ஒப்பற்ற இந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்ளுங்கள்!
இரட்சிப்புக்குரிய பைபிளின் செய்தி பீட்டரின் அக்கறையைக் கவர்ந்த சமயத்தில், அவர் தன் மருத்துவ படிப்புகளில் மிகவும் முன்னேறியிருந்தார். அவர் பட்டம் பெற்று, ஒரு மருத்துவமனையில் மருத்துவராகப் பயிற்சியைத் தொடங்கினபோது, நரம்பறுவை மருத்துவத்தில் தனித்துறை வல்லுநராகும்படி அவருடைய மேலதிகாரிகள் அவரைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்கள். புதிய மருத்துவர் பலர், தயக்கமில்லாமல் பற்றிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக அது இருந்தது.
எனினும் பீட்டர்,a இந்த வாய்ப்பை விட்டுவிட தீர்மானித்தார். ஏன்? தேவைப்பட்ட ஆவலும் உள்ளத் தூண்டுதலும் அவருக்கு இல்லாததன் நிமித்தமாகவா? இல்லை, ஏனெனில் பீட்டர், அந்த வாய்ப்பளிப்பை கவனமாகச் சிந்தித்துப் பார்த்தார். யெகோவாவின் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியான பின்பு, கிறிஸ்தவ ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் தன்னால் முடிந்த அதிக அளவான நேரத்தைச் செலவிடும்படி அவர் விரும்பினார். நரம்பறுவை மருத்துவராகத் தகுதிபெற்றுவிட்ட பின், தன்னுடைய வேலை மேலும் மேலுமதிகமாகத் தன் நேரத்தையும் சக்தியையும் எடுத்துக்கொள்ளும் என்று அவர் சிந்தித்தார். இந்தத் தனிச்சிறப்பான எதிர்கால வாய்ப்பை விட்டுவிடுவதில் அவர் மதியீனராக இருந்தாரா, அல்லது ஞானமுள்ளவராக இருந்தாரா?
பீட்டரின் தீர்மானம் மதியீனமாகச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். எனினும், எபேசியர் 5:15, 16-ஐப் போன்ற பைபிள் வசனங்களை அவர் கவனத்தில் ஏற்றார். அதில் அப்போஸ்தலன் பவுல், உடன் கிறிஸ்தவர்களை இவ்வாறு ஊக்குவித்தார்: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் [“வாய்ப்புள்ள காலத்தை,” NW] பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.”
‘வாய்ப்புள்ள காலம்’ என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். இது, ஏதோ சில அம்சங்களால் குறிக்கப்படும் அல்லது தனிப்பட்ட ஒரு நடவடிக்கைக்குப் பொருத்தமான ஒரு காலத்தை அல்லது காலப்பகுதியைக் குறிப்பிடவே பைபிளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு கிரேக்கச் சொல்லிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. முக்கியமான காரியங்களுக்காக, கிறிஸ்தவர்கள் காலத்தை ஒதுக்கிவைக்க வேண்டுமென்று இங்கே பவுல் அறிவுறுத்தினார். நிச்சயமாகவே, அவர்கள், ‘அதிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ள’ வேண்டும். (பிலிப்பியர் 1:10, NW) இது, முக்கியத்துவத்தில் முதன்மையானவற்றைத் தீர்மானிக்கும் காரியமாக இருக்கிறது.
அப்படியானால், நம்முடைய காலத்திற்கான கடவுளுடைய நோக்கம் என்ன? தம்மை நேசிக்கிறவர்களுக்கு கடவுளுடைய சித்தம் என்ன? நம்முடைய நாளை, ‘முடிவுகாலம்,’ அல்லது ‘கடைசிநாட்கள்’ என்று பைபிள் தீர்க்கதரிசனங்கள் தெளிவாக அடையாளங்காட்டுகின்றன. (தானியேல் 12:4; 2 தீமோத்தேயு 3:1) நம்முடைய நாட்களுக்கு எது முதன்மையான முக்கியத்துவமுடையதாயிருக்கும் என்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கும்படி கிறிஸ்து இயேசு விடவில்லை. இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்பாக, ‘ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும், சகல தேசத்தாருக்கும் ஒரு சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்’ என்று அவர் திட்டமாகச் சொன்னார். அதன் பின்பே முடிவு வரும்.—மத்தேயு 24:3, 14, NW.
