முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகள் சவாலைச் சந்தித்தல்
கெல்லிக்கு இப்பொழுது எட்டு வயது. இந்தப் படம் அவள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாகக் காண்பிக்கிறது. உண்மையிலேயே இது விசேஷமான காரியம், ஏனெனில் அவள் 14 வாரங்களுக்கு முன்னதாகப் பிறந்தவள், பிறக்கும்போது அவளுடைய எடை 1 பவுண்டு 12 அவுன்ஸுகள் மட்டுமே இருந்தது! 1960-களுக்கு முன்பு ஒரு குழந்தை இவ்வளவு சீக்கிரமாக, இவ்வளவு சிறுத்து பிறந்து உயிர்பிழத்தது அரிது.
ஆனால் இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தை முழு வளர்ச்சியுற்று பிறக்கும் குழந்தையிலிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது? சிறுத்து பிறப்பதுதானே வெளிப்படையாகத் தெரியும் ஒரு வித்தியாசம். மேலும் குழந்தையின் மென்மையான தோல் இளஞ்சிவப்பாகவும் மெல்லியதாகவும் தோன்றக்கூடும்; மிகச் சிறிய நரம்புகளுங்கூட காணப்படும். இந்தச் சிசு எவ்வளவு சீக்கிரமாக வந்தது என்பதைப் பொருத்து, அதன் உடலில் அல்லது முகத்தில் மிகவும் மென்மையான முடியும் இருக்கக்கூடும். இது சீக்கிரத்தில் மறைந்துவிடும். மேலும் குழந்தையின் தலை உடலின் மற்ற பாகங்களின் அளவுக்கு ஏற்றபடி இல்லாமல் சற்று பெரியதாக இருப்பதாகத் தோன்றக்கூடும், ஆனால் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. குழந்தை அதன் முழு வளர்ச்சிக் காலப்பகுதியின் பிறக்கும் தேதியை நெருங்குகையில், அது அதிகக் கொழுப்பு பெற்று முழு வளர்ச்சி பெற்ற குழந்தைக்கு ஒப்பாக சரிசம வளர்ச்சியை எட்டிவிடும்.
அந்தச் சிசுவின் விசேஷ தேவைகளைக் குறித்ததில், இது சிலவற்றிலிருந்து பலவாக இருக்கக்கூடும். ஒவ்வொரு குழந்தையிலும் இது வித்தியாசப்படக்கூடும். ஆனால் மைல்கல்கள் எட்டப்பட்டிருக்கின்றன. நவீன தொழில் நுட்பமும், இந்தப் பணிக்குத் தங்களை அற்பணித்துள்ள மருத்துவ துறையினரும், பெற்றோரின் கவனமும் சேர்ந்து அக்குழந்தைகள் உயிர்பிழக்கும் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்கவிதத்தில் வெகுவாக அதிகரித்திருக்கிறது.
பெற்றோர் என்ன செய்யலாம்
பெற்றோரே, இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறந்திருக்கும் உங்கள் குழந்தைக்கு விசேஷமாக நீங்கள் அதிகம் செய்யலாம். பிள்ளை பிறந்தவுடனேயே அதற்கு பேரிடுவது உற்சாகப்படுத்தப்படுகிறது, ஏனென்றால் இது “சீக்கிரம் வருகைதந்திருக்கும்” குழந்தையின் முன்னேற்றத்தை உண்மையில் துரிதப்படுத்தும் ஒரு நெருங்கிய உறவைப் பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படுத்துகிறது. குழந்தையின் உடல்நிலை நிலையான பின்பு, குழந்தையோடு உடல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே பிரதான அக்கறையாக இருக்க வேண்டும்.
