நேரம் நீங்கள் அதன் அதிகாரியா அல்லது அதன் அடிமையா?
“ஏன் காலதாமதம்?” என்று வகுப்பில் நுழையும் ஆல்பர்ட்டைப் பார்த்து ஆசிரியர் கேட்டார். “ஏனென்றால், என்னுடைய சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நான் பள்ளிக்கு ஓடிவந்தேன்,” என்று மேல்மூச்சு வாங்க பதில் சொன்னான் ஆல்பர்ட்.
“உன்னுடைய சைக்கிளை நீ ஏன் ஓட்டிவரக் கூடாது?” என்று காரணத்தை அறிந்துகொள்ள ஆசிரியர் கேட்டார். “ஏனென்றால்,” என்று விளக்க ஆரம்பித்தான் ஆல்பர்ட், “நான் சைக்கிளை நிறுத்தி அதை ஓட்டிவருவதற்கு நேரம் இல்லாதளவுக்கு நான் காலதாமதமாகிவிட்டேன்.”
இந்த மிகையான, வேடிக்கையான கதை நம்மில் அனேகர் ஒவ்வொரு நாளும் எதிர்ப்படும் நிலைமையைச் சித்தரிக்கிறது. செய்வதற்கு அனேக வேலைகளும் செய்துமுடிக்கப்படவேண்டிய காரியங்களும் இருப்பதால், ஒன்றை முடித்து இன்னொன்றுக்கு விரையும் ஒரு ஓட்டத்திலிருப்பதாக நாம் உணரக்கூடும். ஆனால், ஆல்பர்ட்டைப் போல், நாம் சற்று நின்று காரியங்களை நல்ல விதத்தில் மாற்றிமைக்கத் திட்டமிடுவதற்கு நமக்கு நேரம் இல்லை என்று சில வேலைகளில் மெதுவாகிவிடுகிறோம்.
என்றாலும், நாம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும், காலப்போக்கில் அதிகத்தைச் சாதிக்கக்கூடும், மேலும் நேரத்தை நன்கு கையாளுவதற்கு நாம் சற்று நின்று நம்முடைய திறமைகளைத் தீட்டுவோமானால் அழுத்தத்தைக் குறைக்கவும் கூடும். நேரத்தைக் கொடுமையான அதிகாரியாக நோக்குவதற்குப் பதிலாக, அது நமக்கு உதவியாக இருக்கும் ஒரு ஊழியனாக அமையும்.
உங்களுடைய நேரத்தை இன்னும் திறமையாகக் கையாளும் காரியத்தை நீங்கள் எவ்விதம் சாதிக்கலாம்? சில ஆலோசனைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை நீங்கள் வாசிக்கும் போது, உங்கள் தேவைகளுக்குப் பொருந்துகின்றவற்றைத் தெரிந்துகொண்டு, அவற்றை உங்கள் சூழ்நிலைக்கேற்ப பொருத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் நாளைத் திட்டமிடுங்கள்
உங்கள் நாள் ஆரம்பித்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பு செய்வதற்குக் காரியங்கள் கணக்கற்றிருப்பதாகத் தெரியும். அத்தனைக் கடமைகளையும் எண்ணிப்பார்ப்பதுதானே அந்த நாளை நீங்கள் வெறுக்கும்படிச் செய்யும். நீங்கள் எங்கே துவங்க வேண்டும்? உங்கள் நாளைத் திட்டமிடுவதில் துவங்கவேண்டும்.
