எதியோபியாவின் “தெய்வீக போதனை” மாநாடு—விசேஷித்த சந்தோஷத்திற்குரிய ஒரு சமயம்
தடை நீக்கப்பட்டப்பின் எதியோபியாவின் முதல் மாவட்ட மாநாடு அல்ல அது, ஆனால் நிச்சயமாகவே விசேஷித்த ஒன்றாக அது இருந்தது. நவம்பர் 11, 1991 அன்று, சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றதிலிருந்து, அடிஸ் அபாபாவின் மையத்தில், அந்த நாட்டின் மிகப் பெரிய அரங்காகிய சிட்டி ஸ்டேடியத்தில் மூன்றாவது முறையாக யெகோவாவின் சாட்சிகள் ஒன்றுகூடினார்கள். முதலில் இந்த அரங்கு ஞாயிற்றுக்கிழமைக்காக கிடைக்காததாலும், போதுமானளவு பெரிய வசதியுள்ள வேறொன்று கிடைக்காது என்பதாலும், நிகழ்ச்சிநிரல் மூன்று நாட்களுக்குள், அதாவது வியாழக்கிழமையிலிருந்து சனிக்கிழமை, ஜனவரி 13-15, 1994 வரையாக சுருக்கப்பட்டது.
இந்த மூன்று நாட்கள், நீல வானின்கீழ் அருமையான மிதமான தட்பவெப்பநிலையில் திளைத்தது மட்டுமல்லாமல் “தெய்வீக போதனை”யின் முழுமையான செயல்விளைவால் ஆவிக்குரிய அறிவொளியூட்டுதலிலும் திளைத்தது. மேடையைச் சுற்றிலும் கவரத்தக்க பூக்கள் அமைக்கப்பட்ட சூழலில், அந்த மாநாட்டு பொருள் அம்ஹாரிக் எழுத்துக்களில் எடுப்பாகத் தெரிந்தது.
ஆனால் அந்த மாநாட்டை விசேஷித்ததாக்கியது எது? நிறைவான நிகழ்ச்சிநிரலுடன், நம் அன்பான சர்வதேச சகோதரத்துவத்திலும், ராஜ்ய அதிகரிப்பின் வாயிலாக கடவுளுடைய மக்கள்மேல் அவருடைய ஆசீர்வாதத்தின் தெளிவான வெளிக்காட்டுதல்களிலும் எல்லாருடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் ஒருமுகப்படுத்தப்பட்டன. ஜிபெளதி மற்றும் ஏமனும் உட்பட, 16 தேசங்களிலிருந்து சுமார் 270 அயல்நாட்டு பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். பாதிக்கும் மேற்பட்டோர் குளிரான வானிலையை உடைய ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து வந்தனர். யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக் குழுவின் அங்கத்தினர் இருவரான லாயிட் பேரி மற்றும் டேனியல் சிட்லிக்கும் வந்திருந்தவர்களில் உட்பட்டிருந்தனர்.
வந்திருந்த சகோதரர்களிடமாக, பாரம்பரிய எதியோபிய உபசரிப்புத்தன்மையும் இருதயப்பூர்வமான அன்பும் சேர்ந்து மொழி தடைகளையெல்லாம் வென்றுவிட்ட ஒரு களிப்பில் விளைவடைந்தது. வாழ்த்துக்கள் வெறும் கைக்குலுக்கல்களாக மட்டுமல்ல, ஆனால் ஆறுமடங்கிற்கு கட்டித்தழுவுதல்களாகவும் முத்தங்களாகவும் இருந்தன! வந்திருந்தவர்களில் அநேகர், எதியோபியாவிலுள்ள ராஜ்ய வேலையைப்பற்றி வாசித்திருந்தார்கள்; தங்களுடைய எதியோபிய சகோதரர்கள் சிறையிருப்புகளினூடேயும் மற்ற வகைகளான துன்புறுத்தல்களினூடேயும் விடாமுயற்சியோடு தொடர்ந்திருந்த, சோதிக்கப்பட்ட உத்தம காப்பாளர்கள் என்பதை அறிந்திருந்தார்கள்.a ஆனால் அநேக இளைஞர் மகிழ்ச்சியுள்ள முகங்களையும் இன்று பெரும்பாலான தேசங்களில் குறைந்துகொண்டே செல்கிற பண்பட்ட தன்மையையும் காண்பிக்கிறதைக் கண்டு வந்திருந்த பிரதிநிதிகள் ஆச்சரியப்பட்டார்கள். அநேக எதியோபிய சகோதரிகள், தையல் வேலைப்பாடமைந்த பாரம்பரிய, வெள்ளை உடைகளை அணிந்திருந்தார்கள்; அது உண்மையிலே அந்தக் கொண்டாட்ட உணர்வை அதிகரித்தது.