குழந்தை இன்னும் தூக்கமுடியாத நிலையிலிருந்தால் அதைச் சீராட்டுதல், மென்மையாக வருடுதல் குழந்தையின் தோலை மெதுவாக உருவிவிடுதல் தகுதியானதாயிருக்கக்கூடும். வாய்க்குள்ளாக இனிமையாகப் பாடும் பாட்டிலும் இன்னோசையான தாலாட்டுப்பாட்டிலும், அன்பு பாராட்டும் வார்த்தைகளிலும் வெளியிடப்படும் தாய் தந்தையரின் மென்மையான குரலைக் கேட்பதைவிட வேறு எது குழந்தைக்கு அதிக நம்பிக்கையூட்டுவதாக இருக்கக்கூடும்? மறுபட்சத்தில், குழந்தை வெகுவாக முழு வளர்ச்சியுறாமல் பிறந்திருக்குமானால், எச்சரிக்கையாயிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. “அவர்கள் எளிதில் உணர்ச்சியில் ஆழ்ந்து, சேதத்தை ஏற்படுத்திவிடுகின்றனர்,” என்கிறார் இரண்டு வருடங்களாக இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளின் இயல்புகளை ஆராய்ந்துவந்த டாக்டர் பீட்டர் A. கார்ஸ்கி. “சமுதாய ரீதியில் அளவுக்கு மிஞ்சிய கண்கலப்பினால் ஊனமாகிவிடும் குழந்தைகளையும் நான் பார்த்திருக்கிறேன். தயவானச் செயலாக நமக்குத் தோன்றும் காரியம் எல்லாச் சமயத்திலும் சிறந்த செயலாக இருக்காது.”
குழந்தையை அடிக்கடி பார்க்கச் செல்வது அவனோடு உங்களுடைய உறவைப் பலப்படுத்துவதாயிருக்கும். ஒருவேளை, சூழ்நிலையின் காரணத்தால் நீங்கள் குழந்தையை நேரடியாகச் சென்று பார்க்க முடியாவிட்டால், குடும்ப அங்கத்தினர்கள் பேசுவதையும் வீட்டு சூழ்நிலையின் சப்தங்களையும் நீங்கள் டேப்களில் பதிவு செய்து அவற்றை உங்கள் குழந்தை கேட்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பலாம். தாயிடமிருந்து ஓர் ஆடை, சலவைச் செய்யப்பட்டிருந்தாலும், அவளுடைய வாசனையை அது இன்னும் கொண்டிருப்பதால், குழந்தை வைக்கப்பட்டிருக்கும் சிகிச்சைக் கலத்தில் வைக்கப்படலாம். சிலர் தாய், தந்தை அல்லது சகோதரன், சகோதரி படத்தைக் குழந்தைக்கு ஏறக்குறைய பத்து அங்குல தூரத்தில் வைக்கின்றனர்.
எலிஸியின் நிலைமையைக் கவனியுங்கள். 1971-ல் எதிர்பார்க்கப்பட்டதற்கு பத்து வாரங்களுக்கு முன்னதாக பிறந்தாள். அவளுடைய எடை 3 பவுண்டு 5 அவுன்ஸ் இருந்தது. அவளுடைய பெற்றோர் அவளை வாரத்துக்கு இரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அவளுடைய தாய் பெட்டி கூறுகிறாள்: “என்னுடைய முதல் குழந்தையோடும் அதைத் தொடர்ந்து பிறந்த மூன்று பிள்ளைகளோடும் எனக்கு இருந்த நெருக்கம் எலிஸியுடன் இருக்கவில்லை.” என்றாலும் பெட்டி தொடர்ந்து கூறுகிறாள்: “கடந்த ஆண்டுகளினூடே எங்கள் உறவு நெருங்கியதாயிருந்திருக்கிறது. என் பிள்ளைகளில் எலிஸி அதிக உதவியாக இருக்கும் அருமையான பிள்ளையாக ஆகியிருக்கிறாள்.”
இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைக்குத் தாய் பரிபூரண உணவாகிய தாய்ப் பாலை அளிக்கலாம். இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளின் தாய்மார்களுடைய பால் முழு வளர்ச்சியுற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் பாலிலிருந்து வித்தியாசப்படுகிறது, இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகள் அதில் நல்ல பலனைக் காண்கின்றனர் என்று டொரான்டோவிலுள்ள கானடா தேசத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அமெரிக்க மருத்துவக் கழகப் பத்திரிகை (The Journal of the American Medical Association) குறிப்பிடுகிறபடி, “இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சிக்காகத் தாய்ப் பாலிலுள்ள புரதச்சத்தையும் மற்ற போஷக்குப் பொருட்களையும் நன்கு பயன்படுத்த முடிகிறது.”
