இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் என் பெற்றோரிடம் எவ்விதமாகச் சொல்லலாம்?
“ஒரு தேர்வில் மோசமான மதிப்பெண்கள் எடுத்து நான் வீடு திரும்புகையில், என் பெற்றோரிடம் அதைச் சொல்ல நான் விரும்புகிறேன். ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் நான் அவர்களிடம் சொன்னால், அவர்கள் என்னைத் திட்டுவார்கள்.”—13 வயது பெனிட்டா.
எழுத்தாளர் ரூத் பெல் சொல்கிறார்: “அவ்வளவாக அக்கறை எடுத்துக்கொள்ளாமல் கவலையீனமாக காரியங்களைச் செய்வது பருவ வயது அனுபவத்தின் ஒரு பாகமாக இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் இது தொந்தரவில் வந்து முடிவடைகிறது. அப்போதுதானே உங்களுடைய பெற்றோர் உங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று நீங்கள் ஒருவேளை விரும்பக்கூடும்.” என்றபோதிலும் அது குறைவான மதிப்பெண்ணாகவோ, தவறான திக்கில் சென்று விட்ட ஒரு இளமைப் பருவ இரகசிய திட்டமாகவோ, பெற்றோரின் அறிவுரையின்படி செய்ய தவறியதாகவோ அல்லது வினைமையான ஒழுக்கத்துக்குரிய ஒரு பிரச்னையாகவோ, அது எதுவாக இருந்தாலும்சரி, அதை உங்கள் பெற்றோரிடம் சொல்வது என்ற அந்த விஷயத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது அத்தனை மகிழ்ச்சியானதாக இல்லை.
உங்கள் வீட்டாருக்குத் துர்செய்தியை—விசேஷமாக, உங்களுடைய பங்கில் ஏதோ ஒரு குறை அதில் உட்பட்டிருக்குமேயானால்—அதை எடுத்துச் சொல்வதைக் கருதி நீங்கள் பயப்படக்கூடும். குறுக்கு விசாரணை செய்யப்படுவோம் என்ற அந்த எண்ணமே உங்கள் மன அமைதியைக் குலைத்துவிடக்கூடும். 18 வயது வில்லா சொன்னாள்: “ஏதாவது ஒரு விஷயத்தை நான் அவர்களுக்குச் சொன்னால், அவர்கள் கேள்விகள் கேட்பதை நிறுத்தவே மாட்டார்கள். அது ‘பான்டோரா’ என்னும் கிரேக்க தேவதை ஒரு பெட்டியை திறந்தபோது, உலகத்தின் தீமைகளெல்லாவற்றையும் வெளியே விட்டதைப் போலிருக்கிறது.” தவிர்க்கமுடியாத, ஒருவேளை உங்களை சங்கோஜமான நிலையில் வைக்கும் சிட்சையைப் பெறுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளவுங்கூட நீங்கள் ஒருவேளை விரும்பலாம். ஆனால் அனைத்திலும் மிக மோசமானதாக இருப்பது பெற்றோரை ஏமாற்றி விட்டோமே என்ற எண்ணமே. இளைஞனான வின்சன்ட் சொல்வது போல்: “என்னுடைய பெற்றோருக்கு என்னிடம் அதிகமான நம்பிக்கை இருப்பதை நான் எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன். நான் அவர்களைப் புண்படுத்த விரும்பாததன் காரணமாக அவர்களை அணுகிபேசுவது எனக்குக் கடினமாக இருந்தது.”
என்றபோதிலும் துர்செய்தி வேகமாக எட்டிவிடுகிறது. ஒருவேளை அதை நீங்கள் மறைக்க உங்களால் இயன்ற அளவு சமாளித்துக் கொண்டிருந்தாலுங்கூட உங்கள் வீட்டார் உங்களை நன்கு அறிந்து வைத்திருப்பதால் ஏதோ தவறு நேரிட்டிருப்பதை அவர்கள் ஊகித்துவிடுவார்கள். ஆகவே உங்கள் பெற்றோரிடம் சொல்லாதிருப்பது வெறுமென தவிர்க்க முடியாததை தள்ளிப்போடுவதாக இருக்கிறது. (நீதிமொழிகள் 28:13 ஒப்பிடவும்) கேள்வி என்னவென்றால், எவ்விதமாக அவர்களிடம் சொல்வது என்பதே.