வெள்ளிக்கிழமை அன்று முழுக்காட்டுதல் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. 10-லிருந்து 80 வயதுவரையானவர்களாக இருந்த, புதிதாக ஒப்புக்கொடுத்த 530 பேர் கொண்ட ஒரு நீண்ட வரிசை, அந்த அரங்கத்தின் ஆட்டக்களத்தில் பாதிவரையாக நிரப்பியது. இது எவரும் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமானதாக இருந்தது—நாட்டிலுள்ள ஒவ்வொரு 7 சாட்சிகளுக்கு ஒருவர் என்பதற்கும் அதிகமானதாக இருந்தது. இங்குள்ள யெகோவாவின் மக்கள்மீது அவருடைய ஆசீர்வாதத்தின் என்னே ஓர் அத்தாட்சி! இந்தக் காட்சியைக் கண்டு பலர் ஆனந்தக் கண்ணீர்விட்டனர்; 40-க்கும் மேற்பட்ட இத்தாலிய பிரதிநிதிகள் இனிமையாகப் பாடியது இதை மேலுமாகச் சிறப்பித்தது. ஏசாயா 60:5-ன் (கத்.பை.) தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பற்றி அநேகர் யோசித்துப் பார்த்தனர்: “நீயோ அதைக் கண்டு அக்களிப்பாய், உன் உள்ளம் வியப்பினால் பூரிப்படையும்; ஏனெனில், கடல்வளம் உன்னிடம் கொணரப்படும். மக்களினங்களின் செல்வம் உன்னிடம் வந்து சேரும்.”
சந்தோஷத்திற்கான விசேஷித்த காரணங்கள்
எதியோபியாவில் ராஜ்ய வேலையின் சிறிய ஆரம்பங்களை பேட்டிகளின்மூலம் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தபோது, வெள்ளிக்கிழமையன்று யெகோவாவின் ஆசீர்வாதம் மேலுமாக அழுத்திக்கூறப்பட்டது. 1950-களிலும் 1970-களிலும் அங்கு சேவை செய்த ஆரம்பகால மிஷனரிகளாலான ஒரு தொகுதியுடன் இந்தப் பேட்டிகள் நடத்தப்பட்டன. ரே காஸன், ஜான் காம்ஃபஸ், ஹேவுட் உவார்ட் ஆகியோர் அடிஸ் அபாபாவிற்கு வந்துசேர்ந்தபோது, செப்டம்பர் 14, 1950-ல் தொடங்கி செய்த தங்களுடைய பைபிள் கற்பிப்பு வேலையை விளக்கியதை 8,000-க்கும் மேற்பட்டோர் கேட்டனர். அவர்கள் பொதுக் கல்வியில் அதிக ஈடுபாடுள்ளவர்களாய் இருக்கவேண்டியதை அக்காலத்து பேரரசாட்சிமுறை தேவைப்படுத்தியது. ஆகவே அவர்கள் வயதுவந்தோர் கல்விக்காக பல்வேறு பாடப் பொருள்களை அளிக்கும் ஒரு பள்ளியை நகர மையத்தில் அமைத்தார்கள். ஆனால் தங்களுடைய மீதி நேரங்களில், இந்த மிஷனரிகள் தெய்வீக போதனையில் கவனம்செலுத்தும் கல்வியை முன்னேற்றுவிக்க முயன்றனர். அம்ஹாரிக் மொழியைக் கற்றுக்கொள்ள அவர்கள் கடுமுயற்சி எடுக்க வேண்டியதாயிருந்தது; 250 எழுத்துக்களைக் கொண்ட ஒரு சிக்கலான மொழியாக அது இருந்தது. அவர்கள் முதல் வீட்டு பைபிள் படிப்பை வெற்றிகரமாக நடத்துவதற்குள் சுமார் அரை வருடம் கடந்து சென்றது. சுமார் 43 வருடங்களுக்குப் பின்னர், இந்த முன்னாள் பள்ளி ஆசிரியர்களை நினைவுகூர்ந்த மக்களை அவர்கள் தெருவில் சந்தித்தார்கள். என்றாலும், அவர்களுடைய முன்னாள் பைபிள் மாணவர்களாய் இருந்து, விசுவாசத்தில் உறுதியானவர்களாக ஆன பலருடன் மாநாட்டில் மீண்டும் ஒன்றுசேர்ந்ததில் அவர்கள் களிகூர்ந்தார்கள்; அந்த முன்னாள் மாணவர்கள் இவர்களைத் தங்கள் சொந்த ஆவிக்குரிய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அறிமுகம் செய்தார்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:19, 20.
