அச்சக விஸ்தரிப்புக்குப் புதிய கட்டிடங்கள்
புரூக்ளின் செல்லும் பாதைகளுக்கும் மன்ஹாட்டன் பாலத்துக்கும் இடையில்தான் யெகோவாவின் சாட்சிகளின் அகில உலக அமைப்பின் தலைமை அச்சகம் இருக்கிறது. மேலே காணப்படும் படத்திலும் வலது பக்கத்திலும் இந்த ஆறு-கட்டிடத் தொகுதியை நீங்கள் காணலாம். 161-அடி நீளமுள்ள ஒரு பாலம் கூட்டப்பட்டிருக்கும் அந்த இரண்டு புதிய கட்டிடங்களாகிய 175 பர்ள் தெரு மற்றும் 160 ஜேய் தெரு கட்டிடங்களை (எண் 1) தெருக்களுக்கு எதிர்புறம் இருக்கும் முன்னாலிருந்த கட்டிடங்களாகிய நான்கு-நகர-கட்டிடத் தொகுதியுடன் இணைக்கிறது (எண் 2).
தெருக்களுக்கு மேல் 51-அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்தப் 14-அடி அகலமும் 16-அடி உயரமுமுள்ள இணைப்புப் பாலம் 1986-ன் வசந்த காலத்தில் முடிக்கப்பட்டது. அச்சகத்தின் அச்சறையிலிருந்து 175 பர்ள் தெருவிலுள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடிக்குச் செல்ல இந்தப் பாலம் வசதியாக இருக்கிறது.
முதலாவது 1917-ல் கட்டப்பட்டதும், பின்பு 1947-ல் கூட்டப்பட்டதுமான பர்ள் தெரு கட்டிடம் யெகோவாவின் சாட்சிகளால் ஜனவரி 7, 1983-ல் கிரயத்துக்கு வாங்கப்பட்டது. அதில் வாடகைக்கிருந்த கடைசி குடித்தனக்காரர் ஜூலை 1985-ல் வெளியேறினார். அவர்கள் எல்லாரும் காலிசெய்வதற்கு முன்பே சாட்சிகளின் கட்டிடங்கட்டும் குழு ஒன்று அந்தக் கட்டிடத்தைப் புதுப்பிக்க ஆரம்பித்துவிட்டது.
முதலில் ஒரு புதிய தளம் போடப்பட்டு 1,35,000 லிட்டர் கொள்ளளவைக் கொண்ட ஒரு தண்ணீர் தொட்டி நிறுவப்பட்டது. கட்டிடத்துக்குள் சாமான்களை இடம்விட்டு இடம் எடுத்துச்செல்வதற்கு 6,000 கிலோ எடை தாங்கும் சாமான் இயந்திர ஏற்றம் ஒன்று புதிதாகக் கூட்டப்பட்டது, மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லும் இயந்திர ஏற்றம் ஒன்று மாற்றப்பட்டது. தரையின் பலப்பகுதி இப்பாக்ஸி என்ற ஒருவித கலவையால் பூசப்பட்டது. நகரத்தின் கட்டிட தேவைகளைப் பூர்த்தி செய்யாத பழைய வெளிச் சுவர்கள் நீக்கப்பட்டு அவற்றிற்கு பதிலாக மின்பாயாமல் காப்பீடு செய்யும் புதிய செங்கல் சுவர்கள் கட்டப்பட்டன. அலுமினிய சன்னல் சட்டங்களும் மின்தடக் கண்ணாடிகளும் பொருத்தப்பட்டன. முழு கட்டிடமும் உள்ளும் புறமுமாக புதிதாய் வர்ணம் பூசப்பட்டது.
