கடற்பாசி கரைக்கு வரும்போது கொண்டுவரப்படும்போது
மிகப் பெரிய கடற்பாசி நீங்கள் நினைப்பதைவிட உங்கள் வாழ்க்கையில் அதிகமாக பயன்படுகிறது. ஓசியானஸ் (Oceanus)பத்திரிகையில் கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள் ரான் H. மெக்பீக் மற்றும் டேல் A. கிளான்ட்ஸ் எழுதிய ஒரு கட்டுரையில் கடற்பாசி எவ்வாறு கடலிலிருந்து எடுக்கப்படுகிறது என்பது பற்றியும் அவை எப்படி நம் வாழ்கையில் பிரவேசிக்கிறது என்பது பற்றியும் குறிப்புகள் உள்ளன. கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் வடக்கு சன் டீய்கோ முதல் கர்மேல் வரை இவை அறுவடை செய்யப்படுகின்றன.
இவை வருடத்தில் மூன்று முறை நல்ல விளைந்த பருவத்தில் அறுவடை செய்யப்படலாம். நவீன அறுவடை கப்பல்கள் பின்நோக்கியவாறு இந்த கடற்பாசி செடிகளினூடே செலுத்தப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட கடற்பாசியை எடுத்துச் செல்லும் அமைப்பின் (conveyor system) அடிப்பகுதியில் பொறுத்தப்பட்டிருக்கும் முன்னும் பின்னும் மாறி மாறி செல்லும் கத்திகள் புல் வெட்டும் இயந்திரம் போன்று செயல்பட்டு, கடற்பாசியின் மேற்கட்டில் மிதந்து கொண்டிருக்கும் இலைகளைக் கடல் மட்டத்திற்கு மூன்று அடிக்குக் கீழே அறுக்கும். கன்வேயர் அறுக்கப்பட்ட கடற்பாசியைக் கப்பலுக்குள் எடுத்துச் செல்கிறது. ஒரு நாளில் அறுவடை கப்பல் 550 மெட்ரிக் டன் கடற்பாசியை அறுக்க முடியும். காலிஃபோர்னியாவில் கடற்பாசி தொழிற்சாலைகள் ஒரு வருடத்தில் மொத்தம் 156,000 மெட்ரிக் டன் கடற்பாசியை அறுவடை செய்துள்ளன.
இந்த அறுவடையினால் கடற்பாசிச் சோலை சேதப்படுத்தப்படுவதில்லை. கடற்பாசி அறுக்கப்பட்ட பகுதிக்குக் கீழே மூழ்கி இருக்கும் பகுதியில் தான் இனவிருத்தி நடைபெறுகிறது. மேலும் மிதப்புத் தன்மையும், ஒளிச்சேர்க்கையும் முழு செடியிலும் நடைபெறுகிறது. தடித்த மேல்கட்டை அறுத்துவிடப்படுவதால் அதிக சூரிய வெளிச்சம் உள்ளே சென்று அது மேல் மட்டத்திற்குக் கீழேயிருக்கும் புதிய இலைகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. விரைவில் புதிய மேல்கட்டு உண்டாகி மற்றொரு அறுவடை செய்யப்படுகிறது.
கடற்பாசி கரைக்கு வரும்போது, அது கடற்கரை பகுதியிலிருந்து அதிக தூரம் எடுத்துச் செல்லப்படுகிறது. உங்கள் சமயலறையில், உணவருந்தும் அறையில், குளியலறையில், மருந்து பெட்டியில் எல்லாம் அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இருக்கின்றன. அவை கால்நடை, கோழி தீவனங்களிலும், உரங்களிலும் உள்ளன. கடற்பாசியிலிருந்து கிடைக்கும் இரசாயனங்கள் கடைசியாக தொழிற்சாலைகளின் விளைபொருட்களிலும் உள்ளன.
