தற்கால வணக்கத்தில் இசைக்குரிய இடம்
பாடுவது கடவுள் கொடுத்த வரமாகும். குரல்களை உயர்த்திப் பாடல்களைப் பாடுவது நமக்கும் நம்முடைய படைப்பாளருக்கும் இன்பத்தைக் கொண்டுவரமுடியும். அதன் வாயிலாக, நாம் நம்முடைய உணர்ச்சிகளை, துக்கங்கள் சந்தோஷங்கள் ஆகிய இரண்டையுமே வெளிப்படுத்தலாம். இதற்கும் மேலாக, பாடலைத் தோற்றுவித்தவரான யெகோவாவுக்கு நம்முடைய அன்பையும் போற்றுதலையும் துதியையும் தெரிவிக்க முடியும்.
இசையைப் பற்றிய பைபிளின் சுமார் முன்னூறு குறிப்புகளில் பெரும்பாலானவை யெகோவாவின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டவையாகும். பாடுவது சந்தோஷத்தோடும்கூட—பாடுவோரின் சந்தோஷத்தோடு மாத்திரமல்ல, ஆனால் யெகோவாவின் சந்தோஷத்தோடும்—சம்பந்தப்பட்டிருக்கிறது. சங்கீதக்காரன் எழுதினார்: “அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள். கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்.”—சங்கீதம் 149:3, 4.
ஆனால் தற்கால வணக்கத்தில் பாடுவது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது? யெகோவாவின் மக்கள் இன்று தங்கள் குரல்களை உயர்த்திப் பாடுவதன் மூலம் அவரை எவ்வாறு பிரியப்படுத்த முடியும்? மெய் வணக்கத்தில் இசை என்ன இடத்தைக் கொண்டிருக்க வேண்டும்? வணக்கத்தில் இசையின் வரலாற்றை ஆராய்ச்சி செய்வது இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவிசெய்யும்.
வணக்கத்தில் இசையின் வரலாற்றுக்குரிய இடம்
இசையைப் பற்றிய முதல் பைபிள் குறிப்பு, திட்டவட்டமாக யெகோவாவின் வணக்கத்தின் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டில்லை. ஆதியாகமம் 4:21-ல் யூபால் முதல் இசைக் கருவியாக இருந்திருக்கக்கூடியதை கண்டுபிடித்ததாக அல்லது ஒருவேளை ஏதோ ஒரு வகையான இசைத் தொழிலை ஸ்தாபித்தவராக கருதப்படுகிறார். என்றபோதிலும், மனிதர்கள் படைக்கப்படுவதற்கு முன்பாகவேகூட இசை யெகோவாவின் வணக்கத்தின் ஒரு பாகமாக இருந்தது. பைபிள் மொழிபெயர்ப்புகள் பல, தேவதூதர்கள் பாடுவதாக விவரிக்கின்றன. யோபு 38:7 தேவதூதர்கள் ஏகமாய்ப் பாடி “கெம்பீரித்தார்கள்” என்பதாக சொல்கிறது. இதன் காரணமாக, மனிதன் காட்சிக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்பே யெகோவாவின் வணக்கத்தில் பாடுவது ஒரு பழக்கமாயிருந்தது என்று நம்புவதற்கு வேத ஆதாரமுள்ள காரணமிருக்கிறது.
பண்டைய எபிரெய இசை, ஸ்வரங்களின் இசைவு இல்லாத இன்னிசையே என்பதாக ஒருசில வரலாற்றாசிரியர்கள் விவாதிக்கிறார்கள். என்றபோதிலும் பைபிளில் முக்கியமாக குறிப்பிடப்படும் கருவியாகிய சுரமண்டலத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இசைக்குறியீட்டை வாசிக்க முடியம். சுரமண்டலத்தை வாசிப்பவர் ஒரு இசைக்கருவியில் ஸ்வரங்களைச் சேர்ப்பதால் இசைவை ஏற்படுத்த முடிவதை கவனித்திருக்க வேண்டும். பழம் பாணியாயிருப்பதற்குப் பதிலாக அவர்களின் இசை சந்தேகமின்றி உயர்தரமானதாக இருந்தது. எபிரெய வேதாகமத்தின் செய்யுள் மற்றும் உரைநடையை பார்க்கையில், இஸ்ரவேலரின் இசை உயர்ந்த தரமுள்ளதாக இருந்தது என்ற முடிவுக்கு நாம் வரலாம். நிச்சயமாகவே, இசை அமைப்பதற்கான உள்ளுணர்வு சுற்றிலுமிருந்த தேசங்களினுடையதைவிட மிகவும் உன்னதமானதாக இருந்தது.
