இளைஞர் கேட்கின்றனர் . . .
தற்புணர்ச்சியைத் தவிர்ப்பது ஏன் அவ்வளவு கடினமாயிருக்கிறது?
“பழக்கங்கள் மென்மையான மெத்தையைப் போன்றது—அதில் ஏறிக்கொள்வது எளிது, ஆனால் அதிலிருந்து இறங்குவதோ கடினம்.” இப்படியாக ஒரு பழமொழி கூறுகிறது. இது தற்புணர்ச்சியைக் குறித்ததில் எவ்வளவு உண்மை! இதை 10 வயது முதல் 43 வயது வரைத் தன் பழக்கமாக்கிக்கொண்ட ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “இந்தப் பழக்கம் புகைபிடிக்கும் பழக்கத்தைவிட அதிக கவலைக்குரிய ஒன்று, இதை விட்டுவிடுவது கடினமாக இருந்தபோதிலும் விட்டுவிட்டேன்.”
தற்புணர்ச்சி ஏன் கெட்ட ஒரு பழக்கம் என்பதை இதற்கு முன் இதழ்களில் வந்த ஒரு கட்டுரை காண்பித்தது.a இந்தப் பழக்கத்தில் ஏன் இளைஞர்கள் அவ்வளவு எளிதில் உட்பட்டுவிடுகிறார்கள்?
இளமையின் மலரும் பருவம்
வளரும் இளைஞன் இன சம்பந்தமான ஆசைகள் பலமாகும் “இளமையின் மலரும் பருவம்” என்று பைபிள் அழைத்திடும் ஒரு காலப்பகுதிக்குள் பிரவேசிக்கிறான். (1 கொரிந்தியர் 7:36) உடல் பெற்றோராவதற்கு ஆயத்தமடைய ஆரம்பிப்பதால் சக்திவாய்ந்த இயக்குநீர்கள் சுரக்க, இவை பிறப்பு உறுப்புகளை பாதிக்கின்றன. இந்தப் பருவத்தில், அந்த உறுப்புகள் இன்பமான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை இளைஞன் அறிய வருகிறான். சில சமயங்களில், இந்தப் புதிய, கிளர்ச்சி மிகுந்த உணர்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தால், இளைஞர்கள் கூடுதலான இன்பத்திற்கும் காம உணர்ச்சியைக் கிளறுவதற்கும் இந்த உறுப்புகளை வேண்டுமென்றே தூண்டிவிடுகிறார்கள்.
தன்னுடைய உடலில் ஏற்படும் மாற்றங்களினால், ஓர் இளம் பையனோ அல்லது பெண்ணோ இனசம்பந்தப்பட்ட காரியங்களைக் குறித்து யோசித்துக் கொண்டிராத சமயங்களிலுங்கூட பாலுணர்வு சம்பந்தமாகக் கிளர்ச்சியுறக்கூடும். உதாரணமாகப் பையன்களின் மத்தியில், வித்தியாசமான கவலைகள், பயங்கள், அல்லது ஏமாற்றங்கள் அவர்களுடைய உணர்ச்சிமிகுந்த நரம்பு மண்டலத்தைப் பாதித்து பாலுணர்வைத் தூண்டிடக்கூடும். இதன் விளைவாக, விந்து நீர்மம் பெருகி இரவு நேரத்தில் கசிகிறது (நனைக்கும் கனவு ஏற்படுகிறது), ஒரு பையனின் காரியத்தில் இதை சாதாரணமாக காமக் கனவுகள் பின்தொடருகின்றன, அல்லது பாலுணர்வுத் தூண்டப்பட்டு கிளர்ச்சியடைந்தவனாய் எழுகிறான். இதே விதமாக, சில இளம் பெண்கள் தங்களையரியாமல் கிளர்ச்சியடைந்த சந்தர்ப்பங்களில் தங்களைக் காணலாம். ஓர் இளம் பெண், தன்னுடைய மாதவிடாய்க்கு முன்பு அல்லது பின்பு அதிகப்படியான பாலுணர்வு சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளைக் கொண்டிருக்கக்கூடும்.
