பயணக் கண்காணிகள்—மனித வடிவில் வரங்கள்
“அவர் பரத்துக்கு ஏறினபோது சிறைப்பட்டவர்களைக் கொண்டுசென்றார்; மனித வடிவில் வரங்களை அளித்தார்.”—எபேசியர் 4:8, NW.
1. எந்தப் புதிய ஊழியம் 1894-ன்போது இந்தப் பத்திரிகையில் அறிவிக்கப்பட்டது?
ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, புதிய ஒன்றை உவாட்ச் டவர் அறிவித்தது. அது “பிரசங்க ஊழியத்தின் மற்றொரு உப பகுதி” என விவரிக்கப்பட்டது. இந்தப் புதிய நடவடிக்கை எதை இன்றியமையாததாக்கிற்று? இது தற்கால பயணக் கண்காணிகளுடைய ஊழியத்தின் தொடக்கமாயிருந்தது. தகுதிபெற்ற சகோதரர்கள், இப்போதிருந்து, பைபிள் மாணாக்கரின் தொகுதிகளை, ‘சத்தியத்தில் அவர்களைக் கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக’ சந்தித்து வருவார்கள் என்று இந்தப் பத்திரிகையின் செப்டம்பர் 1, 1894-ன் வெளியீடு விவரித்தது.
2. வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகள் என்ன ஊழிய பொறுப்புகளை உடையோராக இருக்கிறார்கள்?
2 பொ.ச. முதல் நூற்றாண்டில், பவுல், பர்னபா போன்ற கண்காணிகள் கிறிஸ்தவ சபைகளைச் சந்தித்து வந்தனர். இந்த உண்மையுள்ள மனிதர் சபைகளை ‘ஊன்றக் கட்டும்’ நோக்கத்தை உடையோராக இருந்தனர். (2 கொரிந்தியர் 10:8) இன்று, சீரான முறைப்படி இதைச் செய்துவரும் ஆயிரக்கணக்கான நபர்களால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும்குழு, அவர்களை வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது. ஒரு வட்டாரக் கண்காணி, ஒரு வாரத்துக்கு ஒன்றாக, ஏறக்குறைய 20 சபைகளை, ஆண்டுக்கு பெரும்பாலும் இருமுறை சந்திப்பு செய்து, அவர்களுடைய பதிவுகளைப் பார்வையிட்டு, பேச்சுகளைக் கொடுத்து, மற்றும் அவ்விடத்து ராஜ்ய பிரஸ்தாபிகளோடு வெளி ஊழியத்தில் பங்குகொண்டு சேவிக்கிறார். மாவட்டக் கண்காணி, பல வட்டாரங்களுக்குரிய வருடாந்தர வட்டார மாநாடுகள் ஒவ்வொன்றுக்கும் தலைமைவகிக்கிறார்; வட்டார மாநாடு நடைபெறும் வாரத்தில் சந்திப்பு செய்யும் சபைகளோடு வெளி ஊழியத்தில் ஈடுபட்டு, பைபிளில் ஆதாரங்கொண்ட ஊக்கமூட்டும் பேச்சுகளைக் கொடுக்கிறார்.
அவர்களுடைய சுயதியாக மனப்பான்மை
3. ஏன் பயணக் கண்காணிகளுக்கு சுயதியாக மனப்பான்மை தேவைப்படுகிறது?
