‘அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்’
‘அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம்வைத்து, சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்துவருகிறீர்கள்.’—1 பேதுரு 1:8.
1. இன்று பூமியிலுள்ள எவருமே இயேசுவை நேரில் பார்த்திராதபோதிலும், ஒருசில மதப்பற்றுள்ள ஆட்கள் அவரிடமாக பக்தியைக் காட்ட எவ்விதமாக முயற்சிசெய்கின்றனர்?
இன்றுபூமியில் உயிருடன் இருக்கும் எவரும் இயேசு கிறிஸ்துவை ஒருபோதும் பார்த்தது கிடையாது. என்றபோதிலும், கோடிக்கணக்கான ஆட்கள் அவரை நேசிப்பதாக உரிமைபாராட்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 அன்று, பிலிப்பீன்ஸிலுள்ள மணிலாவில் சிலுவையைத் தாங்கிய இயேசு கிறிஸ்துவின் ஒரு ஆள் உயர சிலை தெருக்களின் வழியாக இழுத்துச் செல்லப்படுகிறது. தேசத்திலுள்ள அதிக பிரபலமான மதத்தின் மிகவும் பெரியதும் மிகவும் பிரமிக்க வைப்பதுமான ஒரு காட்சி என்பதாக இது விவரிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான கூட்டம் இடித்துத் தள்ளிக்கொண்டும் முந்திக்கொண்டும் செல்கிறது; சிலையைத் தொட்டுவிட வேண்டும் என்ற ஆவேசமான முயற்சியில் மக்கள் ஒருவர்மீது ஒருவர்கூட ஏறுகின்றனர். இதைப் பார்க்க வருவோரில் பலர் முக்கியமாக விழாக்கோலமான ஊர்வலத்தினால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். இருந்தபோதிலும், இவர்களில் சிலர் இயேசுவிடமாக உண்மை மனதுடன் கவர்ந்திழுக்கப்பட்டவர்களாக உணரும் ஆட்கள் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு அத்தாட்சியாக, அவர்கள் ஒரு சிலுவையை அணிந்துகொள்ளலாம் அல்லது தவறாமல் சர்ச்சுக்குச் சென்று வரலாம். இருப்பினும், இப்படிப்பட்ட ஒரு விக்கிரகாராதனை உண்மை வணக்கமாக கருதப்பட முடியுமா?
2, 3. (அ) இயேசுவை பின்பற்றினோரில் உண்மையில் அவரை பார்த்தவர்களும் அவர் பேசுவதைக் கேட்டவர்களும் யார்? (ஆ) இயேசுவை நேரில் பார்த்திராதபோதிலும் முதல் நூற்றாண்டில் வேறு யார் அவரில் அன்புகூர்ந்து அவரில் விசுவாசம் வைத்தனர்?
2 முதல் நூற்றாண்டில், யூதேயா, சமாரியா, பெரேயா மற்றும் கலிலேயாவின் ரோம மாகாணங்களில் இயேசு கிறிஸ்துவை நேரில் பார்த்தவர்களும் அவர் பேசியதைக் கேட்டவர்களும் அநேக ஆயிரக்கணக்கில் இருந்தனர். தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றிய உற்சாகமூட்டும் சத்தியங்களை அவர் விளக்கினபோது அவர்கள் காதுகொடுத்துக் கேட்டனர். அவர் நடப்பித்த அற்புதங்களை அவர்கள் கண்கூடாக பார்த்த சாட்சிகளாயிருந்தனர். இவர்களில் சிலர் இவரே “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று உறுதியாய் நம்பினவர்களாய் அவருடைய விசுவாசமுள்ள சீஷர்களானார்கள். (மத்தேயு 16:16) இருந்தபோதிலும் அப்போஸ்தலனாகிய பேதுரு யாருக்கு ஏவப்பட்ட தன்னுடைய முதல் நிருபத்தை எழுதினாரோ, அவர்கள் இப்படிப்பட்டவர்களுக்குள் இருக்கவில்லை.
3 பேதுருவின் நிருபத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் ரோம மாகாணங்களாகிய பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா மற்றும் பித்தினியாவில் இருந்தனர்—இவையனைத்தும் நவீன நாளைய துருக்கியில் உள்ளன. அவர்களுக்கு பேதுரு எழுதினதாவது: “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து” வருகிறீர்கள். (1 பேதுரு 1:1, 8) இயேசு கிறிஸ்துவில் அன்புகூர்ந்து அவரிடத்தில் விசுவாசம் காண்பிக்கும் அளவுக்கு எவ்விதமாக அவர்கள் அவரை அறிந்துகொள்ளலானார்கள்?
