சமுத்திரச் சோலைகள்
என் பெயர் கரிபால்டி. இது என் வீடு. இது அழகாக இருக்கிறது அல்லவா?
ஒரு தடவை மக்கள் என்னைப் பிடித்து ஒரு சிறிய தொட்டியில் போட்டுவிட முயற்சி செய்தனர். உங்களால் அதைக் கற்பனை செய்ய முடிகிறதா? நான் கிளாஸ்ட்ரோஃபோபியாவால் மரித்துப் போயிருப்பேன். அந்தப் பெரிய வார்த்தையை மன்னித்துவிடுங்கள். அது மூடிய இடங்களின்பேரில் ஏற்படும் அச்ச மனோநிலையை அர்த்தப்படுத்துகிறது.
ஆனால் இப்பொழுது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நான் கலிஃபோர்னியா மாகாணக் கடல்வாழ் மீனாக ஆக்கப்பட்டேன். நான் இப்பொழுது பாதுகாப்பில் இருக்கிறேன்.
என்னுடைய அழகான வீட்டைப் பற்றி அறியவும், மற்றும் என்னுடைய அயலகத்தாரில் சிலரைச் சந்திக்கவும் நீங்கள் விரும்பினால் தயவு செய்து இதைப் பற்றிய பின்வரும் கட்டுரையைப் படியுங்கள்.
கலிஃபோர்னியாவின் மகத்தான கரையோர செந்நிற மரச் சோலைகளுக்கு வருகை தருபவர்கள் அமைதியான ஆச்சரியத்தோடு நின்று மேலே பார்க்கின்றனர். மேல் நோக்கிச் செல்லும் பெருத்த அடிமரங்களும், தலைக்குமேலே அதி உயரத்தில் இருக்கும் இலைகளால் ஆன மேற்பரப்பும், இந்தப் பசுமையான கூரையினூடே சாய்வாக விழுகிற ஒளிக்கற்றைகளும் உங்களைச் சூழ்ந்து நிற்க நீங்கள் சிறியவர்களாயும் அற்பமானவர்களாயும் உணருகிறீர்கள். அமைதியான, சாந்தமுள்ள சூழ்நிலையும், உங்களைச் சூழ்ந்திருக்கும் பெரிய மரங்களின் நிழல்களின் மேல் பிரமிக்க வைக்கும் வகையில் விழுகிற ஒளிக்கற்றைகளும் சேர்ந்து உங்களில் ஒரு பயபக்தியூட்டும் உணர்வை உண்டாக்குகிறது. அநேகர் இந்த மகத்தான செந்நிற மரங்களின் சோலைகளைப் பற்றி விவரிக்கிறார்கள்.
இன்னொரு விதமான மாபெரும் சோலைகளைப் பற்றி அநேகர் விவரிப்பதில்லை. அவை கலிஃபோர்னியாவின் கரையோரமாக அல்ல, கரையை விட்டுத் தள்ளி இருக்கின்றன. அவைகளும் மேல் நோக்கி செல்கின்றன, மேலே ஒரு மேற்பரப்பை உடையதாக இருக்கின்றன, ஒளிக்கற்றைகள் இருள் சூழ்ந்த அவைகளின் சுற்றுப் புறத்தினூடே ஊடுருவிச் செல்கின்றன. அங்கேயும் அமைதியும், சாந்தமும் நிலவுகின்றன, சூழ்ந்திருக்கும் சோலைகளுக்கு மனதை மயங்கவைக்கும் அழகைக் கூட்டுகிற ஒளிக்கற்றைகளும் இருக்கின்றன—அதேபோன்ற பிரமிக்கவைக்கிற மற்றும் பயபக்தியூட்டுகிற உணர்வுகள் உங்களை மூழ்கடிக்கின்றன.
இந்தச் சோலை, மரங்களை அல்ல ஆனால் பெரணிகளைக் (fronds) கொண்டிருக்கின்றன; அடிமரங்கள் இல்லை ஆனால் கொடிகள் (stripes) உண்டு; இலைகள் இல்லை ஆனால் இலைப்பரப்புகள் (blades) உண்டு; வேர்கள் இல்லை ஆனால் கெளவிகள் (holdfasts) உண்டு. இந்தச் சோலை தண்ணீருக்குக் கீழே உள்ளது. இதன் புதுமைப் பெயர் மாக்ரோசைஸ்டிஸ் பைரிஃபெரா (Macrocycstis pyrifera), அதன் சாதாரணமாகக் காணப்படும் ஒன்று மாபெரும் கடற்பாசி (kelp)—பழுப்பான கடற்பாசி, “உலகத்திலேயே பெரிய மற்றும் விரைவாக வளரும் கடலில் காணப்படும் செடி.” இந்தச் சோலைகளுக்கு வருகை தருபவர்கள் தங்களுக்கு வேண்டிய காற்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஆகவே அவர்கள் கடலின் குளிருக்கு எதிராக பாதுகாப்பாக இருக்கும்பொருட்டு விசேஷித்த நீர்ப்புகா ஆடைகளையும், காற்றுச் சாதனங்களைக் கொண்ட ஆடைகளையும் அணிகிறார்கள். மேலும், நினைவுகளைப் பார்க்கிலும் அதிகத்தைக் கொண்டு செல்ல விரும்பினால் அவர்கள் நீருக்கடியில் இயங்கும் புகைப்படக்கருவிகளையும், செயற்கை ஒளி தருகின்ற கருவிகளையும் தங்களுடன் கொண்டு செல்ல வேண்டும்.
