தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—தயவாக நடந்துகொள்வதன் மூலம்
1 ஒரு பெண் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தவறாக நினைத்துக்கொண்டிருந்தாள். அவர்களில் ஒருவரை முதன்முதலில் சந்தித்தபோது நடந்ததைச் சொல்கிறாள்: “அன்று நாங்கள் என்ன பேசினோம் என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அவர் ரொம்ப அன்பாக, இனிமையாக, மனத்தாழ்மையாகப் பழகியது நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. அவரை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது.” ஆக, பிரசங்கிக்கும்போது தனிப்பட்ட அக்கறை காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பது இந்த அனுபவத்திலிருந்து தெரிகிறது.—பிலி. 2:4.
2 அன்பு தயவானது: அன்பை வெளிக்காட்டும் ஒரு வழி தயவுகாட்டுவதாகும். (1 கொ. 13:4) தயவானவர்கள் மற்றவர்கள் நலனில் அக்கறையாக இருப்பார்கள்; மற்றவர்களுக்கு உதவ எப்போதும் வழி தேடிக்கொண்டே இருப்பார்கள். பிரசங்க வேலையே ஒரு தயவான செயல்தான். ஆனால் பிரசங்கிப்பதால் மட்டுமே நாம் மற்றவர்கள்மீது தனிப்பட்ட அக்கறையைக் காட்டிவிட முடியாது. அவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்திலும்கூட அப்படிப்பட்ட அக்கறையைக் காட்ட வேண்டும். அதாவது, நாம் நட்புடன் பழகும் விதத்தில், பண்பாக நடந்துகொள்ளும் விதத்தில், கேட்கும் விதத்தில், உரையாடுவதற்கு ஏற்ற விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில், அவற்றைப் பேசும் விதத்தில், சொல்லப்போனால், கண்களால் பார்க்கும் விதத்திலும்கூட கரிசனையைக் காட்ட வேண்டும்.—மத். 8:2, 3.
3 மற்றவர்கள்மீது உண்மையான அக்கறையிருந்தால் நாம் நடைமுறையான வழிகளிலும்கூட அவர்களுக்கு உதவி செய்வோம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒரு பயனியர் சகோதரர் வயதான ஒரு விதவையைச் சந்தித்தார்; ஒரு சாட்சி என்று தெரிந்ததும், கேட்க விருப்பமில்லை என அந்த விதவை சொன்னார். தான் சமையலறையில் ஏணியிலேறி பல்பை மாற்றிக்கொண்டிருந்ததாகவும், பெல் சத்தம் கேட்டு வந்ததாகவும் அவர் சொன்னார். “நீங்கள் தனியாக இருக்கும்போது ஏணியில் ஏறுவது ஆபத்தாயிற்றே” என்று சகோதரர் சொன்னதும் அவரை உள்ளே அழைத்தார். அந்தச் சகோதரர் பல்பை மாற்றிக்கொடுத்துவிட்டு போய்விட்டார். கொஞ்ச நேரம் கழித்து அந்த விதவையின் மகன் அவரைப் பார்க்க வந்தார்; அப்போது நடந்ததை மகனிடம் சொன்னார். அது அந்த மகனின் மனதைத் தொட்டதால் அந்தச் சகோதரரைப் பார்த்து நன்றி சொல்ல துடித்தார். அவரைத் தேடிக் கண்டுபிடித்தார்; இருவரும் நன்றாகப் பேசினார்கள், இறுதியில் அந்த மகன் பைபிளைப் படிக்கவும் ஒத்துக்கொண்டார்.
4 நாம் தயவாக நடந்துகொள்ளும்போது, கடவுளைப் போலவே மக்களிடம் அன்பைக் காண்பிப்போம்; ராஜ்ய செய்தியின் அழகையும் கூட்டுவோம். ஆக, நாம் எப்போதும் ‘தயவுடன் இருந்து,’ ‘தேவனுடைய ஊழியர்கள் என்று விளங்கப்பண்ணுவோமாக.’—2 கொ. 6:3, 6.