பயணக் கண்காணிகள் எவ்வாறு உண்மையுள்ள உக்கிராணக்காரராகச் சேவிக்கிறார்கள்
“கடவுளுடைய பலவிதமான கிருபையின் நல்ல உக்கிராணக்காரர்போல நீங்கள் அவனவன் பெற்ற கிருபை வரத்தின்படியே ஒருவருக்கொருவர் அதை உபயோகித்து ஊழியஞ்செய்யுங்கள்.”—1 பேதுரு 4:10, தி.மொ.
1, 2. (அ) ‘உக்கிராணக்காரன்’ என்ற இந்தச் சொல்லுக்கு நீங்கள் எவ்வாறு விளக்கம் கூறுவீர்கள்? (ஆ) கடவுள் பயன்படுத்தும் உக்கிராணக்காரருக்குள் யார் அடங்கியுள்ளனர்?
உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரையும் உக்கிராணக்காரராக யெகோவா பயன்படுத்துகிறார். பெரும்பாலும், ஓர் உக்கிராணக்காரன் ஒரு வீட்டின் பொறுப்பையுடைய ஊழியக்காரனாக இருக்கிறான். அவனுடைய எஜமானரின் அலுவல் விவகாரங்களையும் அவன் கவனித்து வரக்கூடும். (லூக்கா 16:1-3; கலாத்தியர் 4:1, 2) பூமியிலிருக்கும், தம்முடைய உண்மைத்தவறாத அபிஷேகஞ்செய்யப்பட்ட தொகுதியினரை, ‘உண்மையுள்ள உக்கிராணக்காரன்’ என்று இயேசு அழைத்தார். ராஜ்ய பிரசங்க நடவடிக்கைகள் உட்பட, ‘தனக்குள்ள யாவற்றையும்’ இந்த உக்கிராணக்காரனிடமே அவர் ஒப்படைத்திருக்கிறார்.—லூக்கா 12:42-44; மத்தேயு 24:14, 45.
2 பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்படுகிற கடவுளுடைய தகுதியற்ற தயவின் உக்கிராணக்காரராக, கிறிஸ்தவர்கள் எல்லாரும் இருக்கிறார்களென்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். உண்மையுடன் உக்கிராணப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஓர் இடம் இருக்கிறது. (1 பேதுரு 4:10) நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்கள் உக்கிராணக்காரராக இருக்கிறார்கள்; அவர்களுக்குள் பயணக் கண்காணிகளும் இருக்கிறார்கள். (தீத்து 1:7) இந்தப் பயண மூப்பர்கள் எவ்வாறு கருதப்பட வேண்டும்? என்ன பண்புகளும் குறிக்கோள்களும் அவர்களுக்கு இருக்க வேண்டும்? மிக நன்மையானதை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றலாம்?
அவர்களுடைய சேவைக்கு நன்றியுடையோராக இருத்தல்
3. பயணக் கண்காணிகளை ‘நல்ல உக்கிராணக்காரர்’ என்று ஏன் அழைக்கலாம்?
3 மணமாகிய ஒரு கிறிஸ்தவ தம்பதி, ஒரு பயணக் கண்காணிக்கும் அவருடைய மனைவிக்கும் கடிதம் எழுதி, இவ்வாறு சொன்னார்கள்: “நீங்கள் எங்களுக்காகச் செலவிட்ட எல்லா நேரத்திற்காகவும் காட்டிய அன்புக்காகவும் எங்கள் நன்றியறிதலைத் தெரிவிக்க விரும்புகிறோம். ஒரு குடும்பமாக நாங்கள், உங்கள் எல்லா ஊக்கமூட்டதலிலும் அறிவுரையிலுமிருந்து மிகுந்த நன்மையடைந்திருக்கிறோம். ஆவிக்குரியப்பிரகாரம் நாங்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்க வேண்டுமென்று அறிகிறோம். எனினும், யெகோவாவின் உதவியாலும், உங்களைப்போன்ற சகோதர சகோதரிகளாலும், அந்த வளர்ச்சியின்போது ஏற்படும் அழுத்தங்கள் இலகுவாக்கப்படுகின்றன.” ஒரு நல்ல உக்கிராணக்காரன், ஒரு வீட்டாருக்குரிய தேவைகளை நன்றாய்க் கவனித்துக்கொள்வதுபோல், பயணக் கண்காணிகள், உடன் விசுவாசிகளில் தனிப்பட்ட அக்கறை எடுப்பதன் காரணமாக, இதைப்போன்ற உணர்ச்சிக்கூற்றுகள் அடிக்கடி வெளிப்படுத்தப்படுகின்றன. முதன்மையான பேச்சாளராகச் சிலர் இருக்கிறார்கள். பிரசங்க ஊழியத்தில் சிறந்தவர்களாகப் பலர் இருக்கிறார்கள்; அதேசமயத்தில் மற்றவர்கள், அன்பிலும் இரக்கத்திலும் மிகுந்தவர்களாக அறியப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில் இத்தகைய வரங்களை வளர்த்து பயன்படுத்துவதனால், பயணக் கண்காணிகளை ‘நல்ல உக்கிராணக்காரர்’ என்று சரியாகவே அழைக்கலாம்.
