கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவேண்டுமா?
ஜூன், வழக்கத்திற்கு மாறாக அதிக மழையாக இருந்தது. இதனால் 1991 விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்ஸ்-ன்போது ஒரு பூர்வகால உள்ளூர் பாரம்பரியப் பழக்கம் மீறப்பட்டது. வரலாற்றில் முதன்முறையாக, இழக்கப்பட்ட நேரத்தை ஈடுசெய்ய, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று போட்டிகள் நடந்தன. இதைப்போன்று, அவ்வப்போது சட்டங்கள் இவ்வாறு அசட்டை செய்யப்படுவது நீங்கலாக இங்கிலாந்திலும் மற்ற நாடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை, ஒரு புனித ஓய்வுநாளாகத் தொடர்ந்திருக்கிறது.
சில மக்கள், வேறொரு நாளை ஓய்வுநாளாகக் கடைப்பிடிக்கின்றனர். உலகமுழுவதுமுள்ள யூதர்கள், வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து, சனிக்கிழமை சூரிய மறைவுவரை ஓய்வுநாளாக, கண்டிப்பாகக் கைக்கொள்கின்றனர். ஓய்வுநாளின்போது, இஸ்ரேலின் தேசீய விமானம் பறப்பதில்லை, சில நகரங்களில் பொதுப் போக்குவரத்து வசதிகள் பணியில் இருப்பதில்லை. எருசலேமில் பாரம்பரியப் பிரியர்கள், எந்தப் போக்கும், வரத்தும் தவறென அவர்கள் கருதுவதால் சில தெருக்களைத் தடுப்புகளைக்கொண்டு மூடிவிடுகின்றனர்.
வாரத்தின் ஒரு நாளை ஓய்வாக அல்லது ஓய்வுநாளைப் பல மதங்கள் இன்னும் கடைப்பிடிப்பது, பல கேள்விகளை எழுப்புகிறது. ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது யூதர்களுக்கு மட்டுமா? ஏன் கிறிஸ்தவ மண்டலத்தின் பெரும்பாலான மதங்கள் வித்தியாசமான ஓய்வுநாளை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்? வாரத்தின் ஓர் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது, இன்றும் பைபிள்பூர்வத் தேவையா?
ஓய்வுநாள் எப்போதும் இருந்ததா?
யாத்திராகமம் புத்தகத்தில் ஓய்வுநாளைப்பற்றி முதலாவதாகக் குறிப்பிட்டிருப்பதை நாம் காண்கிறோம். இஸ்ரவேலர் வனாந்தரத்திலிருந்தபோது, அவர்கள் யெகோவாவிடமிருந்து, அதிசயமான உணவாகிய மன்னாவைப் பெற்றார்கள். வாரத்தின் ஆறாம் நாளிலே, அவர்கள் இரண்டுமடங்கான உணவைச் சேர்த்துவைக்க வேண்டியதிருந்தது, ஏனென்றால், ஏழாம் நாளோ, “யெகோவாவிற்கு ஓய்வுநாளாக” இருந்தது, அந்தச் சமயத்தில் எந்த வேலையும் செய்யப்படக்கூடாது.—யாத்திராகமம் 16:4, 5, 22-25.
மேலுமாக, இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாயிருந்தனர் என்பதை ஞாபகப்படுத்துவதற்காக, ஓய்வுநாள் கொடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஏற்கெனவே இந்தச் சட்டத்தைப் பின்பற்றியிருந்தால், இந்த ஞாபகப்படுத்துதல் தேவையற்றதாக இருந்திருக்கும். எனவே, ஓய்வுநாள் சம்பந்தமான சட்டதிட்டங்கள் இஸ்ரவேலருக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டன.—உபாகமம் 5:2, 3, 12-15.
