பேய்கள் என்னை அடக்கியாண்டன
நான் ஒரு குறிசொல்லும் ஆவியாக, ஒரு மந்திரவாதியாக, ஒரு சூனியக்காரனாக இருந்தேன். நான் குறி சொன்னேன். நான் சகுனம் பார்த்தேன். நான் மந்திரத்தால் மற்றவர்களை வசியப்படுத்தினேன். கறுப்பு மந்திரவித்தைகளையும் பில்லி சூனியங்களையும் அப்பியாசித்து வந்தேன். பைபிளில் உபாகமம் 18:10-12-ல் சொல்லப்பட்ட பெரும்பாலான இந்த ஆவியுலக தொடர்பு பழக்கங்களில் நான் ஈடுபட்டேன்.
அப்போஸ்தலனாகிய பவுலின் பிரயாண கூட்டளியான லூக்கா எழுதினதாவது: “நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் ஏஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்பட்டாள்.” (அப்போஸ்தலர் 16:16) இந்தப் பெண்ணின் விஷயத்திலிருந்ததைப் போன்றே சாதாரண வழிகளில் அறிய முடியாத காரியங்களைப் பற்றிய அறிவையுங்கூட பேய்கள் எனக்குக் கொடுத்தன.
உதாரணமாக, என் பாட்டி சாகும் முன்பு அவளுடைய மரணம் சமீபித்துவிட்டதை நான் அறிந்திருந்தேன். என் உறவினர்களில் யாராவது ஒரு பெண் கர்ப்பவதியாகும்போது மற்றவர்கள் அறியும் முன்பே நான் அதை அறிந்திருந்தேன். இது ஏதோ உண்மையாக நிரூபித்த குருட்டு முன்னறிவிப்புகளாக இல்லை; இப்படிப்பட்டவைகளைப்பற்றிய அறிவு ஏறக்குறைய எப்பொழுதுமே சரியானதாக இருந்தது. என் உடன் மாணவனோ அல்லது ஆசிரியரோ அல்லது ஒரு உறவினரோ வியாதிப்பட வேண்டும் என்று நான் விரும்பினால் அது எப்பொழுதும் அவ்வாறே நடந்தது.
ஒரு சமயம் எனக்குப் பாட்டியுடன் மனகசப்பு ஏற்பட்டபோது அவள் காயப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் பேய்களை அழைத்து அவள் தன்னை வெட்டிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பாக கேட்டேன். அந்தப் பிற்பகல் அவள் ஒரு கத்தியால் தன்னைக் காயப்படுத்திக்கொண்டாள்.
‘உவூடோ’ எனப்பட்ட பில்லி சூனியம் அப்பியாசித்தபோது, துணிகளைப் பயன்படுத்தி என் சகோதரனுடைய உருவத்தை உண்டுபண்ணினேன். அவன் என்னைத் தொல்லைப்படுத்துவதிலிருந்து விலக்கிவைக்க நான் விரும்பினேன். பின்பு அவன் எனக்கு அருகில் பத்து அடி (3 மீட்டர்) தூரத்தில் வரும்போது அவனுக்கு தன் மார்பில் தாங்கமுடியாத வலி ஏற்படும், மேலும் சுவாசிக்கவும் கஷ்டப்படுவான். எனவே அவன் என்னைவிட்டு விலகியிருக்கக் கற்றுக்கொண்டான்.
பிற்பாடு எனக்கு அறிமுகமான ஒருவர் பேய்களை வரவழைக்கும் என் சக்தியை ஏளனம் செய்தார். இவர் போதை வஸ்துக்களுடன் தொடர்புள்ளவர் என்பதை நான் அறிந்திருந்தேன். ஆகவே நான் அவரிடம் நீ சிறையிலடைக்கப்பட்டுப் பின்பு விடுவிக்கப்படுவாய் என்று சொன்னேன். நான் என்ன கேட்டேனோ அதை அந்தப் பிசாசு செய்தது. இரண்டு மாதங்களுக்குள்ளாக அந்த மனிதன் சிறையிலடைக்கப்பட்டான், பின்பு குற்றச்சாட்டுகள் தளர்த்தப்பட்டு அவன் விடுவிக்கப்பட்டான். அந்த மனிதன் மீண்டுமாக என் சக்தியைப் பற்றிச் சந்தேகப்படவில்லை.