மற்றவர்கள் என்ன செய்யலாம்
நீங்கள் இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருடைய நண்பரா அல்லது உறவினரா? அப்படியானால், நீங்கள் செய்வதற்கு அதிகம் இருக்கிறது. மளிகைச் சாமான்கள் வாங்க வேண்டும், சமையல் செய்ய வேண்டும், வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும், துணிமணிகளைத் துவைக்க வேண்டும், ஒருவேளை மற்ற பிள்ளைகளையும் கவனிக்க வேண்டும். இந்தக் காரியங்களில் உங்களுடைய ஆதரவு பெற்றோருக்கு அதிக உதவியாயிருக்கக்கூடும். ஏனென்றால் அவர்கள் ஒருவேளை தீவிர சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தங்களுடைய குழந்தையைப் பார்ப்பதற்கு அடிக்கடி வெகுதூரம் செல்லவேண்டியதாக இருக்கலாம்.
மேற்கூறப்பட்ட அனைத்து காரியங்களையும் தன்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அளித்தார்கள் என்று ஐந்து வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்துவிட்ட குழந்தையின் தாய் கிறிஸ்டி சொன்னாள். “அந்த முதல் ஒரு சில வாரங்களுக்கு அவர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியின் மற்றும் பெலத்தின் ஊற்றுகளாக இருந்துவந்தார்கள்,” என்றாள்.
கடிதங்களும் வெகுமதிகளும் அனுப்புவதன் மூலமும் ஆதரவு கொடுக்கப்படலாம். அவை முழு வளர்ச்சியுற்ற குழந்தைக்குக் கொடுக்கும் என்ன வெகுமதிகளாகவும் இருக்கலாம். உண்மைதான், குழந்தையின் அளவையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளுக்கான மாற்று துணிகளும் உடைகளும் கிடைக்கின்றன.
உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு தேவை என்பதை அறிவுறுத்தவேண்டிய அவசியமில்லை. நம்பிக்கையான மனநிலையை வெளிப்படுத்துகிறவர்களாக இருங்கள். கெல்லியின் தாய் மேரி சொன்னார்: “உற்சாகப்படுத்தும் ஆட்களும் பேச்சுகளுமே எனக்குத் தேவைப்பட்டது. ‘அதிகப் பாசமாக இருந்துவிட வேண்டாம்’ என்று என்னிடம் யாராவது சொன்னால் அதை நான் விரும்புவதில்லை. நான் நம்பிக்கையில் தழைத்தேன்.” அவளை ஸ்திரப்படுத்தின ஒரு வேதாகம கருத்து ஏசாயா 41:13-ல் காணப்படுகிறது: “யெகோவாவாகிய நானே, உன் கடவுளே உன் வலது கையைப் பிடித்து, ‘பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்,’ என்று சொல்லுகிறேன்.”
மேரி கூட்டுறவு கொண்ட கிறிஸ்தவ சபையின் மூப்பர்களின் சந்திப்புகள் அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. கிறிஸ்டி மற்றும் மேரி ஆகிய இரு தாய்மார்களுமே தங்களுடைய கணவர்களிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த ஆதரவு அளவிடப்பட முடியாதது என்றும் அந்த அனுபவம் தானே அவர்களை ஒருவரோடொருவர் நெருங்கிவரச் செய்தது என்றும் குறிப்பிடுகின்றனர்.