ஆகையால், ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் சீஷராக்குவதற்கும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பற்றிக்கொள்ள வேண்டும். (மத்தேயு 28:19, 20) இந்த நடவடிக்கைகள் இனி ஒருபோதும் திரும்பச் செய்யப்பட போவதில்லையாதலால், உயிரைக் காக்கும் இந்த ஊழியத்தில் நம்மை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாக உள்ளது. “இப்பொழுதே அநுக்கிரககாலம்.” நிச்சயமாக, “இப்பொழுதே இரட்சணிய நாள்.”—2 கொரிந்தியர் 6:2.
ஞானமான தீர்மானத்தைச் செய்தல்
பீட்டர்—தொடக்கத்தில் குறிப்பிட்ட அந்த வாலிபர்—தன் தீர்மானத்தைக் கவனமாய்ச் சிந்தித்துப் பார்த்து, தன் தெரிந்தெடுப்புகளைச் சீர்தூக்கி மதிப்பிட்டார். நரம்பறுவை மருத்துவராகும்படியான நோக்கத்துடன் தான் படிப்பது தவறாக இராதென்பதை அவர் உணர்ந்தார். ஆனால் எது அவருக்கு மிக முக்கியமாக இருந்தது? கிறிஸ்தவ ஊழியத்தின் அவசரத் தன்மையைக் கருதினபோது, அதில் தன்னுடைய நடவடிக்கையே அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அதே சமயத்தில், அவர் நிறைவேற்றவேண்டிய கடமைபொறுப்புகளும் அவருக்கு இருந்தன. அவர் மணமாகியவராக இருந்தார்; முழுநேரமாக பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற தன் மனைவியை ஆதரிக்க வேண்டியவராய் இருந்தார். (1 தீமோத்தேயு 5:8) மேலும், தன் படிப்பு சம்பந்தமாக ஏற்பட்ட கடன்களையும் தீர்க்க வேண்டியிருந்தது. அப்படியானால், என்ன செய்ய அவர் தீர்மானித்தார்?
கதிரியக்க மருத்துவத்தில் வல்லுநராகி, கேளாவொலி அசைசீர் நுண்ணாராய்ச்சி (Ultrasound Scans) செய்யும்படி பீட்டர் தீர்மானித்தார். இது பொதுவான மணிநேரத்தை உட்படுத்தும் வேலையாக இருந்தது. வழக்கமாய் வேலைக்குரிய மணிநேரங்களின்போதே தன் பயிற்சியையும் அவர் பெறுவார். ஆம், சிலர் இதை குறைந்த மதிப்புக்குரிய பதவியாகக் கருதலாம், ஆனால், ஆவிக்குரிய ஈடுபாடுகளில் அதிக நேரத்தைச் செலவிட இது அவருக்கு இடமளிக்கும்.
மற்றொரு காரணமும் பீட்டரின் தீர்மானத்தைத் தூண்டுவித்தது. வேறுபட்ட முறையில் தீர்மானித்திருப்போரைக் குற்றப்படுத்துகிறதில்லை என்றாலும், உலகப்பிரகாரமானக் காரியங்களில் மட்டுக்குமீறி உட்பட்டவராவது ஒரு கிறிஸ்தவனுக்கு ஆபத்துக்கேதுவாக இருக்கலாம் என்று அவர் அறிந்திருந்தார். ஆவிக்குரிய பொறுப்புகளை நெகிழவிடும்படி அது அவரைச் செய்விக்கலாம். இது, தொழில் சம்பந்தப்பட்டதாக இருந்த மற்றொரு உதாரணத்தால் சித்தரித்துக் காட்டப்படுகிறது.