இப்படிப்பட்ட விரும்பாத உணர்ச்சி வேகத்தை நீங்கள் அனுபவித்திருந்தால், உங்களில் ஏதும் தவறில்லை. இது இளைமையிலுள்ளவர்களின் உடலின் சாதாரண பிரதிபலிப்புகள். இப்படிப்பட்ட உணர்வுகள், அதிகப் பலமானவையாக இருந்தாலும், இவை தற்புணர்ச்சி போன்றதன்று, ஏனென்றால், இவை பெரும்பாலும் தானாக ஏற்படக்கூடியவை. நீங்கள் பெரியவர்களாகும்போது, இந்த “மலரும் இளமைப் பருவத்தைக்” கடந்திடும்போது, இந்தப் புதிய உணர்வுகளின் வேகம் குறைந்துவிடும்.
“மனதுக்கு எரிபொருள்”
சில சமயங்களில் இந்த உணர்ச்சி வேகம் ஒருவருடைய இயக்குநீர்களின் செயலால் மட்டும் ஏற்படுவதில்லை. உதாரணமாக, ஒரு ஒழுக்கங்கெட்டப் பெண்ணைச் சந்திக்கும் ஓர் இளம் மனிதனைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. அவள் அவனை முத்தமிட்டு, “வா . . . இன்பங்களினால் பூரிப்போம்,” என்று அழைக்கிறாள். அதற்குப் பின் என்ன நடக்கிறது? “உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும் . . . அவளுக்குப் பின்னே போனான்.” (நீதிமொழிகள் 7:7–22) தெளிவாகவே, இந்த இளைஞனின் காம உணர்ச்சிகள் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த காரியங்களினால் தூண்டப்பட்டது—அவனுடைய இயக்குநீர்களால் மட்டும் அல்ல! அதுபோல, ஓர் இளம் மனிதன் ஒப்புக்கொள்கிறான்: ‘என்னுடைய தற்புணர்ச்சிப் பிரச்னை முழுவதும் என்னுடைய மனதிற்குள் நான் எதை உட்கொண்டிருந்தேன் என்பதில் அடங்கியிருந்தது. ஒழுக்கங்கெட்ட நடத்தைகளை உட்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், சில சமயங்களில் நிர்வாணக் காட்சிகளைக் கொண்ட ஆபாச நிகழ்ச்சிகளையும் பார்ப்பதுண்டு. அவை உங்களுடன் நிலைத்திருக்குமளவுக்கு அதிர்ச்சியூட்டும் காட்சிகள். அவை மீண்டும் என் மனதுக்கு வந்து, தற்புணர்ச்சியில் ஈடுபட மனதுக்கு எரிபொருளாயிருந்தன.’
அநேக சமயங்களில் தற்புணர்ச்சியைத் தவிர்க்கமுடியாததாக ஆக்குவது, ஒருவர் பொழுகுபோக்குக்காக வாசிக்கிற, பார்க்கிற, அல்லது கவனித்துக் கேட்கிற காரியங்களும், பேசுகிற அல்லது தியானிக்கிற காரியங்களுமாகும். எனவே, இந்தப் பழக்கத்தை முறியடிப்பதற்கு நீங்கள் மனதில் ஏற்கும் காரியங்களைக் குறித்து கவனமாயிருக்க வேண்டியது மிகவும் அவசியம். 25 வயது பெண் ஒருத்தி பின்வருமாறு அறிக்கை செய்தாள்: “அந்தப் பழக்கத்தை என்னால் நிறுத்த முடிவதாகத் தெரியவில்லை. என்றபோதிலும், நான் காதல் கதைகளைப் படிப்பதுண்டு, இதுவே பிரச்னைக்குக் காரணமாயிருந்தது.” தற்புணர்ச்சிப் பழக்கத்திற்கு அவளை வழிநடத்தியது பாலுறவு சம்பந்தப்பட்ட அசுத்தமான எண்ணங்கள் அல்ல என்பது கவனிக்கப்படவேண்டிய காரியம். ஆம், இந்தப் பழக்கம் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதற்கான மிகப் பிரதான காரணத்தை அவளுடைய அனுபவம் காண்பிக்கிறது.