4. என்ன கேள்வி இப்போது ஆலோசிக்கப்படும்?
4 “உக்கிராணக்காரரிடம் இருக்க வேண்டுமென்று பார்க்கிற காரியம் அவன் உண்மையுள்ளவனாகக் காணப்படவேண்டுமென்பதே,” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 4:2, தி.மொ.) வாரந்தோறும் வெவ்வேறு சபையில் உடன் கிறிஸ்தவர்களுக்குச் சேவை செய்துகொண்டிருப்பது, தனிப்பட்ட மற்றும் மகிழ்ச்சிதரும் சிலாக்கியமாயுள்ளது. இருப்பினும், அது பெரும் பொறுப்பாயும் இருக்கிறது. அப்படியானால், பயணக் கண்காணிகள், தங்கள் உக்கிராணப் பொறுப்பை எவ்வாறு உண்மையாயும் வெற்றிகரமாயும் நிறைவேற்றக்கூடும்?
தங்கள் உக்கிராணப் பொறுப்பை வெற்றிகரமாய் நிறைவேற்றுதல்
5, 6. ஜெபத்துடன் யெகோவாவின்மேல் நம்பிக்கையோடு சார்ந்திருப்பது, ஒரு பயணக் கண்காணியின் வாழ்க்கையில் ஏன் அவ்வளவு மிக முக்கியமானது?
5 பயணக் கண்காணிகள் வெற்றிகரமான உக்கிராணக்காரர்களாக இருக்க வேண்டுமானால், ஜெபத்துடன் யெகோவாவின்மீது நம்பிக்கை வைத்து சார்ந்திருப்பது இன்றியமையாதது. தங்கள் ஊழியத் திட்டம் மற்றும் பல பொறுப்புகளின் காரணமாக, சில சமயங்களில் அவர்கள் சோர்வுற்றவர்களாக உணரக்கூடும். (2 கொரிந்தியர் 5:4-ஐ ஒப்பிடுக.) ஆகையால், சங்கீதக்காரனான தாவீதின் இந்தப் பாட்டின்படி அவர்கள் செய்ய வேண்டும்: “யெகோவாவின்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22, தி.மொ.) தாவீதின் இவ்வார்த்தைகளும் ஆறுதலளிப்பவையாக இருக்கின்றன: “ஆண்டவர் ஸ்தோத்திரத்திற்குரியவர், அவர் தினந்தினம் நமது பாரங்களைச் சுமக்கிறார்.”—சங்கீதம் 68:19, தி.மொ.
6 ஆவிக்குரிய தன் பொறுப்புகளைக் கவனிப்பதற்கு பவுல் எங்கிருந்து பலத்தைப் பெற்றார்? “என்னைப் பலப்படுத்துகிறவருக்குள் எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு வல்லமையுண்டு” என்று அவர் எழுதினார். (பிலிப்பியர் 4:13, தி.மொ.) ஆம், பவுலின் பலத்திற்கு யெகோவா தேவனே மூலகாரணராக இருந்தார். அவ்வாறே, பேதுரு அறிவுரை கூறினார்: “ஒருவன் ஊழியஞ்செய்தால் அது கடவுள் தந்தருளும் சக்தியின்படியேயாகட்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்க் கடவுள் மகிமைப்படும்படியே அப்படிச் செய்யுங்கள்.” (1 பேதுரு 4:11, தி.மொ.) பல ஆண்டுகள் பயணக் கண்காணியாக இருந்த ஒரு சகோதரன், கடவுள்மீது நம்பிக்கையுடன் சார்ந்திருப்பதற்கான அவசியத்தை அறிவுறுத்தி, இவ்வாறு கூறினார்: “பிரச்சினைகளைக் கையாளுவதில் எப்போதும் யெகோவாவின்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய அமைப்பின் உதவியை நாடுங்கள்.”
7. ஒரு பயணக் கண்காணியின் ஊழியத்தில் சமநிலை எவ்வாறு ஒரு பாகத்தை வகிக்கிறது?