பண்டைய ஆலய ஒழுங்கமைப்பு, ஆலய வழிபாட்டில் இசைக்கருவிகளையும் பாடகர்களையும் உள்ளடக்கிய நன்கு திட்டமைக்கப்பட்ட ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதை சாத்தியமாக்கிற்று. (2 நாளாகமம் 29:27, 28) ‘சங்கீதத்தலைவர்கள்,’ ‘நிபுணர்கள்,’ ‘மாணாக்கர்கள்,’ ‘பாடகரின் தலைவர்கள்’ ஆகியோர் இருந்தனர். (1 நாளாகமம் 15:22; 25:7, 8; நெகேமியா 12:46) முன்னேறியதாய் இருந்த அவர்களுடைய இசை திறமைகளைக் குறித்து வரலாற்றாசிரியர் கெர்ட் சாக்ஸ் இவ்விதமாக குறிப்பெழுதினார்: “எருசலேமில் இருந்த ஆலயத்தோடு சம்பந்தப்பட்டிருந்த சேர்ந்திசைகளும் வாத்திய குழுக்களும், இசையில் கல்வி, திறமை மற்றும் அறிவு மிகவும் உயர்ந்த தராதரமுள்ளதாக இருந்ததைக் குறிப்பாக தெரிவிக்கின்றன. . . . பண்டைய இசை எவ்விதமாக தொனித்தது என்பது நமக்குத் தெரியாமல் இருந்தாலும் அதனுடைய சக்தி, கண்ணியம் மற்றும் தேர்ச்சிக்கு போதுமான அத்தாட்சி நம்மிடமிருக்கிறது.” (பண்டைய உலகில் இசையின் எழுச்சி: கிழக்கும் மேற்கும், [ஆங்கிலம்] 1943, பக்கங்கள் 48, 101-2) சாலொமோனின் உன்னதப்பாட்டு எபிரெய வாசகக் கட்டின் படைப்பாற்றலுக்கும் தரத்துக்கும் உதாரணமாக உள்ளது. இது பாடலில் சொல்லப்படும் ஒரு கதையாக, இசை நாடகத்தின் உரைக்கு ஒத்திருக்கிறது. எபிரெய வாசகத்தில் இந்தப் பாட்டு “உன்னதப் பாட்டு” என்ற பெயரால் வழங்கப்படுகிறது, அதாவது, மிகவும் நேர்த்தியான பாட்டு.
பண்டைய எபிரெயர்களுக்கு பாடுவது வணக்கத்தின் இன்றியமையாத ஒரு பாகமாக இருந்தது. யெகோவாவைத் துதிப்பதில், நேர்நிலையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை இது அனுமதித்தது.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பாடியவை
பூர்வ கிறிஸ்தவர்களின் மத்தியில் வணக்கத்தின் ஒழுங்கான பாகமாக இசை தொடர்ந்து இருந்து வந்தது. ஏவப்பட்டெழுதப்பட்ட சங்கீதங்களைக் கொண்டிருந்ததோடுகூட, வணக்கத்துக்காக சுயமாக இசையையும் பாடல்களையும் அவர்கள் இயற்றினதாக தோன்றுகிறது. நவீன நாளில் இயற்றப்பட்டிருக்கும் கிறிஸ்தவ பாடல்களுக்கு இவை முன்னுதாரணமாக அமைந்தன. (எபேசியர் 5:19) வால்டோ செல்டன் ப்ராட் எழுதிய இசையின் வரலாறு என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “பொது வழிபாட்டிலும் தனி வழிபாட்டிலும் பாடுவது பூர்வ கிறிஸ்தவர்களுக்கு பழக்கமாயிருந்தது. . . . மதம் மாறியிருந்த யூதர்களுக்கு இது ஜெபாலய பழக்கத்தின் தொடர்ச்சியாகவே இருந்தது. எபிரெய சங்கீதங்களோடுகூட . . . புதிய விசுவாசம் புதிய கீர்த்தனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் போக்குடையதாய், ஆரம்பத்தில் உணர்ச்சி கொந்தளிக்கும் கதம்ப இசைப் பாடல்களின் வடிவில் அவை இருந்தன.”a
இயேசு கர்த்தருடைய இராப் போஜனத்தை நிறுவிய சமயத்தில், அவரும் அவருடைய அப்போஸ்தலரும் அல்லேல் பாடல்களைப் பாடியது பாடுவதன் மதிப்பைச் சிறப்பித்துக் காட்டுவதாய் உள்ளது. (மத்தேயு 26:26-30) சங்கீதங்களில் பதிவுசெய்யப்பட்டு, பஸ்கா கொண்டாட்டங்களின் சம்பந்தமாக, யெகோவாவுக்குப் பாடப்பட்ட துதிப்பாடல்களாக இவை இருந்தன.—சங்கீதங்கள் 113-118.
