யெகோவாவில் என் நம்பிக்கை என்னைத் தாங்கியது
அழனோர் டா பிஷாவ் சொன்னபடி
எங்களுடைய ஒரே மகன் பால் 11 மாதங்களிலேயே மார்ச்சளி நோயால் இறந்துபோனான். மூன்று மாதங்களுக்குப்பின், 1945, ஆகஸ்ட் 15-ம் தேதி என் அருமை மனைவி கபவாதத்தால் இறந்து போனாள். எனக்கு வயது 28, இந்தப் பலமான அடிகளுக்குப்பின் நான் துயரமாயும் வருத்தமாயுமிருந்தேன். இருப்பினும் யெகோவாவிலும் அவருடைய வாக்குறுதிகளிலும் வைத்திருந்த நம்பிக்கை என்னைத் தாங்கியது. இந்த நம்பிக்கை எனக்கு எப்படி ஏற்பட்டது என்று நான் சொல்லுகிறேன்.
பிரேஸிலில், பாஹியா மாநிலத்திலுள்ள சால்வடாரில் 1917 ஜனவரி 5-ம் தேதி நான் பிறந்த சமயம் முதற்கொண்டு, அம்மா கத்தோலிக்க சர்ச்சின் “புனிதர்களை” வழிபடும்படியாக எனக்குக் கற்பித்துவந்தார்கள். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஜெபிப்பதற்காக என்னுடைய அண்ணன்மாரையும் என்னையும் அவர்கள் அதிகாலையே எழுப்பிவிடுவார்கள். இருப்பினும், என்னுடைய பெற்றோர் ஆப்பிரிக்க-பிரேஸிலிய பில்லிசூனிய சடங்கு கூட்டங்களுக்கும்கூட சென்று வந்தனர். இந்த நம்பிக்கைகளை நான் மதித்தேன், ஆனால் கத்தோலிக்க மதத்தின் புனிதர்கள் என்றழைக்கப்படுகிறவர்களிலோ அல்லது பில்லிசூனிய சடங்குகளிலோ எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. இந்த மதங்களில் காணப்பட்ட இன வெறுப்பே எனக்கு விசேஷமாக ஏமாற்றமாயிருந்தது.
காலம் சென்றபோது, வேலைத் தேடி என்னுடைய இரண்டு அண்ணன்மாரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னால் என்னுடைய அப்பா குடும்பத்தைப் பொறுப்பில்லாமல் விட்டுவிட்டு போய்விட்டார். ஆகவே ஒன்பது வயதில், என்னுடைய அம்மாவுக்கும் என்னுடைய தங்கைக்கும் உதவியாயிருக்க நான் வேலை தேட வேண்டியதாயிற்று. சுமார் 16 வருடங்களுக்குப் பின்பு, தொழிற்சாலையில் என்னோடு வேலைபார்க்கும் ஒருவரோடு நான் நடத்திய உரையாடல்கள் என்னுடைய வாழ்க்கையில் ஒரு திரும்பு கட்டமாக அமைந்தன.
யெகோவாவில் நம்பிக்கையை பெறுதல்
1942-ல் நான் ஃபெர்நான்டோ டெலிஸை சந்தித்தேன். புனிதர்களை வழிபடுவது தவறு என்பதாக அவர் அடிக்கடி சொல்லிவந்தார். (1 கொரிந்தியர் 10:14; 1 யோவான் 5:21) ஆரம்பத்தில் நான் அவர் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்தேன். ஆனால் அவருடைய உண்மை மனதும் எந்த நிறத்தவராய் இருந்தாலும் மக்களிடம் அவர் காட்டிய அக்கறையும் என்னைக் கவர்ந்தன; அவருடைய பைபிள் அறிவை, விசேஷமாக கடவுளுடைய ராஜ்யத்தையும் ஒரு பரதீஸிய பூமியையும் பற்றி அவர் சொன்னதை நான் வியந்து பாராட்ட ஆரம்பித்தேன். (ஏசாயா 9:6, 7; தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:3, 4) எனக்கிருந்த அக்கறையைப் பார்த்து, அவர் ஒரு பைபிளையும் ஒருசில பைபிள் இலக்கியங்களையும் எனக்குத் தந்தார்.