7 வெற்றிகரமான பயணக் கண்காணிக்கு சமநிலை தேவைப்படுகிறது. மற்ற கிறிஸ்தவர்களைப்போல், ‘அதிக முக்கியமானக் காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ள’ அவர் பிரயாசப்படுகிறார். (பிலிப்பியர் 1:10, NW)a ஏதோ ஒரு காரியத்தைப் பற்றி அவ்விடத்து மூப்பர்களுக்குச் சந்தேகங்கள் இருக்கையில், சந்திக்கும் வட்டாரக் கண்காணியினிடம் அவர்கள் கலந்தாலோசிப்பது ஞானமாயிருக்கும். (நீதிமொழிகள் 11:14; 15:22) அவர் சபையை விட்டு சென்ற பின்பு, அந்தக் காரியத்தை மூப்பர்கள் தொடர்ந்து கையாண்டு வருகையில், அவருடைய சமநிலைப்பட்ட கருத்தறிவிப்புகளும் வேதப்பூர்வ அறிவுரைகளும் மிகுந்த உதவியாயிருக்கும். இதைப்போன்ற கருத்துக்களை பவுல் தீமோத்தேயுவினிடம் கூறினார்: “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை, மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.”—2 தீமோத்தேயு 2:2.
8. ஏன் பைபிள் படிப்பும், ஆராய்ச்சியும், ஆழ்ந்த சிந்திப்பும் முக்கியமானவை?
8 சரியான அறிவுரையைக் கொடுப்பதற்கு வேதப் படிப்பும், ஆராய்ச்சியும், தியானமும் தேவைப்படுகின்றன. (நீதிமொழிகள் 15:28) மாவட்டக் கண்காணி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “மூப்பர்களோடு சந்திப்பு செய்கையில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் நமக்குத் தெரிகிறதில்லை என்பதை ஒப்புக்கொள்ள நாம் பயப்படக்கூடாது.” ஒரு காரியத்தின்பேரில், ‘கிறிஸ்துவின் சிந்தையை’ அடைய முயற்சி செய்வது, பைபிளில் ஆதாரங்கொண்ட அறிவுரை கொடுப்பதைச் சாத்தியமாக்குகிறது. அது கடவுளுடைய சித்தத்துக்கிசைய செயல்படும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்யும். (1 கொரிந்தியர் 2:16) சில சமயங்களில், ஒரு பயணக் கண்காணி, வழிநடத்துதலுக்காக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுத வேண்டிய தேவை ஏற்படலாம். எவ்வாறாயினும், நல்ல அபிப்பிராயத்தையுண்டாக்குவதை அல்லது பேச்சுத் திறமையைப் பார்க்கிலும், யெகோவாவின்பேரில் விசுவாசமும் சத்தியத்தை நேசிப்பதும் மிக அதிக முக்கியமானவை. பவுல், “சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது” வராமல், அதற்குப் பதிலாக, “பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும்” கொரிந்துவில் தன் ஊழியத்தைத் தொடங்கினார். இது அவரை பயனற்றவராக்கியதா? அதற்கு மாறாக, “மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பலத்தில்” கொரிந்தியர் விசுவாசம் வைக்கும்படி இது அவர்களுக்கு உதவிசெய்தது.—1 கொரிந்தியர் 2:1-5.
முக்கியமான மற்ற பண்புகள்
9. பயண மூப்பர்களுக்கு ஒற்றுணர்வு ஏன் தேவை?
9 மற்றவர்கள் நிலையில் தன்னை வைத்துக் காணும் பண்பு, ஒற்றுணர்வு, நல்ல பலன்களை அடையும்படி பயணக் கண்காணிகளுக்கு உதவிசெய்கிறது. ‘அனுதாபம்’ காட்டும்படி அல்லது ‘ஒற்றுணர்வுடையோராக’ இருக்கும்படி கிறிஸ்தவர்கள் எல்லாரையும் பேதுரு ஊக்குவித்தார். (1 பேதுரு 3:8, தி.மொ.) ‘சபையிலுள்ள ஒவ்வொருவரிலும் அக்கறையுடையோராயும் உண்மையில் கவனமுள்ளோராயும் இருக்கும்படியான’ தேவையை ஒரு வட்டாரக் கண்காணி உணருகிறார். இதைப்போன்ற மனப்பான்மையுடன் பவுல் இவ்வாறு எழுதினார்: “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.” (ரோமர் 12:15) உடன் விசுவாசிகளின் பிரச்சினைகளையும் சூழ்நிலைமைகளையும் புரிந்துகொள்ள ஊக்கமான முயற்சிகள் செய்யும்படி, இத்தகைய மனப்பான்மை பயணக் கண்காணிகளை உந்துவிக்கிறது. அப்போது, பொருத்திப் பயன்படுத்தினால் உண்மையான நன்மை பயக்கக்கூடிய கட்டியெழுப்பும் வேதப்பூர்வ அறிவுரையை அவர்கள் கொடுக்க முடியும். ஒற்றுணர்வு காட்டுவதில் சிறந்தவராயிருக்கிற ஒரு வட்டாரக் கண்காணி, இத்தாலியில் டயூரினுக்கு அருகிலுள்ள ஒரு சபையினிடமிருந்து இந்தக் கடிதத்தைப் பெற்றார்: “நீங்கள் அக்கறை தூண்டுவோராக இருக்கவேண்டுமானால், [மற்றவர்களுக்கு] அக்கறை காட்டுங்கள்; மகிழ்வூட்டுவோராக நீங்கள் இருக்கவேண்டுமானால், மகிழ்வுறச் செய்யுங்கள்; நேசிக்கப்படுபவராக நீங்கள் இருக்கவேண்டுமானால், நேசிக்கிறவர்களாக இருங்கள்; உதவிசெய்யப்படுபவராக நீங்கள் இருக்கவேண்டுமானால், உதவிசெய்ய ஆயத்தமாயிருங்கள். இதையே நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம்!”
