“தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகள்
யெகோவாவினால் போதிக்கப்பட விரும்புகிற அனைவரும் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகளுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த நான்கு-நாள் நிகழ்ச்சிநிரல், அதிகரிக்கும் தனிப்பட்ட பிரச்னைகளும் உலகக் குழப்பமும் உள்ள இந்தக் காலங்களில் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் வேதப்பூர்வமான போதனையின் முக்கிய அம்சங்களை அழுத்திக்காண்பிக்கும். ‘ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற எதற்கும்’ எதிராக ஸ்திரமாக நிலைநிற்பதற்கு இந்த நிகழ்ச்சிநிரல் அவர்களுக்கு உதவிசெய்யும். (1 தீமோத்தேயு 1:11) இது ஆஜராகயிருக்கும் அனைவரையும், கடவுளுடைய வார்த்தையின் அதிகத் திறம்பட்ட போதகர்களாவதற்கு உதவிசெய்யும்.
பின்பற்றுவதற்கு என்னே அருமையான முன்மாதிரிகள் நமக்கு இருக்கின்றன! மிகப்பெரிய போதகர் வேறு யாராக இருக்கமுடியும், யெகோவா தேவன் தானே! எனவே, எலிகூ யோபுவிடம், யெகோவா “காட்டு மிருகங்களுக்குக் கற்பிப்பதைவிட எங்களுக்கு மிகுதியாய்க் கற்பிப்பவரும், வானத்துப் பறவைகளைவிட எங்களை ஞானிகளாக்குபவ[ர்],” என்று சரியாகச் சொன்னார். யெகோவாவைப்பற்றி அவர் இப்படியும் கேட்டார்: “அவரைப்போல் போதிக்கிறவர் யார்?” (யோபு ஆகமம் 35:11, கத்.பை.; 36:22) கடவுள், ஏசாயா 30:20-ல் [NW] “மகத்தான போதகர்” என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
யெகோவாவுக்கு மாத்திரமே அடுத்த, இரண்டாவது ஸ்தானத்தில் ஒரு போதகராக இருப்பவர் அவருடைய மகன், இயேசு கிறிஸ்து. அவர் “போதகர்” ஆகவும், “கற்பிப்பவர்” ஆகவும் நன்கு அறியப்பட்டார், அவ்வாறு சுமார் 50 தடவைகள் சுவிசேஷங்களில் குறிப்பிடப்படுகிறார். அவருடைய அநேக கிளர்ச்சியூட்டிய சுகப்படுத்துதல்கள், மற்ற அற்புதங்கள் ஆகியவற்றிற்கு மத்தியிலும், இயேசு ஒரு குணப்படுத்துபவராக அறியப்படவில்லை ஆனால் போதகராக, கற்பிப்பவராக அறியப்பட்டார்.—மத்தேயு 8:19; லூக்கா 5:5, NW; யோவான் 13:13, NW.
அதிகப் பொருத்தமாக, இயேசு தம்முடைய சீஷர்களையும், அப்போஸ்தலர்களையும் அவரைப்போலவே போதகர்களாக இருக்கும்படிக் கற்பித்தார். இதை நாம் மத்தேயு 10:5-லிருந்து 11:1 வரையும், லூக்கா 10:1-11-லும் காணமுடியும். பரலோகத்திற்கு மேலெழுந்துபோவதற்குச் சற்றுமுன்பு, இயேசு அவருடைய சீஷர்களுக்கு மத்தேயு 28:19, 20-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள மிகப்பிரபலமான போதிக்கும் வேலையைக் கொடுத்தார். அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகமும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இதன் பின்வரும் ஆவியினால் ஏவப்பட்ட கடிதங்களும், இயேசுவின் ஆரம்பகால பின்பற்றுபவர்கள், எவ்வளவு உற்சாகத்தோடு, திறமையோடு, உண்மையோடு இந்தப் போதிக்கும் வேலையைச் செய்தனர் என்பதை எடுத்துக்காண்பிக்கிறது.
எப்பொழுதும்விட இன்று, இந்தப் போதிக்கும் வேலை அவசரமாகச் செய்யப்படவேண்டும். நாம் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் இறுதி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதனால், உயிர்கள் உட்பட்டிருக்கின்றன. மக்கள், மகா பாபிலோனின் பாவத்தில் பங்குகொள்ளாமலிருக்கவும், அவளுடைய வாதைகளில் அகப்படாமலிருக்கவும் அவர்கள் போதிக்கப்படவேண்டும். மேலுமாக, பாபிலோனை விட்டு வெளியேறுவதற்கும், யெகோவாவிற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் தங்களுடைய நிலைநிற்கையை எடுக்கவும் அவர்கள் உதவிசெய்யப்படவேண்டும்.—வெளிப்படுத்துதல் 18:4.
யெகோவாவின் சாட்சிகள் அனைவருக்கும், அவர்கள் போதிக்கவேண்டிய வேலையைச் செய்துமுடிப்பதற்காக எடுக்கப்படும் அவர்களுடைய முயற்சிகளில் உதவிசெய்வதற்காக, யெகோவா தம்முடைய அமைப்பின்மூலம் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகளை ஏற்பாடுசெய்திருக்கிறார். இந்த நான்கு-நாள் மாநாடுகள், இந்தியாவில் 1993-ன் செப்டம்பரில் தொடங்கும். யெகோவாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியரும் இந்த மாநாடுகளில் ஒன்றிலாவது, வியாழக்கிழமையின் ஆரம்ப பாடல் மற்றும் ஜெபத்திலிருந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முடிவு ஜெபம் வரை, ஆஜராயிருந்து, கூர்ந்துகவனம்செலுத்த நிச்சயப்படுத்திக்கொள்வார்களாக.