இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் எவ்விதமாக இன்பமாக பொழுதைக் கழிக்கலாம்?
“ஒரு வேளை உங்களுடைய வாழ்க்கையில் இளமைப் பருவமே அழுத்தங்கள் நிறைந்த ஒரு காலமாக இருக்கிறது” என்பதாக பருவ வயது அழுத்தம் என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இயற்கையாகவே அந்தப் பருவத்தில் இளைஞர்கள் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருக்கவோ அல்லது படித்துக் கொண்டே இருக்கவோ விரும்புவதில்லை. அவர்களுக்கு அவ்வப்போது ஒரு வடிகால்வெளியே, இன்பமாக பொழுதைக் கழிப்பது அவசியமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவும் கூட இடையிடையே “சற்றே இளைப்பாறுவதன்” அவசியத்தை ஒப்புக் கொண்டார்.—மாற்கு 6:31
துர் அதிஷ்டவசமாக பொழுதுபோக்கு என்ற காரியத்தில் இளைஞர்கள் எப்பொழுதும் நல்ல பகுத்துணர்வை பயன்படுத்துவது கிடையாது. அநேகமாக இன்பமாக பொழுதைக் கழிப்பதாக துவங்குவது மனவேதனையில் முடிவடைகிறது. உதாரணமாக ஒரு இளம் பெண், அவள் கலந்து கொண்ட ஒரு பருவ வயதினரின் கூட்டத்தைப் பற்றி இவ்விதமாகச் சொல்கிறாள்: “ஸ்டீரியோ இசை பிரமாதமாக இருந்தது. நடனம் நேர்த்தியாக இருந்தது. சுவையான சிற்றுண்டிகள் இருந்தன. ஒரே சிரிப்பும் கலகலப்புமாக இருந்தது. ஒருவர் மதுபானங்களைக் கொண்டு வந்தார். பின்னர் எல்லோரும் குடித்தார்கள். அப்போது தானே அனைத்தும் தாறு மாறாகிவிட்டது. ஒழுக்கயீனமான காரியங்கள் நடப்பிக்கப்பட்டன. அந்தச் சமயம் முதற்கொண்டு எனக்கு வேதனையாகவும் சோர்வாகவும் இருக்கிறது” என்பதாக அந்தப் பெண் ஒப்புக் கொள்கிறாள்.
ஆனால் அநேக பருவ வயதினர் ‘இன்பமாக பொழுதைக் கழிப்பது’ என்ற பெயரில் அதிகமான நேரத்தை வீணாக்குகிறார்கள். உதாரணமாக ஐக்கிய மாகாணங்களில் அடிக்கடி சந்தை வெளிகளில், நடைபாதையில் இளைஞர்கள் வழக்கமாக கூடி நின்று மணிக்கணக்கில் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பது சாதாரணமான காட்சியாக இருக்கிறது.
எச்சரிக்கையாயிருப்பதன் அவசியம்
‘விருந்துகளில் கலந்து கொள்வது’ அல்லது ‘தெருவில் நின்று கொண்டிருப்பது’ ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். ஆனால் ஏதோ ஒன்று மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதால், அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அர்த்தமாகாது. அல்லது சமநிலையான கிறிஸ்தவ ஆளுமையை வளர்த்துக் கொள்ள உதவி செய்யும் என்று அர்த்தமாகாது. அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எச்சரித்தான்: “சகோதரரே, . . . உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” (எபிரெயர் 3:12, 13) அநேகமாக மகிழ்ச்சியைத் தரும் காரியங்கள் நம்முடைய நேரத்தையும் தார்மீக மதிப்பீடுகளையும் திருடிக் கொள்வதில், நம்மை வஞ்சித்து விடக்கூடும்.
உதாரணமாக, 24,000 இஸ்ரவேலர், அழிக்கப்பட்டதைப் பற்றிய பைபிள் பதிவு உங்களுக்கு நினைவிருக்கிறதா? செளந்தரியமுள்ள மோவாபிய மற்றும் மீதியானிய ஸ்திரீகள் அவர்களை விருந்துண்ணும்படி அழைத்தார்கள். ஒருவேளை இஸ்ரவேலர் இவ்விதமாக சிந்தித்திருக்கலாம்: ‘வனாந்தரத்தில் இத்தனை வருடங்கள் பிரயாணம் பண்ணின பின்பு கொஞ்சம் இளைப்பாற நிச்சயமாகவே நமக்கு உரிமை இருக்கிறது. கொஞ்சம் உணவையும் திராட்சரசத்தையும் எடுத்துக் கொள்வதில் தீங்கேதும் வந்து விடாது.’ ஆனால் அதனால் தீங்கு வந்தது. வேசித்தனம் பண்ணி விக்கிரகாராதனையில் ஈடுபட்ட 24,000 பேருக்கு அது மரணத்தைக் கொண்டு வந்தது!—எண்ணாகமம் 25:1-9.
