கொடிய கொலைகார புயல் அடித்தபோது!
சாலொமோன் தீவுகள் “விழித்தெழு!” நிருபர்
அந்தக் கொடிய கொலைகார புயல் முதலில் மெதுவாக நகர்ந்தது. தென்மேற்காக நகர்ந்து, திடீரென சாலொமோன் தீவுகளில் ஒன்றாகிய மாலாய்தாவை நேராகத் தாக்கியது. அங்குதான் தன் கொடிய பாதங்களைப் பதித்துச் சென்றது. மணிக்கு 115 மைல் (185 கி.மீ) வேகத்தில். அடித்த புயல் தன் வழியிலிருந்த அனைத்தையும் வீழ்த்திச் சென்றது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் தரைமட்டமாயின. கூரைகள் காற்றில் பறந்தன. மழை மூர்க்கமாகக் கொட்டியது. கொடிய காற்றின் சவுக்கடிக்குக் கீழ்ப்பட்ட கடல் கப்பல் துறை மேடைகளையும் பாலங்களையும் நொறுக்கியது. அமைதி தழுவிய ஆறுகளில் வெள்ளப்பெறுக்குச் சாலைகளும் பயிர்நிலங்களும் மூழ்கின.
சாலொமோன் தீவு நாமூ என்ற புயலால் தாக்கப்பட்டது. வார இறுதி நாட்களாகிய மே 17, 18, 1986-ல் அந்தத் தாக்குதல் நடந்தது—குவாடல்கனால் தீவில் ஹேர்னையரா என்ற இடத்தில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய இரண்டு நாள் மாநாட்டின் தேதிகள். காரியங்களின் முடிவைப் பார்க்கும்போது, மாநாட்டிற்கான இந்தத் தேதிகள் சிலருக்கு உயிர்காப்பாக நிரூபித்தது.
‘இந்தத் வழியாய் போகாதீர்கள்!’
“சாலொமோன் தீவுகளில் எப்பொழுதும் மழை பெய்வது போல் அந்தச் சனிக்கிழமையும் மழையோடு ஆரம்பித்தது,” என்று நினைவுபடுத்துகிறார் ரோலாண்டு சென்ட், யெகோவாவின் சாட்சிகளின் ஒரு ஊழியர். “நாங்கள் வட்டார மாநாட்டை எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம், எனவே வானிலை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.” (மாநாட்டிற்கு 491 பேர் வருகை தந்தனர்) ஆனால் மாநாடு முடிவதற்குள் இது ஒரு சாதாரண மழைக்காற்று அல்ல என்பது தெளிவானது.
“புயல் எங்களைக் கடந்து குவாடல்கனாவின் மறுபக்கத்தில் மையங்கொண்டிருக்கிறது என்பதை அறிய வந்தேன்,” என்கிறார் சென்ட். ஹோனையராவுக்குக் கிழக்கே 19 மைல்கள் (30 கி.மீ.) தூரத்திலிருந்த டெட்ரோவிலுள்ள சாட்சிகள் பயணத்தைத் தொடர முடியவில்லை, ஏனென்றால் சாலைகளில் வெள்ளம் புகுந்தது. எனவே பெரும்பான்மையினர் அன்றிரவு ஹோனையராவில் மாநாட்டுப் பகுதியிலிருந்து 9 மைல்கள் (15 கி.மீ) தூரத்திலிருந்த ஃபாக்ஸ்வுட் என்ற ஒரு இடத்திலே தங்கிவிட்டனர்.
ரோலாண்டு சென்ட் ஃபாக்ஸ்வுட் பகுதியிலே வசிக்கிறார். எனவே தன் வாகனத்தில் தன் குடும்பத்தை வீட்டிலே இறக்கிவிட்டு, இன்னொரு குடும்பத்தை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மாநாட்டு மன்றத்துக்கு வந்தார். ஆனால் பயணத்தைத் தொடருவது கடினம் என்பதைக் கண்டார். “ஆறுகள் பெறுக்கெடுத்தன,” என்கிறார். “ஙலிபியு ஆற்றில் மரங்கள் அடித்துக்கொண்டுவர பாலத்தில் குவிந்தன. மறுபக்கத்திலிருந்து வந்த ஒரு வாகன ஓட்டி, அந்த வழியாக நாங்கள் போகவேண்டாம் என்று வலியுறுத்தினார்! எனவே நான் அந்தக் குடும்பத்தை மேடான ஒரு சுற்றுப் பாதையில் என் வீட்டிற்கு ஓட்டிச் சென்றேன்.