முன்னாள் மிஷனரிகளுடனுள்ள இந்தப் பேட்டிகளுக்கு மட்டுமல்லாமல், பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, கென்யா, நெதர்லாந்து, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய இடங்களிலிருந்து வந்த பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட அறிக்கைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் இந்த சந்தோஷமுள்ள, மிகவும் கவனம்செலுத்தின வந்திருந்தோர் கூட்டம் நெடுநேர கைத்தட்டல்களுடன் பிரதிபலித்தது. இது கடவுளுடைய மக்களின் அன்பார்ந்த உலகளாவிய சகோதரத்துவத்தை மேலுமாக மேம்படுத்திக் காட்டியது. நிர்வாகக் குழுவைச் சேர்ந்த அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களால் அளிக்கப்பட்ட முக்கிய பேச்சுக்களும் அவர்களுடைய இருதயப்பூர்வமான ஜெபங்களும்கூட வந்திருந்தவர்களை ஆழமாகத் தொட்டன. நாடகம் மிகவும் இயல்பாகவும் உயிரூட்டமான முறையிலும் அளிக்கப்பட்டதால், அரங்கத்தில் இருந்த இளைஞர், தங்கள் சிருஷ்டிகரை நினைவுகூரும் இளைஞரைப் பற்றிய நாடகத்தின் பாத்திரங்களுடைய இடத்தில் தங்களை வைத்துப் பார்க்கமுடிந்தது. ஆங்கிலத்திலுள்ள புது வெளியீடுகளுடன்கூட, மூன்று புதிய அம்ஹாரிக் வெளியீடுகள் அதிக ஆர்வத்தை உண்டுபண்ணின.b
இடைவேளைகளிலும் மற்ற சமயங்களிலும், அநேக சிறந்த நபர்களுடன் பழகுவதற்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. உதாரணமாக, முதல் வரிசையிலேயே, கையால் செய்யப்பட்ட ஒரு ஊன்றுகோலுடன், எதியோபியாவின் மிகவும் வயதான பிரஸ்தாபியாகிய டூலு மக்கூர்யா உட்கார்ந்திருந்தார். கடந்த வருடம், பழுத்த வயதில், 113 வயதில், அவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்பட்டார். இந்த மாநாட்டில் தன்னுடைய 80 வயதான மனைவியும், தன்னுடைய மாதிரியைப் பின்பற்றி, அவருடைய ஆவிக்குரிய சகோதரியாகவும் ஆவதைப் பார்க்கும் சந்தோஷத்தைக் கொண்டிருந்தார். முழு நிகழ்ச்சிநிரலின் போதும் அவர் அங்கு இருந்தது இளைஞருக்கு ஒரு சிறந்த ஊக்குவிப்பாக இருந்தது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் யோஹானஸ் கோரம்ஸ்; இவர் 16 வயதுள்ளவராய், இன்னும் பள்ளியில் ஒரு மாணவராக இருக்கிறபோதிலும் ஏற்கெனவே நான்கு வருடங்களாக ஓர் ஒழுங்கான பயனியர் பிரஸ்தாபியாக இருந்து வருகிறார். இவரும் இன்னும் இளையவர்களாகக்கூட இருக்கும் மற்ற பள்ளி வயது பயனியர்களும் சாதகமான சமயத்தை வாங்க கற்றுக்கொண்டிருக்கின்றனர்; அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் அல்லது இடைவேளைகளிலும் பள்ளி நேரங்களுக்குப் பின்னான நேரங்களிலும் சாட்சிகொடுப்பதன்மூலம் இதைச் செய்கிறார்கள்.