ஓர் உணர்ச்சி சம்பந்தமான “போதைமருந்து”
அந்த இளம் பெண் தொடர்ந்து கூறுகிறாள்: “மன அழுத்தம், அலைமோதல் அல்லது கவலையை வெளிவிடுவதற்கு நான் பொதுவாக தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபட்டேன். பறந்துபோகும் அந்த இன்பம், எரிச்சலான நிலையில் தன்னை அமைதிப்படுத்த குடிகாரன் அருந்தும் குடியைப் போன்றிருந்தது.” அவள் இதில் தனித்தில்லை. ஆய்வாளர்களாகிய சூஸேனும் அர்விங் சர்னாஃப்பும் பின்வருமாறு எழுதுகிறார்கள்: “சிலருடைய காரியத்தில், தாங்கள் மறுக்கப்படும்போது அல்லது ஏதாவது ஒரு காரியத்தில் ஏமாற்றமடையும்போது தற்புணர்ச்சி தாங்கள் ஆறுதலுக்குத் திரும்பும் ஒரு பழக்கமாகிவிடக்கூடும். என்றபோதிலும், மற்றவர்கள் எப்பொழுதாவது மிகக் கடுமையான உணர்ச்சி அழுத்தத்திலிருக்கும்போது மட்டுமே இவ்வழிக்குத் திரும்பக்கூடும்.”
டாக்டர் ஷர்வின் உட்ஸ் கூட்டிடும் கருத்து பின்வருமாறு: “தற்புணர்ச்சிப் பழக்க அனுபவங்களில் பெருமளவு காம உணர்ச்சிகளினால் தூண்டப்படுவதைவிட, பொதுவாக கவலையாலும், மன அழுத்தத்தாலும் போரடிப்பதாலுமே தூண்டப்படுகிறது, இவற்றிற்கு அது நாடப்படும் ஒரு போதைமருந்தாக இருக்கிறது.” எனவே ஒருவர் மன அமைதி இழந்திருக்கும்போது, சோர்ந்துவிட்டிருக்கும்போது தனிமையாக உணரும்போது அல்லது கடுமையான அழுத்தத்தில் இருக்கும்போது, இந்தப் பழக்கம் ஒருவருடைய துன்பங்களைத் துடைப்பதற்கு வசதியான “போதை மருந்தாக” ஆகிவிடுகிறது. (நீதிமொழிகள் 31:6, 7-ஐ ஒப்பிடவும்.) எனவே, தற்புணர்ச்சியைத் தவிர்ப்பதற்கு, பிரச்னைகளை மேற்கொள்வதற்கு இது ஒரு முதிர்ச்சியற்ற வழி என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும், மற்றும் . . .