4, 5. இயேசுவை ஒருபோதும் பார்த்திராத அந்த மக்கள் அவரில் அன்புகூரவும் அவரில் விசுவாசம் வைக்கவும் அவரைக் குறித்து எவ்வாறு போதியளவு கற்றனர்?
4 அப்போஸ்தலன் பேதுரு, பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு வந்திருந்த கூட்டத்திற்கு சாட்சிகொடுத்த போது சிலர் எருசலேமில் இருந்தார்கள் என்பது தெளிவாக உள்ளது. பண்டிகை முடிந்தப் பின்பு அநேக சீஷர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கூடுதலான அறிவுரையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு எருசலேமில் தங்கிவிட்டனர். (அப்போஸ்தலர் 2:9, 41, 42; ஒப்பிடுக: 1 பேதுரு 1:1.) பேதுரு பின்னால் தன்னுடைய பெயர் தாங்கிய முதல் பைபிள் நிருபத்தை அனுப்பியிருந்த இடங்களில் வாழ்ந்துவந்த மக்களின் மத்தியில் அப்போஸ்தலன் பவுலும்கூட அடிக்கடி செய்த மிஷனரி பிரயாணங்களின்போது வைராக்கியமாக ஊழியஞ்செய்திருந்தார்.—அப்போஸ்தலர் 18:23; 19:10; கலாத்தியர் 1:1, 2.
5 இயேசுவை ஒருபோதும் பார்த்திராத அந்த மக்கள் அவரிடமாக ஏன் அந்தளவுக்கு வெகுவாய் கவர்ந்திழுக்கப்பட்டனர்? நம்முடைய நாளில், உலகம் முழுவதிலும் இன்னும் லட்சக்கணக்கானோர், ஏன் அவரை ஆழமாக நேசிக்கின்றனர்?
அவர்கள் கேள்விப்பட்ட காரியங்கள்
6. (அ) பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின் போது இயேசுவைப் பற்றி பேதுரு கொடுத்த சாட்சியை நீங்கள் கேட்டிருந்தால், நீங்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கலாம்? (ஆ) அங்கு ஆஜராயிருந்த சுமார் 3,000 பேரை இது எவ்வாறு பாதித்தது?
6 பொ.ச. 33-ல் பண்டிகைக்கு வந்திருந்த அந்த ஜனக்கூட்டத்திடம் பேதுரு பேசியபோது நீங்கள் எருசலேமில் இருந்திருந்தால், இயேசுவைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டிருப்பீர்கள்? அவர் நடப்பித்த அற்புதங்கள் அவர் கடவுளால் அனுப்பப்பட்டிருந்தார் என்பதை எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி காண்பித்தன. பாவமுள்ள மனிதர் இயேசுவை மரணத்துக்குட்படுத்திய போதிலும், அவர் இனிமேலும் கல்லறையில் இல்லை, ஆனால் உயிர்த்தெழுப்பப்பட்டார்; பின்னர் பரலோகத்தில் கடவுளுடைய வலது பாரிசத்துக்கு உயர்த்தப்பட்டார் என்பதை கற்றிருப்பீர்கள். இந்த இயேசுவைக் குறித்தே தீர்க்கதரிசிகள் எழுதியிருந்தனர், இவரே கிறிஸ்துவாகிய மேசியா என்பதை கற்றிருப்பீர்கள். தேவன் தம்முடைய குமாரனின் மூலமாக செய்துகொண்டிருந்த மகத்தான காரியங்களைப் பற்றி பல தேசங்களிலிருந்து வந்திருந்த ஆட்களுக்கு உடனடியாக சாட்சி கொடுக்க முடிகிற வகையில் அவரைப் பின்பற்றினோர்மீது இயேசு கிறிஸ்துவின் மூலமாக பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டிருந்ததைக் கற்றிருப்பீர்கள். அந்நாளிலே பேதுரு பேசியதைக் கேட்ட அநேகரின் இருதயங்கள் அத்தனை ஆழமாக அசைவிக்கப்பட்டதால், சுமார் 3,000 பேர் கிறிஸ்தவ சீஷர்களாக முழுக்காட்டப்பட்டனர். (அப்போஸ்தலர் 2:14-42) நீங்கள் அங்கே இருந்திருந்தால், இப்படிப்பட்ட ஒரு தீர்வான நடவடிக்கையை எடுத்திருப்பீர்களா?