தவிர்ப்பது—ஞானமான வழி
இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைக் கவனிப்பதற்கு முயற்சி எடுப்பதைவிட அப்படிப்பட்ட பிறப்பைத் தவிர்ப்பதற்கு அதிகமான முயற்சி எடுப்பதில் ஞானம் விளங்குகிறது. ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, 24 முதல் 28 வாரத்திலுள்ள பிள்ளைப்பேறு ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒன்று தாமதிக்கப்படுவதால் மருத்துவ கவனிப்புக்கான செலவில் 2,550 ரூபாய் சேமிக்கப்படுகிறது. எனவே இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளின் பிரசவத்தைக் கவனிக்கும் நிறுவனங்களைப் பற்றிய தகவலைக் கொண்டிருப்பது நல்லது, மற்றும் ஒரு முன்னதான பிறப்பு ஏற்படுமானால் உடனடியாக செயல்படுவதற்கான ஒரு செயல் திட்டத்தைக் கொண்டிருங்கள். ஆனால் அதைவிட முக்கியமான காரியம், தாயாகப் போகிறவள் இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் மகப்பேற்றைத் தவிர்க்க முயல வேண்டும்.
முதல் காரியம், கர்ப்பமாயிருக்கும் ஒரு பெண் புகைக்கக்கூடது. மருத்துவ உலகச் செய்தி (Medical World News) கொடுத்த அறிக்கையின்படி கர்ப்பமாயிருக்கும்போது புகைத்தல் கருவின் இரத்த நாளங்களைச் சேதப்படுத்துகிறது. கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்: “கரு நாளங்கள் பாதிக்கப்படுவது, நாம் அறிந்த எடைக்குறைவு, பிறவி ஊனங்கள், புகைக்கும் பெண்களுடைய குழந்தைகள் உரிய காலத்துக்கு முன்பாகவே முழு முதிர்ச்சியுறாமல் பிறப்பது ஆகிய காரியங்களுடன் சம்பந்தப்பட்டதாயிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.”
இரண்டாவது காரியம், நீங்கள் கருவுற்றிருக்கும்போது அதிகக் களைப்பை ஏற்படுத்தும் வேலைகளிலிருந்து, உதாரணமாக பாரமான பொருட்களைத் தூக்குவது போன்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். மூன்றாவது காரியம், உடல் அல்லது உணர்ச்சி சம்பந்தப்பட்ட அதிர்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். சரீர காயம் அல்லது பெருஞ்சேதம் குறித்த செய்திகள் கர்ப்பத்தை விழுந்துபோகச் செய்யும் என்று பைபிள் சொல்லுகிறது.—யாத்திராகமம் 21:22; 1 சாமுவேல் 4:19.
இயல்பாக முழு வளர்ச்சியுறாத ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் ஓர் இக்கட்டான நிலையை எதிர்ப்பட்டால், கர்ப்பப் பெண்களைக் கவனிக்கும் அனுபவமுடைய மகப்பேறு மருத்துவரைப் பாருங்கள். இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளை ஏற்கெனவே பெற்றிருப்பவர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமந்துகொண்டிருப்பவர்களுக்கு, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது பருவ வயதினருக்கு, மற்றும் மிதமிஞ்சி மதுபானம் அருந்துகிறவர்களுக்கு அது திரும்ப நிகழக்கூடிய சாத்தியம் அதிகமாக இருக்கிறது. பெண்களை அப்படிப்பட்ட நிலைக்குள்ளாக்கும் மற்ற காரியங்களில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மற்றும் கொப்பூழ்க்கொடியில் கோளறுகளும் அடங்குகின்றன. அப்படிப்பட்ட பெண்கள் தங்களுடைய கர்ப்பக் காலத்தில் மருத்துவரின் மேற்பார்வையுடையவர்களாக இருக்க வேண்டும். கர்ப்பக் காலத்தில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தை நிச்சயப்படுத்திட சரியான உணவைக் கொண்டிருங்கள்.
என்றபோதிலும், தாயாகப் போகிறவள் ஒரு சுக பிரசவத்தைக் கொண்டிருக்க தன்னாலானதையெல்லாம் செய்தபோதிலும், எதையும் உறுதியாய்ச் சொல்ல முடியாது. இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் குழந்தைகள் பிறப்பது சர்வசாதாரணமாகிவிட்டது, அது எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் எதிர்காலத்தைப் பற்றியதென்ன? மனித பிறப்பு முறையில் இருக்கும் இந்தக் குறையைத் திருத்துவதற்கான வாய்ப்பு ஏதேனும் உண்டா? (g89 2/22)
[பக்கம் 7-ன் படம்]