ஒருசில வாரங்களுக்குப் பின்னர், சபை பைபிள் படிப்புக்கு வரும்படி கொடுக்கப்பட்ட ஒரு அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அந்தத் தொகுதி உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி வெளியிட்ட ரிலிஜன் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தது. நான் படிப்பை அனுபவித்தேன், யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா சபை கூட்டங்களுக்கும் ஆஜராக ஆரம்பித்தேன். என் மனதில் விசேஷமாக பதிந்த காரியம் இன வெறுப்பு அங்கில்லாதிருந்ததும் நான் உடனடியாக அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விதமுமே. அந்தச் சமயத்தில் தான் நான் லின்டாராவோடு பழக ஆரம்பித்திருந்தேன். நான் கற்றுக்கொண்டிருந்த காரியங்களைப் பற்றி அவளிடம் பேசிய போது அவள் என்னோடு கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தாள்.
கூட்டங்களில் என்னைக் கவர்ந்த மற்றொரு காரியம், பிரசங்க வேலைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமாகும். (மத்தேயு 24:14; அப்போஸ்தலர் 20:20) பயனியர்கள் என்றழைக்கப்படும் முழு நேர ஊழியர்களால் ஊக்கம்பெற்று, வேலைக்குப் போய் வரும் சமயங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ரயிலில் நான் மற்றவர்களோடு பேச ஆரம்பித்தேன். அக்கறை காட்டும் ஒருவரை நான் கண்டபோது, அவருடைய விலாசத்தைப் பெற்றுக்கொண்டு அந்த அக்கறையை வளர்ப்பதற்காக நான் அவரை போய் பார்ப்பேன்.
இதற்கிடையில் யெகோவாவிலும் அவர் பயன்படுத்திவரும் அமைப்பிலும் என்னுடைய நம்பிக்கை வளர்ந்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலைப் பற்றிய ஒரு பைபிள் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, 1943, ஏப்ரல் 19-ம் தேதி நான் அட்லான்டிக் சமுத்திரத்தில் முழுக்காட்டப்பட்டேன். அதே நாளில், ஒழுங்கான வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நான் முதல்முறையாக கலந்துகொண்டேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 5-ம் தேதி லின்டாராவும் நானும் திருமணம் செய்துகொண்டோம். பிறகு 1943 ஆகஸ்டில், சால்வடார் நகரில் யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்பட்ட முதல் மாநாட்டின்போது அவள் முழுக்காட்டப்பட்டாள். 1973 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம் (ஆங்கிலம்) அந்த மாநாட்டைக் குறித்து இவ்வாறு சொன்னது: “பாதிரிமார் எடுத்த நடவடிக்கையால் எல் சால்வடாரில் கொடுக்கப்படவிருந்த பொது பேச்சு எப்படியோ நின்றுபோனது . . . ஆனால் சிறப்பான முறையில் அதிகமாக விளம்பரம் செய்யப்படுவதற்கு முன்னால் நிறுத்தப்படவில்லை.” கடுமையான துன்புறுத்தலை அனுபவிக்கும் சமயத்தில், யெகோவாவின் வழிநடத்துதலின் அத்தாட்சி அவரில் என்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியது.
ஆரம்பத்தில் நான் சொன்னவிதமாக, லின்டாராவின் முழுக்காட்டுதலுக்கு வெறும் இரண்டே வருடங்களுக்குப் பின்—எங்களுடைய மகன் இறந்துபோய் மூன்றே மாதங்களில்—என்னுடைய அன்பான மனைவி இறந்துவிட்டாள். அவளுக்கு வயது 22 மட்டுமே. ஆனால் யெகோவாவில் நான் வைத்திருந்த நம்பிக்கை, அந்தக் கடினமான மாதங்களின்போது என்னைத் தாங்கி ஆதரித்தது.