செய்யவேண்டிய காரியங்களின் பட்டியலை எழுதுவதுடன் அனேகர் தங்கள் நாளை துவங்குகிறார்கள். ஒரு பெரிய அமைப்பில் அனேக பொறுப்புகளைக்கொண்டிருக்கும் ஒருவர், எப்படி தன்னுடைய அட்டவணைப்படி காரியங்களைச் செய்ய முடிகிறது என்பதை விளக்குகிறார். அவர் சொல்லுகிறார்: “செய்யவேண்டிய காரியங்களின் ஒரு பட்டியலை நான் வைத்துக்கொள்கிறேன். புதிய வேலைகள் செய்யவேண்டியிருக்கும்போது அல்லது மனதுக்கு வரும்போது, அவற்றை அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன். பிறகு ஒவ்வொன்றாக செய்து முடிக்கையில், முடித்தவற்றைப் பட்டியலிலிருந்து அடித்துவிடுகிறேன்.”
இதுபோன்று எழுத்தில் கொண்டிருக்கும் திட்டம் ஒருவேளை உங்கள் அனுதின வேலைகளை ஒழுங்குபடுத்த உதவக்கூடுமா? ‘அது நான் வேலைகளை ஆரம்பிக்க எனக்கு உதவக்கூடும், ஆனால் என்னுடைய பட்டியலிலுள்ள எல்லாவற்றையும் நான் செய்துமுடிக்க மாட்டேனே!’ என்பது உங்கள் பதிலாக இருக்கக்கூடும். நீங்கள் ஒருவேளை சரியாக இருக்கக்கூடும். அதனால்தான் உங்களுக்கு உதவியாக இருக்கும்படி. . .
முதன்மையானவற்றை உறுதிசெய்துகொள்ளுங்கள்
உங்கள் பட்டியலிலுள்ள ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசை எண் கொடுப்பதன் மூலம் முதன்மையானவற்றை உறுதிசெய்துகொள்ளலாம். கூடுமானவரை, ஒவ்வொன்றையும் அந்த வரிசையிலேயே கையாளுங்கள். நீங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டிய சமயங்களும் இருக்கக்கூடும் என்பது உண்மைதான். உங்களுடைய சூழ்நிலையையும் விருப்பத்தையும் பொருத்து ஒரு காரியத்தை அதன் வரிசைக்கிரமப்படி கையாளுவதற்கு விதிவிலக்கு இருக்கக்கூடும். எனவே சற்று மாற்றிமைத்துக்கொள்ளும் நிலையிலிருங்கள். கட்டுப்பாட்டில் தரித்திருப்பதுதானே உங்கள் நோக்கமாயிருப்பதால் நீங்கள் ஒவ்வொரு நாளும் சாதித்திடும் காரியம் தற்செயல் நிகழ்வாக இருப்பதற்கு மாறாக உங்கள் தெரிவின் அடிப்படையிலிருக்கட்டும்.
ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குப் போக அவசரப்படாதீர்கள். மேலும் பட்டியலிட்ட எல்லாவற்றையும் செய்துமுடிக்க வேண்டுமே என்று கவலைப்படாதீர்கள். நேரத்தைக் கையாளுவது குறித்த ஆலோசகர் ஆலன் லேக்கீன் வலியுறுத்தும் குறிப்பு: “ஒருவர் செய்யவேண்டிய காரியங்களின் பட்டியலில் கடைசிவரைச் செல்வது அரிய காரியம். அந்தப் பட்டியலைப் பூர்த்திசெய்வது முக்கியமல்ல, ஆனால் உங்கள் நேரத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்துவதே முக்கியம்.”
உங்களுடைய நேரத்தில் பெரும்பகுதியை உண்மையிலேயே முக்கியமானவற்றிற்குத் திருப்பியிருப்பீர்களானால் இதைச் செய்தவர்களாயிருப்பீர்கள். செய்துமுடிக்கப்படாத காரியங்களைக் குறித்ததில், அவற்றை மற்றவர்களிடம் ஒப்படைக்கக்கூடுமா, அல்லது மறுநாள் பட்டியலுக்கு மாற்றக்கூடுமா என்று பாருங்கள். குறைந்த முக்கியத்துவமுடைய காரியங்களை நன்கு நோட்டமிடுவது அவை அவசியமற்றதாகவும் இருக்கக்கூடும் என்று காண்பிக்கிறது. மறுபட்சத்தில், இன்றைய பட்டியலின் கடைசியில் உள்ள ஒரு காரியம் மறுநாள் பட்டியலில் முதல் முக்கியத்துவமுடையதாகலாம்.