7. (அ) அப்போஸ்தலன் பவுல் அந்தியோகியாவில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது நீங்கள் அங்கே இருந்திருந்தால், நீங்கள் என்ன கற்றுக்கொண்டிருப்பீர்கள்? (ஆ) ஜனக்கூட்டத்திலிருந்த சிலர் ஏன் விசுவாசிகளாகி மற்றவர்களோடு நற்செய்தியை பகிர்ந்துகொண்டனர்?
7 பவுல் அப்போஸ்தலன் கலாத்தியாவின் ரோம மாகாணத்தில் உள்ள அந்தியோகியாவில் கற்பித்தபோது அங்கிருந்தவர்களின் மத்தியில் நீங்கள் இருந்திருந்தால், இயேசுவைப் பற்றி நீங்கள் வேறு என்ன கற்றிருப்பீர்கள்? எருசலேமின் அதிபதிகளால் இயேசு மரணத்தீர்ப்பளிக்கப்பட்டது தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டது என்பதை பவுல் விளக்குவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கண்கூடாக பார்த்த சாட்சிகளின் அத்தாட்சியைப் பற்றியும்கூட நீங்கள் கேட்டிருப்பீர்கள். இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்புவதன் மூலம், இவரே உண்மையில் கடவுளுடைய குமாரன் என்பதை யெகோவா உறுதிசெய்ததைப் பற்றிய பவுலின் விளக்கம் நிச்சயமாகவே உங்கள் மனதில் பதிந்துவிட்டிருக்கும். இயேசுவில் விசுவாசம் வைப்பதன் மூலம் சாத்தியமாகும் பாவ மன்னிப்பு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும் என்பதைக் கற்றுக்கொண்ட போது உங்கள் இருதயத்தில் நன்றியுணர்வு உடனடியாக தோன்றியிருக்காதா? (அப்போஸ்தலர் 13:16-41, 46, 47; ரோமர் 1:4) தாங்கள் கேட்டுக்கொண்டிருந்த காரியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாய், அந்தியோகியாவிலிருந்த சிலர் சீஷர்களாகி, மற்றவர்களோடு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் சுறுசுறுப்பாயிருந்தனர். அவ்விதமாகச் செய்வது அவர்கள் கடுமையான துன்புறுத்தலை எதிர்ப்படுவதை அர்த்தப்படுத்தியபோதிலும்கூட அதைச் செய்தனர்.—அப்போஸ்தலர் 13:42, 43, 48-52; 14:1-7, 21-23.
8. எபேசிய சபைக்கு பவுல் எழுதின நிருபம் அந்த சபையால் பெற்றுக்கொள்ளப்பட்ட சமயத்தில் நீங்கள் அங்கே சபை கூட்டத்தில் இருந்திருந்தால் என்ன கற்றுக்கொண்டிருப்பீர்கள்?
8 ஆசியாவின் ரோம மாகாணத்தில் எபேசுவிலிருந்த கிறிஸ்தவ சபை, அங்கிருந்த சீஷர்களுக்கு பவுல் எழுதிய ஏவப்பட்ட கடிதத்தைப் பெற்றுக்கொண்டபோது, நீங்கள் அந்த சபையோடு கூட்டுறவுக் கொண்டிருந்திருந்தால் அப்போது என்ன? கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் பங்கைக் குறித்து நீங்கள் அதிலிருந்து என்ன கற்றுக்கொண்டிருக்கலாம்? கிறிஸ்துவின் மூலமாக பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லா காரியங்களும் கடவுளோடு மறுபடியுமாக ஒத்திசைவுக்குள் கொண்டுவரப்படும்; கிறிஸ்துவின் மூலமாக கடவுளுடைய ஈவு எல்லா தேசங்களின் ஜனங்களுக்கும் அளிக்கப்படும்; தங்கள் மீறுதல்களினால் கடவுளுடைய பார்வையில் மரித்தோராயிருந்தவர்கள் கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலமாக உயிர்ப்பிக்கப்பட்டவர்களாவார்கள்; இந்த ஏற்பாட்டின் மூலமாக மனிதர்கள் கடவுளுக்கு பிரியமானவர்களாக ஆவது மறுபடியும் சாத்தியமாகும் என்பதை அந்த நிருபத்தில் பவுல் விளக்கினார்.—எபேசியர் 1:1, 5-10; 2:4, 5, 11-13.
