பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் பத்திரிகை மார்க்கம்
1. பத்திரிகை மார்க்கத்தை ஆரம்பிக்கும்படி யெகோவாவின் அமைப்பு ஏன் பல காலமாகவே சொல்லி வருகிறது?
1 நம்முடன் பைபிள் படிக்க விரும்பாத பலர் நம் பத்திரிகைகளை ரசித்துப் படிக்கிறார்கள். அதனால்தான், பத்திரிகை மார்க்கத்தை ஆரம்பிக்கும்படி, அதாவது விரும்பிப் படிப்பவர்களுக்குத் தவறாமல் நம் பத்திரிகைகளைக் கொடுக்கும்படி பல காலமாகவே யெகோவாவின் அமைப்பு சொல்லி வருகிறது. நம் பத்திரிகைகளைப் படிக்கப் படிக்க, கடவுளுடைய வார்த்தையின்மீது மக்களுக்கு ஒரு ஏக்கம் ஏற்படலாம். (1 பே. 2:2) படித்ததில் பிடித்த விஷயங்கள் காலப்போக்கில் அவர்கள் மனதைத் தொடலாம்; இதனால் அவர்கள் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளலாம்.
2. பத்திரிகை பெற்றுக்கொள்வோரின் ஆர்வத்தை எப்படி அதிகரிக்கலாம்?
2 சத்திய விதைகளுக்கு ‘நீர் பாய்ச்சுங்கள்’: வெறுமென பத்திரிகைகளைக் கொடுத்துவிட்டு வராமல், வீட்டுக்காரருடன் பேசுங்கள்; அவருடன் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அவருடைய சூழ்நிலை, பிடித்த விஷயங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளவும், அதற்கேற்ற விதத்தில் பேசவும் இது உதவும். (நீதி. 16:23) அவரைச் சந்திப்பதற்குமுன் தயாரியுங்கள். முடிந்தால், பத்திரிகையில் உள்ள ஒரு விஷயத்தையும், அது சம்பந்தமான வசனத்தையும் காட்டி, அவர் மனதில் போடப்பட்டிருக்கும் சத்திய விதைகளுக்கு நீர் பாய்ச்சுங்கள். (1 கொ. 3:6) அவரைச் சந்திக்கும் தேதி, கொடுக்கும் பிரசுரங்கள், பேசும் விஷயங்கள், வாசிக்கும் வசனங்கள் என எல்லாத் தகவலையும் குறித்துக்கொள்ளுங்கள்.
3. பத்திரிகை பெறுபவரை எவ்வளவு நாளைக்கு ஒருமுறை சந்திக்கலாம்?
3 எப்போதெல்லாம் சந்திக்கலாம்? பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவர்களை மாதம் ஒருமுறை அல்லது புதிய பத்திரிகை கிடைக்கும்போது சந்திக்கலாம். ஒருவேளை உங்கள் சூழ்நிலை அனுமதித்தால், வீட்டுக்காரரும் ஆர்வம் காட்டினால் அவரை அடிக்கடி சந்திக்கலாம். உதாரணமாக, ஓரிரண்டு வாரங்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்கலாம். “நான் கொடுத்த பத்திரிகையிலிருந்து ஒரு விஷயத்தைக் காட்டலாம்-னு வந்தேன்” என்று சொல்லலாம். இப்படிச் செய்தால், அந்தக் கட்டுரையை வாசிக்க அவர் ஆசைப்படுவார். அந்தக் கட்டுரையை அவர் ஏற்கெனவே படித்திருந்தால், அவருடைய கருத்தைக் கேட்ட பிறகு சுருக்கமாக அதைப் பற்றிக் கலந்துபேசலாம். அவர் நம்முடைய பிரசுரங்களை விரும்பிப் படிப்பவராக இருந்தால், அந்த மாதம் ஊழியத்தில் கொடுக்கிற துண்டுப்பிரதியை, சிற்றேட்டை அல்லது புத்தகத்தைக் கொடுக்கலாம்.
4. பத்திரிகை பெறுபவர்களிடம் பைபிள் படிப்பை ஆரம்பிக்க என்ன செய்யலாம்?
4 பைபிள் படிப்பு வேண்டுமென்று வீட்டுக்காரர் கேட்கும்வரை காத்திருக்காதீர்கள். நீங்களே கேளுங்கள். பைபிள் படிப்பு வேண்டாமென அவர் முன்பு சொல்லியிருக்கலாம். ஆனாலும், காவற்கோபுரத்தில் உள்ள “பைபிள் தரும் பதில்கள்” கட்டுரையை அவ்வப்போது காண்பித்து, அவருடன் கலந்துபேச முயலுங்கள். வாசற்படியில் நின்றபடியேகூட பைபிள் படிப்பு எடுக்கலாம். படிப்பை ஆரம்பிக்க முடியாவிட்டாலும், பத்திரிகைகளைத் தொடர்ந்து கொடுங்கள், ஆர்வத்தை வளர்த்திடுங்கள்.