அக்கறை காட்டுவோருக்கு அன்புடன் உதவுங்கள்
1 கடவுளுடைய சத்திய வார்த்தையில் உண்மையான அக்கறையை காண்பித்த எத்தியோப்பியன் ஒருவன் யெகோவாவின் தூதன்மூலம் வழிநடத்தப்பட்டபோது, சீஷனாகிய பிலிப்பு அவர் வாசித்துக்கொண்டிருந்ததைப் புரிந்துகொள்ள உதவிசெய்வதற்கு முன்வந்தார். (அப். 8:26-39) அக்கறை காட்டுவோருக்கு உதவிசெய்ய நாம் விசேஷித்த முயற்சியெடுக்கிறோமா? நாம் முயற்சியெடுக்கவேண்டும், ஏனென்றால் நம்முடைய தெய்வீக கட்டளை சீஷர்களை உண்டுபண்ணுவதையும் உட்படுத்துகிறது. (மத். 28:19, 20) அவர்களுக்கு உதவிசெய்ய நாம் என்ன செய்யலாம்?
2 மறுசந்திப்புகள் செய்வதற்கு ஒவ்வொரு வாரமும் நேரத்தை ஒதுக்குங்கள். அக்கறை காட்டுவோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள், மேலும் உங்களுடைய ஆரம்ப சந்திப்பில் தொடங்கிய வேதப்பூர்வமான கலந்தாலோசிப்பை மீண்டும் ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பு ஒன்றை ஆரம்பிப்பதைப்பற்றிய இலக்கை மனதில் வைத்திருங்கள். வீட்டுக்காரர் சந்தாவை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் தயங்குவாரானால், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வின் புதிய வெளியீடுகளை அளிப்பதற்கு தவறாமல் மறுபடியும் செல்லுங்கள்.
3 உங்களுடைய ஆரம்ப சந்திப்பில் பைபிளின் மதிப்பைப்பற்றி கலந்தாலோசித்திருந்தால், “நியாயங்காட்டிப் பேசுதல்” புத்தகம் பக்கம் 66-ல் உள்ள ஆலோசனையைப் பயன்படுத்தி நீங்கள் மீண்டும் சம்பாஷணையை ஆரம்பித்து, இதுபோன்ற ஒன்றை சொல்லலாம்:
◼ “நம்முடைய நவீன உலகத்தில் பைபிளின் அறிவுரை பயனுள்ளதல்ல என்று சிலர் நினைக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] ஒரு மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கு நமக்கு உதவக்கூடிய நல்ல ஆலோசனையை தருகிற ஒரு புத்தகம் பயனுள்ளது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? [குறிப்புசொல்ல அனுமதியுங்கள்.] குடும்ப வாழ்க்கையை உட்படுத்துகிற கோட்பாடுகளும் பழக்கங்களும் மாறியிருக்கின்றன. நாம் இன்று பார்க்கிற விளைவுகளும் நல்லவையாக இல்லை. பைபிள் சொல்வதை பொருத்திப் பிரயோகிக்கிற குடும்பங்கள் அடிப்படையில் நிலையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன.” கொலோசெயர் 3:18-21-ஐ வாசியுங்கள். நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் என்ற துண்டுப்பிரதியை அளித்து, நாம் இலவச பைபிள் படிப்பு திட்டத்தை கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கிக்கூறுங்கள்.
4 மரித்தோருடைய நிலைமையைப் பற்றிய ஓர் கலந்தாலோசிப்பை நீங்கள் இந்த முறையில் ஆரம்பிக்கலாம்:
◼ “மரித்தோருடைய நிலைமையைப்பற்றிய பேச்சு அதிகமாக இருந்துவருகிறது. நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] நாம் ஏதோவொரு வடிவில் தொடர்ந்து உயிர்வாழ்கிறோம் என்பதாக பெரும்பாலான மதங்கள் கற்றுக்கொடுக்கின்றன. இந்தக் காரியத்தைக் குறித்ததில் பைபிள் என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்கையில் அநேகர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். [பிரசங்கி 9:5-ஐ வாசியுங்கள்.] மரித்தோர் உணர்வுடன் வாழ்பவர்களாக இல்லாதபோதிலும், அவர்கள் மறக்கப்பட்டு விடவில்லை. கடவுள் தம்முடைய ராஜ்ய ஆட்சியில் அவர்களை மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவதாக வாக்குக்கொடுத்திருக்கிறார்.” அக்டோபர் 15, 1994, காவற்கோபுரம் அல்லது என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 162-க்கு திருப்பி வேதவசனங்களையும் உதாரணங்களையும் கலந்தாலோசியுங்கள். ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் நோக்கத்தோடு மற்றொரு மறுசந்திப்பிற்காக ஏற்பாடு செய்யுங்கள்.
5 யுத்தத்தைக்குறித்து கிறிஸ்தவ நோக்குநிலையை பற்றிய ஒரு விளக்கத்தையளிக்க விரும்பினால், இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்ல விரும்பலாம்:
◼ “சச்சரவுகளைத் தீர்ப்பதற்கு சண்டையிடுவதே ஒரே வழி என்பதாக சிலர் நினைக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] மக்கள் சமாதானத்தில் ஒன்றுகூடி வாழும்படி கடவுள் விரும்புகிறார் என்பதை பைபிள் காட்டுகிறது. [ரோமர் 12:17, 18-ஐ வாசியுங்கள்.] கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் உலகமுழுவதும் அது உண்மையானதாக ஆகும்.” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டிலுள்ள பக்கங்கள் 25-6-க்கு கவனத்தைத் திருப்புங்கள். எதிர்காலத்திற்கு பைபிள் என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது என்பதை விளக்குவதற்கு மீண்டும் சந்திக்க வருவதாக சொல்லுங்கள்.
6 எத்தியோப்பிய மந்திரி தனக்கு ஒருவருடைய வழிநடத்துதல் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஒத்துக்கொண்டார். (அப். 8:31) அவருக்கு தேவையான உதவியை பிலிப்பு அன்புடன் அளித்தார். அதே முறையில் மற்றவர்களுக்கு உதவிசெய்வதன் மூலம் நம்முடைய உள்ளப்பூர்வமான அன்பை நாம் அவர்களுக்குக் காண்பிக்கலாம்.