3 பயணக் கண்காணிகள் எப்போதும் இடம்விட்டு இடம் பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதுதானேயும் சுயதியாக மனப்பான்மையைத் தேவைப்படுத்துகிறது. ஒரு சபையிலிருந்து மற்றொன்றுக்குப் பயணப்படுவது அடிக்கடி கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த நபர்களும் அவர்களுடைய மனைவிகளும் சந்தோஷமுள்ள மனப்பான்மையுடன் அவ்வாறு செய்கின்றனர். ஒரு வட்டாரக் கண்காணி இவ்வாறு சொன்னார்: “என் மனைவி மிகவும் ஆதரவாயும், குறைகூறாமலும் இருக்கிறாள் . . . அவளுடைய சுயதியாக மனப்பான்மைக்காக மிகுந்த போற்றுதலுக்குத் தகுதியுடையவள்.” வட்டாரக் கண்காணிகள் சிலர், ஒரு சபையிலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல 1,000 கிலோமீட்டருக்கு மேற்பட்ட தூரம் பயணம் செய்கின்றனர். பலர் மோட்டார் வண்டிகளை ஓட்டிச் செல்கின்றனர், ஆனால் மற்றவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொன்றுக்கு, பொது போக்குவரத்து வாகனங்களில், மிதிவண்டியில், குதிரையின்மீது, அல்லது நடந்து செல்கின்றனர். ஆப்பிரிக்க வட்டாரக் கண்காணி ஒருவர், ஒரு சபைக்குப் போய்ச்சேர, தன் மனைவியைத் தன் தோளின்மீது தூக்கிக்கொண்டே ஒரு நதியைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அப்போஸ்தலன் பவுல், தன் மிஷனரி பயணங்களின்போது, வெப்பத்தையும் குளிரையும், பசியையும் தாகத்தையும், தூக்கமில்லா இரவுகளையும், பல்வேறு ஆபத்துகளையும், வன்முறையான துன்புறுத்தலையும் எதிர்ப்பட்டு சமாளிக்க வேண்டியதாக இருந்தது. அவற்றோடுகூட—இன்று வட்டாரக் கண்காணிகளுக்குப் பொதுவாயுள்ள ஓர் அனுபவமான—“எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை”யும் அவருக்கு இருந்தது.—2 கொரிந்தியர் 11:23-29.
4. பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளுமான இவர்களின் வாழ்க்கையை உடல்நல பிரச்சினைகள் எவ்வாறு பாதிக்கலாம்?
4 பவுலின் தோழனான தீமோத்தேயுவைப்போல், பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் சில சமயங்களில் உடல்நல பிரச்சினைகளை உடையோராக இருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 5:23) இது அவர்களை மேலுமதிகமான நெருக்கடிக்கு உட்படுத்துகிறது. ஒரு வட்டாரக் கண்காணியின் மனைவி இவ்வாறு விளக்குகிறார்கள்: “நான் சுகமில்லாதிருக்கையில் சகோதரரோடு எப்போதும் இருப்பது ரொம்ப சிரமமாக உள்ளது. மாதவிடாய் முடிவுறும் பருவத்தின் தொடக்கத்தில் நானிருக்கும்போது, இதை முக்கியமாய்க் கடினமாகக் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் எங்கள் உடைமைகளையெல்லாம் மூட்டைக் கட்டிக்கொண்டு வேறொரு இடத்துக்குப் புறப்பட்டு செல்வதுதானேயும் ஒரு சவாலாக உள்ளது. விடாது தொடர பலத்தை எனக்குக் கொடுக்கும்படி, நான் அடிக்கடி சற்று நின்று யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டியிருக்கிறது.”
5. பல்வேறு துன்ப அனுபவங்கள் இருப்பினும், என்ன மனப்பான்மையைப் பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் காட்டியிருக்கின்றனர்?
5 உடல்நல பிரச்சினைகளும் மற்ற சோதனைகளும் இருப்பினும், பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் தங்கள் சேவையில் மகிழ்ச்சியைக் கண்டடைந்து, சுயதியாக அன்பைக் காட்டுகிறார்கள். துன்புறுத்தல் அல்லது போர் காலங்களில் ஆவிக்குரிய உதவியை அளிப்பதற்கு, சிலர் தங்கள் உயிரையும் பணையம் வைத்திருக்கின்றனர். சபைகளைச் சந்திக்கையில், பவுலுக்கு இருந்ததைப்போன்ற மனப்பான்மையை அவர்கள் காட்டியிருக்கின்றனர். தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.”—1 தெசலோனிக்கேயர் 2:7, 8.
6, 7. கடினமாக உழைக்கும் பயணக் கண்காணிகள் உடன்பாடான என்ன செல்வாக்கு செலுத்தக்கூடும்?