ஆனால் உங்கள் பட்டியலில் எந்த செயல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன என்பதை நீங்கள் எப்படி தீர்மானிப்பீர்கள்? கடமைகளின் ஒரு பெரிய பட்டியலைப் பார்க்கும்போது, அனேக காரியங்கள் ஒரே அளவான முக்கியத்துவமுடையதாய்த் தென்படக்கூடும். எனவே முதன்மையானவற்றைத் திறம்பட்டவிதத்தில் உறுதிசெய்துகொள்ள . . .
“அவசரமானவற்றையும்” “முக்கியமானவற்றையும்” வித்தியாசப்படுத்துங்கள்
ஒருவன் “தன்னுடைய கடினமான உழைப்பின் நற்பலனைக் காணவேண்டும்” என்று பைபிள் காலங்களின் ஞானமுள்ள ஒரு அரசன் கூறினான். (பிரசங்கி 3:13, NW) சில வேலைகள் பிற வேலைகளைவிட நல்ல பலன்களைக் கொடுக்கிறது. எனவே செய்யப்படவேண்டிய ஒரு வேலைப் பட்டியலைப் பார்க்கும்போது, அவை ஒவ்வொன்றும் கொண்டுவரக்கூடிய பலன்களைச் சிந்தியுங்கள். அந்த வேலையை முடிப்பது குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்துமா? உங்களுடைய கடின உழைப்பின் “நற்பலனைக் காண்”பீர்களா? அப்படி இல்லாவிட்டால், அது முதல் முக்கியத்துவமுடைய வேலையாக இருக்கமுடியாது.
உண்மைதான், முதல் பார்வையில் உங்கள் பட்டியலிலுள்ள எல்லாமே முக்கியமானவையாகத் தோன்றும். அவசரமான காரியங்கள் எல்லா சமயத்திலும் முக்கியமானவையாக, அதிக நேரத்தை உட்படுத்தும் ஒன்றாக இருக்கின்றனவா? நியு ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தில் நேரம் கையாளும் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் மைக்கெல் லெபோவஃப் இந்தக் காரியத்தைக் குறிப்பிடுகிறார்: “முக்கியமான காரியங்கள் அவசரமானவையாக இருப்பதில்லை, அவசரமான காரியங்கள் முக்கியமானவையாக இருப்பதில்லை. நீங்கள் குறித்த நேரத்தில் ஓர் இடத்திற்கு செல்லமுடியாமல் காலதாமதமாகிவிடும்போது, உங்கள் வாகனத்தின் காற்று இல்லாத டயரை பழுதுபார்ப்பதானது உங்கள் வாகன ஈட்டுறுதிப் பணத்தைக் கட்ட வேண்டியதைக் குறித்து நினைவில் கொண்டிப்பதைப் பார்க்கிலும் மிக அவசரமானது, ஆனால் வேறு சமயங்களில் அதன் (சக்கர டயரின்) முக்கியத்துவம் ஒப்பிடுகையில் பெரும்பாலும் குறைந்ததே.”
பின்பு அவர் புலம்புவதாவது: “எதிர்பாராதவிதமாக, அவசரம் என்ற கொடுமையின்கீழ் நம்மில் பலர் அந்தத் தீயை அணைக்கப் போராடிக்கொண்டிருக்கிறோம். பலன் என்னவென்றால், வாழ்க்கையில் குறைந்த அவசரமுடைய, ஆனால் அதிக முக்கியமான காரியங்களை நாம் அசட்டை செய்துவிடுகிறோம். அது திறமையாகக் கையாளும் தன்மையைக் கொன்றுவிடும் மகா கொலைப்பாதகன்.”