10. மனத்தாழ்மையாக இருப்பதைப் பற்றி வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள், இந்தக் காரியத்தில் என்ன முன்மாதிரியை இயேசு வைத்தார்?
10 மனத்தாழ்மையுடனும் அணுகக்கூடியவராயும் இருப்பது, மிகுந்த நன்மை செய்யும்படி பயணக் கண்காணிகளுக்கு உதவிசெய்கிறது. வட்டாரக் கண்காணி ஒருவர் இவ்வாறு கூறினார்: “தாழ்மையான மனப்பான்மையைக் காத்துவருவது மிக அதிக முக்கியமானது.” புதிய பயணக் கண்காணிகளுக்கு அவர் இவ்வாறு எச்சரிக்கை அளிப்பார்: “செல்வந்தரான சகோதரர் தங்களுக்குச் செய்கிறவற்றின் காரணமாக, அவர்களிடமாக மீறிய வண்ணம் கவரப்பட உங்களை அனுமதிக்கவோ அல்லது அத்தகையோரிடமே உங்கள் நட்பை மட்டுப்படுத்தவோ அனுமதிக்காதீர்கள். ஆனால் மற்றவர்களிடமும் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள எப்போதும் முயற்சி செய்யுங்கள்.” (2 நாளாகமம் 19:6, 7) உண்மையாக மனத்தாழ்மையுள்ள ஒரு பயணக் கண்காணி, சொஸைட்டியின் பிரதிநிதியாக, தன் சொந்த முக்கியத்துவத்தை மிகைப்பட்ட முறையில் கருதமாட்டார். மாவட்டக் கண்காணி ஒருவர் பொருத்தமாய் இவ்வாறு குறிப்பிட்டார்: “மனத்தாழ்மையாயும் சகோதரருக்குச் செவிகொடுத்துக் கேட்க மனமுள்ளோராயும் இருங்கள். அணுகக்கூடியோராக எப்போதும் இருங்கள்.” எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராக, இயேசு கிறிஸ்து, ஜனங்கள் தம்மிடம் வரத் தயங்கும்படி செய்திருக்கலாம், ஆனால் அவர் அவ்வளவு அதிக மனத்தாழ்மையுள்ளவராகவும் அணுகக்கூடியவராகவும் இருந்ததனால், சிறு பிள்ளைகளுங்கூட அவர் முன்னிலையில் மனமகிழ்ந்தனர். (மத்தேயு 18:5; மாற்கு 10:13-16) பிள்ளைகளும், பருவ வயதினரும், முதிர்வயதினரும்—உண்மையில் சபையிலுள்ள எல்லாரும்—தங்களை அணுக தடையற்றவர்களாய் உணரும்படி, பயணக் கண்காணிகள் விரும்புகிறார்கள்.
11. தேவைப்படுகையில், வருத்தம் தெரிவிப்பதன் பாதிப்பு என்னவாக இருக்கலாம்?
11 நிச்சயமாகவே, “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்,” தவறு செய்யாத பயணக் கண்காணியாக ஒருவருமில்லை. (யாக்கோபு 3:2) அவர்கள் தவறிழைக்கும்போது, உள்ளப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பது, மற்ற மூப்பர்களுக்கு மனத்தாழ்மைக்குரிய ஒரு முன்மாதிரியை அளிக்கிறது. நீதிமொழிகள் 22:4-ன்படி, (தி.மொ.) “தாழ்மையும் யெகோவாவினிடம் பயபக்தியும் செல்வம், மேன்மை, ஜீவன் விளைவிக்கும்.” கடவுளுடைய ஊழியர் எல்லாரும், ‘தங்கள் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்க’ வேண்டும் அல்லவா? (மீகா 6:8) புதிய பயண மூப்பர் ஒருவருக்கு என்ன அறிவுரையைக் கொடுப்பார் என்று ஒரு பயணக் கண்காணியைக் கேட்டபோது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “எல்லா சகோதரரையும் உயர்வாக மதித்து மரியாதை காட்டுங்கள், உங்களைப் பார்க்கிலும் மேம்பட்டவர்களாக அவர்களைக் கருதுங்கள். சகோதரரிடமிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்வீர்கள். மனத்தாழ்மையுடன் இருங்கள். உங்கள் இயல்பான சுபாவத்தின்படி இருங்கள். பகட்டு பெருமிதத்துடன் நடவாதீர்கள்.”—பிலிப்பியர் 2:3.
