ஆமென்—அதன் பொருளும் பயனும்
ஆமென் (Amen) என்ற வார்த்தை, ஆங்கில மற்றும் கிரேக்க மொழியில் ஏமென் (ʼa·menʹ) என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பு ஆகும். “அப்படியே ஆகட்டும்,” அல்லது “நிச்சயமாகவே” என்பது பொருள். இது எடுக்கப்பட்ட எபிரெய மூல வார்த்தை ஏமேன் (ʼa·manʹ) என்பதன் பொருள், “உண்மையாயிரு; நம்பிக்கையுள்ளவனாயிரு.”
எபிரெய வேதாகமத்தில், ஒருவர் ஓர் ஆணைக்கு அல்லது உடன்படிக்கைக்கு, மற்றும் அதன் விளைவுகளுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும்போது ஓர் உறுதிமொழி கூற்றாகவும் (எண்ணாகமம் 5:22; உபாகமம் 27:15-26; நெகேமியா 5:13), மேலும் சொல்லப்பட்ட ஜெபத்திற்கு (1 நாளாகமம் 16:36), எழுப்பப்பட்ட துதிக்கு (நெகேமியா 8:6), அல்லது வெளிப்படுத்தப்பட்ட நோக்கத்திற்கு (1 இராஜாக்கள் 1:36; எரேமியா 11:5), உறுதிமொழி கூற்றாகவும் அது பயன்படுத்தப்படுகிறது. சங்கீதத்தின் ஒவ்வொரு முதல் நான்கு புத்தகங்கள், அல்லது தொகுப்புகள், இந்தக் கூற்றோடு முடிவடைகின்றன, பாடலின் அல்லது சங்கீதத்தின் முடிவில் இஸ்ரவேல் சபையினர் “ஆமென்” என்று ஒருமித்துச்சொல்வது, ஒருவேளை, இது வழக்கமாகிவிட்டது என்பதைக் குறிக்கலாம்.—சங்கீதம் 41:13; 72:19; 89:52; 106:48.
எபிரெய வார்த்தை ஏமேன் (ʼa·manʹ) யெகோவாவிற்கு, “உண்மையுள்ள தேவன்” ஆகப் பொருந்துகிறது (உபாகமம் 7:9; ஏசாயா 49:7), அவருடைய நினைப்பூட்டுதல்களையும் வாக்குறுதிகளையும் “சத்தியம்” என்றும் “உண்மை” என்றும் விளக்குகிறது. (சங்கீதம் 19:7; 89:28, 37) கிறிஸ்தவக் கிரேக்க வேதாகமத்தில், “ஆமென்” என்ற பட்டப்பெயர், “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி” ஆக கிறிஸ்து இயேசுவுக்குப் பொருத்தப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 3:14) இயேசு, தம்முடைய பிரசங்க மற்றும் போதனையில் ஒருமையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்; ஓர் உண்மை வாக்கியத்துக்கு, ஒரு வாக்குறுதிக்கு, அல்லது ஒரு தீர்க்கதரிசனத்துக்கு முன்னுரையாக அடிக்கடி இதைப் பயன்படுத்தினார், இதன்மூலம் அவர் என்ன சொல்கிறார் என்பதன் முழுமையான உண்மைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் வலியுறுத்திக் காண்பித்தார். (மத்தேயு 5:18; 6:2, 5, 16; 24:34) இந்த இடங்களில், கிரேக்க வார்த்தை ஏமென் (ʼa·menʹ), “மெய்யாகவே” (“நிச்சயமாகவே,” KJ) அல்லது, இரட்டையாகும்போது, யோவான் புத்தகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, “மெய்யாகவே, மெய்யாகவே,” என்று மொழிபெயர்க்கப்படுகின்றன. (யோவான் 1:51) பரிசுத்த புத்தகத்தில், “ஆமென்” என்பதை இவ்வாறு இயேசு பயன்படுத்துவது விசேஷித்ததாக இருக்கிறது, மேலும் இது அவருக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீக அதிகாரத்திற்கு ஒத்ததாக இருந்தது.—மத்தேயு 7:28.