ஆவிக்குரிய நடவடிக்கையால் பலப்படுத்தப்படுதல்
1946-ல் என்னுடைய மனைவியையும் மகனையும் இழந்து ஓராண்டு சென்றபின்பு, எல் சால்வடாரில் அப்போதிருந்த ஒரே சபையில் பைபிள் படிப்பு ஊழியனாக நான் நியமிக்கப்பட்டேன். அதே ஆண்டு பிரேஸிலில் சபைகளில் தேவராஜ்ய ஊழியப் பள்ளி துவக்கப்பட்டது; பாஹியா மாநிலத்தில் நான் முதல் பள்ளி நடத்துனராக ஆனேன். பின்பு அக்டோபர் 1946-ல் “களிகூரும் ஜனங்கள்” தேவராஜ்ய மாநாடு சாவோ பாலோ நகரில் நடத்தப்பட்டது. பத்து வருடங்களாக என்னுடைய முதலாளியாக இருந்துவந்தவர், நான் அவருக்கு தேவைப்பட்டதால் அதற்கு போகாதிருக்கும்படியாக என்னை வற்புறுத்தினார். என்றபோதிலும் மாநாட்டுக்குச் செல்வது எனக்கு எவ்வளவு முக்கியத்துவமுள்ளது என்பதை அவருக்கு நான் விளக்கிய பின்பு, அவர் எனக்கு தாராளமாக வெகுமதியை கொடுத்து, என்னுடைய பயணம் இனிதே அமையும்படியாக என்னை வாழ்த்தி வழியனுப்பினார்.
சாவோ பாலோ முனிசிபல் அரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிகள் பிரேஸில் நாட்டு மொழியான போர்ச்சுகீஸ் மொழியிலும் ஆங்கிலம், ஜெர்மன், ஹங்கேரியன், போலிஷ் மற்றும் ரஷ்ய மொழிகளிலும் இருந்தன. அந்த மாநாட்டில், விழித்தெழு! பத்திரிகை போர்ச்சுகீஸ் மொழியில் வெளியிடப்பட்டது. அந்த மாநாடு என் உணர்ச்சிகளை அவ்வளவாக தூண்டிய காரணத்தால்—சுமார் 1,700 பேர் பொது பேச்சுக்கு வந்திருந்தனர்—1946 நவம்பர் 1 அன்று பயனியர் செய்ய ஆரம்பிப்பதற்கு ஒரு மனுவை நான் பூர்த்திசெய்தேன்.
அந்தச் சமயத்தில் எங்களுடைய பயனியர் வேலையில் ஃபோனோகிராஃப்பை நாங்கள் விரிவாக பயன்படுத்தினோம். “பாதுகாப்பு” என்ற பேச்சை நாங்கள் அடிக்கடி வீட்டுக்காரர்களுக்குப் போட்டு காண்பிப்போம். பேச்சைப் போட்டு காண்பித்த பிறகு, நாங்கள் பின்வருமாறு சொன்னோம்: “கண்ணுக்குப் புலப்படாத ஒரு சத்துருவிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, கண்ணுக்குப் புலப்படாதவராய் இருக்கும் ஒரு நண்பரை நாம் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். யெகோவா நம்முடைய மிகப் பெரிய நண்பராக நம்முடைய சத்துருவாகிய சாத்தானைவிட அதிக வல்லமை வாய்ந்தவராக இருக்கிறார். ஆகவே அவனிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு யெகோவாவை நாம் நெருக்கமாக பற்றிக்கொள்ள வேண்டும்.” பின்னர் நாங்கள் கூடுதலான தகவலை அளித்த பாதுகாப்பு (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தை கொடுத்தோம்.
நான் ஒரு வருடத்துக்கும் குறைவாகவே பயனியர் செய்திருந்த அந்தச் சமயத்தில் ரியோடி ஜனீரோவில் கரியோக்கி சபையோடு ஒரு விசேஷ பயனியராக சேவிக்கும்படி ஒரு அழைப்பை நான் பெற்றுக்கொண்டேன். அங்கே சில சமயங்களில் நாங்கள் கடுமையான எதிர்ப்பை எதிர்ப்பட்டோம். என்னுடைய கூட்டாளி இவான் பிரென்னரை ஒரு சமயம் ஒரு வீட்டுக்காரர் தாக்கியே விட்டார். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் போலீஸை அழைத்தனர்; நாங்கள் அனைவரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
விசாரணையின்போது, ஆத்திரமடைந்த வீட்டுக்காரர் நாங்கள் அமைதியைக் கெடுப்பதாக குற்றஞ்சாட்டினார். தலைமை போலீஸ் அதிகாரி அவரை அமைதியாக இருக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் தலைமை போலீஸ் அதிகாரி எங்கள் பக்கமாக திரும்பி அமைதியான குரலில் நாங்கள் போகலாம் என்று சொல்லி எங்களை விடுவித்தார். அவர் எங்களைக் குற்றஞ்சாட்டியவரை தாக்கிய குற்றத்துக்காக பிடித்து வைத்துக்கொண்டார். அதைப்போன்ற நிலைமைகள் யெகோவாவில் என்னுடைய நம்பிக்கையை நிலைநிறுத்தின.