சி.டி.சி.-யில் திகில்
சி.டி.சி. (C.D.C.) என்பது ஙலிபியு ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஒரு குடியிருப்பு. சி.டி.சி. குடியிருப்பு மக்களின் பெரும்பான்மையினர், ஞாயிறு இரவன்று, கடுமையான மழை குறித்து கவலைப்படாமல் நித்திரைக்குச் சென்றனர். என்றபோதிலும் அந்த ஆற்றோரமாக வீடுகளைக் கொண்டிருந்த இரண்டு மனிதர் அன்று தூங்கவில்லை. ஆற்றில் வெள்ளம் படிப்படியாகப் பெருகுவதை அதிகக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் காலை 3:00 மணியளவில் தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது. அந்த இரு மனிதரும் தூங்கச் சென்றுவிட்டனர். காலை 5:00 மணியளவில் தொலைபேசியின் மணி ஒலிக்க, அவர்களில் ஒருவர் விழித்துக்கொண்டார். தன்னுடைய தோட்டம் முழுவதும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்டதும் அவருக்கு ஒரே கிலி. அவரும் அவருடைய மனைவியும் உடனே காரில் ஏறி ஃபாக்ஸ்வுட் அருகே ஒரு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தனர்.
ஆனால் ஆற்றோரமாய்த் தன் வீட்டைக் கொண்டிருந்த அந்த இன்னொரு மனிதனைப் பற்றியதென்ன? அவருடைய பெயர் ஜேம்ஸ் சூலிமே. அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. அவரும் உடனடியாக எழுந்து அக்கம் பக்கத்திலுள்ளவர்களை எச்சரிக்க விரைந்தார். கிலியுற்றிருந்தக் குடும்பங்களைத் தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஃபாக்ஸ்வுட் அருகாமையில் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றார். மற்றவர்களை அங்கிருந்து கூட்டிச்செல்ல அவர் இரண்டு முறை திரும்பி வந்தார்.
மறுநாள் காலை
“கடுமையான மழையுடனும் காற்றுடனும் திங்கட்கிழமை காலை விடிந்தது,” என்றார் ரோலாண்டு சென்ட். “மக்களை சி.டி.சி. குடியிருப்புப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடத்திற்குக் கூட்டிச்செல்வதற்கான அழைப்பு கொடுக்கப்பட்டது. இந்த மீட்புப் பணியில் நானும் இரண்டுமுறை உதவி செய்ய முடிந்தது. மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வாகனத்தின் பின்னே ஏறினார்கள்! ஆண்களின் அழுகையும் பெண்கள் மற்றும் பிள்ளைகளின் கூக்குரலும் கேட்டுக்கொண்டிருந்தது.” காரணத்தைக் காண்பது கடினமாயிருக்கவில்லை. ஙலிபியு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் ஒரு பெரிய அணைபோன்று காட்சியளித்தது. வெள்ளம் எல்லோரையும் அடித்துச் சென்றுவிடும் திகிலூட்டும் நிலை!
என்றபோதிலும் எல்லோருமே அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படவில்லை. சி.டி.சி.-யில் குடியிருப்பில் வசித்துவந்த மற்றொரு சாட்சி சோனியா டிக்சன் பின்வருமாறு சொன்னாள்: “தோட்டம் வெள்ளத்தில் மூழ்கிவிடுதல் போன்ற சிறிய அசெளகரியங்கள்தான் ஏற்படும் என்று நினைத்து அவற்றிற்கு எங்களை ஆயத்தமாக வைத்துக்கொண்டோம். என்றபோதிலும் மக்கள் எங்களுடைய இரண்டு அடுக்கு வீட்டிற்குள் பாதுகாப்புக்காக ஓடி வருவதைப் பார்த்தபோதுதான் காரியங்கள் மோசமாகிவிட்டிருக்கிறது என்பதை உணர்ந்தோம். காலை 10:00 மணி இருக்கும், எங்களுடைய தோட்டத்தில் ஒரு நதியே ஓடியது!