12. கிறிஸ்தவ ஊழியத்திற்கான ஆர்வம் ஏன் அவ்வளவு முக்கியமானது?
12 கிறிஸ்தவ ஊழியத்திற்கான ஆர்வம், பயணக் கண்காணியின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உண்மையில், சுவிசேஷ பிரசங்க ஊழியத்தில், அவரும் அவருடைய மனைவியும் ஆர்வமுள்ள முன்மாதிரிகளாக இருக்கையில், மூப்பர்களும் அவர்களுடைய மனைவிகளும், சபையிலுள்ள மற்ற எல்லாரும், தங்கள் ஊழியத்தில் ஆர்வத்தைக் காட்டும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். “ஊழியத்திற்கான ஆர்வமுடையோராக இருங்கள்,” என்று ஒரு வட்டாரக் கண்காணி வலியுறுத்தினார். அவர் மேலும் இவ்வாறு சொன்னார்: “பொதுவாக, ஊழியத்தில் ஒரு சபை எவ்வளவுக்கெவ்வளவு அதிக ஆர்வமுள்ளதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு குறைந்த பிரச்சினைகளை அனுபவிக்கிறதென்று நான் கண்டிருக்கிறேன்.” மற்றொரு வட்டாரக் கண்காணி இவ்வாறு குறிப்பிட்டார்: “வெளி ஊழியத்தில் மூப்பர்கள், சகோதர சகோதரிகளுடன் ஊழியம்செய்து, அதில் மகிழ்ச்சி காணும்படி அவர்களுக்கு உதவிசெய்தால், இது, யெகோவாவைச் சேவிப்பதில் மனச் சமாதானத்தையும் மிகுந்த மனத் திருப்தியையும் அடைவதில் பலன்தருமென்று நான் நம்புகிறேன்.” அப்போஸ்தலனாகிய பவுல், ‘வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தைத் தெசலோனிக்கேயருக்குச் சொல்லும்படி தைரியங்கொண்டார்.’ அவருடைய சந்திப்பையும் பிரசங்க நடவடிக்கையையும் பற்றி பிரியமான நினைவுகளை உடையோராகவும், அவரை மறுபடியும் காண ஆவலாகவும் அவர்கள் இருந்தது ஆச்சரியமாயில்லை!—1 தெசலோனிக்கேயர் 2:1, 2; 3:6.
13. வெளி ஊழியத்தில் உடன் கிறிஸ்தவர்களோடு ஊழியம்செய்கையில் ஒரு வட்டாரக் கண்காணி எதைக் கவனத்தில் ஏற்கிறார்?
13 ஒரு வட்டாரக் கண்காணி, வெளி ஊழியத்தில் உடன் கிறிஸ்தவர்களுடன் வேலை செய்கையில், அவர்களுடைய சூழ்நிலைமைகளையும் மட்டுப்பாடுகளையும் கவனத்தில் ஏற்கிறார். அவருடைய ஆலோசனைகள் உதவியாயிருக்குமென்றாலும், அனுபவமுள்ள மூப்பர் ஒருவருடன் பிரசங்க ஊழியம் செய்கையில், சிலர் ஒருவாறு பயமடையலாமென அவர் அறிந்திருக்கிறார். ஆகையால், சிலருடைய காரியங்களில், அறிவுரையைப் பார்க்கிலும் ஊக்கமூட்டுதல் அதிக பயனுள்ளதாயிருக்கலாம். பிரஸ்தாபிகளோடு அல்லது பயனியர்களோடு ஒரு பைபிள் படிப்புக்குச் செல்கையில், அவர் நடத்தும்படி அவர்கள் விரும்பலாம். இது தங்களுடைய கற்பிக்கும் முறைகளை முன்னேற்றுவிப்பதற்கான சில வழிகளுடன் அவர்கள் அறிமுகமாகும்படி செய்விக்கலாம்.
14. ஆர்வமுள்ள பயணக் கண்காணிகள் மற்றவர்களில் ஆர்வத்தைத் தூண்டி ஊக்குவிக்கிறார்கள் என்று ஏன் சொல்லலாம்?