விரிவாக்கப்பட்ட முழுநேர ஊழியம்
1949, ஜூலை 1 அன்று, பெத்தேலில் சேவிக்கும்படியாக நான் அழைக்கப்பட்டபோது கிளர்ச்சியடைந்தேன். ஒரு தேசத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளைக் காரியாலயம் இவ்விதமாக அழைக்கப்படுகிறது. பிரேஸிலில் அப்போது பெத்தேல் ரியோடி ஜனீரோவில் 330 லிசினோ கார்டோஸோ தெருவில் இருந்தது. அந்தச் சமயம் முழு பெத்தேல் குடும்பத்திலும் 17 பேர் மாத்திரமே இருந்தனர். கொஞ்ச காலம் நான் உள்ளூர் என்ழென்யோ டி டென்ரியு சபைக்குப் போய்வந்தேன். ஆனால் பிற்பாடு ரியோடி ஜனீரோவிலிருந்து ஒருசில கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த பெல்ஃபோர்டு ராக்ஸோ என்ற நகரில் இருந்த ஒரே சபைக்கு நடத்தும் கண்காணியாக நியமனம் பெற்றேன்.
வார இறுதி நாட்கள் மிகவும் வேலை மிகுந்த சமயங்களாக இருந்தன. சனிக்கிழமைகளில் பெல்ஃபோர்டு ராக்ஸோவுக்கு ரயில் மூலம் பிரயாணம் செய்து, பிற்பகல் வெளி ஊழியத்தில் கலந்துகொண்டு பின்னர் மாலையில் தேவராஜ்ய ஊழியப்பள்ளிக்கும் ஊழியக் கூட்டத்துக்கும் சென்றேன். அன்றிரவு சகோதரர்களோடு தங்கியிருந்து பின்னர் அடுத்த நாள் காலை வெளி ஊழியத்தில் கலந்துகொண்டேன். பிற்பகல் நான் பொது பேச்சுக்கும் காவற்கோபுர படிப்புக்கும் சென்றுவிட்டு இரவு ஒன்பதரை மணி போல் பெத்தேலுக்குத் திரும்புவேன். இன்று பெல்ஃபோர்டு ராக்ஸோவில் 18 சபைகள் உள்ளன.
1954-ல் மூன்றரை ஆண்டுகள் இந்த அட்டவணையின்படி செய்த பின்பு, நான் சாவ் கிரெஸ்டாவு சபையில் நடத்தும் கண்காணியாக ரியோடி ஜனீரோவுக்கு திரும்பவுமாக நியமனம் பெற்றேன். அடுத்த பத்து ஆண்டுகள், அந்தச் சபையோடு நான் ஊழியஞ்செய்தேன்.
என்னுடைய பெத்தேல் வேலை நியமிப்புகள்
பெத்தேலில் எனக்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலை சங்கத்தின் ஒரே வாகனமாக இருந்த 1949 டாட்ஜ் வேனுக்கு ஒரு கொட்டகைக் கட்டுவதாக இருந்தது; இது பழுப்பு நிறத்தில் இருந்ததால் சாக்கலேட் என்ற விளையாட்டு பெயர் இதற்கு கொடுக்கப்பட்டது. கொட்டகை கட்டி முடிக்கப்பட்டபோது, சமையலறையில் வேலை செய்ய எனக்கு நியமிப்பு கொடுக்கப்பட்டது. அங்கே மூன்று வருடங்களுக்கு நான் வேலைசெய்தேன். பின்னர், அச்சு இலாக்காவுக்கு நான் மாற்றப்பட்டேன். இங்குதானே இப்பொழுது நான் 40 வருடங்களுக்கும் மேலாக இருந்துவருகிறேன்.
எங்களிடமிருந்த அச்சு இயந்திரங்களில் பெரும்பாலானவை பழையதாக இருந்தன. உதாரணமாக, அநேக வருடங்களாக எங்களிடம் ஒரு பழைய தட்டு அச்சு இயந்திரம் (platen press) இருந்தது; இதை நாங்கள் ஆபிரகாமின் மனைவியின் பெயரால், சாராள் என்பதாக பிரியமாக அழைத்தோம். நியூ யார்க், புருக்லின் உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமைக் காரியாலயத்திலுள்ள தொழிற்சாலையில் அது பல வருடங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் 1950-களில் அது பிரேஸிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கே ஆபிரகாமின் மனைவியைப் போல, அதன் வயதான காலத்தில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் வடிவில் கனிகொடுத்தது.