மாபெரும் கடற்பாசி, கண்ணுக்குப் புலப்படாத சிறிய அளவில் ஆரம்பிக்கிறது. வித்துமூலங்கள் நூறு அடி ஆழம் வரையுள்ள கற்பாறைகளுக்குத் தங்களை ஒட்டவைத்துக் கொள்கின்றன, கண்ணுக்குப் புலப்படாத சிறிய அளவான பெண் மற்றும் ஆண் செடிகளாக விருத்தியாகின்றன, அவை ஆண் தாதுக்களையும் பெண்தாதுக்களையும் சேர்த்துக் குருத்து ஒன்றை விளைவிக்கின்றன. இந்தக் குருத்துக்களிலிருந்து பெரணிகள் மேல் நோக்கி வளர்கின்றன; சேமியா போன்ற நார்கள் கீழ்நோக்கி வளர்கின்றன. பெரணிகள் சூரிய ஒளிக்கும், மேல் மட்டத்திற்கும் சென்றெட்டுகின்றன, நார்கள் கற்பாறைகளுக்கு இறுக ஒட்டிக் கொண்டு செடிகளை அந்த இடத்தில் நிலைநிறுத்துகின்றன. ஹெப்டேரா (heptera) என்று அழைக்கப்படும் இந்த நார்கள் பெரிய கட்டுகளாக வளர்கின்றன. அவைகள் கெளவிகள் என்று அழைக்கப்படுகின்றன.
பெரணிகள் வளரும்போது கடல் மட்டத்தை நோக்கித் தொடர்ந்து செல்ல வாயு நிறைந்த மிதவைகளைக் கொண்ட இலைப்பரப்புகளைக் கூட்டுகின்றன. அடர்த்தியான மேற்கட்டுகளை உண்டுபண்ணும் வகையில் பரவிக்கொண்டு, அங்கே அவைகள் தொடர்ந்து வளர்கின்றன. ஒவ்வொரு பெரணியும் ஆறு மாதங்கள் மட்டுமே வாழக்கூடும். ஆனால் கெளவிகளிலிருந்து புதியவைகள் வளர்கின்றன. முழு கடற்பாசி செடி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழ முடியும். இலைப்பரப்புகள், கொடிகள் மற்றும் கெளவிகள் இவற்றைக் கொண்ட வளையக்கூடிய முழு அமைப்பும் உணவுச் சத்துக்களை உட்கிரகிக்கிறது.
மேலும் பெரணிகள் ஒரு நாளுக்கு இரண்டு அடிகள் வரை வளர்கின்றன. அவைகள் நீர்மட்டத்தைச் சென்றெட்ட நூறு அடிகள் அல்லது அதற்கு மேலாக வளரக்கூடும், பிறகு மிதக்கும் மேற்கட்டை உண்டுபண்ண இன்னும் ஒரு நூறு அடிகள் கூட்டக்கூடும். இந்த மிதக்கும் கடற்பாசியின் மேற்கட்டுகளினூடே சூரிய ஒளியின் கற்றைகள் ஊடுருவும்போது ஒரு சூட்சுமமான, இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அழகு இந்த நீரடி பிராந்தியத்திற்குக் கூட்டப்படுகிறது.
ஒரு கடற்பாசி படுகை உயிரினங்களால் நிறைந்துள்ளது. ஒரு முழு வளர்ச்சியடைந்த கடற்பாசி செடியால் பத்து இலட்சத்திற்கும் மேலான அங்கஜீவிகளை ஆதரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் உரிமைப்பாராட்டுகின்றனர். கெளவிகளில் மட்டுமே சுமார் 178 இனங்கள் வாழ்கின்றன—நண்டுகள், நூடி பிராங்குகள் (nudibranchs) நட்சத்திர வடிவ கடல் மிருகங்கள், புழுக்கள், இன்னும் மற்றவைகள். கடற்பாசி படுகையிலும் அதைச் சுற்றிலும் சுமார் 800 உயிரினங்கள் வாழ்கின்றன என்று ஊகிக்கப்படுகிறது. அவை அந்தக் கடற்பாசி படுகையை உணவாகவும், உறைவிடமாகவும் அல்லது வேட்டையாடும் இடங்களாகவும் உபயோகிக்கின்றன. நட்சத்திர வடிவ மீன்கள், சுரணைக்கொம்புகள் கொண்ட மீன்கள், மிருதுவான உடலமைப்புள்ள மீன்கள், விலாங்கு மீன்கள் மற்றும் அநேக மீன்கள் கடற்பாசி படுகையில் அடிக்கடி காணப்படுகின்றன. ஒரு சண்டையிடும், சிறிய, பளிச்சிடும் சிவந்த மஞ்சள் நிறமுள்ளது கரிபால்டியாகும்—அது கலிஃபோர்னியா மாகாணக் கடல்வாழ் மீன் என்ற சிறப்புடையதாயிருக்கிறது.