மாயவித்தைகளில் ஈடுபட ஆரம்பித்தேன்
என் குடும்பத்தினர் மத சடங்குகளிலும் மற்றும் ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஓசார்க் மலைகளின் அஞ்ஞான கொள்கைகளில் ஆழ்ந்துகிடந்தனர். அங்கே மக்கள் ஒருவரைக் காதலிக்கும்படி செய்ய மருந்துகள் உட்கொள்வது போன்ற காரியங்களைப் பயன்படுத்துகிறவர்களாக இருந்தனர். என் பெற்றோர் சான் ஃபிரான்சிஸ்கோவிற்குச் சென்றபின்பு நான் பிறந்தேன். அவர்கள் உண்மையிலேயே பிள்ளை பெற விரும்பவில்லை; இது சுதந்தரமாக இயங்கும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு இடையூறாக இருந்தது. எனவே நான் கவனிக்கப்படாமலும், பாசம் காட்டப்படாமலும், மனமுறிவடையும் விதத்தில் கடுமையாகவும் நடத்தப்பட்டேன். நான் தோழமையற்றவனாக, மக்களைப் பகைக்கிறவனாக ஆனேன்.
சிறு வயது முதலே நான் மாயவித்தைகளில் கவர்ச்சிக்கப்பட்டேன். அதைக் காட்டக்கூடிய திரைபடங்களை, டிவி நகழ்ச்சிகளை நான் பார்ப்பதுண்டு. நான் ஆறு வயதை எட்டுவதற்குள் ‘உவிஜா’ பலகையை உபயோகிப்பதில் பழக்கப்பட்டவனாயிருந்தேன். அவற்றில் தாராளமாக ஈடுபட்டேன். உண்மையில் ஆவியுலகத்தில் தொடர்புகொள்வதற்கு ஆர்வமுள்ளவனாக இருந்தேன். பேய்கள் ஜீவிக்கின்றன என்பதை நான் அறிந்திருந்தேன். அவற்றுடன் பேசுவதை அதிக ஆறுதலாக உணர்ந்தேன். அவை எனக்கு விசேஷ சக்தியையும் அறிவையும் அருளின.
மாயவித்தைகளில் தேர்ச்சி பெறுவதற்கு அது சம்பந்தப்பட்ட எல்லா புத்தகங்களையும் நான் பொது நூல் நிலையங்களிலிருந்தும் முக்கியமாக புத்தகக் கடைகளிலிருந்தும் வாங்கினேன். இந்தக் குறி ஏவுதலால் இயங்கி வந்த ஒரு கடையானது முக்கியமாக சூனியம் கருப்பு மந்திரவித்தை ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருந்தது. இந்த மாயவித்தை சம்பந்தப்பட்ட பழைய புத்தகங்களைப் படிப்பதிலிருந்து பண்டைய காலங்களில் ஆவியுலகம் அப்பியாசங்களைக் கொண்டிருந்த மக்கள் தொடர்புகொண்ட பேய்களின் பெயர்களை நான் கற்றுக்கொண்டேன்.
பின்பாக, பேய்களுடனுள்ள என் தொடர்புகளில், அவற்றுடன் பேசும்போது நான் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தினேன். எப்போதெல்லாம் நான் ஒரு குறிப்பிட்ட பேயோடு தொடர்பு கொண்டேனோ அப்போதெல்லாம் அந்தப் பேயினுடைய பண்பியல்புகளும் அது செயல்பட்ட விதமும் நான் அழைக்கும் பேறொரு பேயின் பண்பியல்புகளிலிருந்து வேறுபட்டிருந்தது. இவ்வாறு நான் அநேகம் பேய்களைப் பெயர்களால் அறிந்திருந்தேன்.