பொய் வணக்கத்தின் செல்வாக்கு
இருண்ட சகாப்தம் என்றழைக்கப்பட்ட காலப் பகுதிக்குள், மத சம்பந்தமான இசை புலம்பலான ஓதுதலாக தாழ்ந்து போனது. சுமார் பொ.ச. 200-ல் அலெக்ஸாண்டிரியாவின் க்ளெமென்ட் இவ்வாறு சொன்னார்: “நமக்குத் தேவை ஒரே ஒரு கருவியே: ஆராதனைக்குரிய அமைதியான வார்த்தை, சுரமண்டலமோ அல்லது மத்தளமோ அல்லது இசைக்குழலோ அல்லது எக்காளமோ அல்ல.” சர்ச்சின் இசையை வாய்ப்பாட்டுக்கு கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தப் பாணியே ஓதுதல் அல்லது பக்கவாத்தியமற்ற பாடல் என்று அறியப்படலானது. “கான்ஸ்டான்டிநோபிள் நிறுவப்பட்டு நாற்பதுக்கும் குறைவான ஆண்டுகளில், லவோதிக்கேயா குழு (கி.பி. 367) பொது ஆராதனை சடங்கில் இசைக்கருவிகள் மற்றும் சபையார் பங்கேற்பதை தடைசெய்தது. வைதீக இசை முழுவதும் வாய்ப்பாட்டாகவே இருந்திருக்கிறது” என்பதாக நமது இசை மரபு (ஆங்கிலம்) புத்தகம் சொல்லுகிறது. (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) இந்தக் கட்டுப்பாடுகளுக்கு பூர்வ கிறிஸ்தவத்தில் எந்த ஆதாரமுமில்லை.
இருண்ட சகாப்தத்தின்போது, பைபிள் பொது மக்களுக்கு தடைசெய்யப்பட்ட ஒரு புத்தகமாகவே இருந்து வந்தது. பைபிளை வைத்திருக்கவோ அல்லது வாசிக்கவோ துணிச்சல் கொள்ளும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லவும் பட்டனர். இருண்ட சகாப்தத்தின்போது கடவுளுக்குத் துதிகளைப் பாடும் பழக்கம் பெரும்பாலும் மறைந்தே போனது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியும், பொது மக்களால் வேதவாக்கியங்களை வாசிக்க முடியாமல் இருந்தால், முழு பைபிளிலும் பத்தில் ஒரு பாகம் பாடலாக இருப்பதை அவர்கள் எவ்வாறு அறிந்துகொள்வர்? கடவுள் தம்முடைய வணக்கத்தாருக்கு “கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி”யைப் பாடுங்கள் என்று கட்டளையிட்டிருப்பதை அவர்களுக்கு யார் தெரியப்படுத்துவார்?—சங்கீதம் 149:1.
வணக்கத்தில் இசையை அதற்குரிய சரியான இடத்தில் திரும்ப நிலைநிறுத்துவது
இசையையும் பாடுவதையும் வணக்கத்தில் அதற்குரிய சரியான இடத்தில் மீண்டும் நிலைநிறுத்துவதற்காக யெகோவாவின் அமைப்பு அதிகத்தைச் செய்திருக்கிறது. உதாரணமாக, 1896, பிப்ரவரி 1 சீயோனின் காவற்கோபுர (ஆங்கிலம்) பிரதியில் பாடல்கள் மட்டுமே அடங்கியிருந்தன. அதன் தலைப்பு “சீயோனின் ஆரம்ப மகிழ்ச்சிப் பாடல்கள்.”