இதற்கிடையில், டிசம்பர் 11, 1986-ல் 175 பர்ள் தெரு கட்டிடத்தைச் சேர்ந்தாற்போலிருந்த 160 ஜேய் தெரு கட்டிடமும் கிரயத்திற்கு வாங்கப்பட்டது. 1928-ல் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் அதன் குடித்தனக்காரர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இன்னும் அதில் குடியிருக்கின்றனர். இவர்கள் வெளியேறுகையில் சுத்தம் செய்யும் பணியும் புதுப்பிக்கும் பணியும் தொடரும். கூடுமானவரை, இந்த இரண்டு கட்டிடங்களுக்கும் இணைப்பு ஏற்படுத்தப்படும். இப்படியாக 160 ஜேய் தெரு கட்டிடம் மற்ற ஐந்து அச்சகக் கட்டிடங்களோடு ஒன்றாக இணைக்கப்படும்.
அளவில் ஏறக்குறைய ஒன்றாயிருக்கும் இந்த அண்மையில் கூட்டப்பட்ட அச்சகக் கட்டிடங்கள் (எண் 1), 3,60,000 சதுர அடி தரைப் பரப்பளவைக் கூட்டுகிறது. அந்த மற்ற நான்கு கட்டிடங்களும் ஒன்று சேர்ந்து 6,62,000 சதுர அடி தரை பரப்பளவைக் கொண்டிருக்கின்றன. எனவே, கூட்டப்பட்டிருக்கும் இந்தப் புதிய கட்டிடங்கள் ஏறக்குறைய 55 சதவிகித கூடுதல் இடத்தை அளிக்கிறது—மொத்தத்தில் ஏறக்குறைய 10,22,000 சதுர அடி தரை பரப்பளவு! அது 23 ஏக்கர்களுக்கும் அதிகம்!
ஆனால் பைபிள் பிரசுரங்களுக்குத் தேவை அதிகரித்துக்கொண்டிருக்க, புதிதாகக் கூட்டப்பட்ட இந்த வசதிகளும் போதுமானதாக இல்லாத நிலைக்கு வந்துவிடும்போது, அப்பொழுது என்ன? சரி, பக்கம் 10-ல் காணப்படும் படத்தில் எண் 3 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியை நீங்கள் கவனிப்பீர்கள். 60,000 சதுர அடி நிலப்பரப்பையுடைய அந்த இடம் யெகோவாவின் சாட்சிகளால் கிரயத்துக்கு வாங்கப்பட்டிருக்கிறது. அவசியப்பட்டால், இந்த இடமும் கூடுதல் அச்சக விஸ்தரிப்புக்குப் பயன்படுத்தப்படலாம்.
நியு யார்க் துறைமுகப் பகுதியில் இருப்பதால், பைபிள் பிரசுரங்களை உலகமுழுவதும் அனுப்புவதற்கு இந்த அச்சக வசதிகள் உதவியாயிருக்கின்றன. பக்கத்திலிருக்கும் படத்தில் நீங்கள் பார்க்கிறபடி (எண் 4), அவை யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்தின் அலுவலகங்களுக்கும் வசதியாக இருக்கின்றன. அதோடுகூட, தலைமைக் காரியாலயத்தில் பணிபுரியும் 2,500 வாலன்டியர் ஊழியர்கள் தங்கும் கட்டிடங்களும் அலுவலகம், அச்சகம் மற்றும் பிரசுரங்களை அனுப்புவதற்கு ஆயத்தம் செய்யும் கூட்டுக்கட்டிடங்களும் நடந்து செல்லும் தூரத்திலுள்ளன.—பிரசுரங்களை அனுப்புவதற்கான வசதிகளின்பேரில் படங்களுக்கும் விவரங்களுக்கும் செப்டம்பர் 8, 1988 விழித்தெழு! பத்திரிகையைப் பாருங்கள்.