எனவே முதன்மையானவற்றை உறுதிப்படுத்தும் காரியத்தில், எந்தக் காரியங்கள் அதிக முக்கியமானவை என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பின்பு இவற்றில் அதிக நேரத்தைச் செலவு செய்ய முயலுங்கள். ஒருவேளை அவசரமான காரியம் உடனடியான கவனத்தைத் தேவைப்படுத்துவதாயிராது. அதற்கு அதிக நேரம் ஒதுக்குவது நியாயமாயிருக்கிறதா? அதை வேகமாகச் செய்துமுடித்துவிட்டு, அதிக சாதனைமிகுந்த ஒரு காரியத்திற்குப் போகக்கூடுமா? இதைக் காட்டிலும் சிறந்தது, அதை வேறு யாருக்காவது நியமிக்கமுடியுமா?
உங்கள் அருகே இருக்கும் எந்த ஒரு வேலையை செய்வதைப் பார்க்கிலும் முக்கிய பலன்களைத் தந்திடும் ஒரு வேலையைச் செய்வது அதிக பலனுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். கூடுமானவரை உண்மையான சாதனையில் விளைவடையும் செயல்களுக்கு உங்களுடைய முயற்சிகளில் அதிகத்தை உட்படுத்துங்கள்.
80/20 விதிமுறை
இதுவரை சிந்தித்த நியமங்களைப் பொருத்துகையில், உங்களுடைய ஒரு நாள் வேலையின் முக்கியத்துவம் எத்தனை சதவிகிதமாக இருந்தால் நீங்கள் அதை முதன்மை நிலையில் வைப்பீர்கள்? உண்மைதான், அது உங்களுக்கென்று இருக்கும் பொறுப்புகளைப் பொருத்திருக்கும். ஆனால் அனேக சந்தர்ப்பங்களில் முதல் முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களை நீங்கள் 20 சதவிகிதத்துக்குக் குறைத்திடலாம் என்று நேரத்தைக் கையாளுவதில் நிபுணர்களாயிருப்பவர் பலர் உணருகின்றனர். ஒரு வழிகாட்டியாக 80/20 விதிமுறையைக் குறிப்பிடுகின்றனர்.
இந்த விதிமுறை 19-வது நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய பொருளியல் வல்லுனர் வில்ஃப்ரெடோ பெரேடோ என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி 20 சதவிகித செயல்முதல் 80 சதவிகித பலன்களைக் கொடுக்கிறது. நீங்கள் கவனமாயிருப்பீர்களானால், அனுதின வாழ்க்கையில் பெரேடோவின் நியமம் அனேக சந்தர்ப்பங்களில் பொருந்துவதைக் கவனிப்பீர்கள். ஆனால் நீங்கள் நேரத்தைக் கையாளும் காரியத்தில் 80/20 விதிமுறை எப்படி பொருத்தப்படலாம்?
செய்ய வேண்டிய காரியங்களின் பட்டியலில் இருப்பவற்றை ஆராய்ந்துபாருங்கள். ஒருவேளை பத்தில் இரண்டு காரியங்களை செய்துமுடிப்பதன் மூலம் நீங்கள் ஒருவேளை 80 சதவிகிதம் திறம்பட்டவர்களாக இருக்கக்கூடும். அப்படியானால், உங்கள் பட்டியலில் இரண்டு மிக முக்கியமான காரியங்கள் இருக்கின்றன. மேலும், ஒரு வேலையில் நீங்கள் இறங்குவதற்கு முன்பு அதை ஆய்வு செய்யுங்கள். உங்களுடைய நோக்கத்திற்கு அதில் எவ்வளவு உண்மையிலேயே முக்கியமானது? வேலையின் எந்தப் பாகம் அதிகக் குறிப்பிடத்தக்க பலன்களைக் கொடுக்கும்? அந்த வேலையின் இந்தப் பகுதிதான் முதன்மையானது.