பிரேஸிலின் அச்சு தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பிரசுரங்களின் எண்ணிக்கையைப் பற்றி நான் ஆச்சரியப்படாமல் ஒருபோதும் இருந்தது கிடையாது. 1953-ம் வருடம் முழுவதிலும் நாங்கள் 3,24,400 பத்திரிகைகளை அச்சிட்டோம்; ஆனால் இப்பொழுது ஒவ்வொரு மாதமும் உற்பத்தி 30 லட்சத்துக்கும் மேலாக உள்ளது!
எங்கள் பெத்தேல் கட்டடங்கள்
பல வருடங்களாக பிரேஸிலில் எங்களுடைய பெத்தேல் கட்டடங்களின் விஸ்தரிப்பைக் கவனித்துவருவது கிளர்ச்சியூட்டுவதாய் இருந்திருக்கிறது. 1952-ல் ரியோடி ஜனீரோவில் எங்களுடைய பெத்தேல் வீட்டுக்குப் பின்னால் இரண்டு மாடி தொழிற்சாலை கட்டடம் ஒன்றை கட்டினோம். பின்னர் 1968-ல் பெத்தேல், சாவோ பாலோ நகரில் ஒரு புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. நாங்கள் அதில் குடியேறிய போது 42 அங்கத்தினர்களடங்கிய எங்கள் பெத்தேல் குடும்பத்துக்கு அனைத்தும் தாராளமாகவும் விசாலமாகவும் தோன்றியது. எங்களுடைய எதிர்கால வளர்ச்சி அனைத்துக்கும் இந்தக் கட்டடம் போதுமானதாக இருக்கும் என்று உண்மையில் நாங்கள் நினைத்தோம். என்றபோதிலும் 1971-ல் இரண்டு ஐந்து மாடி கட்டடங்கள் கட்டப்பட்டன; பக்கத்தில் இருந்த தொழிற்சாலை வாங்கப்பட்டு, அது மாற்றியமைக்கப்பட்டு, இந்த வளாகத்தோடு சேர்க்கப்பட்டது. ஆனால் ஒருசில வருடங்களுக்குள், ராஜ்ய அறிவிப்பாளர்களின் தொடர்ச்சியான அதிகரிப்பு—1,00,000 குறியை நாங்கள் 1975-ல் கடந்துவிட்டோம்—அதிகமான இடவசதியைத் தேவைப்படுத்துவதாக இருந்தது.
ஆகவே செசரியோ லான்ஜ் என்ற சிறிய நகரின் அருகில் சாவோ பாலோவிலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் புதிய கட்டடங்களின் ஒரு வளாகம் கட்டப்பட்டது. 1980-ல் 170 அங்கத்தினர்களடங்கிய எங்கள் பெத்தேல் குடும்பம் இந்தப் புதிய கட்டடங்களுக்கு மாற்றப்பட்டது. அப்போது முதற்கொண்டு ராஜ்ய வேலை வியக்கத்தக்க விதமாக வளர்ந்திருக்கிறது. இப்பொழுது பிரேஸிலில் பிரசங்க வேலையில் 4,10,000-க்கும் அதிகமானோர் ஒழுங்காக கலந்துகொள்கிறார்கள்! இந்த எல்லா ராஜ்ய அறிவிப்பாளர்களின் ஆவிக்குரிய தேவைகளையும் கவனித்துக்கொள்வதற்காக பைபிள் இலக்கியங்களை அச்சிடுவதற்கு புதிய தொழிற்சாலைகளையும் பெத்தேல் வாலண்டியர்களுக்கு இடவசதி செய்து கொடுக்க புதிய தங்குமிடங்களையும் கட்ட வேண்டியதாயிருந்தது. இப்பொழுது நாங்கள் சுமார் 1,100 பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களைக் கொண்டிருக்கிறோம்!