முழுநேர ராஜ்ய பிரசங்கியான ஒருவர், பயிற்சிபெற்ற ஓவியராக இருந்தார். தன் ஓவியங்களை விற்பதன்மூலம், பணசம்பந்தமாய் அவர் தன்னை ஆதரித்துக்கொள்ள முடிந்தது. மிக முக்கியமான கிறிஸ்தவ ஊழியத்திற்குத் தன் நேரத்தில் மிகுதியானதைச் செலவிட்டு வருகையில், அவர் அவ்வாறு தன்னை போதியவாறு ஆதரித்துக்கொள்ள முடிந்தது. எனினும், தன் ஓவியக்கலைத் தொழிலை முன்னேற்றுவிப்பதற்கான ஆவல் பெருகத் தொடங்கினது. ஓவியந்தீட்டுவதிலும் கலை உலகத்திலும் மேலுமதிகம் உட்பட்டவராகி, முழுநேர ஊழியத்தை விட்டுவிட்டார். முடிவாக ராஜ்ய பிரசங்க நடவடிக்கையைக் குறித்ததில் முற்றிலும் செயலற்றவரானார். காலப் போக்கில், வேதப்பூர்வமற்ற நடத்தையில் உட்பட்டவராகி, அதன் விளைவாக கிறிஸ்தவ சபையின் பாகமாக இனிமேலும் இல்லாதவரானார்.—1 கொரிந்தியர் 5:11-13.
நம்முடைய காலம் தனித்தன்மை வாய்ந்தது
இப்போது யெகோவாவைச் சேவிப்போராக, நாம் நிச்சயமாகவே, அவருக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க விரும்புகிறோம். மனித சரித்திரத்தில் மிக அசாதாரணமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிகிறோம். தொடர்ந்து கடவுளைச் சேவித்துக்கொண்டிருக்கவும், தற்போதைய சூழ்நிலைமைகளை வெற்றிகரமாய்ச் சமாளிக்கவும், பல்வேறு சரிப்படுத்துதல்களை நாம் செய்ய வேண்டியிருக்கலாம். விவசாயியின் அறுவடை காலத்திற்கு இதை நாம் ஒப்பிடலாம். அது தனிப்பட்ட நடவடிக்கைக்குரிய ஒரு காலப்பகுதியாக இருக்கிறது. அப்போது விவசாயிகள் பொதுவாக இருப்பதைப் பார்க்கிலும் அதிகப்படியான முறையில் தங்களை உழைப்பில் ஈடுபடுத்தும்படியும், வேலை நாட்களில் நீடித்த நேரம் உழைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஏன்? ஏனெனில், வரம்புக்குட்பட்ட ஒரு காலப்பகுதிக்குள் அறுவடை செய்துமுடிக்கப்பட வேண்டும்.
மிக மட்டுப்பட்ட ஒரு காலமே, காரியங்களின் இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறைக்கு மீந்துள்ளது. இதற்கு முன்னால் எடுக்கப்பட்ட எந்த முயற்சிக்கும் மேலாக இப்போது, உண்மையான ஒரு கிறிஸ்தவன், இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கும்படி தன்னை பெரும் முயற்சியில் ஈடுபடுத்துவது அவசியம். அவருக்கு எது மிக அதிக முக்கியத்துவமுடையதாக இருந்ததென்பதை, பூமியில் அவருடைய வாழ்க்கைப் போக்கு தெளிவாக மெய்ப்பித்துக் காட்டினது. அவர் சொன்னதாவது: “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.” (யோவான் 9:4) இராக்காலம் வருகிறதென்று சொன்னதில், இயேசு, தம்முடைய விசாரணைக்கும், கழுமரத்தில் அறையப்படுதலுக்கும், மரணத்துக்குமுரிய காலத்தைக் குறிப்பிட்டார். அப்போது பூமிக்குரிய அவருடைய ஊழியம் முடிவடையும், தம்முடைய பரலோகத் தகப்பனின் வேலைகளில் ஈடுபட முடியாதவராக இருப்பார்.