எவரும் பரிபூரணர் அல்ல
முதலாவதாக தவறுகளைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்: “எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களாகிவிட்டோம்.” (ரோமர் 3:23; 5:12) சில தவறுகள் ஏற்படுவதற்குக் காரணம் அறியாமையாக இருக்கிறது. மற்றவை கவனக் குறைவினால் ஏற்படுகிறது. ஒரு சில சமயங்களில் ஒரு நபர் தவறு என்பதைத் தெரிந்தே செய்கிறார் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் தவறுகள் வாழ்க்கையின் பாகமாக இருக்கின்றன.
ஆனால் ஒரு தவறை ஒப்புக்கொள்ள இயலாதவராக இருக்கும் ஒரு நபரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காலப்போக்கில் ஒருநாள் அவர் உங்களிடம் வந்து, “என்னை மன்னித்துவிடுங்கள்—என் தவறை என்னால் உணரமுடிகிறது” என்று சொல்வாரேயானால், அவரைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் உயர்ந்துவிடுமல்லவா? அதே விதமாகவே உங்கள் குறைகளைக் குறித்து உங்கள் பெற்றோர் நிலைகுலைந்துவிடக்கூடும். ஆனால் தவற்றை ஒப்புக்கொள்வதற்கு நீங்கள் போதிய அளவு மனத்தாழ்மையுள்ளவராக இருந்தீர்கள் என்ற உண்மையானது அவர்கள் கோபத்தைத் தணித்துவிட உதவியாக இருக்கும்.
சரியான நேரம்
எவ்விதமாக எப்பொழுது அவர்களிடம் சொல்கிறீர்கள் என்பதன் பேரிலுங்கூட அநேகமாக உங்கள் பெற்றோரின் பிரதிபலிப்பு வெகுவாக சார்ந்ததாக இருக்கும். பைபிள் “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தையைப்” பற்றிப் பேசுகிறது. (நீதிமொழிகள் 25:11; பிரசங்கி 3: 1, 7 ஒப்பிடவும்) உண்மைத்தான். நீங்கள் காலந்தாழ்த்த விரும்புவதில்லை. இளம் வின்ஸி சொன்னாள்: “காத்திருப்பது காரியங்களை மிகவும் மோசமாக்கிவிடுவதைத்தானே நான் கண்டேன்.” என்றபோதிலும் கூடுமானால், செவி கொடுத்துக் கேட்கும் மனநிலையில் இருக்கும் சமயம் பார்த்து உங்கள் வீட்டிலுள்ளவர்களோடு பேசவும். 16 வயது லத்தியா இவ்விதமாகச் சொல்கிறாள்: “என் அம்மா அதிக வேலையாக இருக்கும் சமயத்தில் நான் இப்படிப்பட்ட காரியங்களைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. ஏனென்றால் அவள் என்னை விரட்டிவிடுவாள், அல்லது அவள் நிலைகுலைந்து போய்விடுவாள்.” 15 வயது கெல்லி இவ்வாறு ஆலோசனை சொல்கிறாள்: “உங்களுடைய பெற்றோரின் பிரச்னைகளை நீங்கள் கூட்டாதபடிக்கு அவர்களுக்கு பிரச்னைகள் குறைவாக இருக்கும் சமயத்துக்காகக் காத்திருங்கள்.”
அது எப்போது இருக்கலாம்? பதினெட்டு வயது க்ரிஸ் சொல்கிறாள்: “உணவு அருந்தும் சமயம் வரும் வரையாக, நான் காத்திருந்து என் அப்பாவிடம் பேச விரும்புவதைத் தெரிவிக்கிறேன்.” ஒரே பெற்றோரையுடைய ஒரு மகன் இன்னும் மற்றொரு சமயத்தில் பேச முயற்சி செய்தான்: “நான் பொதுவாக படுக்க போகுமுன் அம்மாவிடம் பேசுவேன்; அப்பொழுது அவளுக்கு சிறிது அவகாசம் இருக்கும். வேலையிலிருந்து வீடு திரும்பும்போது அவள் மிகவும் பதட்டமான நிலையில் இருப்பாள்.”