கெடுபிடியான, பாரமான பழக்கவழக்கங்கள்
ஓய்வுநாளைப்பற்றி மோசேயின் நியாயப்பிரமாணம் அவ்வளவு அதிகமான தகவல்களைக் கொடுக்காததால், ரபீக்கள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற விதிகளை உருவாக்கியிருக்கின்றனர், முக்கியமாக ஓய்வுநாளன்று எல்லாவிதமான வேலைகளையும் தடைசெய்தனர். மிஷ்னாவின் பிரகாரம், தடைசெய்யப்பட்ட வேலை, தையல், எழுதுதல், பண்ணை வேலை போன்ற 39 வகைகளாகத் தொகுக்கப்பட்டன. இந்தச் சட்டதிட்டங்களில் அநேகம் பைபிள்-அடிப்படையில் இல்லை. மிஷ்னாவை மேற்கோள்காட்டுவதாக, என்ஸைக்ளோபீடியா ஜூடாய்க்கா இவ்வாறு ஒத்துக்கொள்கிறது, அவை “ஒரு தலைமுடியில் தொங்கும் மலைகள், ஏனென்றால் வசனங்களில், குறைவானளவே இந்தத் தலைப்பில் விளக்கம் இருந்தாலும், விதிகள் அதிகமாக இருக்கின்றன.”
ஒரு மனிதன் “ஏழாம் நாளிலே, தன் இடத்தைவிட்டுப் போகக்கூடாது,” என்ற கட்டளையைப் பொருத்திப் பின்பற்றுவதற்காக, ஓர் உச்ச அளவு தூரம் தீர்மானிக்கப்பட்டது, இது “ஓய்வு எல்லை (சாபத் லிமிட்)” என்றழைக்கப்பட்டது. சில ஆதாரங்கள் காண்பிக்கிறப்பிரகாரம் இது இரண்டாயிரம் முழம் அல்லது 900 மீட்டருக்குச் சமம். (யாத்திராகமம் 16:29, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) எனினும், இந்தக் கட்டுப்பாடு ரகசியமாக மீறப்படலாம்: ஓய்வுநாளிற்கு முன்பான மாலைப்பொழுதில், ஓய்வுணவுகள் வீட்டிலிருந்து இரண்டாயிரம் முழம் தூரத்தில் வைக்கப்படலாம். இந்த இடம் பின்பு, குடும்பத்தின் ஒரு விரிவெல்லையாகக் கருதப்படலாம், இந்த எல்லையிலிருந்து மற்றொரு இரண்டாயிரம் முழம் கணக்கிடப்படலாம்.
இப்படிப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகள், இயேசுவின் நாளில் அமலில் இருந்தன. எனவே, பயிர் வழியே அவருடைய சீஷர்கள் போகும்போது, தின்பதற்காகக் கதிர்களைக் கொய்தபோது மதத்தலைவர்கள் அவர்களை இகழ்ச்சியாகப் பேசினர். ஓய்வுநாளை மீறுவதாக அவர்கள் குற்றம்சாட்டப்பட்டனர்—கதிர்களைக் கொய்வது, அறுவடைசெய்வதாகக் கருதப்பட்டது, மேலும் அதைக் கசக்குவது, அரைப்பதற்கு அல்லது பொடியாக்குவதற்குச் சமமாகக் கருதப்பட்டது. பல சந்தர்ப்பங்களில், இயேசு அவர்களின் மட்டுக்குமீறியத் தீவிரப்போக்கைக் கண்டனம் செய்தார், ஏனென்றால் அவை யெகோவாவின் சட்டத்தின் ஆவியைத் தவறாக பிரதிபலித்தன.—மத்தேயு 12:1-8; லூக்கா 13:10-17; 14:1-6; யோவான் 5:1-16; 9:1-16.
சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாளிற்கு
“ஞாயிற்றுக்கிழமைகள் கடவுளைச் சேவிப்பதில் ஈடுபடுவதற்காக ஒதுக்கப்படும்.” இது கத்தோலிக்க சர்ச் கொடுத்தப்பிரகாரம், நான்காவது கட்டளையாக இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட கேட்டஷீஸ்ம் ப்யூர் அடுல்ட் இவ்வாறு விளக்குகிறது: “ஓய்வுநாளுக்கு அடுத்த நாள் கிறிஸ்தவ ஞாயிறு கொண்டாடப்படுகிறது: இது எட்டாம் நாள், அதாவது சொல்லப்போனால், புதிய படைப்பின் முதலாம் நாள். ஓய்வுநாளின் அடிப்படைக் கூறுகளை எடுத்துக்கொள்கிறது, ஆனால் கிறிஸ்துவின் இராப்போஜனத்தை மையமாகக் கொண்டிருக்கிறது.” இந்தச் சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு ஓய்வுநாள் மாற்றம் எப்படி வந்தது?
இயேசு உயிர்த்தெழுந்த நாளாக ஞாயிற்றுக்கிழமையிருந்தாலும், பூர்வீக கிறிஸ்தவனுக்கு இது வேறெந்த நாளையும்போல ஒரு வேலை நாளாக இருந்தது. ஆனால், லெயோடிசியன் சர்ச் ஆலோசனைக் குழு செய்த தீர்மானத்தின் பிரகாரம் (பொ.ச. நான்காம் நூற்றாண்டின் மத்திபத்திலிருந்து இறுதிவரை), காலப்போக்கில், சனிக்கிழமை வருகின்ற யூத ஓய்வுநாள், ஞாயிற்றுக்கிழமை வருகின்ற “கிறிஸ்தவ” ஓய்வுநாளினால் ஈடுசெய்யப்பட்டது என்பதை வெளிக்காட்டுகிறது. இந்தச் சட்டம், “யூதமயமாக்கப்படுவதையும், [யூத] ஓய்வுநாளில் வேலைசெய்யாதிருப்பதிலிருந்தும் கிறிஸ்தவர்களைத் தடுக்கிறது. மேலுமாகக் கர்த்தரின் நாள் [அவர் உயிர்த்தெழுந்த வாரத்தின் நாள்] ஒரு கிறிஸ்தவ வழியில் மதிக்கப்படவேண்டும்.” அப்போதிருந்து, கிறிஸ்தவமண்டலத்தைப் பின்பற்றுபவர்கள் சனிக்கிழமைகளில் வேலைசெய்யவும், ஞாயிற்றுக்கிழமைகளில் வேலையைத் தவிர்த்துமிருக்க வேண்டும். பிற்பாடு அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு ஆஜராகும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அரசாங்க அதிகாரங்களின் உதவியினால், விரைவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைசெய்வது கிறிஸ்தவ மண்டலம் முழுவதும் தடைசெய்யப்பட்டது. ஆறாம் நூற்றாண்டு முதல், மீறுகிறவர்கள் அபராதம் விதிக்கப்பட்டனர் அல்லது சவுக்கடிக் கொடுக்கப்பட்டனர், அவர்களுடைய காளைகளும் பறிமுதல்செய்யப்பட்டன. சில சமயங்களில், மனந்திரும்பாத பாவிகள், அடிமைகளாக்கப்பட்டனர்.