தம்முடைய மூன்றரை ஆண்டு கால ஊழியத்தின்போது, இயேசு, அற்புதங்களை நடப்பிப்பதிலும், நோயுற்றோரைச் சுகப்படுத்துவதிலும் தம்முடைய நேரத்தில் சிறிதை செலவிட்டார் என்பது உண்மையே. இருப்பினும், தம்முடைய நேரத்தில் மிகுதியானதை, ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதற்கும், பொய் மதத்தில் ‘சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையைப் பிரசித்திப்படுத்தவும்’ அவர் பயன்படுத்தினார். (லூக்கா 4:18; மத்தேயு 4:17) இயேசு, தம்முடைய ஊழியத்தில் ஊக்கமான முயற்சியை ஈடுபடுத்தினார். மேலும், தாம் போட்டிருந்த அஸ்திபாரத்தின்மீது தம்முடைய சீஷர்கள் கட்டியெழுப்பி, பலன்தரத்தக்க முறையில் பிரசங்க ஊழியத்தைத் தொடர்ந்து செய்யும்படி, அவர்களைப் பயிற்றுவிப்பதற்கும் அவர் நேரம் செலவிட்டார். ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் இயேசு விடாது பற்றிக்கொண்டார்; தம்முடைய சீஷர்களும் அதையே செய்யும்படி விரும்பினார்.—மத்தேயு 5:14-16; யோவான் 8:12.
தற்காலத்தில் இயேசுவைப் பின்பற்றுவோராக இருக்கிற நாம், அவரைப்போல், மனிதவர்க்கத்தின் சூழ்நிலைமையை யெகோவா காண்பதுபோல் காண வேண்டும். இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு காலம் குறுகிக்கொண்டு வருகிறது; இரட்சிப்படையும் வாய்ப்பை எல்லாரும் பெற வேண்டுமென்று இரக்கத்தோடு கடவுள் விரும்புகிறார். (2 பேதுரு 3:9) ஆகையால், யெகோவாவின் சித்தத்தைச் செய்வதையே முதலாவதாக வைத்து மற்ற எல்லா ஈடுபாடுகளையும் அதற்கு இரண்டாவதான இடத்தில் வைப்பது ஞானமாயிருக்குமல்லவா? (மத்தேயு 6:25-33) முக்கியமாய் இதைப் போன்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு காலத்தின்போது, பொதுவாக முக்கியமாய்க் கருதப்படுகிற ஒன்று, கிறிஸ்தவர்களாக நம்முடைய வாழ்க்கையில் குறைந்த முக்கியத்துவமுடையதாகலாம்.
கடவுளுடைய சித்தத்தை நம்முடைய வாழ்க்கையில் முதல் வைத்ததற்காக நம்மில் எவராவது என்றாகிலும் வருந்துவோமா? நிச்சயமாகவே வருந்தமாட்டோம். ஏனெனில், கிறிஸ்தவ தன்னலத்தியாகப் போக்கானது அதிசயமாய்ப் பலன்தருவதாக உள்ளது. உதாரணமாக, இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மாற்கு 10:29, 30.
யெகோவாவைத் துதிப்பதற்கும் ராஜ்ய செய்தியை யாவருக்கும் அறிவிப்பதற்கும் தங்கள் நேரத்தைப் பயன்படுத்துவோரால் அனுபவித்து மகிழப்படுகிற பலன்களைப் பணத்தால் ஒருவரும் மதிப்பிட முடியாது. அவர்கள் மிகப் பல ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்கின்றனர்! உண்மையான நண்பர்கள், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மனத்திருப்தி, கடவுளுடைய அங்கீகார புன்முறுவல், மற்றும் முடிவற்ற வாழ்க்கையின் எதிர்பார்ப்பு ஆகியவை இவற்றில் அடங்கியுள்ளன. (வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆட்களுக்கு ஆவிக்குரியப்பிரகாரம் உதவிசெய்வதும், யெகோவாவின் சாட்சிகளாக அவருடைய பரிசுத்த பெயருக்கு கனத்தைக் கொண்டுவருவதும் எத்தகைய ஓர் ஆசீர்வாதம்! சந்தேகமில்லாமல், ‘வாய்ப்புள்ள காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்வது,’ மெய்யாகவே ஞானமானதும் பலன்தருவதுமான ஒரு போக்காக உள்ளது. கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு, இப்போதே, முன்னொருபோதும் இராத வகையில் காலமாயுள்ளது. ஒப்பற்ற இந்த வாய்ப்பை நீங்கள் பற்றிக்கொண்டு விடாது தொடர்வீர்களா?
[அடிக்குறிப்பு]
a உண்மைப் பெயரல்ல.