6 கிறிஸ்தவ சபையிலுள்ள மற்ற மூப்பர்களைப்போல், பயணக் கண்காணிகள் ‘திருவசனத்திலும் உபதேசத்திலும் உழைக்கிறார்கள்.’ இத்தகைய மூப்பர்கள் எல்லாரையும் “இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.” (1 தீமோத்தேயு 5:17, திருத்திய மொழிபெயர்ப்பு) நாம் ‘அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றினால்,’ அவர்களுடைய முன்மாதிரி நன்மை பயக்குவதாக நிரூபிக்கும்.—எபிரெயர் 13:7.
7 பயண மூப்பர்கள் சிலர், மற்றவர்களின்மீது என்ன பாதிப்பை உடையோராக இருந்திருக்கிறார்கள்? யெகோவாவின் சாட்சியாக இருப்பவர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “சகோதரர் பி—— என் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட செல்வாக்குடையவராக இருந்தார்! மெக்ஸிக்கோவில் அவர், 1960-ம் ஆண்டு முதற்கொண்டு ஒரு பயணக் கண்காணியாக இருந்தார். நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, அவருடைய சந்திப்புகளை ஆவலோடும் மகிழ்ச்சியோடும் எதிர்பார்த்தேன். நான் பத்து வயதாக இருந்தபோது அவர் என்னிடம், ‘நீயும் ஒரு வட்டாரக் கண்காணி ஆகப்போகிறாய்,’ என்று சொன்னார். கடினமான பருவ வயது ஆண்டுகளின்போது, நான் அடிக்கடி அவரை ஆவலுடன் நாடினேன், ஏனெனில், எனக்கு அளிக்க ஞானமான வார்த்தைகளை வைத்திருந்தார். மந்தையை மேய்ப்பதே அவருடைய முக்கிய அக்கறையாக இருந்தது! இப்போது நான் ஒரு வட்டாரக் கண்காணியாக இருப்பதால், அவர் எனக்குச் செய்ததுபோலவே, இளைஞரிடம் நேரத்தைச் செலவிட்டு, தேவராஜ்ய இலக்குகளை தங்களுக்கு முன்பாக வைக்கும்படி அவர்களை ஊக்குவிப்பதற்கு நான் எப்போதும் முயற்சி செய்கிறேன். அவருடைய வாழ்க்கையின் இறுதியான ஆண்டுகளின்போதும், இருதய நோய் பிரச்சினையின் மத்தியிலும், சகோதரர் பி—— ஊக்கமூட்டும் ஒரு வார்த்தையைச் சொல்வதற்கு எப்போதும் நாடினார். பிப்ரவரி 1995-ல் அவருடைய மரணத்திற்கு ஒரு நாள் முன்புதானே, விசேஷ மாநாட்டு தினத்துக்கு அவர் என்னோடு வந்து, கட்டிடக் கலைஞராக இருக்கிற ஒரு சகோதரருக்கு முன்பாக சிறந்த இலக்குகளை வைத்தார். அந்தச் சகோதரன், பெத்தேலில் சேவிப்பதற்கு உடனடியாக விண்ணப்பித்தார்.”
அவர்கள் நன்றியோடு மதிக்கப்படுகிறார்கள்
8. எபேசியர் 4-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘மனித வடிவில் வரங்கள்’ யார், சபைக்கு அவர்கள் எவ்வாறு நன்மை பயக்குகிறார்கள்?
8 கடவுளுடைய தகுதியற்ற தயவினால் ஊழிய நியமிப்புகள் அளிக்கப்பட்டுள்ள பயணக் கண்காணிகளும் மற்ற மூப்பர்களும் ‘மனித வடிவில் வரங்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். யெகோவாவின் பிரதிநிதியும் சபையின் தலைவருமாக, இயேசு, நாம் ஒவ்வொருவரும் கட்டியெழுப்பப்பட்டு முதிர்ச்சியடையும்படி இந்த ஆவிக்குரிய ஆட்களை அளித்திருக்கிறார். (எபேசியர் 4:8-15) எந்த வரமும் நன்றி தெரிவிப்பதற்குத் தகுதியானது. முக்கியமாய், யெகோவாவைத் தொடர்ந்து சேவித்துக்கொண்டிருப்பதற்கு நம்மைத் திடப்படுத்தும் ஒரு வரத்தின் காரியத்தில் இது உண்மையாயிருக்கிறது. அப்படியானால், பயணக் கண்காணிகளின் ஊழியத்திற்காக நம்முடைய நன்றி மதித்துணர்வை நாம் எவ்வாறு காட்டலாம்? ‘இப்படிப்பட்டவர்களை மதிப்பாக எண்ணுகிறோம்’ என்பதை என்ன வழிகளில் நாம் காட்டலாம்?—பிலிப்பியர் 2:29, தி.மொ.
