மகதலேனா மரியாள் யார்?
பைபிள் தரும் பதில்
மகதலேனா மரியாள் இயேசுவை உண்மையாக பின்பற்றிய ஒரு பெண் சீஷர். கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் இருக்கிற மக்தலா (மகதான் என்றும் அழைக்கப்படலாம்) என்ற ஊர் அவளுடைய சொந்த ஊராக இருந்திருக்கலாம். மரியாள் முன்பு அங்கே வாழ்ந்திருக்கலாம். அதனால் மகதலேனா என்ற பெயர் அவளுக்கு வந்திருக்கலாம்.
இயேசுவோடும் அவருடைய சீஷர்களோடும் பயணம் செய்த நிறைய பெண்களில் மகதலேனா மரியாளும் ஒருவர். அவர்களுக்கு பண உதவியும் பொருள் உதவியும் செய்தாள். (லூக்கா 8:1-3) இயேசு கொல்லப்பட்டதை நேரிலேயே பார்த்திருக்கிறாள். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவரை முதன்முதலில் பார்த்த சிலரில் இவளும் ஒருவர்.—மாற்கு 15:40; யோவான் 20:11-18.
மகதலேனா மரியாள் முன்பு ஒரு விலைமகளாக இருந்தாளா?
பைபிள் அப்படி சொல்வதில்லை. ஏழு பேய்களிடமிருந்து இயேசு அவளை விடுவித்தார். அவளுடைய கடந்த காலத்தை பற்றி பைபிளில் வேறு எதுவும் இல்லை.—லூக்கா 8:2.
அப்படியென்றால் அவள் விலைமகள் என்ற கருத்து எப்படி வந்தது? இயேசுவின் பாதத்தை கண்ணீரில் நனைத்து தன்னுடைய கூந்தலால் துடைத்த, பேர் சொல்லப்படாத அந்த பெண் மகதலேனா மரியாள்தான் (ஒருவேளை விலைமகள்) என்று அவள் இறந்து நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின்பு சிலர் உறுதியாக நம்ப ஆரம்பித்தார்கள். (லூக்கா 7:36-38) ஆனால் பைபிளில் அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
மகதலேனா மரியாள் ‘அப்போஸ்தலர்களுக்கெல்லாம் அப்போஸ்தலரா’?
இல்லை. கத்தோலிக்க திருச்சபைதான் “புனித மகதலேனா மரியாள்,” “அப்போஸ்தலர்களுக்கெல்லாம் அப்போஸ்தலர்” என்ற பட்டப் பெயர்களில் அவளை அழைக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை அப்போஸ்தலர்களிடம் முதன் முதலாக சொன்ன சிலரில் அவளும் ஒருவர் என்பதுதான் அதற்கு காரணம். (யோவான் 20:18) ஆனால், இந்த காரணத்துக்காக அவளை ஒரு அப்போஸ்தலர் என்று அழைக்க முடியாது. பைபிள் எங்கேயுமே அவளை ஒரு அப்போஸ்தலர் என்று அழைப்பதும் கிடையாது.—லூக்கா 6:12-16.
முதல் நூற்றாண்டின் முடிவிலேயே பைபிள் எழுதி முடிக்கப்பட்டது. ஆனால், ஆறாவது நூற்றாண்டில்தான் சர்ச் தலைவர்கள் மகதலேனா மரியாளை புனிதர் என்று அழைத்து அவளை விசேஷ ஸ்தானத்துக்கு உயர்த்தினார்கள். இயேசுவின் அப்போஸ்தலர்களில் சிலர், மரியாளை பார்த்து பொறாமைப்பட்டதாக இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட சில புத்தகங்கள் விவரிக்கிறது. ஆனால், பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் அந்த புத்தகங்கள் சேர்க்கப்படவில்லை. அதோடு, இப்படிப்பட்ட கட்டுக்கதைகளுக்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை.
மகதலேனா மரியாள் இயேசு கிறிஸ்துவின் மனைவியா?
இல்லை. இயேசு கல்யாணமே செய்துகொள்ளவில்லை என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது.a
a “இயேசு திருமணம் ஆனவரா? அவருக்கு கூடப்பிறந்தவர்கள் இருந்தார்களா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.