9. (அ) எபேசியருக்கு பவுல் எழுதினவற்றின் முக்கியத்துவத்தை நீங்கள் தனிப்பட்ட விதமாக கிரகித்துக்கொண்டிருக்கிறீர்களா என்பதை பகுத்துணர எது உங்களுக்கு உதவக்கூடும்? (ஆ) பேதுரு குறிப்பிட்ட ரோம மாகாணங்களிலிருந்த சகோதரர்கள் இயேசுவைப் பற்றி கற்றவற்றால் எவ்விதமாக தூண்டப்பட்டனர்?
9 இவை அனைத்திற்குமான போற்றுதல் கடவுளுடைய குமாரனுக்கான உங்களுடைய அன்பை ஆழப்படுத்தியிருக்குமா? எபேசியர் 4 முதல் 6 வரையான அதிகாரங்களில் அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்திய விதமாக, அந்த அன்பு உங்களுடைய தினசரி வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியிருக்குமா? இப்படிப்பட்ட போற்றுதலானது வாழ்க்கையில் உங்களுடைய சொந்த முன்னுரிமைகளைப் பெறும் காரியங்களை கவனமாக ஆய்வு செய்யும்படியாக அது உங்களைத் தூண்டியிருக்குமா? கடவுளிடமாக அன்பு, அவருடைய குமாரனிடமாக நன்றியுணர்வு ஆகியவற்றின் காரணமாக, கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதே உங்களுடைய வாழ்க்கையில் உண்மையில் முக்கியமாக இருக்கும்படியாக தேவையான சரிப்படுத்துதல்களை நீங்கள் செய்திருப்பீர்களா? (எபேசியர் 5:15-17) தாங்கள் கேட்டுக்கொண்டிருந்தவற்றால் ஆசியா, கலாத்தியா இன்னும் மற்ற ரோம மாகாணங்களிலிருந்த கிறிஸ்தவர்கள் எவ்விதமாக தூண்டப்பட்டனர் என்பதைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு அவர்களுக்கு இவ்விதமாக எழுதினார்: “அவரை [இயேசு கிறிஸ்துவை] நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; . . . அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து”வருகிறீர்கள்.—1 பேதுரு 1:8.
10. (அ) இயேசுவிடமாக பூர்வ கிறிஸ்தவர்களின் அன்புக்கு சந்தேகமின்றி எது பங்களித்திருக்க வேண்டும்? (ஆ) நாமும்கூட எவ்விதமாக பயனடையலாம்?
10 பேதுரு யாருக்கு எழுதினாரோ அந்தப் பூர்வ கிறிஸ்தவர்கள் கடவுளுடைய குமாரனிடமாக உணர்ந்த அந்த அன்புக்கு வேறு ஏதோ ஒன்று சந்தேகமின்றி பங்களித்திருக்க வேண்டும். அது என்னவாக இருந்தது? பேதுரு தன்னுடைய முதல் நிருபத்தை எழுதிய சமயத்திற்குள், குறைந்தபட்சம் இரண்டு சுவிசேஷங்களாவது—மத்தேயு மற்றும் லூக்கா—ஏற்கெனவே சுற்றில் இருந்து வந்தன. இயேசுவை ஒருபோதும் பார்த்திராத முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இந்தச் சுவிசேஷப் பதிவுகளை வாசிக்கமுடிந்தது. நாமும்கூட வாசிக்க முடியும். சுவிசேஷங்கள் கற்பனையான பதிவுகள் அல்ல; மிகவும் நம்பத்தக்க வரலாற்றுக்குரிய எல்லா சிறப்பியல்புகளையும் அவை கொண்டிருக்கின்றன. ஏவப்பட்ட அந்தப் பதிவுகளில், கடவுளுடைய குமாரனிடமாக நம்முடைய அன்பை ஆழப்படுத்தும் அதிகமான விஷயங்களை நாம் காண்கிறோம்.
அவர் காண்பித்த அந்த மனப்பான்மை
11, 12. நீங்கள் இயேசுவை நேசிக்கும்படியாகச் செய்யும் என்ன மனப்பான்மையை அவர் மற்ற மனிதர்களிடமாக காண்பித்தார்?
11 இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட பதிவில், அவர் எவ்விதமாக மற்ற மனிதர்களோடு செயல்தொடர்பு கொண்டார் என்பதைப்பற்றி நாம் கற்றறிகிறோம். அவர் காண்பித்த மனப்பான்மை இப்பொழுதும்கூட, அவர் மரித்து 1,960-க்கும் மேற்பட்ட ஆண்டுகளான பின்னும்கூட மனிதர்களின் இதயங்களைத் தொடுகிறது. உயிரோடிருக்கும் ஒவ்வொருவரும் பாவத்தின் விளைவுகளால் அழுத்தப்படுகின்றனர். அநேக கோடிக்கணக்கானோர் அநியாயம், வியாதியோடு போராட்டம் ஆகியவற்றால் துன்புறுகின்றனர் அல்லது மற்ற காரணங்களுக்காக உடைந்துபோகும் அளவுக்கு ஏமாற்றத்தை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்ட எல்லா ஆட்களிடமும் இயேசு சொல்கிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.