9. நாம் என்ன வழிகளில் பயணக் கண்காணிகளுக்கு நம்முடைய நன்றிமதித்துணர்வைக் காட்டலாம்?
9 வட்டாரக் கண்காணியின் சந்திப்பு அறிவிக்கப்படுகையில், சபையின் அந்த வார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்குகொள்ளும்படி நாம் திட்டமிட தொடங்கலாம். அந்தச் சந்திப்பின்போது வெளி ஊழிய ஏற்பாடுகளை ஆதரிப்பதற்கு கூடுதலான நேரத்தை நாம் ஒருவேளை ஒதுக்கிவைக்கலாம். அந்த மாதத்தின்போது துணைப் பயனியர்களாக நாம் ஊழியம் செய்யக்கூடியோராக இருக்கலாம். நம்முடைய ஊழியத்தை முன்னேற்றுவிப்பதற்கு, வட்டாரக் கண்காணி அளிக்கும் ஆலோசனைகளைப் பொருத்திப் பயன்படுத்தும்படி நாம் நிச்சயமாகவே விரும்புவோம். இத்தகைய ஏற்பு மனப்பான்மை நமக்கும் நன்மையளிக்கும், அவருக்கும் தன் சந்திப்பு பயனுள்ளதென்ற உறுதியளிக்கும். ஆம், பயணக் கண்காணிகள் நம்மைக் கட்டியெழுப்புவதற்கு சபையைச் சந்திக்கிறார்கள், ஆனால், ஆவிக்குரியப்பிரகாரம் கட்டியெழுப்பப்படுவது அவர்களுக்கும் தேவையாயிருக்கிறது. பவுலுக்கு ஊக்கமூட்டப்படுதல் தேவைப்பட்ட சமயங்கள் இருந்தன; தனக்காக ஜெபிக்கும்படி உடன் கிறிஸ்தவர்களை அடிக்கடி அவர் கேட்டுக்கொண்டார். (அப்போஸ்தலர் 28:15; ரோமர் 15:30-32; 2 கொரிந்தியர் 1:11; கொலோசெயர் 4:2, 3; 1 தெசலோனிக்கேயர் 5:25) அவ்வாறே, தற்கால பயணக் கண்காணிகளுக்கும் நம்முடைய ஜெபங்களும் ஊக்கமூட்டுதலும் தேவை.
10. பயணக் கண்காணிகளின் ஊழியத்தை மகிழ்ச்சியுள்ளதாக்குவதற்கு நாம் எவ்வாறு உதவிசெய்யலாம்?
10 அவர்களுடைய சந்திப்புகளை எவ்வளவு அதிக நன்றியோடு மதிக்கிறோம் என்பதை வட்டாரக் கண்காணியினிடமும் அவருடைய மனைவியினிடமும் நாம் சொல்லியிருக்கிறோமா? அவர் நமக்குக் கொடுக்கும் பயனுள்ள அறிவுரைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோமா? அவர் தரும் வெளி ஊழிய ஆலோசனைகள், ஊழியத்தில் நம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்போது, அதை அவருக்குத் தெரிவிக்கிறோமா? அவ்வாறு செய்கிறோமென்றால், அவருடைய ஊழியத்தை மகிழ்ச்சியுள்ளதாக்க அது உதவிசெய்யும். (எபிரெயர் 13:17) ஸ்பெய்னில் வட்டார ஊழியர் ஒருவர், தானும் தன் மனைவியும், சபைகளைச் சந்தித்த பின்பு தாங்கள் பெற்றிருக்கிற நன்றி தெரிவிக்கும் கடிதங்களை எவ்வளவு அதிகமாய் மதிக்கிறார்கள் என்பதை முக்கியமாய்க் குறிப்பிட்டார். “நாங்கள் இந்தக் கடிதங்களை பத்திரமாய் வைத்து, சோர்வுற்ற உணர்ச்சியடைகையில் அவற்றை வாசிக்கிறோம். உண்மையான ஊக்கமூட்டுதலின் ஊற்றுமூலங்களாக அவை இருக்கின்றன,” என்று அவர் சொல்லுகிறார்.