1938-ல் சபை கூட்டங்களில் பெரும்பாலும் பாடல்கள் பாடப்படவில்லை. என்றபோதிலும், அப்போஸ்தலரின் முன்மாதிரியையும் அறிவுரையையும் பின்பற்றுவது ஞானமானது என்பது விரைவிலேயே உணரப்பட்டது. 1944 மாவட்ட மாநாட்டில் “ராஜ்ய சேவையின் பாடல்” என்ற சொற்பொழிவை எஃப். டபிள்யு. ஃபிரான்ஸ் கொடுத்தார். மனிதன் படைக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே கடவுளுடைய பரலோக படைப்புகளால் பாடல்கள் மூலம் யெகோவாவுக்கு துதிசெலுத்தப்பட்டன என்பதைக் காண்பித்து அவர் இவ்வாறு சொன்னார்: “அவருடைய பூமிக்குரிய ஊழியர்கள் சொல்லர்த்தமாகவே தங்கள் குரல்களை உயர்த்திப் பாடுவது சரியாகவும் கடவுளுக்குப் பிரியமானதாகவும் இருக்கிறது.” வணக்கத்தில் பாடுவதற்கு ஆதரவாக விவாதத்தை படிப்படியாக விரிவுபடுத்திய பின்பு, வாராந்தர ஊழியக் கூட்டங்களில் பயன்படுத்துவதற்காக ராஜ்ய சேவை பாட்டு புத்தகம் (ஆங்கிலம்) வெளியீட்டை அவர் அறிவித்தார்.b பின்னர் டிசம்பர் 1944 அறிவிப்பவர் (Informant [இப்பொழுது நம் ராஜ்ய ஊழியம் என்றழைக்கப்படுகிறது]) மற்ற கூட்டங்களிலும் ஆரம்ப மற்றும் முடிவான பாடல்கள் இடம்பெறும் என்பதை அறிவித்தது. பாடுவது மறுபடியுமாக யெகோவாவின் வணக்கத்தின் ஒரு பாகமாக ஆனது.
‘யெகோவாவுக்கு நம்முடைய இருதயங்களில் பாடுதல்’
இருதயப்பூர்வமாக பாடுவதனுடைய மதிப்பு வருடக்கணக்கில் கஷ்டமான காலங்களையும் துன்புறுத்தலையும் அனுபவித்து வந்திருக்கும் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள நம்முடைய சகோதரர்களால் விளக்கப்படுகிறது. லோதர் வேக்நர் தனிச் சிறையில் ஏழு ஆண்டுகள் செலவிட்டார். அவர் எவ்விதமாக சகித்துக்கொண்டார்? “பல வாரங்கள் என்னுடைய ராஜ்ய பாடல்களின் களஞ்சியத்தை முழுமைப் பெறச் செய்வதில் நான் கவனத்தை ஒருமுகப்படுத்தி வந்தேன். சரியாக எனக்கு வரிகள் தெரியாத போது நான் ஓரிரண்டு அடிகளை இயற்றினேன். . . . நம்முடைய ராஜ்ய பாடல்களில் எத்தனை ஏராளமான உற்சாகமூட்டும் மற்றும் கட்டியெழுப்பும் கருத்துக்கள் அடங்கியுள்ளன!”—1974 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தரப் புத்தகம், (ஆங்கிலம்) பக்கங்கள் 226-8.
அவருடைய உண்மையான நிலைநிற்கையின் காரணமாக தனிச் சிறைவாசத்தை அவர் அனுபவித்த அந்த ஐந்து ஆண்டுகளின்போது, ஹெரால்ட் கிங் யெகோவாவுக்குத் துதிப்பாடல்களை இயற்றுவதிலும் பாடுவதிலும் ஆறுதலைக் கண்டடைந்தார். அவர் இயற்றின பல பாடல்கள் இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளால் அவர்களுடைய வணக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாடுவதோடு சம்பந்தப்பட்ட சந்தோஷம், நிலைகுலையாது தாங்குவதாக உள்ளது. ஆனால் கடவுளுக்குத் துதிகளைப் பாடுவதன் மதிப்பை நமக்கு உறுதிசெய்து கொள்வதற்கு நாம் துன்புறுத்தலை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை.