14 ஆர்வமுள்ள பயணக் கண்காணிகள், மற்றவர்களில் ஆர்வத்தைத் தூண்டி ஊக்குவிக்கிறார்கள். உகாந்தாவில் ஒரு வட்டாரக் கண்காணி, பெரும்பாலும் முன்னேற்றமடையாத ஒரு பைபிள் படிப்புக்கு ஒரு சகோதரருடன் செல்ல, அடர்ந்த காட்டினூடே ஒரு மணிநேரம் நடந்தார். அவர்கள் நடந்துசெல்கையில், அவ்வளவு பெரும் மழை பெய்ததால், முற்றிலும் நனைந்தவர்களாய் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்களைக் காண வந்தவர் ஒரு வட்டாரக் கண்காணி என்று ஆறு நபர்களைக் கொண்ட அந்தக் குடும்பத்தார் அறிந்தபோது, அவர்கள் உள்ளக்கிளர்ச்சி அடைந்தார்கள். தங்கள் சர்ச்சின் பாதிரிமார், மந்தையின்பேரில் அத்தகைய அக்கறையை ஒருபோதும் காட்டமாட்டார்கள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமையின்போது, தங்கள் முதல் கூட்டத்திற்கு அவர்கள் வந்திருந்து, யெகோவாவின் சாட்சிகளாகும்படியான தங்கள் ஆவலை வெளிப்படுத்தினார்கள்.
15. ஆர்வமுள்ள வட்டாரக் கண்காணி ஒருவர் என்ன சிறந்த அனுபவத்தைப் பெற்று மகிழ்ந்தார்?
15 மெக்ஸிகோவிலுள்ள மாகாணமாகிய ஓக்ஸாகாவில், ஒரு வட்டாரக் கண்காணி, தன்னிடம் உண்மையில் எதிர்பார்க்கப்படாத ஒரு முயற்சி எடுத்தார். சிறைச்சாலையில் ராஜ்ய பிரஸ்தாபிகளாகியிருந்த ஏழு சிறையிருப்பாளர்களைக் கொண்ட ஒரு தொகுதியைச் சந்திப்பதற்கு, சிறையிருப்பு அறை ஒன்றில் நான்கு இரவுகள் தங்கியிருக்கும்படி ஏற்பாடு செய்துகொண்டார். இந்தக் கைதிகள் சிறைச்சாலையில் அறையறையாகச் சாட்சி கொடுத்துக்கொண்டும் பைபிள் படிப்புகள் நடத்திக்கொண்டும் செல்கையில் அவர்களோடுகூட பல நாட்கள் சென்றார். காட்டப்பட்ட அக்கறையினிமித்தமாக, இந்தப் படிப்புகளில் சில இரவு வெகுநேரம் வரையில் தொடர்ந்து நடத்தப்பட்டன. “அந்தச் சந்திப்பின் முடிவில், ஒருவருக்கொருவர் பரிமாற்றமான ஊக்குவிப்பின் பலனாக, சிறையிருப்பாளர்களும் நானும் மகிழ்ச்சி நிரம்பியவர்களாக உணர்ந்தோம்,” என்று ஆர்வமுள்ள இந்த வட்டார ஊழியர் எழுதுகிறார்.
16. பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் ஊக்கமூட்டுதலை அளிக்கையில் ஏன் அவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?
16 ஊக்கப்படுத்துகிறவர்களாக இருக்க, பயணக் கண்காணிகள் முயற்சி செய்கின்றனர். மக்கெதோனியாவிலிருந்த சபைகளை பவுல் சந்தித்தபோது, “அவர்களோடு வெகுவாய்ப் பேசி அவர்களைத் தைரியப்படுத்தி”னார். (அப்போஸ்தலர் 20:1, 2, தி.மொ.) இளைஞரையும் முதியோரையும் ஆவிக்குரிய இலக்குகளை அடையும்படி வழிநடத்துவதில், ஊக்குவித்து தைரியப்படுத்தும் வார்த்தைகள் மிகவும் உதவியாயிருக்கக்கூடும். உவாட்ச் டவர் சொஸைட்டியின் பெரிய கிளை அலுவலகம் ஒன்றில் தற்செயலாகச் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியானது, முழுநேர சேவையை ஏற்கும்படி முன்வந்தவர்களில் ஏறக்குறைய 20 சதமானோர் வட்டாரக் கண்காணிகளால் ஊக்குவிக்கப்பட்டிருந்தனரென்று வெளிப்படுத்தினது. பயணக் கண்காணியின் மனைவியும், முழுநேர ராஜ்ய பிரஸ்தாபியாகத் தன் சிறந்த முன்மாதிரியால் உற்சாகத்தின் பெரும் ஊற்றுமூலமாய் நிரூபிக்கிறார்கள்.
17. மற்றவர்களுக்கு உதவிசெய்யும் தன் சிலாக்கியத்தைப் பற்றி முதிர்வயதான ஒரு வட்டாரக் கண்காணி எவ்வாறு உணருகிறார்?