ஒரு கருத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யத்தக்க வேலைகளைப்பற்றிய சட்டங்கள், யூத ஓய்வுநாளை ஆண்ட பாரம்பரியங்களைப்போலவே சிக்கலானதாக இருந்தன. சர்ச்சின் வேதாந்த வளர்ச்சியின் சம்பந்தமாக டீக்ஸியோனர் டெ ட்டேயோலுஷீ கேத்தோலீக், நீண்ட விளக்கங்களைக் கொடுக்கிறது. தவிர்க்கப்பட்ட காரியங்களில், அடிமைத்தன வேலை, பண்ணை வேலை, சட்ட வழக்குகள், சந்தைகள், வேட்டையாடுதல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட தடைகளையெல்லாம் நியாயப்படுத்த யூத ஓய்வுநாள் குறிப்பிடப்பட்டது முரண்பாடாகும். பேரரசர் ஷர்லமேன்-னின் ஞாயிற்றுக்கிழமையைப்பற்றிய சட்டங்களைக் குறித்து நியூ கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா சொல்கிறது: “வெளிப்படையாகவே புனித ஜெரோமினால் மறுதலிக்கப்பட்டு, ஆர்லேயன் ஆலோசனைக் குழுவினால், யூதருக்குரியது கிறிஸ்தவமற்றதென்று 538-ல் அறிக்கையிடப்பட்ட, ஓய்வுநாள் சம்பந்தமான எண்ணம், 789-ஆம் ஆண்டின் ஷர்லமேன்னுடைய சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இது ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் எந்த வேலையையும், [பத்துக் கற்பனைகளின்] மீறுதலாக கருதி, தடைவிதித்தது.” எனவே, சமூக அதிகாரங்கள், ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாகக் கட்டாயப்படுத்துவதன்மூலம் சர்ச்சை மகிழ்விக்கும்படி இது செய்தாலும், ஓய்வுநாள் சம்பந்தமான மோசேயின் நியாயப்பிரமாணத்தின்பேரில் இது நிராகரித்திருந்த சட்டப்பூர்வ அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடுகளைச் சரியானவையென நிரூபிக்க இந்தச் சமூக அதிகாரங்களை அனுமதித்தது.
வேதப்பூர்வமற்ற நிலைநிற்கை
நூற்றாண்டுகளுக்கு முன்பாக, அநேக சர்ச் பாதிரிகள், முக்கியமாக அகஸ்ட்டின், ஓய்வுநாள் யூதர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடு என சரியாக அறிவித்திருந்தனர். இவ்வாறு சொல்வதன்மூலம், இந்தச் சர்ச் பாதிரிகள், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் சொன்னதையே, அதாவது, நியாயப்பிரமாணத்தின் ஒரு முக்கிய பாகமாக ஓய்வுநாள் இருக்கிறதென்றும், அது இயேசுவின் பலியினால் நீக்கப்பட்டதென்றும் சொல்வதை வெறுமனே எடுத்துச்சொன்னார்கள்.—ரோமர் 6:14; 7:6; 10:4; கலாத்தியர் 3:10-14, 24, 25.
அதேக் காலத்தைச்சேர்ந்த வக்காபுலர் பிபிலிக்-ல், புராட்டஸ்டன்ட் இறையியல் வல்லுநர் ஆஸ்கார் குல்மேன், “இயேசு வந்து, இறந்து, பின்பு உயிர்த்தெழுந்துவிட்டதால், ப[ழைய] ஏ[ற்பாடு] பண்டிகைகள் இப்போது நிறைவேற்றமாகிவிட்டன, அவற்றை மறுபடியும் கடைப்பிடிப்பதென்றால், ‘இயேசு ஒருபோதும் வராததுபோல, பழைய உடன்படிக்கைக்கு மறுபடியும் போவதுபோலிருக்கிறது,’” என்று ஒத்துக்கொண்டதாக, மேற்கோள் காட்டப்படுகிறார். இந்த முக்கியமான குறிப்பைக் கவனித்தப்பிறகு, கட்டாய ஓய்வுநாள் ஆசரிப்பை நியாயப்படுத்த முடியுமா?
இன்று, கத்தோலிக்க ஆசிரியர்கள், அப்போஸ்தலர் 20:7-லிருந்து பொதுவாக ஆதரவைத் தேடுகின்றனர், அது பவுல் தன் தோழர்களோடு சாப்பிடுவதற்கு அவர்களைச் சந்திக்கும்போது “வாரத்தின் முதல்நாளிலே” (ஞாயிறு), என்று குறிப்பிடுகிறது. எனினும், இது ஒரு விளக்கத்தின் பாகமாகும். இந்த வசனத்திலோ வேறெந்தப் பைபிள் வசனத்திலோ, இந்தப் பதிவு கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுவதற்கு ஒரு முன்மாதிரியாக அர்த்தப்படுத்தப்படவில்லை, நிச்சயமாகவே கட்டளையாகவும் இல்லை. ஆம், ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் கடைப்பிடித்தல், வேதாகமத்தின் அடிப்படையைப் பெறவில்லை.
