தேவவசனத்தைத் தொடர்ந்து தைரியமாகப் பேசுங்கள்
1 எல்லாருமே நாம் சொல்லும் செய்தியைக் கேட்க மாட்டார்கள் என்பதை கிறிஸ்தவ ஊழியர்களான நாம் அறிந்திருக்கிறோம். (மத். 10:14) ஆனால், சிலர் அப்படிக் கேட்காமல் இருக்கிறார்கள் என்பதற்காக நற்செய்தியை நாம் பிரசங்கிக்காமலேயே இருந்துவிடுவதில்லை. (நீதி. 29:25) அப்படியென்றால், தேவவசனத்தைத் தொடர்ந்து தைரியமாகப் பேச நமக்கு எது உதவும்?
2 அப்போஸ்தலன் பவுல், ‘கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மையை’ உயர்வாய் மதித்தார். “முழு நிச்சயத்தோடு” பிரசங்கிக்க இது அவரைத் தூண்டியது. (பிலி. 3:8; 1 தெ. 1:5) அவர் பிரசங்கித்த செய்தி சிலருக்கு அற்பமாகவும் முட்டாள்த்தனமாகவும் தோன்றியது; ஆனாலும் அது, ‘விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு தேவபெலனாயிருக்கிறது’ என்பதை அவர் அறிந்திருந்தார். (ரோ. 1:16) ஆகவே, எதிர்ப்பு வந்தபோதிலும் அவர் தொடர்ந்து ‘கர்த்தரை முன்னிட்டுத் தைரியமாய் போதகம்பண்ணினார்.’—அப். 14:1-7; 20:18-21, 24.
3 நமக்குப் பலம் தருபவர்: பவுல் தைரியமாகப் பிரசங்கித்தது, தன் சொந்த பலத்தால் அல்ல. தன்னையும் சீலாவையும் பற்றி அவர் இவ்வாறு எழுதினார்: ‘முன்னே பிலிப்பி பட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.’ (1 தெ. 2:2; அப். 16:12, 37) அதுமட்டுமல்லாமல், ரோம சிறையில் அவர் இருந்தபோது, சுவிசேஷத்தைப் பற்றி “பேச வேண்டியபடி [தொடர்ந்து] தைரியமாய்ப் பேசத்தக்கதாக” தனக்கு உதவுமாறு கடவுளிடம் ஜெபம் செய்ய சொல்லி சகோதரர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். (எபே. 6:18-20) ஆகவே, அவர் தன்மீது சார்ந்திருக்காமல் யெகோவாமீது சார்ந்திருந்ததால் தேவவசனத்தைத் தொடர்ந்து தைரியமாகப் பேசினார்.—2 கொ. 4:7; பிலி. 4:13.
4 இன்றும் கிறிஸ்தவர்கள் அவ்வாறே செய்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு சகோதரர் தன் ஆபீசில் உள்ளவர்களிடம் தான் ஒரு யெகோவாவின் சாட்சி எனச் சொல்வதற்கு மிகவும் தயங்கினார்; பைபிளைப் பற்றி அவர்களிடம் பேசக் கஷ்டப்பட்டார். எனவே, இதைக் குறித்து ஜெபம் செய்தார், பிறகு பேசத் தொடங்கினார். ஆபீசில் வேலைபார்த்த ஒருவர், முதலில் கேட்க மறுத்தார்; ஆனால், உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றிச் சொன்ன பிறகு ஆர்வம் காட்டினார்; இறுதியில் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். அதுமுதல், அந்தச் சகோதரர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் சாட்சி கொடுத்தார். பிறகு, வேலை மாறிப்போனபோது, புதிய ஆபீசிலும் அதேபோல் சாட்சி கொடுத்தார்; அங்கு 14 ஆண்டுகளில் மொத்தம் 34 ஆட்கள் முழுக்காட்டுதல் பெறுவதற்கு உதவியிருக்கிறார். யெகோவா நமக்கும் அதேபோல் பலம் அளித்து, தொடர்ந்து அவரது ‘வசனத்தை முழு தைரியத்தோடு சொல்வதற்கு’ உதவுவார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.—அப். 4:30.