12 இயேசு எளியவர்கள், பசியாயிருந்தவர்கள் மற்றும் துக்கத்திலிருந்தவர்களிடமாக உணர்ச்சிமிக்கவராய் அக்கறைக் காண்பித்தார். சூழ்நிலைமைகள் அவசியப்படுத்திய போது, அவர் பெரிய ஜனக்கூட்டங்களுக்கு அற்புதமாகவும்கூட உணவளித்தார். (லூக்கா 9:12-17) அவர்களை அடிமைப்படுத்தும் பாரம்பரியங்களிலிருந்து அவர் விடுவித்தார். அரசியல் மற்றும் பொருளாதார ஒடுக்குதலுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கான கடவுளுடைய ஏற்பாட்டில் அவர்களுடைய விசுவாசத்தை கட்டியெழுப்பவும்கூட செய்தார். ஏற்கெனவே நசுக்கப்பட்டவர்களாக இருந்தவர்களின் ஆவியை அவர் முறித்துப் போடவில்லை. மென்மையாகவும் அன்பாகவும், சாந்தகுணமுள்ளவர்களை அவர் திறமையாக தூக்கிவிட்டார். வளைந்துவிட்ட நெரிந்த நாணலைப் போலவும், அணைந்துவிட போகிற மங்கியெரிகிற திரியைப் போலவும் இருந்தவர்களுக்கு புத்துயிரளித்தார். இன்று வரையாக, அவரை ஒருபோதும் பார்த்திராதவர்களின் இருதயங்களிலும்கூட அவருடைய பெயர் நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது.—மத்தேயு 12:15-21; 15:3-10.
13. பாவிகளோடு இயேசு செயல்தொடர்பு கொண்ட விதம் ஏன் மக்களை கவர்ந்திழுக்கிறது?
13 தவறுசெய்தலை இயேசு அங்கீகரிக்கவில்லை, எனினும் வாழ்க்கையில் தவறுகளைச் செய்துவிட்டு ஆனால் மனந்திரும்புதலைக் காண்பித்து உதவிக்காக அவரிடமாக வந்தவர்களிடமாக அவர் புரிந்துகொள்ளுதலைக் காண்பித்தார். (லூக்கா 7:36-50) சமுதாயத்தினால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆவிக்குரிய விதமாக உதவிசெய்வதற்கு இது ஒரு வாய்ப்பை அளிக்கும் என்பதாக அவர் உணர்ந்தாரேயானால் அவர்களோடு உட்கார்ந்து அவர் சாப்பிடுவார். (மத்தேயு 9:9-13) அவர் காண்பித்த மனப்பான்மையின் காரணமாக, இயேசுவை ஒருபோதும் பார்த்திராத, ஒரே மாதிரியான நிலைமைகளிலுள்ள கோடிக்கணக்கான ஆட்கள் அவரை அறிந்துகொள்ளவும் அவரில் விசுவாசம் வைக்கவும் உந்துவிக்கப்பட்டுள்ளனர்.
14. நோயுற்றிருந்தவர்கள், அங்ககீனமாயிருந்தவர்கள் அல்லது துக்கத்திலிருந்தவர்களுக்கு இயேசு உதவிசெய்த விதத்தைக் குறித்ததில் உங்களைக் கவருவது என்ன?