‘குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிடுங்கள்’
அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.” (1 கொரிந்தியர் 13:11) பிரச்னைகள் ஏற்படும்போது தற்புணர்ச்சியை நாடுவது குழந்தைத்தனமாகும். ஒருமுறை ஊன்றிவிட்டால், இந்தக் “குழந்தைக்கேற்ற தன்மைகள்” பெரியவர்களாகும்போதும் தொடரக்கூடும். உதாரணமாக, ஒரு பையன் ஒன்பது வயதாயிருக்கும்போது ஒரு சமயம் பள்ளியில் அதிகக் கடினமான ஒரு கணக்கைச் செய்ய வேண்டியதாயிருந்தது. தன்னுடைய மனதைத் தேற்ற அவன் முதலில் தற்புணர்ச்சியை நாடினான். அந்தச் சமயத்திலிருந்து அவன் கடினமான பிரச்னைகளை எதிர்ப்படும்போதெல்லாம் அந்தப் பழக்கத்தினிடமாகத் திரும்பினான். இப்பொழுது அவன் பெரிய ஓர் ஆளாக ஒப்புக்கொள்வதாவது: “இன்றுவரையுமாக, என் மூளைக்குக் கடினமான ஒரு வேலை கொடுக்கப்படுமானால் தற்புணர்ச்சியின் பலமான வேகம் என்னை அழைக்கிறது. இப்பழக்கமின்றி நான் வேலை செய்ய முடியாது.”
முன் கூறப்பட்ட விவகாரம் ஒருவேளை கடைமுனைக் காரியமாகத் தென்பட்டாலும், உணர்ச்சி சம்பந்தப்பட்ட கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க இந்தப் “போதை மருந்தைப்” பயன்படுத்துவதில் உண்மையிலேயே ஆபத்து இருக்கிறது. தற்புணர்ச்சி மூலம் மன சம்பந்தமாக விடுதலைக் காண நினைப்பதைவிட “யோசிக்கும் திறமையைக்” காண்பித்து பிரச்னையை நேரடியாகத் தாக்குங்கள். (நீதிமொழிகள் 1:4, NW) பிரச்னைகளும் ஏமாற்றங்களும் அளவுக்கதிகமாகச் செல்வதாய் இருந்தால், வேறு எந்த மனிதனும் உங்கள் நிலைமையைப் புரியவில்லையே என்று நீங்கள் உணர்ந்தாலும், கடவுள் உங்கள் நிலைமையைப் புரிந்தவராயிருப்பதால், “அவர் [கடவுள்] உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிட” கற்றுக்கொள்ளுங்கள். (1 பேதுரு 5:6, 7) “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் [அல்லது மனுஷியில்] வல்லமையாய்ப் பலப்படு”வதற்கு உதவி செய்ய கடவுளை அனுமதியுங்கள். (எபேசியர் 3:16) வாரந்தோறும் தற்புணர்ச்சியை ஒரு “போதை மருந்தாக” பயன்படுத்துவதற்கு மாறாக, “ஆண்களாயிருங்கள் [அல்லது பெண்களாயிருங்கள், குழந்தைகளாய் அல்ல], பலப்படுங்கள்.”—1 கொரிந்தியர் 16:13, NW.
தற்புணர்ச்சியும் பெரியவர்களாகி பாலுறவும் (Masturbation and Adult Sexuality) என்ற தங்கள் புத்தகத்தில் சர்னாஃப்ஸ் குறிப்பிட்டதாவது: “தாங்கள் ஏன் எப்படி குறைபடுகிறார்கள் என்பது தவிர, தற்புணர்ச்சியில் ஈடுபட தீர்மானிப்பது, நோக்கமுடைய சமூக செயல்கள் மூலம் அந்தக் குறைபாட்டைத் தீர்ப்பதற்கு அவர்கள் முயலாதிருக்கிறார்கள் என்பதை அர்த்தப்படுத்துகிறது. . . . உண்மைதான், ஒருவர் தன்னுடைய பிரச்னைகள் தனக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதைக் காணும்போது, அவற்றுக்குத் தீர்வு காண, அதே சமயத்தில் தற்புணர்ச்சியில் ஈடுபட முயல்வதை ஒரு பொது நியதியாகக் கொள்ளக்கூடும். ஆனால் பின்னால் குறிப்பிடப்பட்ட ‘பரிகாரத்தைத்’ தெரிந்துகொள்ளும் சோதனை பலமானது, காரணம், உங்கள் உடலை நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடனேயே எடுத்துச் செல்கிறீர்கள். எனவே, உங்கள் பிரச்னைகளுக்கு உண்மையான பரிகாரங்களைக் கணிக்கவும் அவற்றை அமலாக்கவும் கவனத்தை ஒருமுகப்படுத்துவதே மிகச் சிறந்தது.” பிரச்னைகளை எதிர்ப்படும்போது ஒருவன் அவற்றுக்குப் பரிகாரம் காண்பதற்கு பதிலாக தற்புணர்ச்சியில் ஈடுபடுவானானால், அந்தப் பழக்கம் உண்மையிலேயே ஒரு கட்டாய பழக்கமாகிவிடும்.