“நான் மூன்று குழந்தைகள் உட்பட 22 ஆட்களின் தேவைகளைக் கவனிக்கும் காரியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபட ஆரம்பித்தேன். சிலர் எங்களுடைய வீட்டின் முன் கூடத்திற்கு வெள்ளத்தில் நீந்தியே வந்தனர். அவர்களை உள்ளே அழைத்து கொண்டுவந்து, துடைத்து, சூடான காபியும் ஆகாரமும் அவர்களுக்குக் கொடுத்தோம். என்னுடைய கணவர், பீட்டர், எனக்கு உதவி செய்துகொண்டே நீர்மட்டம் உயருவதைக் கவலையோடு பார்த்துக்கொண்டு வந்தார். நாங்கள் துணிகளை உலர்த்த பயன்படுத்தும் நீண்ட கோலை அளவு கோலாக பயன்படுத்தினார். புரண்டோடும் நீரில் அடித்து கொண்டுவரப்படும் பெரிய பெரிய மரங்களும் கட்டைகளும் வீட்டை பலமாக மோதிக்கொண்டிருந்தன.
“பீட்டரின் முகம் வெளுத்தது, என்னுடைய வயிறு கலங்கியது. எங்களுடைய எட்டு வயது மகள் எலிசபேத்தை ஒரு பக்கமாக கூட்டிச்சென்று அவளோடு சேர்ந்து ஜெபித்தார். எங்களுடைய சபையிலிருக்கும் மற்றொரு சாட்சியும் நானும் சேர்ந்து ஜெபித்தோம். நீர் மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. திடீரென்று ஒரு மீட்பு வழி திறந்தது! எங்களுடைய தோட்டத்தைச் சுற்றியிருந்த ஒரு பெரிய செம்பருத்திப் புதர் வெள்ளத்தில் அடித்து வந்த மரக்கட்டைகளையெல்லாம் தடுத்து ஒரு அணையை ஏற்படுத்தியது. இதனால் தேங்கிய நீர் எங்களுடைய வீட்டின் முன்கூடம் வழியே, சுமார் 15 கெஜங்கள் (14 மீ) தள்ளி பாய்ந்துசெல்ல ஆரம்பித்தது. இது எங்களுடைய உயிர்களைப் பாதுகாத்தது.”
சாட்சிகள் மற்றவர்களுக்கு உதவினார்கள்
அவருடைய மீட்புப் பணி சி.டி.சி.-க்கு இனிமேலும் தேவைப்படவில்லை. சென்ட் வீடு திரும்பினார். அங்கு புயலிலிருந்து பாதுகாக்கப்பட்ட மற்ற மூன்று குடும்பங்களும் தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்தன. அதுபோன்று மற்ற சாட்சி குடும்பங்களுங்கூட தங்களுடைய அயலகத்தாரை உபசரித்தனர். ஒரு குடும்பம் 48 பேருக்கு தங்களுடைய வீட்டில் இடங்கொடுத்து அவர்களைக் கவனித்தும் போஷித்தும் வந்தது.
சில சாட்சிகள் தங்களுடைய அயலகத்தாருக்காகத் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றிலிருந்து மற்றவர்களை மீட்கும் பணியில் உதவின மூன்று சாட்சிகள் திடீரென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். என்றபோதிலும், அவர்கள் ஒரு பெரு நீர்ச்சுழியில் சிக்கி, அதுதானே இவர்களை மீண்டும் கறைக்குக் கொண்டுவந்து சேர்த்தது!