உத்தமத்தின் எப்பேர்ப்பட்ட உதாரணங்கள்!
வந்திருந்தவர்களில் நூற்றுக்கணக்கானோர், முந்தின அரசாங்கங்களின்கீழ், சிறைப்படுத்தல்களையும் சித்திரவதையையும் அனுபவித்திருந்தார்கள். மான்டஃப்ரோ யிஃப்ரு சிறையிலிருந்த அப்பேர்ப்பட்ட ஐந்து வருடங்களை நினைவுகூருகிறார்; ஆனால், மொழிபெயர்த்தல், அச்சிடுதல், பிரசுரங்களை அனுப்புதல் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்வதற்கு அடிஸ் அபாபாவில் புதிதாக நிறுவப்பட்ட அலுவலகத்தில் சேவை செய்வதில் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரோடு சேவை செய்யும் மற்றொரு இளைஞராகிய செக்காரியஸ் எஷட்டு, எட்டு வருடங்களுக்கு முன்னர், தன்னுடைய தந்தை மூன்று வருட சிறையிருப்பில் கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக்கொண்டதற்காகக் கொல்லப்பட்டபோதும் தன்னுடைய உத்தமத்தில் தளரவில்லை. ஐந்து பிள்ளைகளில் ஒருவரான செக்காரியஸ், தன்னுடைய தந்தை சிறைக்குச் சென்றபோது பத்து வயதுள்ளவராக இருந்தார். இப்போது தங்கள் பிற்பட்ட பருவ வயதுகளிலும் இன்னும் பள்ளியிலும் இருக்கும் மஸ்வட் கெர்மாவும் அவருடைய அக்காவான யோயாலனும், தங்கள் தந்தையை படங்களின் மூலமாக மட்டுமே நினைவுகூருகின்றனர்; ஏனென்றால் அவர் தன்னுடைய நடுநிலைமைக்காகத் திடீரென்று கொல்லப்பட்டபோது அவர்கள் மிகவும் சிறியவர்களாக இருந்தார்கள். அவருடைய உண்மைத்தன்மை அவர்களை ஊக்குவித்தது; அவர்களுடைய தந்தை தன்னுடைய மரணத்தின் போது செய்துகொண்டிருந்ததுபோலவே, அவர்கள் இருவரும் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்கிறார்கள்.
உத்தமத்தைக் காத்த மற்றொருவர் டாமிராட் யாடெட்; இவர் ரிஃப்ட் வாலியின் ஓர் அழகிய பகுதியில் இப்போது விசேஷித்த பயனியராகச் சேவை செய்கிறார். அவருடைய கிறிஸ்தவ நடுநிலைவகிப்பின் காரணமாக, அவர் மூன்று வருடங்களை ஏழு வித்தியாசமான சிறைகளில் கழித்தார்; சிலவேளைகளில் சங்கிலியிடப்படுவதற்கும் கடுமையான அடிகளுக்கும் ஆளாக்கப்பட்டார். இருந்தாலும், சிறையில் அவர் ஒரு டஜனுக்கும் அதிகமான ஆட்கள் கடவுளுடைய ராஜ்யத்திற்காகத் தங்கள் நிலைநிற்கையை எடுப்பதற்கு உதவிசெய்தார்.