14 நோயுற்றிருந்தவர்கள் அல்லது அங்ககீனமாயிருந்தவர்களை இயேசு நடத்திய விதம், அவருடைய பாச உணர்ச்சிக்கும் இரக்கத்துக்கும் அத்தாட்சியை அளிப்பதோடு அவர்களுடைய துன்பத்தை நீக்குவதற்கு அவருக்கிருக்கும் திறமைக்கும் அத்தாட்சியளிக்கிறது. இதன் காரணமாகவே, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவை அணுகி உதவிக்காக மன்றாடியபோது, அவர் அவனைப் பார்த்த மாத்திரத்தில் அருவருப்படைந்து பின்வாங்கவில்லை. தாம் அவனுக்காக பரிதாபப்பட்டாலும் குஷ்டரோகம் முற்றிவிட்டதால் உதவி செய்வதற்கு எதுவும் செய்யப்பட முடியாது என்பதாக அந்த மனிதனிடம் அவர் சொல்லிவிடவும் இல்லை. அந்த மனிதன் “ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்,” என்று வேண்டிக்கொண்டான். தயக்கமேதுமின்றி இயேசு கையை நீட்டி குஷ்டரோகமுள்ள மனிதனைத் தொட்டு, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு,” என்று சொன்னார். (மத்தேயு 8:2, 3) மற்றொரு சமயத்தில் ஒரு பெண் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை மறைவாக வந்து தொடுவதன் மூலம் குணமடைய நாடினாள். இயேசு அவளிடமாக தயவாயும் நம்பிக்கையூட்டும் விதத்திலும் நடந்துகொண்டார். (லூக்கா 8:43-48) சவ அடக்க ஊர்வலம் ஒன்றை அவர் எதிர்ப்பட்டபோது, ஒரே மகனை இழந்துவிட்டு துக்கித்துக்கொண்டிருந்த விதவைக்காக மனதுருகினார். அற்புதமாக தமக்கு உணவைப் பெற்றுக்கொள்ள கடவுள் கொடுத்த வல்லமையை பயன்படுத்த இயேசு மறுத்தபோதிலும் மரித்த அந்த மனிதனை உயிர்த்தெழுப்பி அவனுடைய தாயிடம் ஒப்படைப்பதற்கு அவர் அதை தாராளமாக பயன்படுத்தினார்.—லூக்கா 4:2-4; 7:11-16.
15. இயேசுவைப் பற்றிய பதிவுகளை வாசிப்பதும் அவற்றைக் குறித்து தியானம் செய்வதும் உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
15 இந்தப் பதிவுகளை நாம் வாசித்து இயேசு காண்பித்த மனப்பான்மையைத் தியானம் செய்கையில், நாம் என்றுமாக வாழும் பொருட்டு தம்முடைய மனித உயிரைக் கொடுத்த இவரிடமாக நம்முடைய அன்பு ஆழமாகிறது. நாம் ஒருபோதும் அவரைப் பார்த்திராவிட்டாலும், நாம் அவரிடமாக கவர்ந்திழுக்கப்படுகிறோம்; அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற நாம் விரும்புகிறோம்.—1 பேதுரு 2:21.
மனத்தாழ்மையோடு கடவுள்மீது அவர் சார்ந்திருந்தார்
16. இயேசு யார்மீது முக்கியமாக கவனத்தை ஒருமுகப்படுத்தினார், என்ன செய்யுமாறு அவர் நம்மை உற்சாகப்படுத்தினார்?
16 எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசு அவருடைய கவனத்தையும் நம்முடையதையும் அவருடைய பரம தந்தையாகிய யெகோவா தேவன்மீது ஒருமுகப்படுத்தினார். நியாயப்பிரமாணத்தில் இருந்த மிகப் பெரிய கட்டளையை அடையாளங்காட்டி அவர் சொன்னதாவது: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:36, 37) தம்முடைய சீஷர்களுக்கு அவர் கூறிய அறிவுரையாவது: “தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.” (மாற்கு 11:22) அவர்களுடைய விசுவாசத்தின் முக்கியமான ஒரு பரீட்சையை அவர்கள் எதிர்ப்பட்டபோது ‘தொடர்ந்து ஜெபம்பண்ணிக் கொண்டே இருங்கள்,’ என்பதாக அவர்களைத் துரிதப்படுத்தினார்.—மத்தேயு 26:41, NW.
17, 18. (அ) மனத்தாழ்மையோடு தாம் கடவுள்மீது சார்ந்திருந்ததை இயேசு எவ்விதமாக காண்பித்தார்? (ஆ) அவர் செய்த காரியம் நமக்கு ஏன் அவ்வளவு முக்கியமாக உள்ளது?