கடற்பாசியின் மிகமுக்கிய உபயோகமானது அல்ஜின் (algin). அது முதலில் 1883-ல் இங்கிலாந்து தேசத்து மருந்து தயாரிப்பவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1929-ல் கெல்கோ, ஒரு சான் டீய்கோ நிறுவனம் உலகில் முதலில் அல்ஜின் விளைபொருட்களை உற்பத்தி செய்பவர்களாகும் வரை வேறு எவரும் இதை உற்பத்தி செய்யவில்லை. இப்போது காலிஃபோர்னியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பொருட்களின் ஆண்டு விற்பனை சுமார் 36 கோடி ரூபாயைத் (35 மில்லியன் டாலர்கள்) தாண்டிவிட்டது. இவற்றின் உபயோகம் மிகவும் பலவாகும். “இவை மற்ற பொருட்களோடு கலக்கப்படும்போது அவற்றைக் கட்டியாக்கவும், வழவழப்பாக்கவும், திரவமாக்கவும், ஸ்திரப்படுத்தவும், பசை போன்று ஆக்கவும் அல்லது மெல்லிய இழை போன்று ஆக்கவும் கூடும்.” ஸ்பார்ட் டைவர் (Sport Diver) பத்திரிக்கை இந்தக் குறிப்பைக் கொடுத்தப் பிறகு மேலும் சொல்கிறது:
“சாராயம் காய்ச்சுபவர்கள் அதிக நேரம் இருக்கும் கெட்டியான பீர் நுரையை உண்டாக்குவதற்காக அல்ஜின் பொருட்களை உபயோகிக்கின்றனர். வாசனை கிரீம்கள் கட்டியாகி வெடிப்பு ஏற்படாமலிருக்கவும் ஐஸ்கிரீம் வழவழப்பாக இருக்கவும் இவை உதவி செய்கின்றன. சாக்லெட் மில்க் பானங்களிலும், இனிப்பு மிட்டாய்களிலும் உள்ள சுவை மற்றும் தன்மையின் ஒரு பகுதி அல்ஜின் பொருட்களிலிருந்தே கிடைக்கிறது. காகிதத்தில் மேற்பூச்சு கொடுத்து அச்சின் தரத்தை அதிகரிப்பது முதல் காகிதத்தில் பசைத்தன்மை இல்லாதிருக்கச் செய்யும் வரை ஆகிய எல்லாம் இவை செய்கின்றன.
இவையெல்லாம் போதுமான பயன்களாக இல்லாததுபோல, அல்ஜின் துணிகளின் எரியும் தன்மையைக் குறைத்து அவற்றை எளிதில் அழிக்கமுடியாததாக்குகிறது. அல்ஜினின் மற்ற வகைகள் சலவைக் கஞ்சிப் பசைகளிலும், துணிகளில் அச்சடிக்க உதவும் பசைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பசையுள்ள பொருட்கள், ரப்பர் பொருட்கள், சுவர் சிமென்ட, கார் பாலிஷ் ஆகிய சிலவற்றில் அல்ஜின் இருப்பது போல சில மருந்துகளிலும் இவை உள்ளன.
மிகப் பெரிய கடற்பாசியின் அறுவடை காலிஃபோர்னியா மாநில மீன் மற்றும் உயிரின வேட்டை குழுவால் ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மனிதரின் சுரண்டல்களிலிருந்து கடற்பாசியை பாதுகாப்பதற்கு இந்தக் குழு தன் பணியைச் சிறப்பாகச் செய்யட்டும். வசீகரத்தன்மையுள்ள கடற்கீரிகள் இதை கடல் முள்ளம்பன்றிகளிடமிருந்து காக்கட்டும். இதனால் சமுத்திரச் சோலைகளின் அழகு நம் கண்களைக் கவர்ந்திழுக்கட்டும். அதின் விளைபொருட்கள் தொடர்ந்து நம் நாசுவையை திருப்தி செய்யட்டும்.
[பக்கம் 18-ன் படம்]
கெல்கோ-வின் அறுவடை செய்யும் கப்பல்