சமயம் சரியாக இருக்கும்போது, உங்கள் பெற்றோரை அணுகுங்கள். ஒருவேளை நீங்கள், “அம்மா, அப்பா, ஏதோ ஒன்று என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது,” என்பதாகச் சொல்லி ஆரம்பிக்கலாம். சரியான சமயம் வராமலோ அல்லது உங்களுடைய பெற்றோர் செவிகொடுத்து கேட்க முடியாதபடி அதிக வேலையாகவோ இருந்தால், எப்படி? புரிந்துகொள்ளுதலோடு நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எதோ பிரச்னை இருப்பதை அவர்கள் கவனிக்காமல் அத்தனை வேலையாக இருப்பது, அவர்களுக்கு உங்களைப்பற்றி அக்கறை இல்லை என்பதை அர்த்தப்படுத்தாது. “உங்களுக்கு வேலை அதிகமிருப்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையாகவே ஏதோ ஒன்று என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது. நாம் பேசலாமா?” என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். அவர்கள் நீங்கள் பேசுவதைக் கேட்கத் தயாராக இருக்கும்போது நீங்கள் கேட்கலாம்: “பேசுவதற்கு வெட்கப்படும் அளவுக்கு நீங்கள் எப்போதாவது எதையாவது செய்திருக்கிறீர்களா?” இப்படிக் கேட்பது பின்வரும் விஷயங்களை அவர்களுக்குச் சொல்கிறது: (1) இந்தக் காரியத்தை நீங்கள் முக்கியமானதாகக் கருதுகிறீர்கள். (2) இதைப்பற்றி வாய்விட்டு பேசுவது உங்களுக்குக் கடினமான விஷயமாக இருக்கிறது. (3) நடந்த சம்பவத்தைக் குறித்து நீங்கள் உண்மையாக மனஸ்தாபப்படுகிறீர்கள்.
“உண்மை பேசுங்கள்”
இப்பொழுதுதானே, உங்கள் தவறைக் குறித்துப் பெற்றோரிடம் சொல்லும் அந்தக் கடினமான சமயம் வருகிறது. இதைச் செய்வதைப் பற்றி, இயேசுவின் ஒரு உவமை நமக்கு அதிகத்தைக் கற்பிக்கிறது. லூக்கா 15:11-32-ல் சுதந்திரத்தை அனுபவித்துக் களிக்க தன் வீட்டைவிட்டு புறப்பட்ட ஒரு மனிதனின் குமாரனைப்பற்றி நாம் வாசிக்கிறோம். ஊதாரியான அந்த வாலிபன் தன் ஆஸ்தியை எல்லாம் அழித்துப்போட்டு, ஒழுக்கயீனமான வாழ்க்கை முறையில் வீழ்ந்து போனான். மிகவும் கீழ்த்தரமான நிலைக்குள்ளான பின்பு, அவன் தன் புத்திக்கு வந்து, மறபடியுமாக தகப்பனால் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்ற நம்பிக்கையோடு வீடுதிரும்ப தீர்மானித்தான். ஆனால் எவ்விதமாக? அவன் புத்திசாலித்தனமாக தன் தகப்பனிடமிருந்து தன் குற்றத்தை மறைக்க முற்படுவானா அல்லது தன் பாவத்தின் வினைமையானத் தன்மையைக் குறைத்துவிடுவானா? மாறாகத் தகப்பனிடம் அவன் சொன்ன முதல் வார்த்தைகள்: “தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல.” ஆம், அவன் மனத்தாழ்மையோடு பாசாங்கில்லாமல் பேசினான். சிட்சை தனக்குக் கொடுக்கப்படக்கூடாது என்று அவன் கேட்கவில்லை. மன்னிக்கப்பட மாத்திரமே அவன் கேட்டான்.
தகப்பன் எவ்விதமாகப் பிரதிபலித்தார்? அந்த வாலிபனுக்கு ஆச்சரியமாக இருந்தது, அவன் எதிர்பார்த்தபடி அவன் கடிந்துகொள்ளப்படவில்லை. தன் மகன் உண்மையாக மனந்திரும்பி வந்ததைத் தகப்பன் அவ்வளவு உறுதியாக நம்பியதால், மேலுமாக சிட்சை அவசியமற்றதாகத் தோன்றியது. அதேவிதமாகவே மனத்தாழ்மையோடும் நேர்மையாகவும் உங்கள் பெற்றோரை அணுகும்போதும் உங்கள் தவறிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டிருப்பதை உங்கள் பெற்றோர் காண அவர்களுக்கு உதவி செய்யும். இப்பொழுது நீங்கள் சிட்சையிலிருந்து தப்பித்துவிட்டீர்கள் என்பதை இது கட்டாயமாகவே அர்த்தப்படுத்துவதில்லை. சிலருடைய விஷயத்தில் கடுமையான தண்டனை தகுதியுள்ளதாக இருக்கும்! “பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்” என்பதாகப் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 29:15) ஆகவே சிட்சையினிடமாகச் சரியான மனநிலையைக் கொண்டிருங்கள்: “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”—எபிரெயர் 12:11.