மாயவித்தைப்பற்றி நான் வாசித்ததிலிருந்து, அந்தப் பேய்கள் மரித்துப்போன ஆட்களின் ஆவிகள் அல்லது ஆத்துமாக்கள் அல்ல. மாறாக அவை கடவுளுடைய தயவை இழந்த தேவதூதர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். இந்தத் தேவதூதர்கள் மீது எனக்கு அனுதாப உணர்ச்சி ஏற்பட்டது, முக்கியமாய் சாத்தானுக்காக நான் அதிக வருத்தப்பட்டேன். நான் சாத்தானை வணங்குபவனாக ஆனேன், அதே சமயத்தில் நான் கடவுளிடமும் ஜெபித்துவந்தேன். இது ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தபோதிலும் அப்படிச் செய்துவந்தேன். என்னுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டபோது கடவுள் அவற்றிற்கு பதிலளித்ததாக நான் நம்பினேன். சாத்தான் என்னை முற்றிலுமாக ஏமாற்றிவிட்டான்.—2 கொரிந்தியர் 11:14.
எனக்கு விசேஷ சக்திகளை அருளியபோதிலும் இந்தப் பேய்கள் நான் ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்கு உதவவில்லை. மற்றவர்களை நேசிப்பதற்குப் பதிலாக, பகைப்பதற்கு அவை எனது சிந்தனைகளை மாற்றிவிட்டன. காலப்போக்கில் நான் ஒரு வேசித்தனக்காரனாகவும், திருடனாகவும், குடிவெறியனாகவும் போதை வஸ்துக்களை உட்கொள்பவனாகவும், ஓரினப்புணர்ச்சிக்காரனாகவும் மாறினேன்.
ஜனவரி 1974-ல் என் பாட்டியார் இறந்துபோனார்கள். இது எனக்கு அதிக மனவேதனையை உண்டுபண்ணியது. ஏனெனில் நான் நேசித்த ஒரே ஆள் அவளே. நான் சிறு பிள்ளையாயிருக்கும்போது அவள் எனக்குப் பைபிளிலிருந்து வாசித்துக் காட்டுவாள். மேலும் உயிர்த்தெழுதலைப்பற்றியும் பேசியிருக்கிறாள். இப்பொழுது நான் உயிர்த்தெழுதலைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ள விரும்பினேன். சிறு பிள்ளை முதற்கொண்டே நான் என்றென்றுமாக வாழ விரும்பினேன், நான் அப்படி வாழ்வேன் என்று பேய்கள் எனக்கு வாக்களித்தன, ஆனால் இது எப்படி நிறைவேறும் என்று எனக்குத் தெளிவாக இருக்கவில்லை.
ஒரு முக்கியமான சந்திப்பு
என் பாட்டியின் சவ அடக்கத்துக்குக் கொஞ்ச நாட்களுக்கு பிற்பாடு என்னுடன் வேலை செய்த வென் என்ற ஒரு பெண்ணிடம் இந்த உலகம் முடிவடையப் போகிறது, ஆனால் ஒருவரும் அதை நம்புவதில்லை என்று தற்செயலாக குறிப்பிட்டேன். ஆனால் வென் தனக்கு அதில் நம்பிக்கையுண்டு என்று சொல்லி அந்த விஷயம் எனக்குத் தெரிந்திருப்பதைக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள். நான் இதைப் பேய்களிடமிருந்து அறிந்துகொண்டேன். ஆனால் வென் அதை எனக்குப் பைபிளிலிருந்து காண்பித்தாள்.
வென் எப்பொழுதுமே யெகோவா என்பவரைப்பற்றி பேசி அவர்தானே இந்தத் தற்போதைய ஒழுங்குமுறைக்கு முடிவைக் கொண்டுவரப்போவதாகக் கூறினாள். ஆனால் யெகோவா என்ற அந்தப் பெயரின் சப்தம் எனக்கு எரிச்சலாக இருக்கிறதென்றும் நீ அதைப் உபயோகிக்காதே என்றும் நான் அவளிடம் சொன்னேன். இதனால் அவள் புண்பட்டு ‘நான் மிக அதிகமாக நேசிக்கும் அந்தப் பெயரை நான் இங்கே உபயோகிக்கமுடியாது என்றால் நான் உன்னிடம் பேசுவதை நிறுத்திக்கொள்வதே மேலாக இருக்கும், ஏனெனில் யெகோவா என்பது கடவுளுடைய பெயர்’ என்று அவள் சொன்னாள்.
