கடவுளிடம் நெருங்கிப் போவது எப்படி?
பைபிள் தரும் பதில்
கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருக்குப் பிடித்த விஷயங்களை செய்வதன் மூலம் நீங்கள் கடவுளுடைய நண்பராக முடியும். அப்போது அவரும் “உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:8) ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்று பைபிள் உறுதியளிக்கிறது.—அப்போஸ்தலர் 17:27.
கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்
பைபிளைப் படியுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.”—2 தீமோத்தேயு 3:16.
அர்த்தம்: கடவுள்தான் பைபிளின் ஆசிரியர். அவருடைய எண்ணங்களை மனிதர்களுக்கு கொடுத்து, அவருடைய மனதிலிருப்பதை எழுத வைத்தார். இந்தப் புத்தகத்தில் மட்டும்தான் அவருடைய விருப்பத்தைப் பற்றி, அதாவது நமக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கப் போவதைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார். அதோடு அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் அன்பு, நீதி, இரக்கம் போன்ற அவருடைய குணங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.—யாத்திராகமம் 34:6; உபாகமம் 32:4.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்: பைபிளை தினமும் வாசியுங்கள். (யோசுவா 1:8) பின்பு, ‘இதிலிருந்து கடவுள் எப்படிப்பட்ட நபர் என்று நான் தெரிந்துகொள்கிறேன்?’ என்று யோசித்துப் பாருங்கள்.—சங்கீதம் 77:12.
உதாரணத்துக்கு, எரேமியா 29:11-ஐ வாசித்துப் பாருங்கள். பின்பு இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுள் என்ன ஆசைப்படுகிறார், நான் நிம்மதியாக வாழ வேண்டும் என்றா, அழிந்துபோக வேண்டும் என்றா? அவர் பழிவாங்குகிற கடவுளா, அல்லது எனக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க ஆசைப்படுகிற கடவுளா?’
படைப்பை கவனியுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: ‘பார்க்க முடியாத கடவுளுடைய குணங்களை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.’—ரோமர் 1:20.
அர்த்தம்: ஒரு ஓவியத்தைப் பார்க்கும்போது அதை வரைந்த ஓவியரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். ஒரு சிக்கலான இயந்திரத்தை பார்க்கும்போது அதை உருவாக்கியவரை பற்றி தெரிந்துகொள்ள முடியும். அதேபோல், கடவுளுடைய படைப்புகளிலிருந்து அவருடைய குணங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, எக்கச்சக்கமான தகவல்களை சேகரித்து வைக்கும் சிக்கலான மனித மூளையிலிருந்து கடவுளுடைய ஞானம் பளிச்சென்று தெரிகிறது. சூரியன் மற்றும் நட்சத்திரங்களுடைய அளவிட முடியாத சக்தியில் அவருடைய வல்லமையை பார்க்க முடிகிறது.—சங்கீதம் 104:24; ஏசாயா 40:26.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்: நம்மை சுற்றியிருக்கிற படைப்புகளை பார்த்து அதிலிருந்து கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். அப்படிச் செய்யும்போது, ‘இயற்கையில் கொட்டிக்கிடக்கும் பிரமிக்க வைக்கிற வடிவமைப்புகள் கடவுளைப் பற்றி என்ன சொல்கிறது?’a என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், கடவுளைப் பற்றிய எல்லா விஷயங்களையும் படைப்புகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் அவர் பைபிளைக் கொடுத்திருக்கிறார்.
கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன். அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.”—சங்கீதம் 91:14, 15.
அர்த்தம்: யெகோவா என்பதுதான் கடவுளுடைய பெயர். அவருடைய பெயரை தெரிந்துகொண்டு அதை மதிப்புமிக்க விதத்தில் பயன்படுத்துகிறவர்களுக்கு அவர் விசேஷ கவனம் கொடுக்கிறார்.b (சங்கீதம் 83:18; மல்கியா 3:16) “நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்.” இப்படி, தன்னுடைய பெயரை நம்மிடம் சொல்வதன் மூலம் கடவுள் தன்னை அறிமுகப்படுத்துகிறார்.—ஏசாயா 42:8.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்: கடவுளைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது அவருடைய பெயரைப் பயன்படுத்துங்கள்.
ஜெபத்தில் யெகோவாவிடம் பேசுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.”—சங்கீதம் 145:18.
அர்த்தம்: தன்மேல் நம்பிக்கை வைத்து ஜெபம் செய்கிறவர்களிடம் யெகோவா நெருங்கிப் போகிறார். ஜெபம், வணக்கத்தின் ஒரு பாகம். ஜெபம் செய்யும்போது கடவுள்மேல் எந்தளவு மரியாதை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்: கடவுளிடம் அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:17) உங்களுடைய உணர்ச்சிகள், கவலைகள் எல்லாவற்றையும் அவரிடம் கொட்டுங்கள்.—சங்கீதம் 62:8.c
கடவுள்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது.”—எபிரெயர் 11:6.