வீணாக்கப்படும் நேரத்தை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் கூட, கிறிஸ்தவர்களல்லாத பள்ளி மாணவர்களோடு விருந்துண்பது அல்லது வெளியே நின்று வேடிக்கைப் பார்ப்பது, அதே விதமாகவே ஆபத்தானதாக இருக்குமல்லவா? (கலாத்தியர் 5:21; 1 கொரிந்தியர் 7:29) கிறிஸ்தவர்களுக்கு ஒழுக்கக் கேடானதாக இருப்பது அநேகமாக மற்றவர்களுக்கு அது வாழ்க்கை முறையாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்! ஒழுக்கமற்ற இசை, கவர்ச்சியான நடனங்கள் அல்லது வன்முறையையும் பாலின ஒழுக்கக்கேட்டையும் உயர்த்திக் காண்பிக்கும் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாக பொல்லாத ஆட்களோடு கூட்டுறவு கொள்ளும் விஷயத்திலும் இது உண்மையாகவே இருக்கிறது.—1 கொரிந்தியர் 15:33.
தனிமையில்
பைபிளைப் பின்பற்றுவது, பொழுது போக்குக்காக நீங்கள் செய்யக்கூடியதைக் கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. ஆனால் இதனால் வாழ்க்கை கவர்ச்சியற்றதாகவும் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருக்கவும் வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. உதாரணமாக மேரி ஒரு இளம் கிறிஸ்தவ பெண். தவறிழைக்க அவளைத் தூண்டுவதற்கு முயற்சி செய்யக்கூடிய இளைஞர்களோடு அவள் கூட்டுறவு கொள்வதில்லை. அவள் எவ்விதமாக இன்பமாக பொழுதைக் கழிக்கிறாள்? “நான் பியானோவும் வயலினும் வாசிக்கிறேன். நான் அவைகளை வாசிக்க பழகிக் கொள்வதில் நேரத்தை செலவழிக்கிறேன்.” அதேவிதமாகவே மெலிஸா என்ற பெயர் கொண்ட ஒரு பருவ வயது பெண்ணும் சொல்கிறாள்: “என்னுடைய சொந்த மகிழ்ச்சிக்காக நான் கதைகள் அல்லது கவிதைகள் எழுதி பொழுதை கழிக்கிறேன்.”
இல்லை, மகிழ்ச்சியாயிருக்க நீங்கள் ஒரு விருந்திலோ அல்லது நண்பர்கள் சூழவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. வாசிப்பது, தச்சுவேலை அல்லது இசைக் கருவி ஒன்றை இசைப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.
ஒரு குடும்பமாக காரியங்களைச் செய்வது
எப்பொழுதும் நீங்கள் தனிமையில் இருக்க விரும்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் கூட்டுறவை நாடுகையில், எப்பொழுதும் ஒத்த வயதினரையே தேடிச் செல்ல வேண்டும் என்று அர்த்தமில்லை. அமெரிக்க இளைஞர்களை வைத்து செய்யப்பட்ட சுற்றாய்வு, பருவ வயதினர், “குடும்பமாக அவ்வப்போது வெளியே செல்வதையும் குடும்ப நடவடிக்கைகளையும் அனுபவித்துக் களிப்பதை” காண்பித்தது. குடும்பமாக ஒன்றாகச் சேர்ந்து காரியங்களைச் செய்வது பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக இருப்பது மட்டுமல்லாமல் அது குடும்ப ஐக்கியத்தையும்கூட பலப்படுத்தக்கூடும்.
இது, ஒன்றாகச் சேர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. டாக்டர் அந்தனி பீட்ரோபின்டோ இவ்விதமாகச் சொல்கிறார்: “தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதில் பிரச்னை என்னவென்றால், மற்றவர்களோடு சேர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அது தனித்த ஒரு நடவடிக்கையாக உள்ளது . . . என்ற போதிலும் வீட்டுக்குள் விளையாட்டுகள், வீட்டிற்குப் பின்புறத்தில் விளையாட்டுகள், விருந்துகள் சமைத்தல், கைத்தொழில் வேலைகள், சப்தமாக வாசித்தல் ஆகியவை, குடும்பமாக தொலைக்காட்சியில் மந்தமாக கொள்ளும் ஈடுபாட்டைக் காட்டிலும், பேச்சுத் தொடர்புக்கும், ஒத்துழைப்புக்கும், புத்திக்கூர்மையை தீட்டிக் கொள்வதற்கும் நிச்சயமாகவே அதிகமான வாய்ப்புகளை அளிக்கின்றன.”