17 இயேசுதாமே முன்மாதிரி வைத்தார். ஜெபம் அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய பாகமாக இருந்தது. (மத்தேயு 14:23; லூக்கா 9:28; 18:1) தம்முடைய அப்போஸ்தலரைத் தெரிந்துகொள்வதற்கான நேரம் அவருக்கு வந்தபோது, இயேசு வெறுமனே தம்முடைய சொந்த தீர்ப்பைச் சார்ந்திருக்கவில்லை; முன் நாட்களில் பரலோகத்திலுள்ள எல்லா தேவதூதர்களும் அவருடைய மேற்பார்வையின்கீழ் இருந்தபோதிலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. மனத்தாழ்மையோடு அவர் தம்முடைய பிதாவினிடத்தில் ஜெபம் செய்வதில் ஒரு முழு இரவையும் செலவழித்தார். (லூக்கா 6:12, 13) கைது செய்யப்படுவதையும் வேதனையான ஒரு மரணத்தையும் அவர் எதிர்ப்பட்டபோது, இயேசு மறுபடியும் ஊக்கமாக ஜெபித்து தம்முடைய தந்தையிடம் திரும்பினார். சாத்தானை நன்கு அறிந்திருப்பதால் அந்தப் பொல்லாங்கனின் உபாயங்கள் எதையும் எளிதில் கையாளமுடியும் என்ற நோக்குநிலையை அவர் கொண்டிருக்கவில்லை. தாம் தவறிவிடாமல் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு உணர்ந்திருந்தார். அவர் தவறியிருந்தால் அவருடைய தந்தைக்கு அது எத்தகைய நிந்தையாக இருக்கும்! இயேசு அளிக்கவிருந்த பலியின்பேரில் சார்ந்திருந்த வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த மனிதவர்க்கத்துக்கு என்னே ஒரு நஷ்டமாக இருக்கும்!
18 இயேசு திரும்பத் திரும்ப—எருசலேமில் மேலறையில் தம்முடைய அப்போஸ்தலரோடு இருக்கையிலும், கெத்செமனே தோட்டத்திலும் இன்னும் அதிக ஊக்கமாக—ஜெபித்தார். (மத்தேயு 26:36-44; யோவான் 17:1-26; எபிரெயர் 5:7) வாதனையின் கழுமரத்தில் வேதனையை அனுபவித்த போது, தம்மை நிந்தித்தவர்களை அவர் வையவில்லை. மாறாக, அறியாமையில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்காக அவர் ஜெபித்தார்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” (லூக்கா 23:34) அவர் தம் மனதை தம் தந்தையின்மீது ஒருமுகப்படுத்தியவராய், “நியாயமாய்த் தீர்ப்புசெய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” வாதனையின் கழுமரத்தில் அவர் சொன்ன கடைசி சொற்கள் அவருடைய தந்தையிடம் அவர் செய்த ஒரு ஜெபமாக இருந்தது. (1 பேதுரு 2:23; லூக்கா 23:46) யெகோவாவின்மீது முழுமையாக சார்ந்தவராய் இயேசு தம்முடைய தந்தை தம்மிடம் ஒப்படைத்திருந்த வேலை நியமிப்பை உண்மையுடன் செய்து முடித்ததற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவை நாம் ஒருபோதும் பார்த்திராவிட்டாலும் அவர் செய்த காரியத்துக்காக எவ்வளவு ஆழமாக நாம் அவரை நேசிக்கிறோம்!
அவருக்கு நம்முடைய அன்பைத் தெரிவித்தல்
19. இயேசுவுக்கு அன்பைத் தெரியப்படுத்துகையில், என்ன பழக்கவழக்கங்களை முற்றிலும் பொருத்தமற்றதாக நாம் தவிர்ப்போம்?
19 நாம் வெளிப்படையாக தெரிவிக்கும் அன்பு வெறும் வார்த்தைகளைவிட அதிகமானது என்பதற்கு நாம் எவ்வாறு அத்தாட்சியை கொடுக்கமுடியும்? இயேசு நேசித்த அவருடைய தந்தை, உருவங்களைச் செய்வதையும் பக்திக்குரிய பொருட்களாக இவற்றைக் கருதுவதையும் தடைசெய்த காரணத்தால் நம்முடைய கழுத்தைச் சுற்றிலும் அணியும் ஒரு சங்கிலியில் இப்படிப்பட்ட ஒரு உருவத்தை அணிந்துகொள்வதன் மூலமோ அல்லது தெருக்களின் வழியாக இப்படிப்பட்ட ஒரு உருவத்தைத் தூக்கிச்செல்வதன் மூலமோ இயேசுவுக்கு நிச்சயமாக கனத்தைக் கொண்டுவர மாட்டோம். (யாத்திராகமம் 20:4, 5; யோவான் 4:24) வாரத்தில் பல தடவை மத ஆராதனை கூட்டங்களில் நாம் ஆஜராயிருந்துவிட்டு, மீதமுள்ள நாட்களில் அவருடைய போதகங்களுக்கு இசைவாக நாம் வாழவில்லை என்றால் இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவராது. இயேசு சொன்னார்: “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்.”—யோவான் 14:21, 23; 15:10.
20. நாம் உண்மையில் இயேசுவை நேசிக்கிறோமா என்பதைக் காண்பிக்கும் ஒருசில காரியங்கள் யாவை?