11. தாங்கள் நேசித்து மதித்துணரப்படுகிறார்கள் என்பதை வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகளின் மனைவிகளுக்கு நாம் ஏன் தெரிவிக்க வேண்டும்?
11 போற்றுதல் தெரிவிக்கும் வார்த்தைகளிலிருந்து, பயணக் கண்காணியின் மனைவி நிச்சயமாகவே நன்மையடைகிறார்கள். இந்த ஊழியத் துறையில் தன் கணவருக்கு உதவிசெய்ய அவர்கள் மிகுந்த தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். தங்கள் சொந்த வீட்டையும், பெரும்பான்மையரின் காரியத்தில், பிள்ளைகளையும் கொண்டிருக்கும் இயல்பான ஆவலை இந்த உண்மையுள்ள சகோதரிகள் தியாகம் செய்திருக்கிறார்கள். தன் தகப்பன் செய்த ஒரு பொருத்தனையின் காரணமாக, கணவரையும் ஒரு குடும்பத்தையும் உடையவளாயிருக்கும் தன் வாய்ப்பை மனமுவந்து விட்டுவிட்ட யெகோவாவின் ஊழியரில் ஒருவராக யெப்தாவின் மகள் இருந்தாள். (நியாயாதிபதிகள் 11:30-39) அவளுடைய தியாகம் எவ்வாறு கருதப்பட்டது? நியாயாதிபதிகள் 11:40 (தி.மொ.) இவ்வாறு கூறுகிறது: “இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய் நாலுநாள் கிலெயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைப் பாடிக்கொண்டாடுவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.” வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகளின் மனைவிகளிடம், அவர்கள் நேசித்து மதித்துணரப்படுவதைக் குறித்து சொல்வதற்கு நாம் முயற்சி எடுப்பது எவ்வளவு சிறந்தது!
“உபசரிக்க மறவாதிருங்கள்”
12, 13. (அ) பயணக் கண்காணிகளுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் உபசரிப்பு காண்பிப்பதற்கு, வேதப்பூர்வ என்ன ஆதாரம் உள்ளது? (ஆ) அத்தகைய உபசரிப்பு எவ்வாறு பரஸ்பரமாக பயனுள்ளதாய் இருக்க முடியும் என்பதை உதாரணத்தைக் கொண்டு விளக்குங்கள்.
12 உபசரிப்பது, கிறிஸ்தவ பயண ஊழியத்திலுள்ளவர்களுக்கு அன்பையும் மதித்துணர்வையும் தெரிவிப்பதற்கு மற்றொரு வழியாக உள்ளது. (எபிரெயர் 13:2) பயண மிஷனரிகளாக சபையைச் சந்திப்போருக்கு உபசரிப்பளித்து வந்ததற்காக, அப்போஸ்தலன் யோவான் காயுவைப் போற்றினார். யோவான் எழுதினதாவது: “பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும். ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் [“உபசரிக்க,” தி.மொ.] கடனாளிகளாயிருக்கிறோம்.” (3 யோவான் 5-8) இன்று, பயணக் கண்காணிகளுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் அதைப்போன்ற உபசரிப்பைக் காட்டுவதால், ராஜ்ய பிரசங்க நடவடிக்கையை நாம் முன்னேற செய்யலாம். இடவசதிகள் திருப்தியாயிருக்கும்படி அவ்விடத்து மூப்பர்கள் நிச்சயமாகவே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் மாவட்டக் கண்காணி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாம் சகோதரரோடு தொடர்பு கொள்வது, யார் நமக்கு எதையாவது செய்யக்கூடும் என்பதன்பேரில் சார்ந்தில்லை. அந்த எண்ணத்தையுங்கூட கொடுக்க நாம் விரும்புகிறதில்லை. அவர்கள் செல்வந்தரோ ஏழைகளோ, நம்முடைய சகோதரரில் எவரின் உபசரிப்பையும் ஏற்க நாம் மனமுள்ளோராக இருக்க வேண்டும்.”