17 முக்கியமாய், முதியோருக்கும் சோர்வுற்ற ஆத்துமாக்களுக்கும் ஊக்குவித்தல் தேவைப்படுகிறது. முதிர்வயதான வட்டாரக் கண்காணி ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “கடவுளுடைய மந்தைக்குள் செயலற்றோருக்கும் உடல்பலம் குன்றியோருக்கும் உதவி அளிக்கும் சிலாக்கியமே, வார்த்தையால் விவரிக்க முடியாத ஓர் உள்ளான மகிழ்ச்சியை உண்டாக்கும் என் ஊழியத்தின் ஓர் அம்சமாக உள்ளது. அத்தகையோர் ‘ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை அவர்களுக்குக் கொடுக்கையில்,’ மிகுதியான ஊக்கமூட்டுதலையும் பலத்தையும் நான் பெறும்போது, ரோமர் 1:10, 11-ன் வார்த்தைகள் எனக்கு முக்கியமாய் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன.”
அவர்களுடைய மகிழ்ச்சியுள்ள ஊழியத்தின் நற்பலன்கள்
18. பயணக் கண்காணிகள் என்ன வேதப்பூர்வ நோக்கங்களைக் கொண்டுள்ளனர்?
18 உடன் விசுவாசிகளின் மிகச் சிறந்த அக்கறைகளுக்குரியவற்றையே பயணக் கண்காணிகள் இருதயத்தில் கொண்டுள்ளனர். சபைகளைப் பலப்படுத்தி, ஆவிக்குரியப்பிரகாரம் அவற்றை கட்டியெழுப்பவே அவர்கள் விரும்புகின்றனர். (அப்போஸ்தலர் 15:41) ஒரு பயணக் கண்காணி, “ஊக்கமூட்டுதலைக் கொடுக்கவும், புது வலுவூட்டவும், ஊழியத்தை நிறைவேற்றி, சத்தியத்தில் தொடர்ந்து வாழ்ந்துவரும்படியான ஆவலை வளர்த்துவரவும்” கடினமாய் உழைக்கிறார். (3 யோவான் 3) மற்றொருவர், உடன் விசுவாசிகளை, விசுவாசத்தில் திடமாக நிலைப்படுத்தும்படி நாடுகிறார். (கொலோசெயர் 2:6, 7) பயணக் கண்காணி, மற்றவர்களின் விசுவாசத்தின்மீது ஓர் எஜமானர் அல்லர், ‘உடன் ஊழியராக’ இருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (பிலிப்பியர் 4:3; 2 கொரிந்தியர் 1:24, தி.மொ.) அவருடைய சந்திப்பானது, ஊக்கமூட்டப்படுதலுக்கும் கூடுதலாகச் செயல்படுவதற்குமுரிய ஒரு சந்தர்ப்பமாக உள்ளது. அதோடுகூட, செய்யப்பட்ட முன்னேற்றத்திற்கு, மூப்பர் குழு மறுபார்வை செலுத்துவதற்கும் எதிர்கால இலக்குகளைச் சிந்திப்பதற்குமுரிய சந்தர்ப்பமாயும் உள்ளது. அவருடைய வார்த்தைகளாலும் முன்மாதிரியாலும், சபை பிரஸ்தாபிகள், பயனியர்கள், உதவி ஊழியர்கள், மற்றும் மூப்பர்கள் எதிர்கால ஊழியத்திற்காக கட்டியெழுப்பப்படவும் தூண்டி ஊக்குவிக்கப்படவும் எதிர்பார்க்கலாம். (1 தெசலோனிக்கேயர் 5:11-ஐ ஒப்பிடுக.) ஆகவே, வட்டாரக் கண்காணியின் சந்திப்புகளை முழு இருதயத்தோடும் ஆதரியுங்கள், மற்றும் மாவட்டக் கண்காணியால் அளிக்கப்படும் சேவையை முழுமையாக அனுகூலப்படுத்திக்கொள்ளுங்கள்.
19, 20. பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் தங்கள் உண்மையுள்ள சேவைக்காக எவ்வாறு பலனளிக்கப்பட்டிருக்கிறார்கள்?