“மிகப் பலமாக அடிமையாக்கிவிடும் ஒன்று”
பதினோரு வயதில் ஆரம்பித்த தற்புணர்ச்சிப் பழக்கத்தோடு 15 வருடங்களாகப் போராடிய ஒரு மனிதன் இப்படியாகச் சொன்னான்: “அது மிகப் பலமாக அடிமையாக்கிவிடும் ஒன்று—அது சாதாரணமாக கருதக்கூடிய ஒன்று அல்ல. போதை மருந்து அல்லது மதுபானம் அருந்துதலாகிய எந்த ஒரு பழக்கத்தைப் போலவே பழக்கமாகிவிடும்.” பெனலோப் லீச் எழுதிய உங்கள் வளரும் பிள்ளை (Your Growing Child) என்ற புத்தகம் விவரிக்கிறது: “தற்புணர்ச்சியிலிருந்து தனக்குக் கிடைக்கும் இன்பமும் களிப்பும் தனக்குக் கட்டாயமாகிவிட்டது, ஏனென்றால் அவனுடைய வாழ்க்கையின் மற்ற அம்சங்கள் அவனுக்கு சகிக்கக்கூடாததாகிவிட்டது. ஒரு பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ஒருவனைப் போல அவன் அதிகமதிகமாக தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபடவேண்டியவனாகிறான், அப்படிச் செய்வதன் மூலம் அதற்குப் பதிலாக அமையும் மற்ற இன்பங்களிலிருந்து தன்னை அதிகமாக துண்டித்துக்கொள்கிறான்.”
ஒருவனுடைய வாழ்க்கையில் காரியங்கள் சீராகச் செல்லாதபோது தற்புணர்ச்சியை வெறும் இன்பத்துக்கென தேடும் அந்தத் தூண்டுதல் ஒருவனைப் ‘பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமையாக்கி’விடும். (தீத்து 3:3) என்றாலும் பவுல் அப்போஸ்தலன் கூறுகிறான்: “நான் ஒன்றிற்கும் அடிமைப்பட மாட்டேன்.” (1 கொரிந்தியர் 6:12) தன்னுடைய இச்சைகள் தனக்குக் கொடிய எஜமானாயிருக்க அவன் அனுமதிக்கப்போவதில்லை. மறுபட்சத்தில், பவுல் எழுதினான்: “என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27) தன்னைத்தானே விட்டுக்கொடுப்பவனாயில்லை! தற்புணர்ச்சிப் பழக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்வது எவ்வளவு கடினமாயிருந்தாலும், இதுபோன்ற ஒரு முயற்சி எவரையும் விடுவித்திடும்.b (g87 11⁄8)
[அடிக்குறிப்புகள்]
a அக்டோபர் 8, 1988 விழித்தெழு! பத்திரிகையைப் பார்க்கவும்.
b இந்தப் பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒருவர் எவ்விதம் போராடி மேற்கொள்ளலாம் என்பதைப் பின்னால் வரும் ஒரு கட்டுரை சிந்திக்கும்.
[பக்கம் 13-ன் படம்]
ஒழுக்கங்கெட்ட காட்சிகளைப் பார்ப்பது தற்புணர்ச்சியில் ஈடுபட “மனதுக்கு எரிபொருளாக” இருக்கிறது