13 உபசரிப்பு பரஸ்பரமாக பயனுள்ளதாய் இருக்கலாம். “பயணக் கண்காணிகளை எங்களுடன் தங்கும்படி அழைப்பது, எங்கள் குடும்பத்தில் வழக்கமாயிருந்தது” என்று, இப்போது பெத்தேலில் சேவிக்கும் முன்னாள் வட்டாரக் கண்காணி ஸோர்ஸா நினைவுபடுத்திக் கூறுகிறார். “அப்போது நான் உணர்ந்ததைப் பார்க்கிலும் அதிகமாக இந்தச் சந்திப்புகள் எனக்கு உதவிசெய்திருக்கின்றன என்று உணருகிறேன். என் பருவ வயதின்போது, எனக்கு ஆவிக்குரிய பிரச்சினைகள் இருந்தன. என் தாயார் இதைப்பற்றி கவலையடைந்தார்கள், ஆனால் எனக்கு எவ்வாறு உதவிசெய்வதென்று தெரியவில்லை. ஆகையால், என்னோடு பேசும்படி வட்டாரக் கண்காணியைக் கேட்டுக்கொண்டார்கள். நான் குறைகூறி கண்டிக்கப்படுவேனென பயந்ததால், முதலில் நான் அவரைத் தவிர்த்து விலகினேன். ஆனால் அவருடைய சிநேகப்பான்மை என்னை முடிவில் வசீகரித்துவிட்டது. ஒரு திங்கட்கிழமை அவரோடு சாப்பிட வரும்படி அவர் என்னை அழைத்தார்; அவர் என்னைப் புரிந்துகொள்வதாக நான் நிச்சயமாக உணர்ந்ததால், என் இருதயத்திலிருந்ததை வெளிப்படுத்தினேன். அவர் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்டார். அவருடைய நடைமுறையான ஆலோசனைகள் உண்மையில் செயல்பட்டன, நான் ஆவிக்குரியப்பிரகாரம் முன்னேறத் தொடங்கினேன்.”
14. பயணக் கண்காணிகளில் குற்றங்குறை காண்பதற்கு மாறாக அவர்களை நாம் ஏன் நன்றியோடு மதிக்கவேண்டும்?
14 ஆவிக்குரியப்பிரகாரம் இளைஞருக்கும் முதியோருக்கும் ஒன்றுபோல் உதவியாயிருக்கும்படி பயணக் கண்காணி முயற்சி செய்கிறார். அப்படியானால், நிச்சயமாகவே, அவருடைய முயற்சிகளுக்கு நாம் நன்றிமதித்துணர்வைக் காட்ட வேண்டும். எனினும், அவருடைய பலவீனக் குறிப்புகளினிமித்தம் அவரை நாம் குற்றங்குறை கூறுவோமானால் அல்லது சபையை சந்தித்த மற்றவர்களோடு எதிர்மறையான முறையில் ஒப்பிடுவோமானால் என்ன செய்வது? பெரும்பாலும், இது மிகவும் சோர்வூட்டுவதாக இருக்கும். தன்னுடைய ஊழியத்தைப் பற்றி குற்றங்குறைகளைக் கேட்பது பவுலுக்கு ஊக்கமூட்டுவதாக இல்லை. அவருடைய தோற்றத்தையும் பேச்சுத் திறமையையும் பற்றி கொரிந்திய கிறிஸ்தவர்களில் சிலர் இகழ்ந்து பேசினதாகத் தெரிகிறது. குற்றங்குறை கூறின அத்தகையோர் சொன்னதை அவர்தாமே இவ்வாறு எடுத்துக் காட்டினார்: “அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.” (2 கொரிந்தியர் 10:10) எனினும், மகிழ்ச்சியுண்டாக, நன்றிமதித்துணரும் அன்பான வார்த்தைகளையே பொதுவாய் வட்டாரக் கண்காணிகள் கேட்கின்றனர்.
