கடவுள் எப்போது பிரபஞ்சத்தை படைக்க ஆரம்பித்தார்?
பைபிளின் பதில்
கடவுள் எப்போது பிரபஞ்சத்தை படைக்க ஆரம்பித்தார், அதற்கு எவ்வளவு காலம் எடுத்தது என்பதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று மட்டும்தான் அது சொல்கிறது. (ஆதியாகமம் 1:1) அந்த ‘ஆரம்பம்’ எப்போது நடந்தது என்று பைபிள் குறிப்பாக எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும், படைப்பு வேலைகள் நடந்த அந்த ஆறு ‘நாட்களுக்கு’ அதாவது காலப்பகுதிக்கு முன்புதான் அந்த ‘ஆரம்பம்’ இருந்திருக்கும் என்று ஆதியாகமத்தில் உள்ள சம்பவங்களின் வரிசை காட்டுகிறது.
படைப்புக் காலம் வெறும் 24 மணி நேரம் கொண்ட ஆறு நாட்களா?
இல்லை. பைபிளில் “நாள்” என்ற வார்த்தை சூழமைவை பொருத்து வித்தியாசப்பட்ட கால அளவை குறிக்கலாம். உதாரணத்துக்கு, முழு படைப்புக் காலத்தையும் ஒரு நாள் என்றும் பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 2:4.
ஆறு நாட்களில் கடவுள் எதையெல்லாம் படைத்தார்?
“ஒழுங்கில்லாமல் வெறுமையாக” இருந்த பூமியை மனிதர்கள் குடியிருப்பதற்கு ஏற்ற இடமாக கடவுள் மாற்றினார். (ஆதியாகமம் 1:2) அதற்குப் பின்பு, பூமியில் உயிரினங்களை படைத்தார். படைப்பின் நாட்களில், அல்லது யுகங்களில், நடந்த ஆறு வகை நிகழ்வுகளை பைபிள் விளக்குகிறது. அவை இதோ:
நாள் 1: பூமியின் நிலப்பரப்பில் வெளிச்சம் வரும்படி கடவுள் செய்தார். அதனால், இரவும் பகலும் மாறி மாறி வரத் தொடங்கியது.—ஆதியாகமம் 1:3-5.
நாள் 2: கடவுள் ஆகாயவிரிவை உண்டாக்கினார். அதாவது, வானத்துக்குமேல் இருக்கிற தண்ணீருக்கும், பூமியின் நிலப்பரப்பில் இருக்கிற தண்ணீருக்கும் நடுவில் ஒரு பிரிவை உண்டாக்கினார்.—ஆதியாகமம் 1:6-8.
நாள் 3: கடவுள் காய்ந்த நிலத்தை உண்டாக்கினார். அதோடு செடி கொடிகளையும் உண்டாக்கினார்.—ஆதியாகமம் 1:9-13.
நாள் 4: ஒளிச்சுடர்களான சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை பூமியில் நன்றாக தெரியும்படி கடவுள் செய்தார்.—ஆதியாகமம் 1:14-19.
நாள் 5: கடவுள் தண்ணீரில் வாழ்கிற உயிரினங்களையும் வானத்தில் பறக்கிற பறவைகளையும் படைத்தார்.—ஆதியாகமம் 1:20-23.
நாள் 6: கடவுள் நிலத்தில் வாழ்கிற மிருகங்களையும் மனிதர்களையும் படைத்தார்.—ஆதியாகமம் 1:24-31.
ஆறாவது நாளின் முடிவில் கடவுள் படைப்பு வேலையிலிருந்து ஓய்வெடுத்தார், அதாவது படைக்கும் வேலையை நிறுத்திவிட்டார்.—ஆதியாகமம் 2:1, 2.
ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறதா?
பைபிளில் இருக்கிற படைப்பை பற்றிய பதிவு விரிவான அறிவியல் ஆய்வு கிடையாது. படைப்புக் காலத்தில் ஒவ்வொன்றும் எப்போது படைக்கப்பட்டது என்று பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்கள்கூட சுலபமாக புரிந்துகொள்ளும் விதத்தில் அது எழுதப்பட்டிருக்கிறது. படைப்பை பற்றிய இந்தப் பதிவு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளோடு முரண்படவில்லை. வானியல் நிபுணர் ராபர்ட் ஜஸ்ட்ரோவ் இப்படி எழுதினார்: “எல்லா விவரங்களும் வேறுபட்டாலும், பைபிளிலுள்ள ஆதியாகமப் பதிவு மற்றும் வானியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படை சாராம்சம் ஒன்றுதான். மனிதன் உருவாகும் நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திடீரென நடந்தது.”
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எப்போது படைக்கப்பட்டன?
“ஆரம்பத்தில்” கடவுள் ‘வானத்தை’ படைக்கும் போதே சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உண்டாக்கினார். (ஆதியாகமம் 1:1) இருந்தாலும், வளிமண்டலம் ரொம்ப அடர்த்தியாக இருந்ததால் பூமியின் நிலப்பரப்பில் அதனுடைய வெளிச்சம் எட்டவில்லை. (ஆதியாகமம் 1:2) படைப்பின் முதல் நாளில் வெளிச்சம் பூமியில் மங்கலாகத் தெரிந்தாலும் அது எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாக தெரியவில்லை. படைப்பின் நான்காவது நாளில் வளிமண்டலம் தெளிவானது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவையெல்லாமே “பூமிக்கு வெளிச்சம்” தந்தது என்று பைபிள் சொல்கிறது. படைப்பின்போது பூமியிலிருந்து ஒருவர் பார்த்திருந்தால் அவருடைய கண்களுக்கு எப்படித் தெரிந்திருக்குமோ, அந்த விதத்தில் இவை எழுதப்பட்டன.—ஆதியாகமம் 1:17.
பைபிளின் படி பூமியின் வயது என்ன?
பூமியின் வயதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், பூமி உட்பட இந்த முழு பிரபஞ்சத்துக்கும் ஒரு ஆரம்பம் இருந்தது என்று ஆதியாகமம் 1:1 சொல்கிறது. இந்த வரிகள், நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு அல்லது பூமியின் வயது சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிற விஷயத்தோடு முரண்படவில்லை.