயத்தில் என்ன நடந்தது? இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் அதைச் சமாளிக்க எவ்விதம் உதவப்படலாம்? தாயாகப் போகிறவள் முழுவளர்ச்சியுறாத பிள்ளையைப் பெற்றெடுக்காமலிருக்க அவள் ஏதாவது செய்ய முடியுமா? இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகள் அப்படிப் பிறப்பதற்கான மூலக் காரணம் என்ன? உண்மையில் திருப்திகரமான பரிகாரம் ஒன்று உண்டா? (g89 2/22)
[பக்கம் 5-ன் பெட்டி]
இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தையைப் பாதுகாத்தல்
“தங்களுக்கு இந்தக் குழந்தை வேண்டும் என்று பெற்றோர் குரல் கொடுக்கவில்லை. தொடர்ந்து செயல்பட விரும்பியது மருத்துவர்கள், அவர்களில் நானும் ஒருவன். மருத்துவர்கள் தங்களுக்கென்று சொந்த திட்டங்களை, கல்வி சம்பந்தமாக ஏறுவதற்கான ஏணிப்படிகளைக் கொண்டிருக்கின்றனர். பெற்றோரிடம் பேசிப்பார்ப்பீர்களானால், செத்துப் பிறக்கும் குழந்தைகளைவிட முழு வளர்ச்சியுறாத ஊனமான பிள்ளைகளைக் கொண்டிருக்கவே அவர்கள் அதிகமாகப் பயப்படுகின்றனர்.”—டாக்டர் வில்லியம் சில்வர்மன், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மருத்துவர் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர், கல்லூரியில் ஓய்வு பெற்ற குழந்தை மருத்துவர்.