15, 16. தங்கள் உடன் விசுவாசிகள் காட்டும் அன்பாலும் ஆர்வத்தாலும் பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?
15 லத்தீன் அமெரிக்காவில் ஒரு வட்டார ஊழியர், கொரில்லாக்களால் அடக்கியாளப்படுகிற ஒரு பகுதியில் வாழும் தன் ஆவிக்குரிய சகோதரரையும் சகோதரிகளையும் சந்திக்கும்படி சேறும் சகதியுமான தடங்கள் வழியாக நாள்முழுவதும் சிரமப்பட்டு நடந்து செல்கிறார். “இந்தச் சந்திப்புக்குத் தங்கள் நன்றியுணர்வை சகோதரர் காட்டும் முறையைக் காண்பது உள்ளங்கனியச் செய்கிறது,” என்று அவர் எழுதுகிறார். “நான் அங்கு செல்வதற்கு பல ஆபத்துகளையும் இக்கட்டுகளையும் எதிர்ப்பட்டு, மிகுந்த முயற்சியை எடுக்க வேண்டியதாக இருந்தபோதிலும், அவையெல்லாம் சகோதரர் காட்டுகிற அன்பாலும் ஆர்வத்தாலும் பலனளிக்கப்படுகின்றன.”
16 ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு வட்டார ஊழியர் இவ்வாறு எழுதுகிறார்: “சகோதரர் எங்களுக்குக் காட்டின அன்பினிமித்தமாக, இந்த டான்ஜானியா பிராந்தியத்தை நாங்கள் அவ்வளவு அதிகமாக விரும்பினோம்! எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள சகோதரர் ஆயத்தமாக இருந்தனர், மற்றும் எங்களைத் தங்கள் வீடுகளில் தங்க வைப்பதில் சந்தோஷப்பட்டனர்.” அப்போஸ்தலன் பவுலுக்கும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களான, மணமாகிய தம்பதி ஆக்கில்லாவுக்கும் பிரிஸ்கில்லாளுக்கும் இடையே அன்பும் மகிழ்ச்சியுமுள்ள உறவு இருந்தது. உண்மையில், அவர்களைக் குறித்து பவுல் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.” (ரோமர் 16:3, 4) உபசரிப்பை காட்டுவதற்கும் தோழமை அளிப்பதற்கும் விசேஷித்த முயற்சி எடுக்கும் தற்கால ஆக்கில்லாக்களும் பிரிஸ்கில்லாள்களுமானவர்களைத் தங்கள் நண்பர்களாய்க் கொண்டிருப்பதற்காக பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
சபைகளைப் பலப்படுத்துதல்
17. இந்தப் பயணக் கண்காணிகள் ஏற்பாட்டுக்குப் பின்னால் ஞானம் உள்ளதென்று ஏன் சொல்லலாம், அவர்கள் தங்கள் போதனையை எங்கிருந்து பெறுகிறார்கள்?
17 இயேசு இவ்வாறு சொன்னார்: “ஞானமோ தன் செயல்களால் நியாயமென்று தீர்க்கப்பட்டது.” (மத்தேயு 11:19, தி.மொ.) பயணக் கண்காணி ஏற்பாட்டுக்குப் பின்னுள்ள ஞானம், கடவுளுடைய ஜனங்களின் சபைகளைப் பலப்படுத்த அது உதவிசெய்வதில் தெளிவாகத் தெரிகிறது. பவுலின் இரண்டாவது மிஷனரி பிரயாணத்தின்போது, அவரும் சீலாவும் வெற்றிகரமாய், “சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தி”னார்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் நமக்கு இவ்வாறு சொல்லுகிறது: “அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள். அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.” (அப்போஸ்தலர் 15:40, 41; 16:4, 5) தற்கால பயணக் கண்காணிகள், மற்ற எல்லா கிறிஸ்தவர்களையும்போல், வேதவாக்கியங்களின்மூலமும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரின் பிரசுரங்களின் மூலமும் ஆவிக்குரிய போதனையைப் பெறுகிறார்கள்.—மத்தேயு 24:45, NW.