நான் வியப்படைந்தேன். எனவே அன்றிரவு வீட்டிற்குச் சென்று இறந்துபோன என் பாட்டியின் பைபிளான கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை எடுத்து அதன் பக்கங்களைப் புரட்டி யெகோவா என்ற பெயரை தேட துவங்கினேன். இந்தப் பைபிளில் நான் அதைக் கண்டுபிடித்தால் யெகோவா என்பது கடவுளுடைய பெயர் என்று வென் சொன்னது சரியாகவே இருக்கும். ஆனால் நிச்சயம் அங்கே இருக்காது என்று நான் உணர்ந்தேன். யாத்திராகமம் 6:3-க்கு வந்தவுடனே நான் ஆச்சரியமடைந்தேன், அது வாசிப்பதாவது: “சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் தரிசனமானேன்; ஆனால் யெகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
அந்த நேரமே யெகோவாவே கடவுள் என்றும் அவரோடு ஒப்பிடுகையில் சாத்தான் சத்தியுள்ளவனே அல்ல என்றும் நான் உணர்ந்தேன்! நான் வெறுத்த அந்தப் பெயரை பைபிளில் கண்டதும் அதோடு உயிர்த்தெழுதல் நம்பிக்கையைக் குறித்துக் கேட்டதும் சாட்சிகளோடு ஒரு பைபிள் படிப்பைத் துவங்க எனக்கு உதவியது.
பேய் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைதல்
அதற்குப் பின்பு சீக்கிரத்திலேயே வென் என்னை யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே கொடுக்கப்பட்ட சொற்பொழிவானது பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்ட 666 என்ற எண் கொண்ட மூர்க்கமிருகத்தைப் பற்றியதாக இருந்தது. பேய்களிடமிருந்து இவை பற்றி மாறுபாடான கருத்துக்களை நான் அறிந்திருந்தேன். ஆனால் இப்பொழுது அவை பைபிளில் எழுதப்பட்டிருக்கிறதென்பது உண்மையிலேயே என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனக்கு ஆர்வம் ஏற்பட்டது, எனவே அடுத்த வாரம் சாட்சிகளோடு தொடர்ச்சியான ஒரு பைபிள் படிப்பைத் துவங்கினேன்.
அந்தப் பேய்களோ நான் படிப்பதை விரும்பவில்லை. ஆனால் நான் எதைப் படித்துகொண்டிருந்தேனோ அது சத்தியம் என்பதை அறிந்திருந்தேன். பேய்கள் நான் படிப்பதை நிறுத்த முயன்றபோதிலும் நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை. நான் படுக்கையிலிருக்கும்போது அவை என்னை அடிப்பதுண்டு. ஒரு சமயம் என் தலையில் கொடுக்கப்பட்ட அடி மிகவும் கடுமையானதாக இருந்தது. அந்த வலி நிற்பதற்கு பல மணி நேரங்கள் ஆயிற்று. நான் உதவிக்காக யெகோவாவிடம் ஜெபித்தேன். அதன் பின்பு அவர் அவை என் அறையினுள் பிரவேசியாதபடி செய்தார்.
என்றபோதிலும் பேய்கள் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை. என் படுக்கை அறைக்கு வெளியிலிருந்து என் சன்னல் கதவுகளைக் கடகடவென்று ஆட்டுவதுண்டு. அவை இரவு முழுவதும் அப்படிச் செய்து கொண்டிருந்தன. நான் ஒருசில மணி நேரங்கள் மட்டுமே தூங்கமுடிந்தது. என்னை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று அவை முயற்சி செய்தன. ஆனால் நான் தொடர்ந்து யெகோவாவிடம் ஜெபித்துக்கொண்டிருந்தேன். சாட்சிகளுடைய எல்லா கூட்டத்திற்கும் சென்றுகொண்டிருந்தேன். யெகோவா எனக்கு உதவி செய்தார்.
மெய்தான், பேய்களுக்கு மிகுதியான சக்தி உண்டு. யோபினுடைய பத்துப் பிள்ளைகளைக் கொன்றதுபோல அவை ஆட்களைக் கொல்லவும் கூடும். (யோபு 1:18, 19) அவை என்னைக் கொல்வதற்கு விரும்பினது என்று நான் நிச்சயமாயிருக்கிறேன், ஏனெனில் நான் அவற்றின் ஊழியக்காரனாக விசேஷ சக்தி அருளப்பட்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ நான் அவற்றின் சத்துருவான யெகோவாவை சேவிப்பதற்காக அவற்றைக் கைவிட்டுவிட்டேன். எனவே நாம் பேய்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை என்பதற்கு என்னைப் பாதுகாப்பதற்குரிய யெகோவாவின் வல்லமையே சான்றாக இருக்கிறது.