இப்போது வட்டாரக் கண்காணியாக சேவை செய்யும் டெஸ்ஃப்யு டமெல்ஸோ, விசேஷித்த பயனியராகச் சேவை செய்த வருடங்களில் 17 முறைகள் சிறையிலடைக்கப்பட்டார். அவர்மேல் அடிபட்ட தழும்புகள் இருக்கின்றன; ஆனால் தன் முன்னாள் நியமிப்புகளில் சபைகள் இருப்பதைக் காண்பதில் அவர் கிளர்ச்சியடைகிறார். ஆகாக்கி சபையைச் சேர்ந்த பல சகோதர சகோதரிகள் சிறைப்படுத்தலையும் கொடூரத்தையும் அனுபவித்தனர்; இருந்தாலும் அந்தச் சபை நூற்றுக்கும் அதிகமான பிரஸ்தாபிகள் வரையாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவர்கள் எதியோபியாவில் முதல் ராஜ்ய மன்றத்தைக் கட்டியிருக்கிறார்கள். மரணத்தை எதிர்ப்பட்டவர்களும், ஒரு உள்ளூர் சகோதரன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக மரித்ததையும் கண்ட ஐந்து பேராலான ஒரு தொகுதி, தலைநகருக்கு வடக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணைக் கவரும் நகரமாகிய டேஸேவிலிருந்து வந்திருந்தது. அவர்களில் ஒரு மூப்பரான மாஸெரிஷா காஸா, தன்னுடைய ஆறு வருடகால சிறையிருப்பின் மத்தியிலும் தளராது நிலைத்திருந்ததைப்பற்றி விவரித்தார்; அவர் ஏதாவதொரு விதத்தில் விசேஷித்தவராக இருந்ததனால் அல்ல, ஆனால் அவர் வெறுமனே யெகோவாவில் சார்ந்திருக்க கற்றுக்கொண்டதாலேயே நிலைத்திருந்ததாகச் சொன்னார்.—ரோமர் 8:35-39; ஒப்பிடவும்: அப்போஸ்தலர் 8:1.
சமீபத்தில்கூட, மற்றவர்களும் சோதனையின்கீழ் தங்கள் உண்மைத்தன்மையை நிரூபித்திருக்கிறார்கள். நடுநிலைமை வகிப்பின் காரணமாக, சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு, பயண பத்திரங்கள், திருமண சான்றிதழ்கள், மருத்துவமனை சிகிச்சை, வேலைகள் ஆகியவை மறுக்கப்பட்டிருந்த அருகாமையிலுள்ள ஒரு நாட்டிலிருந்தும் ஒரு பெரிய தொகுதி மாநாட்டிற்கு வந்திருந்தது. செங்கடலிலுள்ள ஒரு எரிட்ரிய துறைமுகமாகிய மஸ்ஸவாவிற்கு அருகில் போர் மூண்டபோது, பிள்ளைகள் உட்பட மொத்தம் 39 பேரை உடைய முழு சபையும், முந்தின அரசாங்கத்தால் தங்கள் வீடுகள் தாக்கப்படும் குண்டு வெடிப்புகளிலிருந்து தப்புவதற்காக, சுமார் நான்கு மாதங்கள், பாலைவனத்தில் ஒரு தாழ்வான பாலத்திற்குக்கீழ் வாழ்ந்தனர். வெப்பத்திலும் இழப்பிலும் இருந்த இந்தச் சூழமைவில், அவர்களுடைய தினவசன கலந்தாலோசிப்புகளும் மற்ற கூட்டங்களும் அதிக பலத்தைக் கொடுத்து, யெகோவாவிடமாகவும் ஒருவருக்கொருவரும் ஒரு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தின. நீலநைல் நதியின் ஊற்றுமூலத்திற்கு அருகே விசேஷித்த பயனியர்களாக சேவைசெய்கிற இரு சகோதரிகள், கும்பல்களின் அச்சுறுத்தல்களையும், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சால் தூண்டிவிடப்பட்ட தொல்லைகளையும் சகித்தனர்; ஆனால் அந்த இருவரும் தளராமல் நிலைத்திருந்து, இந்த மாநாட்டில் பைபிள் மாணவர்கள் பலர் தங்கள் ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டுதல் மூலமாக அடையாளப்படுத்திக்காட்டியதைக் கண்டார்கள்.