நேரம் கையாளுதல் சம்பந்தமான ஆலோசகர் டுரூ ஸ்கட் பெரேடோவின் விதிமுறையை சிந்தித்தப் பிறகு, அதை உங்களுக்குச் செயல்படச் செய்வது எப்படி என்பதைக் குறித்து விளக்குகிறார்: “உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற அவசியமான அடிப்படைக் கூறுகளைக் கண்டுபிடியுங்கள். இந்தக் காரியங்களை முதலில் செய்யுங்கள். உங்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் மிக அதிகப் பலன்கள் கிடைக்கும்.”
நற்பலன்களை அனுபவித்து மகிழுங்கள்
உங்களுடைய நேரத்தின் அதிகாரியாக இருப்பது, ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் அல்லது நெருக்கடியான ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு நெருக்கடிக்குச் செல்லும் காரியம் அல்ல என்பதை இந்தக் கட்டத்தில் நீங்கள் நன்கு மதித்துணரக்கூடும். மாறாக, நேரத்தை திறம்பட்டவிதத்தில் கையாளுவது என்பது பொருத்தமான வேலையை இப்பொழுதே தெரிந்துகொள்வதைக் குறிக்கிறது. எந்த வேலைகள் மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும் என்பதைப் பகுத்துணர்ந்து கூடுமானவரை உங்களுடைய நேரத்தை இவற்றிற்காகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.
உங்களுடைய நேரத்தை நீங்கள் தனிப்பட்டவிதத்தில் திட்டமிடுவது குறித்து எந்தவிதமான திட்டமான விதிமுறைகளும் கிடையாது. இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளிலிருந்து நன்மை பெறுவதற்கு நீங்கள் வளைந்துகொடுப்பவர்களாயிருங்கள். செய்துபாருங்கள். பொருத்திப்பாருங்கள். உங்களுக்கு எது நன்றாகச் செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். இந்தப் பக்கத்திலுள்ள பெட்டியிலிருக்கும் கருத்துக்களை வாசியுங்கள். ஒரு கொடூரமான அதிகாரியை உதவக்கூடிய ஊழியனாக மாற்றுவதற்கு எவை உதவும் என்று பாருங்கள்.
உங்களுடைய நேரத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதன் மூலம், ஒவ்வொரு நாளின் முடிவிலும் உங்களுக்கு ஏற்படும் சாதனையின் உணர்வுதான் என்னே! மறுநாளுக்காக அனேக வேலைகள் இருக்கக்கூடுமென்றாலும், உங்களுடைய முயற்சிகளை மிகவும் முக்கியமான காரியங்களிடமாகத் திருப்பியிருக்கிறீர்கள் என்ற திருப்தி உங்களுக்கு ஏற்படுகிறது. உங்களுடைய கடினமான உழைப்பின் “நற்பலனைக்” காண்பீர்கள்.
கடைசியில் உண்மையிலேயே அவசியமாயிருக்கும் காரியங்களுக்குப் போதுமான நேரம் இருப்பதைக் காண்பவர்களாயிருப்பீர்கள். அப்பொழுது அலைமோதும் சூழ்நிலைகளுக்குப் அடிமையானவர்களாயிருக்க மாட்டீர்கள். எதிர்மாறாக நேரத்துக்கு நீங்கள் அதன் எஜமானனாக இருப்பீர்கள். அது உங்களுடைய வேலைகளைச் செய்வதற்கு உங்கள் திறமையைக் கூட்டுவது மட்டுமின்றி, உங்களுக்குக் கூடுதலான மகிழ்ச்சியையுங் கொண்டுவரும். (g87 12⁄8)
[பக்கம் 19-ன் பெட்டி]
நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு வழிகள்
1. வாழ்க்கையில் தெளிவான மதிப்பீடுகளையும் இலக்குகளையும் கொண்டிருங்கள். ஒவ்வொரு தினமும் முக்கியவை எது என்பதைத் தீர்மானிப்பதற்கு இது மிகவும் அத்தியாவசியம்.