1950-வது ஆண்டுகளின் பிற்பகுதியில் கலிஃபோர்னியாவின் கடற்பாசி சோலைகளில் அநேகம் மறைந்துபோகும் நிலையில் இருந்தன. வெதுவெதுப்பான சமுத்திரங்கள் கடற்பாசியை அழித்துவிடும், மற்றும் புயல் காற்று அவைகளின் கெளவிகளிலிருந்து அவற்றை அறுத்து அவிழ்த்துவிடும், ஆனால் பிரதான பயமுறுத்தல் கடல் முள்ளம்பன்றியிலிருந்து வருவதாக இருந்தது. அடிக்கடி, மனிதனே நேரிடுபவைகளுக்குக் காரணியாக இருப்பது போல, இதற்கும் மனிதனே காரணம். கெல்கோ வியாபாரக் கழகத்தின் செய்தி வெளியீடு விவரிக்கிறது:
“கடல் வாழ் முள்ளம் பன்றிகள் முட்கள் நிறைந்த மிருகங்கள். இவை கடற்பாசியின் கெளவிகளையும் பேரணிகளையும் மற்றும் இளஞ்செடிகளையும் உணவாக உட்கொள்கின்றன. கடல் முள்ளம் பன்றியின் மிகவும் திறம்பட்ட இயற்கையான எதிரியான கடல் கீரியானது முன்னான ஆண்டுகளில் பெரிய அளவில் வேட்டையாடப்பட்டதனால் அவைகள் பேரளவில் அழிக்கப்பட்டன. அதனால் கடற்பாசி படுகையின் உயிரின-சுற்றுச்சூழல் சமநிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. தங்களுடைய பசியார்வத்தைத் திருப்தி செய்வதற்குக் கட்டுப்பாடில்லாமல் விட்டுவிடப்பட்டதால், முள்ளம்பன்றிகள் தடையில்லாமல் இனவிருத்தி செய்து கடற்பாசி சோலைகளின் பெரும் பரப்புகளை விழுங்கிவிட்டன. முள்ளம் பன்றிகள் ஒரு மாதத்திற்கு 30 அடி வீதத்தில் கடற்பாசி படுகைகளினூடே நகருவதாக பதிவுகள் காண்பிக்கின்றன.”
ஆனால், இதற்கான பரிகாரமும் மனிதனாலே உண்டாயிருக்கிறது. கடல் கீரி பாதுகாக்கப்பட்டது, அவைகளின் எண்ணிக்கை பெருகிற்று, கடல் முள்ளம் பன்றிகள் குறைந்தன, மற்றும் கடற்பாசி சோலைகள் பழைய நிலைக்குத் திரும்புகின்றன. கெல்கோ அறிக்கையிடுகிறது: “இன்றைக்கு நம்முடைய கடற்பாசி சோலைகள் அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக ஆக்கிரமித்திருந்த பரந்த எல்லைகளுக்கு நெருங்க ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றன. உயிரினசுற்றுச்சூழல் சமநிலை பழைய நிலைக்குத் திரும்புகிறது, மற்றும் ஒரு சமயத்தில் அபாயத்திற்குள்ளான இயற்கை வள ஆதாரம் மறுபடியும் உயிரூட்டப்பட்டிருக்கிறது.”
மேலும், இந்த மறுபிறப்பினால், நீர் மூழ்குபவர்கள் மறுபடியுமாக கடற்பாசி காடுகளினூடே ஓசையின்றி ஊடுருவிச் செல்கின்றனர் மற்றும் தங்கள் புகைப்படக்கருவிகள் ‘கிளிக்’ என்று ஓசையிட இந்தச் சமுத்திரச் சோலைகளில் காணப்படும் மகத்துவங்களின் ஒரு சிறிய அளவை நமக்குத் திரும்ப கொண்டுவருகிறார்கள். (g87 3/22)
[பக்கம் 17-ன் முழுபடம்]
[பக்கம் 18-ன் படங்கள்]
கடல் கீரி
கடல் முள்ளம்பன்றி
கெளவி