வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தை மீண்டும் படித்தல்
1 வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தின் தலைப்பு பக்கம் வெளிப்படுத்துதல் 1:3-ஐ (NW) மேற்கோளாக காட்டுகிறது: “இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளைச் சப்தமாக வாசிக்கிறவனும் அதைக் கேட்கிறவனும் சந்தோஷமுள்ளவன்.” இன்று யெகோவாவின் ஜனங்களுடைய மகிழ்ச்சி, பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலிலுள்ள தீர்க்கதரிசனங்களின் நவீனநாளைய நிறைவேற்றங்களால் நிச்சயமாகவே பேரளவில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்தில், அதாவது, “கர்த்தருடைய நாளில்” நடைபெறும் சம்பவங்களைப் பற்றிய நம்முடைய இன்றைய புரிந்துகொள்ளுதல், வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்பதில் கொடுக்கப்பட்டுள்ளது. (வெளி. 1:10) அதைப் படிப்பதன்மூலம், குறிப்பிடத்தக்க உலக சம்பவங்களில், விசேஷமாக பொய் மத உலகப் பேரரசு, தேசங்கள் அர்மகெதோனுக்கு அணிவகுத்துச் செல்லுதல், தம்முடைய மக்களோடு யெகோவாவின் செயல்தொடர்புகள் ஆகியவற்றை உட்படுத்துகிற காரியங்களில் உட்பார்வையைப் பெற்றிருக்கிறோம்.
2 நம்மில் அநேகருக்கு, இந்தப் பிரசுரத்தைப் படிப்பதானது முன்பு சிந்தித்த குறிப்புகளின்பேரில் நம்முடைய மனங்களை புத்துணர்ச்சியடையச் செய்வதோடு மட்டுமல்லாமல், அவருடைய எல்லா சத்துருக்களின்மீது யெகோவா வெற்றிபெறும் நாளுக்கு வழிநடத்துகிற தற்போதைய சம்பவங்களைப் பற்றிய நம்முடைய ஆவிக்குரிய நோக்குநிலையை கூர்மையாக்கவும் செய்யும். கடந்த இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளின்போது உலகமுழுவதும் நம்முடைய அணியோடு சேர்ந்திருக்கிற ஆயிரக்கணக்கானோர், சபை புத்தகப் படிப்பில் வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தை மூன்றாவது முறையாக கலந்தாலோசிப்பதிலிருந்து நிச்சயமாகவே பயனடைவார்கள். தற்செயலாக, இந்தியாவில் இந்த முறை வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தைப் படிக்கும்போது, உலகின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள நம்முடைய சகோதரர்கள் படிக்கும் அதே பொருளை அதே சமயத்தில் நாம் படித்துவருவோம்.
3 ஒவ்வொரு வாரமும் நன்றாக தயார்செய்வதற்கு, ஆஜராயிருப்பதற்கு, அர்த்தமுள்ள முறையில் பங்குகொள்வதற்கு நிச்சயமாயிருங்கள். வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தின் வெளிச்சத்தில் உலக சம்பவங்கள் நடந்தேறிவருவதன் உட்கருத்தை மிகத் தெளிவாக புரிந்துகொள்கையில் நீங்கள் அதிகமாக பலனளிக்கப்படுவீர்கள் மற்றும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நிச்சயமாகவே, இப்படிப்பட்ட பொருளை நாம் கருத்தார்ந்த சிந்தையுடன் சிந்திக்க வேண்டும், ஏனென்றால் முன்னொருபோதும் இருந்ததைவிட இப்பொழுது அதிகமாக காலத்திற்கேற்றதாய் இருக்கிறது. நம்முடைய காலங்களுக்கான இந்தக் கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனத்தை நாம் வாசிக்கையில், செவிகொடுத்துக் கேட்கையில், தியானிக்கையில் வாக்குப்பண்ணப்பட்ட மகிழ்ச்சியை அனுபவித்து மகிழ்வோமாக!