நீங்கள் தைரியமாய் பிரசங்கிக்கிறீர்களா?
1 பேதுருவும் யோவானும் கைதுசெய்யப்பட்டு பயமுறுத்தப்பட்டனர்; ஆனாலும் அவர்கள் ராஜ்ய செய்தியை தைரியமாய் தொடர்ந்து பிரசங்கித்தனர். (அப். 4:17, 21, 31) தற்காலத்தில் தைரியமாய் பிரசங்கிப்பது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
2 சாட்சி கொடுப்பதில் தைரியம்: “தைரியம்” என்ற வார்த்தைக்கு இணையான மற்றொரு சொல், “துணிவு.” இது, “அஞ்சாநெஞ்சம், மனவுரம், தாங்கும் சக்தி” ஆகியவற்றை கொண்டிருப்பதைக் குறிக்கிறது. ஆகவே, தைரியமாய் பிரசங்கிப்பது, பொருத்தமான சந்தர்ப்பங்களில் பயப்படாமல் மற்றவர்களிடம் நற்செய்தியை பகிர்ந்துகொள்வதையே அர்த்தப்படுத்துகிறது. (அப். 4:20; 1 பே. 3:15) அதாவது, நற்செய்தியை சொல்ல நாம் வெட்கப்படுவதில்லை. (சங். 119:46; ரோ. 1:16; 2 தீ. 1:8) ஆகவே, இந்தக் கடைசி காலத்தில் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் கட்டளையை நிறைவேற்ற நமக்குத் தேவையான ஒரு குணம் தைரியம். இந்தக் குணமே, எங்கெல்லாம் மக்களை பார்க்க முடிகிறதோ, அங்கெல்லாம் நற்செய்தியை பகிர்ந்துகொள்ள நம்மை உந்துவிக்கிறது.—அப். 4:29, 30; 1 கொ. 9:23.
3 பள்ளியில் தைரியம்: உங்களுடன் பள்ளியில் படிப்பவர்களிடம் பிரசங்கிப்பதை பயந்த சுபாவமோ சங்கோஜ உணர்வோ தடுத்து நிறுத்துகிறதா? சில சமயங்களில் அவ்வாறு பிரசங்கிக்க முற்படுவது சிரமமாகத்தான் இருக்கும்; சொல்லப்போனால் இது ஒரு சவால் என்பதும் நிஜமே. அதே சமயத்தில், மற்றவர்களிடம் பிரசங்கிக்க தேவையான தைரியத்தை நீங்கள் யெகோவாவிடம் கேட்கையில் நிச்சயம் பலப்படுத்தி தைரியப்படுத்துவார். (சங். 138:3) நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்று அடையாளம் காட்டிக்கொள்ளவும், கேலி கிண்டல்களை பொருட்படுத்தாமல் இருக்கவும் இந்தக் குணம் உங்களுக்கு உதவும். இப்படி பள்ளியில் பிரசங்கிப்பது உங்கள் உபதேசத்தைக் கேட்பவர்களை காப்பாற்றும்.—1 தீ. 4:16.
4 வேலைத்தலத்தில் தைரியம்: வேலை பார்க்குமிடத்தில் நீங்கள் யெகோவாவின் சாட்சி என்பது மற்றவர்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களிடம் பிரசங்கிக்காவிட்டால் அவர்கள் நற்செய்தியை கேள்விப்பட வேறு வழியின்றிகூட போகலாம். உங்கள் தைரியம், கிறிஸ்தவ கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஆஜராவதற்கு விடுப்பு கிடைக்கவும் வழிவகுக்கும்.
5 சோதனை வருகையில் தைரியம்: எதிர்ப்பை சந்திக்கையில் தைரியத்தை ஒன்றுதிரட்டியே ஆகவேண்டும். (1 தெ. 2:1, 2) எதிர்ப்புகள், பரிகாசங்கள், வெளிப்படையான துன்புறுத்தல் ஆகியவற்றை எதிர்ப்படுகையில் இந்த தைரியம் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க உதவும். (பிலி. 1:27, 28) நம் கடவுளாகிய யெகோவாவின் தராதரங்களை நாம் கடைப்பிடிப்பதை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு தொல்லைகள் வந்தாலும் உறுதியைக் காத்துக்கொள்ள நமக்கு வலுவூட்டும். மற்றவர்கள் கலகங்களைத் தூண்டிவிட்டாலும் சமாதானத்தைக் காத்துக்கொள்ள நமக்கு சக்தியளிக்கும்.—ரோ. 12:18.
6 நாம் தனிப்பட்டவர்களாக எந்தக் கஷ்டநஷ்டங்களை எதிர்ப்பட்டாலும் சரி, நற்செய்தியை தைரியமாய் பிரசங்கிப்பதில் உறுதியாய் இருப்போமாக.—எபே. 6:18-20.