19 பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் தங்கள் உண்மையுள்ள சேவைக்காக நிறைவாய் பலனளிக்கப்படுகிறார்கள். அவர்கள் செய்யும் நன்மைக்காக யெகோவா அவர்களை ஆசீர்வதிப்பாரென்று அவர்கள் திட நம்பிக்கையுடன் இருக்கலாம். (நீதிமொழிகள் 19:17; எபேசியர் 6:8) ஜார்ஜும் மாக்தலேனாவும் பயண ஊழியத்தில் பல ஆண்டுகள் சேவித்த முதிர்வயதான தம்பதியாக உள்ளனர். லக்ஸம்பர்கில் நடந்த ஒரு மாநாட்டின்போது, 20-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் சாட்சிகொடுத்திருந்த ஓர் அம்மாள் அவர்கள் அருகில் வந்தார்கள். சத்தியத்தில் இந்த யூத ஸ்திரீயின் அக்கறை, மாக்தலேனா அவர்களிடம் விட்டுவந்த பைபிள் புத்தகத்தால் தூண்டப்பட்டு, காலப்போக்கில் முழுக்காட்டப்பட்டிருந்தார்கள். ஜார்ஜிடம் ஆவிக்குரிய சகோதரி ஒருவர் வந்தார்கள். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் தன் வீட்டுக்கு வந்தது இவர்களுக்கு நினைவிருந்தது. நற்செய்தியை அவர் ஆர்வத்துடன் கூறினது முடிவில் அவர்களையும் அவர்களுடைய கணவரையும் சத்தியத்தை ஏற்கும்படி செய்திருந்தது. ஜார்ஜும் மாக்தலேனாவும் மிக மகிழ்ச்சியடைந்தனர் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
20 எபேசுவில் பவுலின் பலனுள்ள ஊழியம் அவருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்து, இயேசுவின் இவ்வார்த்தைகளை எடுத்துச் சொல்லும்படி அவரைத் தூண்டுவித்திருக்கலாம்: “பெற்றுக்கொள்வதில் இருப்பதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி உள்ளது.” (அப்போஸ்தலர் 20:35, NW) இடைவிடாது கொடுப்பதையே பயண ஊழியம் உட்படுத்துவதால், அதில் ஈடுபடுகிறவர்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்; முக்கியமாய், தங்கள் உழைப்பின் நல்ல பலன்கள் அவர்களுக்குத் தெரியவருகையில் அவ்வாறு மகிழ்ச்சியடைகிறார்கள். மனச்சோர்வுற்ற ஒரு மூப்பருக்கு உதவிசெய்த வட்டாரக் கண்காணிக்கு ஒரு கடிதத்தில் இவ்வாறு சொல்லப்பட்டது: “என் ஆவிக்குரிய வாழ்க்கையில், நீங்கள் எனக்கு மிகுந்த ‘பலப்படுத்தும் உதவியாக’—நீங்கள் அறிவதற்கு மேலாகவே—இருந்திருக்கிறீர்கள். . . . ‘கால்கள் தள்ளாடுதலுக்குச் சற்றே தப்பிய’ தற்கால ஆசாப்புக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் முற்றிலும் அறியமாட்டீர்கள்.”—கொலோசெயர் 4:11; சங்கீதம் 73:2.
21. வட்டாரக் கண்காணிகளின் நடவடிக்கைகளுக்கு 1 கொரிந்தியர் 15:58 பொருந்துகிறதென்று நீங்கள் ஏன் சொல்வீர்கள்?
21 வட்டார ஊழியத்தில் பல ஆண்டுகள் ஈடுபட்டிருந்த முதிர்வயதான கிறிஸ்தவர் ஒருவர், 1 கொரிந்தியர் 15:58-ஐ நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறார், அங்கே பவுல் இவ்வாறு ஊக்குவித்தார்: “எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.” பயணக் கண்காணிகள் நிச்சயமாகவே, கர்த்தருடைய வேலையில், செய்வதற்கு மிகுதியானதைக் கொண்டிருக்கிறார்கள். யெகோவாவின் தகுதியற்ற தயவின் உண்மையுள்ள உக்கிராணக்காரராக அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் சேவிப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர், மே 15, 1991, பக்கங்கள் 28-31-ல், “செய்வதற்கு அதிகம் இருப்பதோடு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?” என்ற கட்டுரையைக் காண்க.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பயணக் கண்காணிகளை ‘நல்ல உக்கிராணக்காரராக’ ஏன் கருதலாம்?
◻ வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகள் மிகுந்த நன்மையானவற்றை நிறைவேற்றும்படி அவர்களுக்கு உதவிசெய்யும் சில அம்சங்கள் யாவை?
◻ பயண ஊழியத்தில் ஈடுபட்டிருப்போருக்கு மனத்தாழ்மையும் ஆர்வமும் ஏன் மிக முக்கியமானவை?
◻ பயணக் கண்காணிகள் என்ன சிறந்த நோக்கங்களை உடையோராக இருக்கின்றனர்?
[பக்கம் 16-ன் படம்]
பயணக் கண்காணிகள் உடன் விசுவாசிகளை ஊக்குவிக்க நாடுகிறார்கள்
[பக்கம் 17-ன் படங்கள்]
பயணக் கண்காணிகளுடனும் அவர்களுடைய மனைவிகளுடனும் கூட்டுறவு கொள்வதிலிருந்து இளைஞரும் முதியோரும் ஒன்றுபோல் பயனடையலாம்
[பக்கம் 18-ன் படம்]
பயணக் கண்காணிகளின் ஆர்வமுள்ள ஊழியம் மற்றவர்களில் ஆர்வத்தைத் தூண்டி முன்னேற்றுவிக்கிறது