அர்த்தம்: கடவுளிடம் நெருங்கி போவதற்கு அவர்மேல் விசுவாசம் வைக்க வேண்டும். பைபிளில், விசுவாசம் என்பது கடவுள் இருக்கிறார் என்று வெறுமனே நம்புவதை மட்டும் குறிப்பதில்லை. கடவுள்மேல்... அவருடைய வாக்குறுதிகள்மேல்... அவருடைய சட்டங்கள்மேல்... முழு நம்பிக்கை வைப்பதையும் குறிக்கிறது. ஒரு நல்ல நட்புக்கு அஸ்திவாரமே நம்பிக்கைதான்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்: விசுவாசம் வளர அறிவு ரொம்பவே அவசியம். (ரோமர் 10:17) அதனால், பைபிளைப் படியுங்கள். கடவுளையும் அவருடைய ஆலோசனைகளையும் முழுமையாக நம்ப முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களோடு சேர்ந்து பைபிளைப் படிக்க யெகோவாவின் சாட்சிகள் ஆசையாக காத்திருக்கிறார்கள்.d
கடவுளுக்குப் பிடித்ததை செய்யுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும்.”—1 யோவான் 5:3.
அர்த்தம்: அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவர்மேல் இருக்கும் அன்பைக் காட்டுகிறவர்களிடம் யெகோவா நெருக்கமாக இருக்கிறார்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்: பைபிளைப் படிக்கும்போது கடவுளுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதைக் கண்டுபிடியுங்கள். ‘என்னுடைய படைப்பாளரை சந்தோஷப்படுத்த நான் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.—1 தெசலோனிக்கேயர் 4:1.
கடவுளுடைய ஆலோசனைகளின்படி நடந்து அவருடைய அன்பை ருசியுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.”—சங்கீதம் 34:8.
அர்த்தம்: கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கும்படி அவரே நம்மிடம் சொல்கிறார். அவருடைய அன்பையும் ஆதரவையும் ருசிக்கும்போது அவரிடம் நெருங்கி போக ஆசைப்படுவோம்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்: பைபிளை தவறாமல் படித்து, கடவுள் கொடுத்திருக்கிற ஆலோசனைகளின் படி நடங்கள். அது உங்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறது என்பதை ருசித்துப் பாருங்கள். (ஏசாயா 48:17, 18) கடவுளுடைய உதவியோடு பல சவால்களை சமாளித்து... தங்களுடைய வாழ்க்கையையும் தங்கள் குடும்பத்தாருடைய வாழ்க்கையையும் நல்லபடியாக மாற்றி... உண்மையான சந்தோஷத்தை கண்டுபிடித்த... நபர்களுடைய அனுபவங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.e
தவறான கருத்துக்கள்
தவறான கருத்து: கடவுள் ரொம்ப சக்தியுள்ளவர், ரொம்ப உயர்ந்தவர். அவரிடம் நெருங்கி போவதெல்லாம் முடியாத காரியம்.
உண்மை: இந்த பிரபஞ்சத்திலேயே அதிக சக்தியுள்ளவர், ரொம்ப உயர்ந்தவர் கடவுள் மட்டும்தான். இருந்தாலும், தன்னிடம் நெருங்கி வரும்படி அவர் நம்மை அழைக்கிறார். கடவுளுடைய நெருங்கிய நண்பர்களாக இருந்த நிறைய ஆண்கள் பெண்களுடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கிறது.—அப்போஸ்தலர் 13:22; யாக்கோபு 2:23.
தவறான கருத்து: கடவுள் ஒரு புரியாத புதிர். அதனால் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாது.
உண்மை: கடவுளை பற்றிய சில விஷயங்களை, அதாவது கடவுள் பார்க்க முடியாத உடலில் இருக்கிறார் என்பதை போன்ற விஷயங்களை, புரிந்துகொள்வது கஷ்டம்தான். இருந்தாலும், நம்மால் கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டால்தான் முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 17:3) நம்முடைய படைப்பாளரைப் பற்றி... அவருடைய குணங்களைப் பற்றி... மனிதர்களுக்கும் பூமிக்கும் அவர் வைத்திருக்கிற நோக்கத்தைப் பற்றி... அவருடைய நெறிமுறைகளைப் பற்றி...நாம் புரிந்துகொள்ளும் விதத்தில்தான் பைபிள் எழுதப்பட்டிருக்கிறது. (ஏசாயா 45:18, 19; 1 தீமோத்தேயு 2:4) கடவுளுடைய பெயரையும் பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 83:18) அதனால் கடவுளை பற்றித் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அவருடன் நெருங்கிப் போகவும் நம்மால் முடியும்.—யாக்கோபு 4:8.
a படைப்பில் மின்னிடும் கடவுளுடைய ஞானத்தைப் பற்றி தெரிந்துகொள்ள “யாருடைய கைவண்ணம்?” என்ற தொடர் கட்டுரைகளைப் பாருங்கள்.
b “ஆகும்படி செய்பவர்” என்பது கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்று நிறைய பேர் ஒத்துக்கொள்கிறார்கள். அவருடைய பெயரை தெரியப்படுத்தியதன் மூலம், ‘என்னுடைய நோக்கத்தையும் விருப்பத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். நான் சொல்வதை நிச்சயம் செய்து முடிப்பேன்’ என்று அவரே சொல்வதுபோல் இருக்கிறது.
c “ஏன் ஜெபிக்க வேண்டும்? கடவுள் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.
d அதிகம் தெரிந்துகொள்ள, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவைப் பாருங்கள்.
e “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற தொடர் கட்டுரைகளைப் பாருங்கள்.