கிறிஸ்தவர்களுக்கு என்ன ஓய்வு இருக்கிறது?
கிறிஸ்தவர்கள் வாரத்தின் ஒரு நாளை ஓய்வாகக் கடைப்பிடிக்க கடமைப்பட்டிராவிட்டாலும், அவர்கள் மற்றொரு வகையான ஓய்வை அனுசரிக்கும்படி அழைக்கப்படுகிறார்கள். பவுல் தன் உடன் யூத கிறிஸ்தவர்களுக்கு இதை விளக்கும்போது சொன்னார்: “தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. . . . ஆகையால், . . . நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.” (எபிரெயர் 4:4-11) இந்த யூதர்கள், கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பு, மோசேயின் நியாயப்பிரமாணத்தை எவ்வளவு முழுமையாகப் பின்பற்றமுடியுமோ அவ்வளவிற்கு செய்திருக்கின்றனர். இது முதற்கொண்டு, பவுல் அவர்களைக் கிரியைகளினால் இரட்சிப்பைத் தேட இனிமேலும் உற்சாகப்படுத்தாமல், அவர்களுடைய செத்தக் கிரியைகளிலிருந்து ‘இளைப்பாறும்படி’ உற்சாகப்படுத்துகிறார். இதனால், அவர்கள் இயேசுவின் பலியின்மீது விசுவாசம் வைக்கவேண்டும், இதன்மூலமாக மட்டும்தான் கடவுளுடைய கண்களுக்கு முன்பாக, மனிதகுலம் நீதியானதாக இருக்கமுடியும்.
கடவுளின் நோக்குநிலைக்கு இதேபோன்ற போற்றுதலை நாம் இன்று எப்படிக் காட்டலாம்? யெகோவாவின் சாட்சிகள், நியாயமான மனிதர்களாக, அவர்களுடைய உடன்வாழ்பவர்கள்போல, தங்களுடைய உலகப்பிரகாரமான வேலையிலிருந்து வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு கிடைப்பதைப் போற்றுகின்றனர். இது அநேக நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இது குடும்ப கூட்டுறவிற்கும், இளைப்பாறுவதற்கும் நேரத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது. ஆனால் அதிக முக்கியமாக, மற்ற கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்குச் சமயமாக நிரூபித்திருக்கிறது. (எபேசியர் 5:15, 16) இவை, கூட்டங்கள், வெளி ஊழியத்தில் பங்குகொள்ளுதல், அக்கம்பக்கத்திலுள்ளவர்களைச் சந்தித்து, வந்துகொண்டிருக்கும் காலத்தில் நம்பிக்கையுள்ள மனிதகுலம் உலகளாவிய சமாதானத்தை அனுபவிக்கும் என்ற பைபிளின் செய்தியைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றை உட்படுத்துகின்றன. இதைப்பற்றி நீங்கள் அறிய விரும்பினால், அது சனிக்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ, வாரத்தின் எந்தக் கிழமையாக இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவிசெய்வதில் சந்தோஷப்படுவார்கள்.
[பக்கம் 28-ன் படம்]
இயேசு யூத பாரம்பரியங்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஓய்வுநாள் சட்டத்தைப் பரிபூரணமாகக் கடைப்பிடித்தார்
[பக்கம் 29-ன் படம்]
உலகப்பிரகாரமான வேலையிலிருந்து கிடைக்கும் ஓய்வு நாள்களில் கிறிஸ்தவ நடவடிக்கைகள் இளைப்பாறுதலைத் தருகின்றன