யெகோவாவின் மக்கள் அனைவரும் பாடலில் சந்தோஷத்தைக் காணமுடியும். நம்முடைய உணர்ச்சிகளை வார்த்தையில் வெளியிடுவதில் நமக்கு ஒருவேளை சில சங்கடங்கள் இருந்தாலும் யெகோவாவிடமாக நம்முடைய உணர்ச்சிகளை பாடலில் நாம் வெளிப்படுத்தும்போது அதை தாராளமாகச் செய்ய முடியும். அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு, “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணிக்”கொண்டிருங்கள் என்பதாக அறிவுரை கூறியபோது துதிகளைப் பாடுகையில் நாம் எவ்வாறு சந்தோஷத்தைக் கண்டடையலாம் என்பதைக் காட்டினார். (எபேசியர் 5:19) நம்முடைய இருதயங்கள் ஆவிக்குரிய காரியங்களால் நிறைந்திருக்கும்போது, நாம் பலமான தொனியில் பாடுகிறோம். ஆகவே முன்னேற்றவிதமாக பாடுவதற்கான திறவுகோல் சரியான இருதய மனநிலையாகும்.
யெகோவாவோடு ஒரு நல்ல உறவைக் கொண்டிருப்பது சந்தோஷமான ஒரு மனப்பான்மைக்குப் பங்களித்து, யெகோவாவின் துதிகளை செலுத்தும் விதத்தில் பேசவும், பாடவும், கெம்பீரமாய்ப் ஆர்ப்பரிக்கவும் நம்மைத் தூண்டுகிறது. (சங்கீதம் 146:2, 5) நாம் அனுபவித்து மகிழும் காரியங்களைக் குறித்து நாம் மனமார பாடுகிறோம். பாடல் அல்லது பாடலின் கருத்துக்கள் நமக்குப் பிடித்திருந்தால், உண்மையான உணர்ச்சியோடு நாம் பெரும்பாலும் பாடுவோம்.
உணர்ச்சியோடு பாடுவதற்கு ஒருவர் சப்தமாக பாட வேண்டும் என்று அவசியமில்லை. சப்தமாக பாடுவதும் நன்றாகப் பாடுவதும் ஒன்றே அல்ல. குரலே கேட்காதவாறு மனதுக்குள் பாடுவதும் நன்றாக பாடுவதாகாது. தாழ்ந்த குரலில் பாடினாலும்கூட இயற்கையான எதிரொலியோடுகூடிய சில குரல்கள் தனித்து கேட்பவையாய் இருக்கும். ஒரு தொகுதியில் நன்றாக பாடுவதற்கு ஓரளவு சவாலாக இருப்பது இரண்டற கலந்துவிட கற்றுக்கொள்வதாகும். நீங்கள் பண்ணிசையில் பாடினாலும் சரி அல்லது ஒத்திசையில் பாடினாலும் சரி, உங்கள் பக்கத்திலுள்ளவர்களுடையதைப் போல அதே சப்தத்தில் பாடுவது இனிமையிலும் ஒன்றாய் இணைந்து பாடுவதிலும் விளைவடையும். கிறிஸ்தவ அடக்கமும் செவிகொடுத்துக் கேட்கும் காதும், வாய்விட்டு உற்சாகமாக பாடுவதற்கும் அதே சமயத்தில் ஓங்கி ஒலிப்பதைத் தவிர்த்து சமநிலையை முயன்று பெறுவதற்கும் ஒருவருக்கு உதவக்கூடும். என்றபோதிலும் திறமையாக பாடுகிறவர்கள் அல்லது அசாதாரணமாக மிக நேர்த்தியான குரல்களை உடையவர்கள் வாய்விட்டு பாடுவதிலிருந்து ஒருபோதும் தடைசெய்யப்படக்கூடாது. அழகான ஒரு குரல் யெகோவாவுக்குத் துதிகளைப் பாடும் சபைக்கு பலமான ஆதாரமாக இருக்கமுடியும்.
