மாணாக்கர்களுக்கு ‘உங்கள் உயிரையே கொடுங்கள்’
1. பைபிள் மாணாக்கருக்கு உதவ நாம் என்ன செய்ய வேண்டும்?
1 மாணாக்கர் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணிப்பதற்கு நீங்கள் உதவ, அவருக்குத் தவறாமல் பைபிள் படிப்பு நடத்தினால் மட்டும் போதாது. பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளை நெஞ்சார நேசிப்பதைப் போல், அப்போஸ்தலன் பவுல் தான் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தவர்களை நேசித்ததாகச் சொன்னார். நாமும் அவரைப் போல், மாணாக்கர் ஆன்மீக ரீதியில் வளருவதற்கு உதவ ‘நம்முடைய உயிரையே’ கொடுக்கத் தயாராய் இருக்கிறோம்.—1 தெ. 2:7-9.
2. நாம் ஏன் தனிப்பட்ட அக்கறை காட்ட வேண்டும், அதை எப்படிக் காட்டலாம்?
2 தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்: மாணாக்கர் தான் கற்றுக்கொள்கிற விஷயங்களைக் கடைப்பிடிக்கும்போது, பைபிள் நெறிமுறைகளின்படி வாழாதவர்களுடன் உள்ள நட்பை விட்டுவிட அவருடைய மனசாட்சி அவரைத் தூண்டும். (1 பே. 4:4) அவருடைய குடும்பத்தார் அவரை ஒதுக்கிவிடலாம். (மத். 10:34-36) அவரிடம் அன்புடன் தனிப்பட்ட அக்கறை காட்டுவதன் மூலம் அவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட நாம் உதவலாம். “பைபிள் படிப்பை முடித்த கையோடு எழுந்து போய்விடாதீர்கள். முடிந்தால், சிறிது நேரம் இருந்து மாணாக்கருடன் பேசுங்கள்” என்று அனுபவமிக்க ஒரு மிஷனரி சொன்னார். உங்கள் மாணாக்கருக்கு நடைமுறை உதவி அளிக்கத் தயாராய் இருங்கள். உதாரணத்திற்கு, அவர் சுகமில்லாமல் இருக்கும்போது உங்களால் ஃபோன் செய்ய முடியுமா அல்லது அவரைப் போய்ப் பார்க்க முடியுமா? கூட்டங்களில் அந்த மாணாக்கருடன் உட்காரவும், கூடுமானால் அவருடைய குழந்தைகளுக்கு உதவவும் உங்களால் முடியுமா?
3. சபையாரிடமிருந்து உற்சாகத்தைப் பெற மாணாக்கருக்கு நாம் எப்படி உதவலாம்?
3 சபையாரின் உதவி: ஒருவேளை நீங்கள் பைபிள் மாணாக்கரின் வீட்டுக்குப் பக்கத்தில் ஊழியம் செய்யலாம்; அப்போது, உங்களுடன் ஊழியம் செய்பவரை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைக்க ஏன் ஒருசில நிமிடங்களைச் செலவிடக் கூடாது? முடிந்தால், மூப்பர்கள் உட்பட வெவ்வேறு பிரஸ்தாபிகளை அவ்வப்போது உங்களுடன் பைபிள் படிப்புக்கு அழைத்துச் செல்லுங்கள். மேலும், மாணாக்கர் ஆர்வமாக பைபிள் படிப்பில் ஈடுபட ஆரம்பித்ததும், ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ள அவரை உற்சாகப்படுத்துங்கள். அப்போது அவருடைய ஆன்மீகக் குடும்பத்தாராக ஆகவிருக்கும் சபையாருடன் அவர் நல்ல கூட்டுறவை அனுபவித்து மகிழ முடியும்.—மாற். 10:29, 30; எபி. 10:24, 25.
4. நாம் ஊக்கமாய் பாடுபடும்போது என்ன பலனைப் பெறலாம்?
4 பிள்ளைகளுக்கு ஆன்மீக உதவி அளிக்க சதா பாடுபடும் பெற்றோர்கள் அப்பிள்ளைகள் யெகோவாவைச் சேவிக்கத் தீர்மானித்து, சத்தியத்தில் நடக்கும்போது அதிக சந்தோஷப்படுகிறார்கள். (3 யோ. 4) நம் பைபிள் மாணாக்கர்களுக்கு நம்முடைய ‘உயிரைக் கொடுத்து’ உதவும்போது, அதாவது நம்முடைய நேரம், சக்தி, வளம் என எல்லாவற்றையும் கொடுத்து உதவும்போது, நாமும் அதே போன்ற சந்தோஷத்தைப் பெறலாம்.