20 என்ன கட்டளைகளை அவர் நமக்குக் கொடுத்தார்? பிரதானமானது, மெய்க் கடவுளாகிய யெகோவாவை, அவரை மாத்திரமே வணங்கும்படியான கட்டளையைக் கொடுத்தார். (மத்தேயு 4:10; யோவான் 17:3) கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பாகத்தின் காரணமாக, கடவுளுடைய குமாரனாக அவரில் நாம் விசுவாசம் காண்பிக்கவேண்டும் என்றும், பொல்லாத கிரியைகளை அறவே ஒழித்து ஒளியில் நடப்பதன் மூலம் அதை நாம் காண்பிக்கவேண்டும் என்றும்கூட அவர் கற்பித்தார். (யோவான் 3:16-21) கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலில் தேடும்படியும், சரீர தேவைகளைப் பற்றிய கவலைக்கு முன்னால் இவற்றை வைக்கும்படியும் அவர் நமக்கு புத்திமதி சொன்னார். (மத்தேயு 6:31-33) அவர் நம்மில் அன்புகூர்ந்ததுபோல நாம் ஒருவரில் ஒருவர் அன்புகூரவேண்டும் என்பதாக அவர் கட்டளையிட்டார். (யோவான் 13:34; 1 பேதுரு 1:22) அவர் செய்தது போலவே, கடவுளுடைய நோக்கங்களைக் குறித்து சாட்சி கொடுக்கும்படியாக நமக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 24:14; 28:19, 20; வெளிப்படுத்துதல் 3:14) இன்று சுமார் 50 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் இயேசுவை ஒருபோதும் பார்த்திராவிட்டாலும் இந்தக் கட்டளைகளைக் கைக்கொள்ளுமாறு அவரிடமாக கொண்டிருக்கும் உண்மையான அன்பினால் உந்துவிக்கப்படுகின்றனர். இயேசுவை நேரில் பார்த்திராதபோதிலும், கீழ்ப்படியும்படியான அவர்களுடைய தீர்மானத்தை அது எவ்விதத்திலும் பலவீனப்படுத்துவது கிடையாது. அப்போஸ்தலன் தோமாவிடம் தங்களுடைய கர்த்தர் சொன்னதை அவர்கள் மனதில் வைக்கிறார்கள்: “நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.”—யோவான் 20:29.
21. இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 23 அன்று நடத்தப்படவிருக்கும் கிறிஸ்துவின் மரண ஆசரிப்புக்கு ஆஜராயிருப்பதன்மூலம் நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
21 மனிதவர்க்கத்திடமாக கடவுளுடைய அன்பின் மிகப் பெரிய வெளிக்காட்டை நினைவுகூருவதற்கும் அவருடைய உண்மைப்பற்றுறுதியுள்ள குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவதற்கும் 1997, மார்ச் 23 ஞாயிறு அன்று சூரிய அஸ்தமனத்திற்குப்பின் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் உலகம் முழுவதிலும் கூடிவருகிறவர்கள் மத்தியில் நீங்கள் இருப்பீர்கள் என்று நம்பப்படுகிறது. அந்தச் சமயத்தில் சொல்லப்படும் மற்றும் செய்யப்படும் காரியங்கள் யெகோவாவிடமும் அவருடைய குமாரனிடமும் நம் அன்பை ஆழப்படுத்தவும் இவ்விதமாக கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதற்கான ஆசையை அதிகரிக்கவும் செய்யவேண்டும்.—1 யோவான் 5:3.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பேதுருவின் முதல் புத்தகம் யாருக்கு எழுதப்பட்டிருந்ததோ அவர்கள் எவ்விதமாக இயேசுவை அறிந்துகொள்ளவும் அன்புகூரவும் செய்தார்கள்?
◻ பூர்வ கிறிஸ்தவர்கள் கேட்ட சில காரியங்களில் உங்கள் மனதைக் கவருபவை எவை?
◻ இயேசுவிடமாக உங்கள் நேசத்தை ஆழப்படுத்தும் அவருடைய மனப்பான்மையைப் பற்றியது என்ன?
◻ மனத்தாழ்மையோடு இயேசு கடவுள்மீது சார்ந்திருந்தது நமக்கு ஏன் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது?
◻ இயேசு கிறிஸ்துவிடமாக நம்முடைய அன்பை நாம் எவ்வாறு காட்டலாம்?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
இயேசு காண்பித்த மனப்பான்மையின் காரணமாக அவரிடம் கவர்ந்திழுக்கப்பட்டவர்களாக நாம் உணருகிறோம்