1986-ன் பிற்பகுதியில், அச்சகத்தின் பல வேலைகள் 175 பர்ள் தெரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. இதனால் அச்சியந்திரங்களுக்கு அருகிலேயே தேவையான அச்சுத் தாள்களை சேமித்து வைப்பதற்கு இப்பொழுது வசதியாக இருக்கிறது. 175 பர்ள் தெரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டிருக்கும் ஒரு சில அச்சக வேலைகளைப் பார்ப்போம். (g87 12⁄22)
[பக்கம் 12-ன் பெட்டி/படங்கள்]
பர்ள் தெரு கட்டிடத்தில் செய்யப்படும் வேலைகள்
கெட்டி அட்டைத்தாள்களாலான இந்த அட்டைகள் புத்தகங்களுக்கு அட்டைப்போட பயன்படுத்தப்படுகிறது. அவை ஒரு விசேஷ இயந்திரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெட்டப்படுகிறது. ஐந்து வித்தியாசமான அளவுகளில் வெட்டப்படும் 7.2 டன் அட்டைகள் ஒவ்வொரு நாளும் புத்தகம் கட்டும் துறைக்கு அனுப்பப்படுகின்றன.
இயந்திரப் பிரிவில், 19 கடைசல் பட்டறைகளும், 17 வடுக்கள் அமைக்கும் இயந்திரங்களும், 6 துளைப்போடும் இயந்திரங்களும், 11 அரைப்பு இயந்திரங்களும் உள்ளன. அச்சியந்திரங்களையும் புத்தகங்கட்டும் இயந்திரங்களையும் தொடர்ந்து ஓட்டுவதற்கு இந்த இயந்திரங்களின் இயக்கம் அவசியம். இந்த வேலைகளை வெளியில் வர்த்தகத்துறையினரிடம் கொடுத்து செய்யப்படுவதுடன் ஒப்பிடுகையில், இது ஏராளமான பணச் செலவை மிச்சப்படுத்துவதுமட்டுமின்றி, எமது அச்சகத்துக்கும், அலுவலகத்துக்கும், குடியிருப்புக் கட்டிடத் தொகுதிகளுக்கும் தேவைப்படும் பணிகளை விரைவில் ஆற்றுகிறது.
175-டன் எடையுள்ள 161-அடி நீள பாலம் அண்மையில் வாங்கப்பட்ட கட்டிடங்களுக்குச் செல்ல இடையூரற்ற இரு-வழி போக்குவரத்துப் பாதையாக அமைகிறது. இந்தப் பாலம் 175 பர்ள் தெரு கட்டிடத்துக்கு சூடான நீராவிக் குழாய்களையும், 175 பர்ள் தெரு மற்றும் 160 ஜேய் தெரு கட்டிடங்களுக்குப் புள்ளிவிவரங்கள் மற்றும் தொலைத் தொடர்புக் கம்பிகளையும் தாங்கிச் செல்கின்றன.
ஜுன் 1982-ல் துவக்கப்பட்ட அட்டைப்பெட்டி உற்பத்தி இலாக்காவில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் அதிக வித்தியாசப்பட்ட அளவுகளில், பத்து இலட்சத்துக்கும் அதிகமான அட்டைப் பெட்டிகள் உற்பத்தியாகியிருக்கின்றன. சொந்தமாக அட்டைப்பெட்டிகளைச் செய்வதனால், பெட்டிகள் நல்ல தரமானதாக இருப்பது மட்டுமல்லாமல் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது, மற்றும் அட்டைப் பெட்டிகளுக்கான தேவையையும் நன்கு பூர்த்திசெய்கிறது.
புத்தக அட்டைகளைத் தேவைப்படுமளவுக்குப் பிளந்திடும்/மீண்டும் சுருட்டிடும்splitter⁄rewinder வேலை 1980-ல் துவங்கின. அதுமுதல், புத்தகம்கட்டும் பிரிவின் வேலைகளுக்கு புத்தக அட்டைகளை நாங்களே பிளந்து வெட்டிக்கொள்ளுதலால் ஆண்டுதோறும் பல்லாயிரம் ரூபாய் மிச்சமாகிறது.