கோடைகாலம் 1974-ன் போது ஓக்லாந்து-அலமீடா நாட்டின் ஸ்டடியம் ஒன்றில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டிற்கு ஆஜரானேன். அடுத்த மாநாட்டில் நான் முழுக்காட்டுதல் பெறுவேன் என்று அங்கு தீர்மானித்தேன். ஆகவே அதே ஸ்டடியத்தில் ஜூலை 18, 1975-ல் முழுக்காட்டுதல் பெற்றேன். அந்த அக்டோபர் மாதத்தில் நான் உடன் சாட்சிகளில் ஒருத்தியை மணந்துகொண்டேன்.
மேரியும் நானும் திருமணம் செய்துகொண்ட பின்புங்கூட பேய்கள் எங்களுக்குத் தொல்லை கொடுத்தன. சில சமயங்களில் என் மனைவியை அவை நடுநடுங்க வைத்தன. நான் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்த அந்தச் சபையின் அங்கத்தினராகவே மேரி இருந்தாள். எனவே திருமணத்திற்கு முன்பே என்னுடைய பிண்ணனி அனைத்தையும் அவள் அறிந்திருந்தாள். நான் முதன் முதலாக ராஜ்ய மன்றத்துக்குவர ஆரம்பித்தபோதே ஒரு சூனியக்காரனாக இருக்கக்கூடுமோ என்று அவள் சந்தேகப்பட்டதாக அவள் சொன்னாள். நான் உண்மையிலேயே விசித்திரமானவனாகத் தோன்றினேன். நான் முழுவதுமாக கறுப்பு ஆடையே உடுத்தியிருந்தேன். யாரிடமும் பேசமாட்டேன். கூட்டங்களுக்கு வெறுமென வந்து அங்கு உட்கார்ந்துகொள்ளுவேன்.
சாத்தான் பாதாளத்திற்குள் தள்ளி அடைக்கப்படும் வரையில் இந்தப் பேய்களின் தொல்லைகளிலிருந்து நாங்கள் விடுபட முடியாது என்று ஒரு சமயத்தில் நாங்கள் நினைத்தோம். (வெளிப்படுத்துதல் 20:1-3) நாங்கள் ஜெபத்தில் யெகோவாவுக்கு நெருங்கி வந்ததன் காரணமாகவும் தம்முடைய அமைப்பின் மூலம் யெகோவா தேவன் செய்யக்கூடிய எல்லா ஏற்பாடுகளையும் பயன்படுத்திக்கொண்டதன் காரணமாகவும் முதலில் ஏற்பட்டதைப் போன்ற பேய்களின் தொல்லை எங்களுக்கு ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
மூன்று அழகிய மகள்களைக் கொடுத்து யெகோவா எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக மேரி ஊழியத்தில் ஒழுங்கான பயனியராக சேவை செய்து வருகிறாள். சாத்தானும் பேய்களும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுப்போகும் காலத்திற்காக நாங்கள் உண்மையிலேயே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்! இதற்கிடையில் பேய்களிடமிருந்து நேரடியான தொல்லைகளை நாங்கள் அனுபவியாதபோதிலும் அவற்றிற்கு எதிராக போராட்டம் உண்டு என்பதை நாங்கள் ஒருபோதும் மறப்பதில்லை. இதையே அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான்: “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல . . . இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” (எபேசியர் 6:12)—ரால்ஃப் ஆன்டர்சன் என்பவரால் சொல்லப்பட்டது. (w86 8/22)
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
எப்போதெல்லாம் நான் ஒரு குறிப்பிட்ட பேயோடு தொடர்பு கொண்டேனோ, அப்போதெல்லாம் அந்தப் பேயினுடைய பண்பியல்புகளும் அது செயல்பட்ட விதமும் வேறொரு பேயின் பண்பியல்புகளிலிருந்து வேறுபட்டிருந்தது.