அருமையான சிலாக்கியங்கள்
பெத்தேல் சேவையை மதிப்புமிக்க சிலாக்கியமாக நான் மதிக்கிறேன். இதன் காரணமாக, ஆரம்ப வருடங்களில் மறுமணத்தைப்பற்றி நான் யோசித்திருந்த போதிலும், பெத்தேலில் என்னுடைய சிலாக்கியங்களிலும் பிரசங்க வேலையிலும் முழுமையாக கவனத்தை ஒருமுகப்படுத்த நான் தெரிந்துகொண்டேன். இங்கே, அச்சாலையில் எண்ணற்ற இளம் ஆண்களோடுகூட வேலை செய்து அவர்களுடைய வேலை நியமிப்புகளில் அவர்களைப் பயிற்றுவிக்கும் மகிழ்ச்சியை நான் பெற்றிருக்கிறேன். அவர்களை என்னுடைய மகன்களைப் போல நடத்த நான் முயன்றிருக்கிறேன். அவர்களுடைய ஆர்வமும் தன்னலமற்றதன்மையும் அதிகமான உற்சாகத்தை எனக்கு அளித்திருக்கின்றன.
பல வருடங்களாக நேர்த்தியான அறைத்தோழர்கள் பலருடைய கூட்டுறவை அனுபவிப்பதும் மற்றொரு சிலாக்கியமாக இருந்திருக்கிறது. உண்மைதான், ஆளுமை வித்தியாசங்கள் சில சமயங்களில் சவாலாக இருந்திருக்கின்றன. இருந்தபோதிலும் மற்றவர்களிடமிருந்து பரிபூரணத்தை எதிர்பார்க்கக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன். மடுவை மலையாக்காமலிருக்கவும், அதிக முக்கியமானவனாக என்னைக் கருதிக்கொள்ளாமலிருக்கவும் நான் முயன்று வந்திருக்கிறேன். என்னுடைய சொந்த தவறுகளை எண்ணி எள்ளி நகையாடுவது, மற்றவர்களை அனுசரித்துச் செல்ல எனக்கு உதவியிருக்கிறது.
ஐக்கிய மாகாணங்களில் பெரிய சர்வதேச மாநாடுகளுக்கு செல்ல முடிந்தது நான் அனுபவித்த மற்றொரு அருமையான சிலாக்கியமாகும். இவற்றில் ஒன்று 1963-ல் நியூ யார்க்கில் யாங்கி ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட “நித்திய நற்செய்தி” மாநாடாகும், மற்றொன்று அதே இடத்தில் 1969-ல் நடத்தப்பட்ட “பூமியில் சமாதானம்” என்ற சர்வதேச மாநாடாகும். அங்கே நான் இருந்தபோது அருகேயிருந்த நியூ யார்க், புருக்லினில் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமைக் காரியாலயத்தை விஜயம் செய்யும் சந்தோஷம் எனக்குக் கிட்டியது!
பத்து வருடங்களாக பெத்தேல் குடும்பத்தில் காலை வழிபாட்டினை மற்ற மூப்பர்களோடு சுற்றுமுறையில் நடத்துவதில் பங்குகொள்வதும்கூட என்னுடைய சிலாக்கியமாக இருந்திருக்கிறது. இருந்தாலும், நம்முடைய எஜமானராகிய இயேசு கிறிஸ்து செய்தது போல, நேர்மையான இருதயமுள்ள ஆட்களுக்கு ராஜ்ய செய்தியை எடுத்துச்செல்வதே எனக்கு அதிகமான சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் கொண்டுவந்திருக்கும் மிகப் பெரிய சிலாக்கியமாக இருக்கிறது.
சமீப ஆண்டுகளில், நடுக்கவாத நோயோடு வாழும் சவாலை நான் எதிர்ப்பட்டிருக்கிறேன். பெத்தேலில் நோயாளிகள் தங்குமிடத்தில் சகோதர சகோதரிகளின் அன்புள்ள கவனிப்பு எனக்கு எப்போதும் உதவியாயும் ஆறுதலாயும் இருந்துவருகிறது. அவருடைய மெய் வணக்கத்தின் சார்பாக தொடர்ந்து என்னால் முடிந்ததை சிறந்த விதத்தில் செய்துகொண்டிருக்க யெகோவா எனக்குப் பெலத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் முழு நம்பிக்கையோடு ஜெபிக்கிறேன்.
[பக்கம் 23-ன் படம்]
1945-ல் இறந்துபோன என் மனைவியுடன்
[பக்கம் 23-ன் படம்]
இப்பொழுது நான் வாழ்ந்துவரும் பிரேஸில் கிளைக்காரியாலயம்