எனினும், பவுல் 2 கொரிந்தியர் 1:19, 20-ல் காண்பிக்கிறப் பிரகாரம், “ஆமென்” என்ற பட்டப்பெயர், இயேசுவுக்கு, ஒரு சத்திய பேச்சாளராக அல்லது மெய் தீர்க்கதரிசியாக, கடவுளுடைய சார்புரிமைப் பேச்சாளராக இருப்பதனால் மட்டுமல்ல, அவரிலேயே கடவுளின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றத்தைக் கண்டன என்பதினால் பொருந்துகிறது. அவருடைய உண்மைத்தன்மையும் ஒரு பலியாக மரிக்கும்வரையாக கீழ்ப்படிதலும், கடவுளின் நோக்கம் சம்பந்தமான எல்லா வாக்குறுதிகளும் அறிவிப்புகளும் நிறைவேறுவதைச் சாத்தியமாக்கி, அவற்றை உறுதிசெய்கிறது. கடவுள் ஆணையிட்டுக்கொடுத்த, கடவுளுடைய நோக்கம் சார்ந்த வெளிப்பாடுகளுக்கு, அவர் ஓர் உயிர்வாழும் சத்தியமாக இருந்தார்.—ஒப்பிடுக: யோவான் 1:14, 17; 14:6; 18:37.
கடிதங்களில், எழுத்தாளர் கடவுளுக்கு ஏதாவது ஒரு வகையில் துதியை ஏறெடுக்கும்போது (ரோமர் 1:25; 16:27; எபேசியர் 3:21; 1 பேதுரு 4:11) அல்லது கடிதத்தைப் பெறுபவர்கள்மீது ஏதோ ஒரு வகையில் கடவுளுடைய தயவு வெளிப்படவேண்டுமென்ற விருப்பத்தை வெளிக்காட்டும்போது, முக்கியமாகப் பவுலினுடையவற்றில், “ஆமென்” என்ற கூற்று, பல தடவைகள் பயன்படுத்தப்படுகிறது. (ரோமர் 15:33; எபிரெயர் 13:20, 21) எழுத்தாளர் சொல்லப்பட்டதற்கு மனப்பூர்வமாகச் சம்மதத்தைத் தெரிவிக்கும்போதும் இது பயன்படுத்தப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 1:7; 22:20.
ஜெபத்தின் முடிவில் “ஆமென்” என்று பயன்படுத்துவது சரியானது என்பதை, 1 நாளாகமம் 16:36-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள ஜெபம், சங்கீதத்தில் காணப்படும் ஜெபங்கள் (41:13; 72:19; 89:52; 106:48), மேலுமாக ஆகம கடிதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஆகிய அனைத்தும் குறிப்பிடுகின்றன. பதிவுசெய்யப்பட்டுள்ள எல்லா ஜெபங்களும், உதாரணமாக சாலொமோனுக்காகத் தாவீதின் இறுதி ஜெபம் (1 நாளாகமம் 29:19) அல்லது ஆலயம் பிரதிஷ்டைசெய்யப்பட்டபோது சாலொமோனின் ஒப்படைத்தல் ஜெபம் போன்றவை (1 இராஜாக்கள் 8:53-61), அவ்வாறு முடிவதில்லை என்பது மெய்தான். இருந்தாலும், இப்படிப்பட்ட வார்த்தை சொல்லவும்பட்டிருக்கலாம். (1 நாளாகமம் 29:20-ஐப் பாருங்கள்.) இதைப்போலவே, இயேசுவின் ஜெபங்களிலும் (மத்தேயு 26:39, 42; யோவான் 17:1-26) அல்லது அப்போஸ்தலர் 4:24-30-ல் உள்ள சீஷர்களின் ஜெபங்களில் இது பயன்படுத்தப்பட்ட பதிவு இல்லை. எனினும், முன்னால் கூறப்பட்ட சான்றுகளின் முக்கியத்துவம், ஜெபத்தின் முடிவில் “ஆமென்” என்பதை பயன்படுத்துவது சரியே என அழுத்தம்திருத்தமாகக் குறிக்கிறது, மேலும் 1 கொரிந்தியர் 14:16-ல் உள்ள பவுலின் விளக்கம் விசேஷித்தவகையில் கூட்டமாகக் கூடிவந்திருக்கும் கிறிஸ்தவர்கள் ஜெபத்திற்கு ஆமென் என்று சொல்வதில் பங்குகொள்வது வழக்கமாக இருந்தது என்பதைக் காண்பிக்கிறது. கூடுதலாக, வெளிப்படுத்துதல் 5:13, 14; 7:10-12; மற்றும் 19:1-4-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள பரலோகத்தில் உள்ளவர்களின் மாதிரிகளெல்லாம், ஜெபங்களுக்கும் உறுதிமொழிகளுக்கும் சம்மதமாக இதைப் பயன்படுத்துவதை ஆதரிக்கின்றன, எனவே, இந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதன்மூலம், நம்பிக்கையையும், பலமான அங்கீகரிப்பையும், அவர்கள் இருதயங்களிலுள்ள உள்ளார்ந்த நம்பிக்கையையும் வெளிக்காட்டுகிறார்கள்.