ஏழு பிள்ளைகளின் தகப்பன் ஜான் இவ்விதமாகச் சொல்கிறார்: “நாங்கள் எப்பொழுதுமே குடும்பமாக காரியங்களைச் செய்து குடும்பமாக பல இடங்களுக்குச் சென்றோம். எப்போதாவது வாரத்தின் இறுதி நாட்களில் சிறு பயணங்களை மேற்கொண்டு வெளியே சென்று தங்கினோம் அல்லது பந்துவீச்சு விளையாட்டை விளையாடினோம். நாங்கள் பூங்காக்களுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் சென்றோம். ஆனால் உந்து பந்து, பூப்பந்தாட்டம் போன்ற பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் வீட்டிலும் பொழுது போக்கை நாங்கள் அனுபவித்துக் களித்தோம். சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து அல்லது வீட்டில் வர்ணம் பூசுவது போன்றவைகளும் கூட குடும்பமாகச் செய்யப்பட்ட போது மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது.”
உங்கள் குடும்பம் ஏற்கெனவே இப்படிப்பட்ட காரியங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்து கொண்டில்லை என்றால், அவ்விதமாகச் செய்ய முன்வந்து உங்கள் பெற்றோரிடம் இதைப் பற்றிப் பேசுங்கள். குடும்பமாக வெளியே செல்வதற்கு அல்லது எதையாவது செய்வதற்கு அக்கறையூட்டும் மற்றும் கிளர்ச்சியூட்டும் ஆலோசனைகளைத் தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.
கிறிஸ்தவ கூட்டங்கள்
ஆனால் அவ்வப்போது, நண்பர்களோடு ஒன்று சேர்வதும் கூட மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கூட்டுறவுக்காக நீங்கள் திட்டமிடுவதற்கு உங்களுடைய பெற்றோரை உதவும்படியாக ஏன் கேட்கக்கூடாது? விளையாடுவது ஒன்றாகச் சேர்ந்து பாடுவது போன்ற பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யலாம். உங்கள் நண்பர்களில் சிலர் இசை வல்லுநர்களாக இருந்தால், அவர்களுடைய திறமையைக் கொஞ்சம் காண்பிக்கும்படியாக கேட்கலாம். நல்ல உணவும் ஒரு நிகழ்ச்சியின் களையை கூட்டுகிறது. ஆனால் அது கவர்ச்சியாக அல்லது ஆடம்பரமாக இருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் அதில் கலந்து கொள்பவர்களே வித்தியாசமான வகைகளைக் கொண்டு வரலாம்.
நீச்சல் மற்றும் பந்து விளையாட்டுகள் போன்றவற்றிற்கு வாய்ப்பளிக்கும் பூங்கா அல்லது திறந்த வெளியிடம் ஏதாவது அருகில் இருக்கிறதா? எப்போதாவது ஏன் ஒரு பிக்னிக் செல்லக்கூடாது? இங்கும் கூட எவருக்கும் பொருளாதார சுமை ஏற்படாத வண்ணம் குடும்பங்கள் உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதில் பங்கு கொள்ளலாம்.
மிதமாக இருப்பதே முக்கியமாக இருக்கிறது. இசையை அனுபவித்துக் களிக்க அது பயங்கர சப்தமாக ஒலிக்க வேண்டும் என்பது அவசியமில்லை; நடனத்தையும்கூட அனுபவித்துக் களிக்க அது ஆபாசமானதாக அல்லது சிற்றின்பத்தை தூண்டுவதாக இருக்க வேண்டியதில்லை. விளையாட்டுகளிலும் கூட அதிகமாக போட்டி மனப்பான்மையை ஊக்குவித்து விடக்கூடிய பிரச்னை இருக்கிறது. கிறிஸ்தவ பெற்றோர் ஒருவர் சொல்கிறார்: “சில சமயங்களில் இளைஞர்கள் ஏறக்குறைய சண்டை போட்டுக் கொள்ளும் அளவுக்கு தர்க்கம் செய்கிறார்கள்” பைபிளின் புத்திமதியைப் பின்பற்றி, ‘ஒருவர் மேல் ஒருவர் பொறாமை’ கொள்ளாதிருப்போமாக”—கலாத்தியர் 5:26
யாரை நீங்கள் அழைக்க வேண்டும்? “முழு சகோதர கூட்டுறவிலும் அன்பு கூருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 2:17) அப்படியென்றால் உங்கள் வயதிலுள்ளவர்களை மட்டுமே ஏன் அழைக்க வேண்டும்? உங்கள் கூட்டுறவுகளை “விரிவாக்குங்கள்” (2 கொரிந்தியர் 6:13) ஒரு பெற்றோர் இவ்விதமாகச் சொன்னார்: “வயதானவர்களால் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட அவர்கள் அங்கு வந்து அவைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள்.” வயது வந்தவர்கள் இருக்கையில், காரியங்கள் கைக்கு மீறி போய்விடுவது தவிர்க்கப்படுகிறது. ஆனால் ஏதாவது ஒரு கூட்டத்துக்கு “முழு சகோதர கூட்டுறவையும்” அழைப்பது கூடாத காரியமாக இருக்கிறது. கூட்டம் பெரியதாகவும் கட்டுக்கடங்காமலும் இருக்கையில் பிரச்னைகள் உருவாகக்கூடும். எண்ணிக்கையை குறைத்து தொந்தரவுகளைத் தவிர்த்திடுங்கள்.