18. எவ்வாறு பயணக் கண்காணிகள் சபைகளைப் பலப்படுத்துகிறார்கள்?
18 ஆம், பயண மூப்பர்கள், யெகோவாவின் ஆவிக்குரிய மேசையிலிருந்து தொடர்ந்து உணவருந்தி வரவேண்டும். கடவுளுடைய அமைப்பு பின்பற்றுகிற முறைமைகளோடும் வழிகாட்டு குறிப்புகளோடும் நன்றாய்ப் பழக்கப்பட்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அப்போது இத்தகைய ஆட்கள் மற்றவர்களுக்கு உண்மையான ஆசீர்வாதமாக இருக்க முடியும். வெளி ஊழியத்தில் அவர்களுடைய சிறந்த ஆர்வ முன்மாதிரியின் மூலமாக, உடன் விசுவாசிகளுக்குக் கிறிஸ்தவ ஊழியத்தில் முன்னேறும்படி அவர்கள் உதவி செய்யலாம். இந்தச் சந்திக்கும் மூப்பர்களால் கொடுக்கப்படும் பைபிளில் ஆதாரங்கொண்ட பேச்சுகள், செவிகொடுத்துக் கேட்போரை ஆவிக்குரியப்பிரகாரம் கட்டியெழுப்புகின்றன. கடவுளுடைய வார்த்தையின் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்தும்படியும், பூமியெங்குமுள்ள யெகோவாவின் ஜனங்களோடு ஒத்திசைவில் சேவிக்கும்படியும், ‘உண்மையுள்ள அடிமையின்’ மூலமாக வரும் கடவுளின் ஆவிக்குரிய ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படியும் மற்றவர்களுக்கு உதவிசெய்வதன் மூலம், பயணக் கண்காணிகள், தாங்கள் சந்திக்கும்படி சிலாக்கியமளிக்கப்பட்ட சபைகளைப் பலப்படுத்துகிறார்கள்.
19. ஆராய்வதற்கு என்ன கேள்விகள் மீந்துள்ளன?
19 ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, யெகோவாவின் அமைப்பு, பயண மூப்பர்களின் ஊழியத்தை பைபிள் மாணாக்கரின் மத்தியில் தொடங்கிவைத்தபோது, இந்தப் பத்திரிகை இவ்வாறு கூறினது: “பலன்களுக்காகவும் கர்த்தரின் மேலுமான வழிநடத்துதலுக்காகவும் எதிர்நோக்கிக் காத்திருப்போம்.” யெகோவாவின் வழிநடத்துதல் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவருடைய ஆசீர்வாதத்தின் காரணமாகவும் ஆளும்குழுவின் மேற்பார்வையின்கீழும், இந்த ஊழியம் பல ஆண்டுகளினூடே விரிவாக்கப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது. இதன் பலனாக, பூமி முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன; நாளுக்குநாள் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டுமிருக்கின்றன. இந்த மனித வடிவில் வரங்களின் சுயதியாக மனப்பான்மையை யெகோவா ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறார் என்பது தெளிவாயிருக்கிறது. ஆனால், பயணக் கண்காணிகள் தங்கள் ஊழியத்தை எவ்வாறு வெற்றிகரமாய் நிறைவேற்ற முடியும்? அவர்களுடைய குறிக்கோள்கள் யாவை? மிக நன்மையானதை அவர்கள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகளின் சில கடமைகள் யாவை?
◻ பயணக் கண்காணிகளுக்கு சுயதியாக மனப்பான்மை ஏன் தேவை?
◻ பயண மூப்பர்களும் அவர்களுடைய மனைவிகளும் செய்யும் ஊழியத்திற்காக நன்றிமதித்துணர்வை எவ்வாறு காட்டலாம்?
◻ சபைகளை விசுவாசத்தில் உறுதிப்படுத்த பயணக் கண்காணிகள் என்ன செய்யலாம்?
[பக்கம் 10-ன் படம்]
தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டிருப்பதற்கு சுயதியாக மனப்பான்மை தேவை
[பக்கம் 13-ன் படம்]
பயணக் கண்காணிகளுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் உபசரிப்பைக் காட்டியிருக்கிறீர்களா?