பைபிள் மேலுமாக நம்மை “மெய்யைப் பேசும்”படியாக அறிவுறுத்துகிறது. (எபேசியர் 4:25) மனதிற்கு ஒவ்வாத சில விவரங்களை மறைத்துவிட வேண்டும்போல் உங்களுக்கு இருந்தாலும், உங்கள் வீட்டாரிடம் அனைத்தையும் சொல்லிவிடுங்கள். இளைஞர்களுக்கு மாத்திரமே விசேஷமான அர்த்தமுள்ளதாக இருக்கும் சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டாரை நீங்கள் நம்புவதைக் காண்பியுங்கள். காரியங்களை நேராக்குவதைக் குறித்து உங்களுக்கிருக்கும் உள்ளார்ந்த அக்கறை அவர்கள் மீது ஆழமான ஒரு கருத்தை உருவாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.—2 கொரிந்தியர் 7:11 ஒப்பிடவும்.
‘நீ இதை எவ்விதமாக எங்களுக்குச் செய்யமுடியும்?’
நிச்சயமாகவே எல்லா இளைஞருக்கும் கிறிஸ்தவ பெற்றோரை கொண்டிருக்கும் ஆசீர்வாதம் இல்லை. ஆனால், “சாந்தம்” “இச்சையடக்கம்” போன்ற ஆவியின் கனிகளைப் பெற்றோர் வளர்த்துக் கொண்டிருந்தாலுங்கூட நீங்கள் செய்த தவறை அறிக்கையிடும்போது, அவர்களுடைய பிரதிபலிப்பு சற்று கடுமையாக இருக்கக்கூடும். (கலாத்தியர் 5:22, 23) தவறு விசேஷமாக வினைமையான ஒன்றாக இருக்கையில், அவர்கள் நியாயமாகவே புண்பட்டவர்களாகவும், ஏமாற்றப்பட்டவர்களாகவும் உணரக்கூடும். உணர்ச்சிகள் நிறைந்த வசைமாரியான வார்த்தைகளால் நீங்கள் தாக்கப்பட்டால், ஆச்சரியப்படாதீர்கள், கோபங்கொள்ளாதீர்கள். முன்கூட்டியே அவர்கள் கொடுத்திருந்த எச்சரிப்புகளுக்கு நீங்கள் செவி கொடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது உண்மைதான். 21 வயது நேத்தன் சொல்வது அக்கறையூட்டுவதாக இருக்கிறது: “உங்கள் பெற்றோர் உணர்ச்சிவசப்படுவது, அவர்கள் உங்கள் மீது எவ்வளவு அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.”
எதுவாக இருந்தாலும், அமைதியாக இருங்கள். (நீதிமொழிகள் 17:27) உங்கள் வீட்டார் சொல்வதைக் கவனமாகக் கேட்டு அவர்கள் எவ்விதமாகக் கேட்டாலும் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். அவசியமானதாக அவர்கள் கருதும் சிட்சையை ஏற்றுக்கொண்டு, சங்கீதக்காரனாகிய தாவீது பின்வருமாறு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்: “நீதிமான் என்னைக் குட்டுவது எனக்குக் கிடைத்த கிருபையாம்.” (சங்கீதம் 141:5, தி.மொ.) நீங்கள் மறுபடியுமாக ஒருபோதும் செய்யாத ஒரு தவறாக இது இருக்கும் என்பதில் தீர்மானமாயிருங்கள்!
என்றாலும், உங்களுடைய பெற்றோரின் உதவியும் முதிர்ச்சியான ஆலோசனையும் உங்களுக்குத் தேவைப்படும் கடைசி சமயமாக இது இருக்காது. சிறு பிரச்னைகளைக் குறித்தும் மனம்விட்டு அவர்களோடு பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்பொழுது பெரிய பிரச்னைகள் எழும்போது, அவர்களை அணுகி, உங்கள் மனதிலிருப்பதை வெளிப்படுத்த நீங்கள் பயப்பட மாட்டீர்கள். (g86 9/8)
[பக்கம் 15-ன் படம்]
உங்கள் பெற்றோர் நீங்கள் பேசுவதைக் கேட்க அதிகமாக மனமுள்ளவர்களாக இருக்கும் ஒரு சமயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்