கிறிஸ்தவ கூட்டங்களும் கூட ஒருவரையொருவர் ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்புவதற்குச் சந்தர்ப்பத்தை அளிக்கிறது. உண்மைதான். ஒரு கூட்டத்தில் ஆவிக்குரிய காரியங்களைச் சேர்த்துக் கொள்ளும் போது அங்கு கேளிக்கை மறைந்து விடுகிறது என்பதாக சில இளைஞர்கள் நினைக்கிறார்கள். ‘நாங்கள் ஒரு கூட்டுறவுக்காக கூடி வருகையில் அது உட்கார்ந்து பைபிளை எடுத்து பைபிள் விளையாட்டுகளை விளையாடுவதாக இருக்கிறது” என்பதாக ஒரு கிறிஸ்தவ பையன் வருத்தமாகச் சொன்னான். என்றபோதிலும் “யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறவன் சந்தோஷமுள்ளவன்” என்பதாக சங்கீதக்காரன் சொன்னான். (சங்கீதம் 1:1, 2) ஆகவே பைபிளை மையமாகக் கொண்ட கலந்துரையாடல்களும் அல்லது விளையாட்டுகளும் கூட ஓரு நிகழ்ச்சிக்குக் கூடுதலான மகிழ்ச்சியைக் கூட்டக்கூடும்.a
மற்றொரு யோசனை, அவர்கள் எவ்விதமாக கிறிஸ்தவர்களானார்கள் என்று பலரை சொல்ல வைப்பதாகும். அல்லது நகைச்சுவை நிரம்பிய செய்தி துணுக்குகளையும் சொல்லும்படியாக சிலரை அழைப்பதன் முலம் உற்சாகத்தையும் சிரிப்பையும் கூட்டுங்கள். அநேகமாக இவைகள் மதிப்புள்ள பாடங்களைக் கற்பிக்கின்றன.
மிகவும் இன்பமான பொழுதுகள்
ஆனால் கூட்டங்களும் விடுமுறை பயணங்களும் அவைகளுக்குரிய இடத்தைக் கொண்டிருந்தாலும், மிகவும் இன்பமான பொழுதுகள் யெகோவாவின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, யெகோவா வருடந்தோறும் கொண்டாடப்பட்ட கூடார பண்டிகைக்காக, இஸ்ரவேலர் எருசலேமுக்குச் செல்லும்படியாக ஏற்பாடு செய்தார். கடவுள் “உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் மகிழ்ச்சியாயிருங்கள்” என்று கட்டளையிட்டார். (லேவியராகமம் 23:40) அதேவிதமாக இன்று யெகோவாவின் சாட்சிகள் மாநாடுகளை நடத்துகிறார்கள். அநேக கிறிஸ்தவ இளைஞர்களுக்கு, இப்படிப்பட்ட சமயங்கள், முழு வருடத்திலும் மிகவும் மகிழ்ச்சி நிறைந்த காலங்களாக இருக்கின்றன!
ஆனால் பருவ வயது பத்திரிகையில் ஒரு கட்டுரை குறிப்பிடும் விதமாகவே: “வாழ்க்கை எப்பொழுதுமே உயிர்துடிப்பும் கிளர்ச்சிகளும் நிறைந்ததாக இருக்க முடியாது. அவ்விதமாக இருந்தால் நீங்கள் ஒருவேளை களைப்படைந்துவிடுவீர்கள்.” தவிர “கர்த்தருடைய கிரியையிலே செய்வதற்கு அதிகமிருக்கிறது” (1 கொரிந்தியர் 15:58; மத்தேயு 24:14) ஆனால் அவ்வப்போது பொழுதுபோக்கின் அவசியத்தை நீங்கள் உணருவீர்களேயானால், அதை சமநிலையான, ஆரோக்கியமான முறையில் அனுபவியுங்கள். (g86 11/8)
[அடிக்குறிப்புகள்]
a இந்தச் சில விளையாட்டுகளைப் பற்றிய தகவலுக்கு 1979, ஜனவரி 22 ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 10-12-ஐ பார்க்கவும்.
[பக்கம் 14-ன் படம்]
பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு, பல்வேறு வயதினர் பங்கு கொள்ளும்போது கிறிஸ்தவக் கூட்டங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கக்கூடும்.