சோமாலியாவிற்கு அருகிலுள்ள ஒகேடனின் வறண்ட உட்பகுதியில் வேலை காரணமாக தனிமையின் சோதனையை அனுபவித்த ஒரு சகோதரர் அதைப்பற்றி சொன்னார். பிரசங்கிப்பதன் மூலமாகவும் பின்னர் அக்கறையுள்ளவர்களுடன் கூட்டங்களை நடத்துவதன் மூலமாகவும் அவர் தன்னை ஆவிக்குரியவிதத்தில் உயிருள்ளவராக வைத்துக்கொண்டார்; அவர்களில் மருத்துவ டாக்டர்களும் உட்பட்டிருந்தனர்; அவர்கள் தெய்வீக போதனையிலிருந்து பயனடைந்து இப்போது மற்றவர்களுக்குப் போதிக்கிறார்கள். உத்தமத்தைக் காத்துக் கொண்டதில் மற்றொரு சிறந்த உதாரணம், அடிஸ் அபாபாவிலுள்ள ஒரு விசேஷித்த பயனியர் ஆவார்; இவர் 1992-ல், ஆர்த்தடாக்ஸ் பாதிரிமாரால் தூண்டப்பட்ட ஒரு கும்பலால் கொடூரமாக அடிக்கப்பட்டு, மரித்துவிட்டதாக எண்ணி விட்டுச்செல்லப்பட்டார். மகிழ்ச்சிக்குரியவிதத்தில், அவர் குணமாகி, அதே பிராந்தியத்தில் தொடர்ந்து சேவை செய்து வருகிறார். அவருடைய முகத்திலுள்ள பிரகாசமான புன்சிரிப்பு எவ்வித கசப்பையும் வெளிப்படுத்துவதில்லை. சோதிக்கப்பட்ட மற்ற எல்லாருக்கும் புதியவர்களுக்கும் இருந்ததுபோலவே, அவருக்கு இந்த “தெய்வீக போதனை” மாநாடு, சந்தோஷத்திற்குரிய ஒரு பண்டிகையாக இருந்தது.
மாநாட்டு அமைப்பு சுமூகமாகச் செயல்பட்டது; அதில் உட்பட்டிருந்த வாலண்டியர்கள் அநேக வருட அனுபவத்தைக் கொண்டிருந்ததாக வந்திருந்தவர்களை நினைக்க வைத்தது. உண்மையில், கடந்த இரு வருடங்களில், அவர்கள் விரைவான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். மூன்று நாள் மாநாடு சீக்கிரமாக முடிவடைந்தது. சனிக்கிழமை அன்று வந்திருந்தவர்களின் உச்ச எண்ணிக்கை 9,556. தேசிய தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் ஆகியவை சாதகமான செய்திகளை வெளியிட்டன. யெகோவா தம்முடைய மக்களை ஆவிக்குரியவிதத்தில் செழுமையாக்குகிறார் என்பதை எல்லாராலும் பார்க்க முடிந்தது. “தெய்வீக போதனை”யிலிருந்து பயனடையத் தொடங்கியிருந்த ஆயிரக்கணக்கான அக்கறையுள்ள ஆட்கள் வந்திருந்தவர்களில் உட்பட்டிருந்தனர். சுமார் ஐந்து கோடி மக்களை உடைய இந்த நாட்டில் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு பரந்த நிலம் திறந்திருக்கிறது; மேலும் உண்மைமனதுள்ள ஆட்களும் தெய்வீக போதனையிலிருந்து பயனடையும்படி, இந்தக் காரிய ஒழுங்குமுறையில் எஞ்சியிருக்கும் காலத்தை பயன்படுத்துவதற்கான தங்கள் தீர்மானத்தில் உறுதியாய் இருப்பதற்கு இந்த மாநாடு எல்லாரையும் பலப்படுத்தியது.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட 1992 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (1992 Yearbook of Jehovah’s Witnesses)-ஐப் பார்க்கவும்.
b உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல், உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல், மற்றும் யெகோவாவின் சாட்சிகள்—ஒற்றுமையுடன் உலகம் முழுவதும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள்.
[பக்கம் 23-ன் படங்கள்]
அடிஸ் அபாபா, ஜனவரி 13-15, 1994
[பக்கம் 24-ன் படங்கள்]
அடிஸ் அபாபாவிலுள்ள பயனியர்களின் ஒரு தொகுதி (வலது); சிறையிலடைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் உத்தமத்தைக் காத்தவர்கள் (கீழே); 113 வயது சாட்சியும் அவரது மனைவியும்