நமது கூட்டங்களில் பாடுவது, இனிய கீதத்திற்கு ஸ்வரங்களைப் பாடுவதற்கும்கூட பொருத்தமான சூழ்நிலைமையை அளிக்கிறது. இசைக் குறியீடுகளைப் பயன்படுத்தாமலே ஸ்வரங்களைப் பாட முடிகிறவர்கள் அல்லது பாட்டுப் புத்தகத்தில் ஸ்வரங்களின் வரிகளை வாசித்துப் பாட முடிகிறவர்கள், பாடலோடு நயமாக கலந்து ஒன்றுபட்டு இசையின் அழகைக் கூட்டும்படியாக உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.c
‘சரியான ராகத்தில் என்னால் பாடமுடியாது’ அல்லது ‘என்னுடையது பயங்கரமான குரல்; உயர்த்திப் பாட வேண்டிய இடங்களில் கேட்க சகிக்காது’ என்பதாக சிலர் சொல்லக்கூடும். இதன் காரணமாக, அவர்கள் பாடும்போது, ராஜ்ய மன்றத்தில் பாடுகையிலும்கூட கூச்சமாக உணருகின்றனர். உண்மை என்னவென்றால் யெகோவாவுக்குத் துதியைப் பாடும் எந்தக் குரலுமே அவருடைய நோக்குநிலையில் “பயங்கரமாக” இருப்பதில்லை. பயிற்சியின் மூலமும் தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் கொடுக்கப்படும் பயனுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலமும் ஒருவர் பேச்சை மேம்படுத்த முடிவதைப் போலவே, பாடுவதையும் ஒருவர் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஒரு சிலர் வேலைகளைச் செய்து கொண்டிருக்கையில் வெறுமனே வாய்த்திறவாது பாடிக் கொள்வதன் மூலம் தங்கள் குரல்களை மேம்படுத்தியிருக்கின்றனர். வாய்த் திறவாது பாடுவது குரலின் தொனியிலுள்ள தடைகளை நீக்குவதற்கு உதவுகிறது. பொருத்தமான சமயங்களில் நாம் தனியாகவோ அல்லது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாத இடத்தில் வேலைசெய்யும்போதோ ராஜ்ய பாடல்களைப் பாடுவது குரலுக்கு மிகச் சிறந்த பயிற்சியாகவும், ஒருவரை சந்தோஷமுள்ள தளர்ந்த ஒரு மனநிலையில் வைப்பதற்கு வழிமூலமாகவும் இருக்கிறது.
ஒன்றாக கூடிவருகையில் ராஜ்ய பாட்டுகள் ஒரு சிலவற்றை பாடுவதையும்கூட நாம் உற்சாகப்படுத்தலாம். கிட்டார், பியானோ அல்லது சங்கத்தின் பதிவுசெய்யப்பட்ட பியானோ இசையோடு சேர்ந்து இப்படி பாடுவது, நாம் கூடிவரும் இடங்களில் ஒரு ஆவிக்குரிய சூழலை அளிக்கிறது. இது பாட்டுகளைப் பாட கற்றுக்கொள்வதற்கும் சபை கூட்டங்களில் அவற்றை நன்றாக பாடுவதற்கும் உதவியாக இருக்கக்கூடும்.
கூட்டங்களில் உற்சாகமாக பாடுவதற்கு, சபைகளுக்கு உதவி செய்வதற்கு சங்கம் பதிவுசெய்யப்பட்ட பக்க வாத்திய இசை நாடாவை அளித்திருக்கிறது. அவை இசைக்கப்படுகையில், ஒலி அமைப்பைக் கையாளுபவர் அதன் ஒலியளவை அறிந்தவராக இருக்கவேண்டும். இசை போதியளவு சப்தமாக இல்லையென்றால், சபையார் வாய்விட்டு பாடுவதற்கு கூச்சப்படலாம். ஒலி அமைப்பை கட்டுப்படுத்தும் சகோதரர் சபையோடு சேர்ந்து பாடுகையில், இசை பக்க பலமாக இருந்து தூண்டுதலாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடிகிறவராக இருப்பார்.