2. உங்களுடைய கூர்ந்த கவனத்தைத் தேவைப்படுத்தும் வேலைகளை நீங்கள் அதிக கவனம் செலுத்தும் நிலையிலிருக்கும்போது செய்யுங்கள்.
3. தொலைப்பேசியில் ஒருவர் கிடைக்கக்கூடிய சமயம் பார்த்து அவரிடம் தொடர்புகொள்ளுங்கள்.
4. கூடுமான சமயங்களிலெல்லாம் வேலைகளை மற்றவர்களுக்கு நியமித்துவிடுங்கள். நீங்கள் அதிகத்தைச் சாதிக்க உங்களுக்கு நேரம் கிடைக்கிறது, மற்றவர்களும் அனுபவம் பெற்றிட முடிகிறது.
5. எழுத்துவேலை செய்யும்போது, அதற்கு தற்காலிகமாக ஒரு ‘நிறுத்தும் இடத்தைக்’ கொடுப்பதற்குப் பதிலாக ஒரு சமயத்தில் ஒரு வேலையை முழுவதுமாகக் கையாளுங்கள்.
6. மற்றவர்களுடன் கூட்டங்களை நடத்தும்போது, கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புக் கட்டுப்பாட்டுக்குள் இருங்கள். குறிப்பிடப்பட்ட ஆரம்ப நேரத்தையும் முடிவு நேரத்தையும் கொண்டிருங்கள்.
7. உங்களுடைய வேலையிடத்தைத் தேவையான உபகரணங்களைப் பக்கத்தில் வைத்தவர்களாய் அமைத்துக்கொள்ளுங்கள்.
8. சமூகக் கூட்டுறவுக்குரிய எல்லா அழைப்பையும் ஏற்றுக்கொள்ளும் கடமையில் இருப்பதாக உணராதீர்கள். சாதுரியமாக உங்கள் இயலாமையைத் தெரிவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
9. வாங்கவேண்டிய பொருட்களின் ஒரு புதிய பட்டியலை அடிக்கடி எழுதுவதற்கு பதிலாக, கூடுமானவரை, பட்டியலை நிலைபடுத்திக்கொள்ளுங்கள்.
10. திறமையாக வேலை செய்வதற்குப் போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
11. வரம்புக்கோட்டை அமைத்துக்கொள்ளுங்கள்.
12. தள்ளிப்போடாதீர்கள்.
13. அளவுக்கதிகமாக இருக்கும் வேலைகளைச் சிறிது சிறிதாகப் பகுத்துக்கொள்ளுங்கள்.
14. பரிபூரணத்தை எதிர்பார்ப்பவர்களாய் இராதேயுங்கள். எது உண்மையிலேயே முக்கியம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
15. காத்துக்கொண்டிருக்கும் நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடிதம் எழுதுங்கள், வாசியுங்கள், அல்லது முக்கியமான ஒரு காரியத்தை செய்துமுடியுங்கள்.
16. சில சமயங்களில் நீங்கள் தெரிந்துகொள்ளாத காரியங்களிலும் நேரம் செலவழிக்கவேண்டியதாயிருக்கும் என்பதை அறிந்தவர்களாயிருங்கள். அதைக் குறித்து எரிச்சலடைந்து நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக, அதைச் செய்து முடிக்க செயல்படுங்கள்.
[பக்கம் 17-ன் படம்]
செய்யவேண்டிய முதன்மையான காரியங்களின் பட்டியலைத் தயாரித்தல் உதவியாக இருப்பதாக அனேகர் காண்கின்றனர்
[பக்கம் 18-ன் படங்கள்]
தனிப்பட்டவிதத்தில் நேரத்தையும் வேலைகளையும் திட்டமிடுதலும் முதன்மையானவற்றை உறுதிசெய்துகொள்வதும் உலகில் அத்தனை வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும்