உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 9/8 பக். 18-20
  • மனநோயின் மர்மத்தை வெளியாக்குதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனநோயின் மர்மத்தை வெளியாக்குதல்
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சீஸோஃபிரேனியா—மனநோயின் காரிருள் சூழ்ந்த பக்கம்
  • மரபுப் பண்பின் பாகம்
  • இயற்கைக்கு மாறான மூளைகள்
  • மனநோய்—ஒரு பரிகாரம் இருக்கிறதா?
    விழித்தெழு!—1987
  • மனநோய் பற்றிய உண்மைகள்
    விழித்தெழு!—2015
  • “மன ஆரோக்கியம் பற்றிய கசப்பான உண்மை”
    விழித்தெழு!—1999
  • மனநோய்—அந்த மர்ம வியாதி
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 9/8 பக். 18-20

மனநோயின் மர்மத்தை வெளியாக்குதல்

“மனநோய் என்ற எண்ணமே எனக்குப் பயமூட்டுவதாக இருந்தது!” என்று ஐரீன் நினைவுகூருகிறாள். ‘சீஸோஃபிரேனியா’ அல்லது ‘மனச் சோர்வு’ என்பவை என்னுடைய சொல்லகராதியிலேயே இருந்ததில்லை. மனநோய் அத்துடன் நிந்தையையும் கொண்டிருந்தது. அது ‘பைத்தியமாய் போதல்’ அல்லது மனநோய் மருத்துவச் சாலையில் ‘ஒதுக்கித்தள்ளுவதை’ அர்த்தப்படுத்தியது! என்னுடைய நண்பர்களில் சிலர் நான் பேய் பிடித்தவள் என்றும்கூட எண்ணினர்.

பைத்தியம், கிறுக்கு, மூளைக்கோளாறு. இந்த வார்த்தைகளே பயமெழுப்புவதாகவும், பைத்தியக்காரர்களுக்கான விசேஷித்த சிறை அறைகள் மற்றும் உடைகள் ஆகியவற்றின் பிம்பங்களை நினைவில் கொண்டுவருவதாகவும் இருக்கின்றன. இருப்பினும் மனக்கோளாறு உள்ள ஒவ்வொருவரும் பிதற்றுகிற பைத்தியம் அல்ல. விநோதமான ஆள்தன்மை அல்லது விசித்திரமான இயல்பு உள்ள ஒவ்வொருவரும் மனநோயாளியும் அல்ல.

ஒவ்வொரு மனக்கோளாறும் கூட்டாகச் சேர்ந்த தனிப்பட்ட அறிகுறிகளைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, பித்துப்பிடிக்கும் மனச்சேர்வு (Maniac-depression), கிளர்ச்சியூட்டும் உயர்வுகளுக்கும் பாழாக்கும் தாழ்வுகளுக்கும் இடையே ஊசலாடும் ஒரு உணர்ச்சி சம்பந்தமான ஏற்றப்பலகை. இருப்பினும் பெரிய மனச்சோர்வில் (Major-depression), ஒரு நோயாளி “கடுமையான ஸ்தம்பிக்கச் செய்கிற மற்றும் தணியாத துக்கத்தால்” அவதிப்படுகிறார்.a பயக்கோளாறுகள் (Anxiety-disorders), நடுக்கங்கள் (Phobias) போன்றவை பாதிக்கப்பட்டவர்களை அர்த்தமற்ற பயங்களினால் உண்மையிலேயே ஸ்தம்பிக்க வைக்கின்றன.

இருப்பினும், இந்தக் கட்டுரையிலும், தொடர்ந்து வரும் கட்டுரையிலும் நாம் மனநோயின் சாராம்சத்தை உள்ளடக்கிய ஒரு வியாதியைக் குறிப்பாகக் கவனிக்கிறோம்.

சீஸோஃபிரேனியா—மனநோயின் காரிருள் சூழ்ந்த பக்கம்

மருத்துவமனையில் இருக்கும்போது ஐரீன் அநேக தடவைகள் தவறாக அடையாளம் கண்டுகொண்டாள்—மருத்துவர்களையும் தாதிகளையும் வெகுகாலமாக இழந்துவிட்ட உறவினர்களாக நினைத்துக் கட்டித் தழுவினாள். மற்றவர்களால் கண்டுகொள்ள முடியாத வாசனைகளைத் தன்னால் முகரமுடிகிறது என்று எண்ணினாள். மருத்துவமனை சிப்பந்திகள் தன்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்று நம்பினாள்! “ஒரு தடவை அவர்கள் என்னைப் படுக்கையோடு கட்டிப்போட வேண்டியிருந்தது,” என்பதை அவள் ஒப்புக்கொள்கிறாள்.

என்ன வியாதி கண்டுபிடிக்கப்பட்டது? சீஸோஃபிரேனியா (Schizophrenia), குறைந்தபட்சம் நூறுபேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் சம்பவிக்கக்கூடிய ஒரு வியாதி. ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான புதியவர்கள் இந்த நோயினால் பீடிக்கப்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.b

சீஸோஃபிரேனியா நோயாளி இரட்டை அல்லது பலதரப்பட்ட ஆள்தன்மையுடையவர் என்ற அர்த்தத்தில் ஒரு பிளவுபட்ட ஆள்தன்மையை உடையவர் அல்ல, மாறாக, ஒரு பழுதுள்ள ஆள்தன்மையை உடையவர். உதாரணமாக, அவனுடைய மருத்துவரால் ‘பாடபுத்தக நோயாளி’ என்று வர்ணிக்கப்பட்ட ஜெர்ரி என்ற இளைஞனை எடுத்துக்கொள்ளலாம். அவனுடைய கண்கள் ஒரு கணம் வெறுமையாகவும், அடுத்த கணம் பயமுறுத்தும் வகையில் பகைமையுணர்வைக் காட்டுவதாயும் இருக்கின்றன. அவனுடைய பேச்சு பயமும் (“என்னை மின்சாரம் பாய்ச்சி கொல்ல இங்கே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்”) பொய்த்தோற்றமும் (“அந்தப் படத்திற்குத் தலைவலி இருக்கிறது”) கொண்ட கோர்வையற்ற கலவையாக இருக்கிறது. உள்ளேயிருந்து எழும்பும் குரல்கள் அவனைப் பயமுறுத்துகின்றன. அவன் மூளைக்கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

சீஸோஃபிரேனியா (Schizophrenia) பல்வேறுபட்ட விந்தையான அறிகுறிகளை உண்டாக்குகிறது; பிரமைகள், உள்ளிருந்து எழும்பும் குரல்கள், குழப்பமான சிந்தனைகள், நியாயமற்ற பயங்கள், உண்மையுடன் ஒத்திசைவாக இல்லாததாக தோன்றுகிற உணர்ச்சிகள். இது எதினால் உண்டாகிறது? வெறுமனே ஒரு பத்தாண்டுக்கு முன்புதானே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பைத்தியம் பிடிக்கும் வகையில் நடத்துகிறார்கள் என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டினார்கள். இன்று சிலர் இது பெரும்பாலும் தலைகீழாய் மாறியிருக்கிறது என்று உணர்கிறார்கள். ஒரு பிள்ளை சீஸோஃபிரேனியாவால் (Schizophrenia) பாதிக்கப்பட்டிருக்கும்போது பெற்றோர்கள் பெருமளவிலான அழுத்தங்களையும், தாங்கல்களையும் அனுபவிக்கிறார்கள்.

ஆகவே, இன்று பெரும்பாலான மருத்துவர்கள் பெற்றோர்களைக் குற்றம் சாட்டியது தவறு என்று சொல்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகளைத் திடனற்றுப்போகச் செய்யாமலிருக்கும்படியாகப் பெற்றோர்களை பைபிள் வற்புறுத்துகிறது, உண்மைதான். (கொலோசெயர் 3:21) ஆனால் அப்படிச் செய்தாலும் இதனால் மட்டுமே அவர்களுடைய பிள்ளைகள் சீஸோஃபிரேனியாவால் (Schizophrenia) பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. பெற்றோர்களின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்ட காரணங்கள் உட்பட்டிருக்கின்றன.

மரபுப் பண்பின் பாகம்

நிக்கும், ஹெர்பெர்ட்டும் (புனைப்பெயர்கள்) ஒரே மாதிரியான இரட்டையர்கள். பிறப்பிலேயே பிரிக்கப்பட்டவர்களாக, நிக், அன்புள்ள வளர்ப்புப் பெற்றோரால் வளர்க்கப்பட்டான், ஹெர்பெர்ட் அக்கறையற்ற பாட்டியால் வளர்க்கப்பட்டான். இளம் வயதிலேயே பைத்தியத்திற்கான விதைகள் இருவரிலுமே வளர ஆரம்பித்தன. நிக், தீ வைக்கவும் திருடவும் செய்தான். ஹெர்பெர்ட்டும் தீ வைத்தலிலும் நாய்களை வாதித்தலிலும் ஈடுபாடு உடையவனாக இருந்தான். முழு அளவிலே மலர்ந்த சீஸோஃபிரேனியா (Schizophrenia) தொடர்ந்ததால் இருவரும் மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தற்செயலாக நிகழ்ந்த ஒத்த சம்பவங்களா? அல்லது மரபுப் பண்பு கடத்தும் கூறுகள் (genes) சீஸோஃபிரேனியாவை ஏந்திச் செல்கின்றனவா? அறியப்பட்ட தனித்தனியே வளர்க்கப்பட்ட 14 ஜோடி இரட்டைக் குழந்தைகளில், ஒரு ஜோடி குழந்தைகள் சீஸோஃபிரேனியாவால் தாக்கப்பட்டது. இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த வியாதியால் பாதிக்கப்பட்டதன் எண்ணிக்கை ஒன்பது. சீஸோஃபிரேனியாவில் மரபுப் பண்பு கடத்தும் கூறுகள் பாகம் வகிக்கின்றன என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் இரண்டு சீஸோஃபிரேனியா நோயாளிகள் விவாகம் செய்யும்போது அவர்களுடைய குழந்தைகளும் சீஸோஃபிரேனியாவால் பாதிக்கப்படுவார்கள் என்பது 46 சதவிகிதம் வாய்ப்பு மட்டுமே உள்ளது. “சீஸோஃபிரேனியா பிரதான மரபுப் பண்பு கூறுகளால் விளைவடையக்கூடியது என்றால் குழந்தைகளில் 75 சதவிகிதத்தினர் சீஸோஃபிரேனியாவால் பாதிக்கப்பட வேண்டும்” என்று சீஸோஃபிரேனியா: தி எபிஜெனெட்டிக் பஸ்ல் என்ற புத்தகம் சொல்கிறது.

மரபுப் பண்பு கடத்தும் கூறுகளைவிட அதிகம் உட்பட்டிருக்க வேண்டும். மைண்ட் மூட் அண்ட் மெடிசின் (Mind Mood and Medicine) என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் இவ்வாறு ஊகிக்கிறார்கள்: “மனநிலை சம்பந்தமான அனுபவம்—உதாரணமாக, சண்டையிடும்போது உண்டாகும் அழுத்தம்—உடலின் இரசாயண, உட்சுரப்பு மற்றும் உடற்கூறு சம்பந்தமான இயக்கத்தைப் பெருமளவாக பாதிப்பது நன்கு அறியப்பட்டிருக்கிறது. மனநோய் சம்பந்தப்பட்டதில், பாதிக்கப்படக்கூடிய ஆளில் ஒரு மனோரீதியான அனுபவம் அநேக சமயங்களில் ஒரு துரிதப்படுத்தும் காரணியாக அடையாளம் காட்டப்படுகிறது.” மரபுப் பண்பு கடத்தும் கூறுகள் எங்கே பொருந்துகின்றன? மருத்துவர்களான வெண்டரும் கிளைனும் தொடர்ந்து சொல்வதாவது: “மரபுப் பண்பு காரணிகள் ஒரு நபரை சில குறிப்பிட்ட விதமான மனோரீதியான அனுபவங்களுக்குப் பாதிக்கப்படக்கூடியவராக்கலாம் என்பது எங்களது ஒட்டுமொத்தமான கருத்து.” ஆகவே சீஸோஃபிரேனியாதானே, பரம்பரையாகக் கடத்தப்படும் நோய் அல்ல, என்றாலும் அந்த நோயினால் சுலபமாக பாதிக்கப்படுவதற்கு நல்ல வாய்ப்பு கடத்தப்படுகிறது.

இயற்கைக்கு மாறான மூளைகள்

சீஸோஃபிரேனியா புல்லெட்டின் (Schizophrenia Bulletin) புதிரின் இன்னொரு பாகத்தை அளிக்கிறது: “கொடுக்கப்பட்டிருக்கும் அத்தாட்சி சீஸோஃபிரேனியா நோயாளிகளின் மூளைகள் அடிக்கடி இயற்கைக்கு மாறான நிலைகளைக் கொண்டிருக்கின்றன என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.”

ஒரு சாதாரண நோயாளியில் மூளையின் ஹிப்போகேம்ப்பஸ் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் நரம்பு, உயிரணுக்கள் “பெரும்பாலும் சிறிய இராணுவ வீரர்களைப் போன்று” வரிசையாக அமைந்திருக்கின்றன என்று டாக்டர் அர்னால்ட் ஷீபெல் உரிமை பாராட்டுகிறார். ஆனால் சில சீஸோஃபிரேனியா நோயாளிகளில் “நரம்பு உயிரணுக்களும் அவற்றின் இயங்கு முறையும் முழுவதுமாக ஒழுங்கற்றதாக இருக்கின்றன.” இது சீஸோஃபிரேனியாவால் பாதிக்கப்பட்டவரின் பிரம்மைகள் மற்றும் பொய்த்தோற்றங்களுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அவர் நம்புகிறார். மற்ற சீஸோஃபிரேனியா நோயாளிகள் பெரிதாக்கப்பட்ட மூளைப் பள்ளங்களை (brain cavities) உடையவர்களாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர். எல்லாவற்றிலும் அதிக ஆவலைத்தூண்டுவது என்னவென்றால் மனநோயாளிகளின் மூளைகள் உயிர்வேதியியல் சம்பந்தமான குறைபாடுகளை உடையதாயிருக்கக்கூடும் என்பதே! (பின்னால் தொடர்கிற கட்டுரையைப் பார்க்கவும்)

இருப்பினும், இந்நாள் வரைக்கும், எல்லா சீஸோஃபிரேனியா நோயாளிகளுக்கும் பொதுவாக இருக்கும் எந்த ஒரு மூளை சம்பந்தமான அசாதாரண காரியமோ அல்லது உயிர்வேதியியல் குறைபாடோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே சீஸோஃபிரேனியா என்பது, “பலவித வித்தியாசமான காரணங்களைக் கொண்ட பல கோளாறுகள்” என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். (Schizophrenia: Is There an Answer?) மெதுவாக செயல்படும் ஒரு விஷக்கிருமி, உயிர்ச்சத்து குறைபாடுகள், உயிர்பொருட்களின் இரசாயண மாற்ற செயலில் ஒழுங்கற்ற தன்மை, உணவு சம்பந்தமாக உடலில் ஏற்படும் எதிர்விளைவுகள்—போன்றவை சீஸோஃபிரேனியாவில் உட்பட்டிருப்பதாக உரிமை பாராட்டப்படும் காரணிகளில் சில.

இந்த நோய்க்கான சரியான காரணமும், நுட்ப விவரங்களும் இயக்கமுறையும் மருத்துவ விஞ்ஞானத்திலிருந்து நழுவினாலும் டாக்டர் E. ஃபுல்லர் சொல்கிறார்: “சீஸோஃபிரேனியா என்பது ஒரு மூளைவியாதி, இப்போது நிச்சயமாகவே அப்படிப்பட்டது என்று அறியப்பட்டிருக்கிறது. நீரிழிவு, உடலின் திசுக்களை உணர்விழக்கச் செய்யும் நோய் (multiple Sclerosis) மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் விஞ்ஞானம் மற்றும் உயிரியல் சம்பந்தமானவை என்று உறுதிப்பட்டிருப்பது போலவே தெளிவாகவே இதுவும் உண்மையில் விஞ்ஞானம் மற்றும் உயிரியல் சம்பந்தமானது என்று உறுதியாகச் சொல்லலாம்.” மனச்சோர்வு கோளாறுகளும் அதேபோல உயிரியல் சம்பந்தப்பட்டவை என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது.

இவ்வாறு மனநோய் தன்னுடைய மர்மத்தின் மணத்தையும், களங்கத்தையும் இழந்திருக்கிறது. அதற்காக சிகிச்சை உண்மையில் சாத்தியமாயிருக்கிறது. (g86 9/8)

[அடிக்குறிப்புகள்]

a செப்டம்பர் 8, 1981, விழித்தெழு! (Awake!) பத்திரிகையின், “நீங்கள் மனச் சோர்வை எதிர்த்துப் போராடக்கூடும்” (You Can Fight Depression) என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

b ஸ்வீடன், நார்வே, மேற்கு அயர்லாந்து, வடக்கு யூகோஸ்லேவியா மற்றும் பெரும்பாலான வளரும் நாடுகளில் சீஸோஃபிரேனியாவின் விகிதம் அதிகம்.

[பக்கம் 19-ன் படம்]

மரபுநூல் சம்பந்தப்பட்டதா?

சூழ்நிலையா?

மூளைக் கோளாறுகளா?

இரசாயண குறைபாடுகளா?

உணவுப் பழக்கமா?

மனநோயினால் பீடிக்கப்படுவதற்கு அநேக காரணிகள் உட்பட்டிருக்கக்கூடும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்