யெகோவாவைப் போற்றிப்பாடுங்கள்
பாடுவது நம்முடைய படைப்பாளரிடம் நம்முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. (சங்கீதம் 149:1, 3) அது உணர்ச்சிகள் திடீரென்று வெடித்து வெளிப்படும் ஒன்றாக இல்லை, ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட, நியாயமான, சந்தோஷமான நம்முடைய துதியின் வெளிப்பாடாக அது உள்ளது. சபையாக பாடுகையில், உற்சாகமாக அதைச் செய்வது, தொடர்ந்துவரும் நிகழ்ச்சிநிரலுக்கு நம்மை சரியான மன நிலையிலும் இருதய நிலையிலும் வைத்து, யெகோவாவின் வணக்கத்தில் அதிகமாக பங்கெடுக்க நம்மைத் தூண்டி இயக்கும். பாடுவது உணர்ச்சிப்பூர்வமான பாதிப்பைக் கொண்டிருந்தாலும் அந்த வார்த்தைகள் நமக்கு போதிக்கவும்கூட செய்யும். ஒற்றுமையாகவும் ஒத்திசைவிலும் நம்மை வெளிப்படுத்துவதன் மூலம் கூடிவந்திருக்கும் ஒரு ஜனமாக ஒன்றாகச் சேர்ந்து கற்றுக்கொள்ளும் பொருட்டு சாந்தமாகவும் மனத்தாழ்மையாகவும் நம்முடைய இருதயங்களை நாம் தயார் செய்துகொள்ளுகிறோம்.—சங்கீதம் 10:17-ஐ ஒப்பிடுக.
பாடுவது எப்பொழுதும் யெகோவாவின் வணக்கத்தில் ஒரு பாகமாக இருக்கும். ஆகவே நாம் சங்கீதக்காரனின் உணர்ச்சிகளில் என்றுமாக பங்குகொள்ளும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறோம்: “நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.”—சங்கீதம் 146:2.
[அடிக்குறிப்புகள்]
a கதம்ப இசைப் பாடல் என்பது பல்வேறு பாகங்களும் ஒரு சுதந்திர மனப்பான்மையால் வேறுபடுத்திக் காட்டப்படும் ஒரு இசைப்பாடலாகும். அநேகமாக கதம்ப இசைப்பாடல்கள் வீரதீரமான சம்பவங்களை அல்லது கதாபாத்திரங்களைப் புகழ்ந்தன.
b 1 கொரிந்தியர் 14:15, பாடுவது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ வணக்கத்தின் ஒரு வழக்கமான அம்சமாயிருந்ததைக் காட்டுவதாக தோன்றுகிறது.
c தற்போது உபயோகத்தில் உள்ள யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற நம்முடைய பாட்டுப் புத்தகத்திலுள்ள சில பாடல்கள், ஸ்வரங்களை அனுபவித்து பாடுகிறவர்களின் நன்மைக்காக நான்கு-பாக ஸ்வரங்களின் பாணியைத் தக்க வைத்திருக்கின்றன. என்றபோதிலும், அநேக பாட்டுகள் பியானோவோடு சேர்ந்து பாடுவதற்காக அமைக்கப்பட்டு, ராகங்களின் சர்வதேச பாங்கைப் பாதுகாக்க முயற்சிசெய்யும் சங்கீத ஸ்டைல் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நான்கு-பாக ஸ்வரங்கள் இல்லாமல் எழுதப்பட்ட பாட்டுகளுக்கு இசைக்குறியீட்டில் உள்ளதை வைத்து சமாளிப்பது கூட்டங்களில் நாம் பாடுவதை நயமாக மேம்படுத்துவதாக இருக்கக்கூடும்.
[பக்கம் 27-ன் பெட்டி]
நன்றாக பாடுவதற்கு சில ஆலோசனைகள்
1. பாடும்போது பாட்டு புத்தகத்தைத் தூக்கிப் பிடிக்கவும். அதிக இயல்பாக சுவாசிக்க இது ஒருவருக்கு உதவிசெய்கிறது.
2. ஒவ்வொரு சொற்றொடரின் ஆரம்பத்திலும் ஆழமாக மூச்சை எடுங்கள்.
3. முதலில் செளகரியமாக ஒருவர் உணருவதைக் காட்டிலும் சற்று அதிகமாக வாயைத் திறப்பது இயல்பாகவே சப்தத்தையும் குரலின் எதிரொலியையும் அதிகரிக்கும்.
4. எல்லாவற்றுக்கும் மேலாக, பாடப்படும் பாடலின் கருத்தின்மீது கவனத்தை ஊன்ற வைக்கவும்.