“இதோ, புயல் ஒரு முறை சுழன்று அடித்தது,” என்கிறார் சென்ட், “தன் முழு கோபத்தையும் காண்பித்தது. எங்களுடைய வீட்டிலிருந்து 200 கெஜ (180 மீ) தூரத்திலிருந்த ஒரு வீட்டின் கூரையும் மின்சாரக் கம்பங்களும் காற்றில் தூக்கியெறியப்பட்டன. அத்துடன் எங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்றும் மழையும் திங்கட்கிழமை இரவு முழுவதும் தொடர்ந்தது. ஆனால் செவ்வாயன்று மழை நின்றுவிட்டது.
மூன்றாம் நாள் நீர் மட்டம் ஓரளவுக்குக் குறைந்துவிட்டது என்று சோனியா சொல்லுகிறாள். “யார் வந்தது? ஒரு முழுநேர ஊழியரும் கிறிஸ்தவ மூப்பருமான எல்சன் சைட் எங்கள் சபையின் மூன்று இளம் மனிதருடன் வந்தார்! அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய வாழைத் தாரும் ஒரு பை உருளைக் கிழங்கும் கொண்டு வந்தனர். எங்களுக்குத் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை உணர்ந்த அவர்கள் திடீரென்று மறைந்துவிட்டார்கள். மூன்று மணி நேரத்திற்குப் பின்பு அவர்கள் புட்டிகளிலும் பிளாஸ்டிக் தூக்குகளிலும் நிறைய குடி தண்ணீர் கொண்டுவந்தனர்.” வெள்ளிக்கிழமையன்று சோனியாவும் அவளுடைய குடும்பமும் தங்கள் வீட்டிற்கு வெளியே வர முடிந்தது.
புயலுக்குப் பின்பு
கொலைகார நாமூ தன்னுடைய வேலையை முடித்துவிட்டது. அந்தத் தீவுகளின் குடிகள் சேதங்களினூடே திரும்ப வந்து தாங்கள் இருந்த பொருட்களையும் ஆட்களையும் கணக்கிட ஆரம்பித்தனர். நூறு பேருக்கு மேலே மாண்டிருந்தனர். ஏறக்குறைய 90,000 பேர் வீடுகளை இழந்தனர். பொருளாதாரத்திற்கு அடிப்படையாயிருந்த விவசாயம் நின்றுபோயிற்று.
வீடுகளையும், உணவு பொருட்களையும் தோட்டங்களையும் இழந்தவர்களில் யெகோவாவின் சாட்சிகளும் உட்பட்டிருந்தனர். வணக்கத்திற்காகத் தாங்கள் கூடிவந்த பத்து ராஜ்ய மன்றங்களுக்கு சேதம் ஏற்பட்டன. ஆனால் ஒரு சாட்சிகூட உயிரிழக்கவில்லை. அருகாமையில் பாப்புவா நியு கினி மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்த சாட்சிகள் பல டன்கள் உணவு பொருட்களை அனுப்பியிருந்தார்கள். டெட்ரேவிலிருந்து வந்த சாட்சிகளுக்கு அசெம்பிளி ஓர் ஆசீர்வாதமாக நிரூபித்தது. புயலின்போது அவர்கள் ஃபாக்ஸ்வுட்டில் பாதுகாப்பைப் பெற்றனர்.
இப்படியாக சோனியாவும் அவளுடைய குடும்பத்தாரும் இரண்டு நாட்களுக்குப் பின்பு வணக்கத்திற்காக சேதப்பட்டிருந்த ராஜ்ய மன்றத்திற்குச் சென்றபோது, அவர்களில் உணர்ச்சிகள் பொங்கியெழுந்தன. அங்கு பாடிய பாட்டில், “‘நாம் பலவீனரைத் தாங்கினால், கடவுள் நம்மைக் காத்திடுவார்’ என்ற கடைசி வரியைப் பாடும்போது உணர்ச்சிகள் பொங்க நின்றேன்,” என்கிறாள் சோனியா. (g86 11/22)
[பக்கம் 16-ன் படம்]
நாமூ என்ற புயலில் அடித்துச்செல்லப்பட்ட ஙலிபியு பாலத்தின் பாதி பாலம்
[பக்கம் 17-ன் படம்]
நாமூ என்ற புயல் இந்தக் கப்பலை ஹோனியாரா கரைக்கு அடித்துச் சென்றது