ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
பைபிள் சத்தியம் ஆவிக்கொள்கையிலிருந்து விடுவிக்கிறது
ஆவிக்கொள்கை சம்பந்தமாக யெகோவாவின் நோக்குநிலை பின்வரும் இந்த வார்த்தைகளில் இஸ்ரவேலருக்கு தெளிவாக கூறப்பட்டது: “குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.” (லேவியராகமம் 19:26) ஆனால் மாந்தரீகத்திலும் ஆவிக்கொள்கை சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபட்டுள்ள ஒருவர் பேய்களின் செல்வாக்கிலிருந்து எவ்வாறு விடுவிக்கப்படக்கூடும்? “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:32) பிரான்ஸ் தேசத்திலுள்ள ஒரு சாட்சியின் பின்வரும் அனுபவம் காட்டுகிறபடி, இது உண்மையாக நிரூபிக்கப்பட்டது.
“நான் என்னுடைய புதிய வீட்டிற்கு மாறிச்சென்றபோது, சிநேகபாண்மையுள்ள அடுத்த வீட்டு பெண் ஒருத்தி என்னுடைய வருங்காலத்தை முன்னுரைக்க முன்வந்தாள். நான் அவளுடன் ஒரு சம்பந்தமும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று உடனடியாக தீர்மானித்தேன், இது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை, ஏனெனில் அவள் ஆட்களுடன் மிகவும் நன்றாக பழகும் சுபாவமுடையவளாய் இருந்தாள்.
“நவம்பர் 1980-ல் நான் சுகமில்லாமல் இருந்தேன், அவள் உடனடியாக எனக்கு உதவி செய்வதற்கு முன்வந்தாள். அவளுடைய இருதயத்தின் தயவானத் தன்மையை நான் போற்றினேன். தான் கண்விழிக்கையில் அடிக்கடி கழுத்தை யாரோ நெருக்குவதுபோன்ற ஒரு உணர்ச்சியுடன் எழுந்திருப்பதுண்டு என்று அவள் என்னிடம் தன் உணர்ச்சிகளை வெளிவிட்டு சொன்னபோது நான் மேலுமாக அவளிடமாக இழுக்கப்பட்டேன். நான் நினைத்ததுபோல் அவள் அவ்வளவு சந்தோஷமுள்ளவளாக இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். ஆனால் ஆவிக்கொள்கை சம்பந்தமான இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது? இனிமேலும் பொறுக்கமுடியாமல், அவளிடம் சத்தியத்தைக் குறித்து பேச நான் தீர்மானித்தேன்.
“தனிமையில் இருக்கும் எங்களைப் போன்ற பெண்களின் பொருளாதார பிரச்னைகளைப் பற்றி பேசுவதுடன் நாங்கள் சம்பாஷணையைத் துவங்கினோம். அப்போது அவள் சொன்னாள்: ‘என்னிடம் ஒரு பரிகாரம் உண்டு, குறிசொல்லும் அட்டைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நான் பணத்தை சம்பாதிக்கிறேன்.’ அப்பொழுது நான் என்னுடைய பைபிளை எடுத்து வல்லமைவாய்ந்த தீய சக்திகளோடு தொடர்பு கொள்ளுதல் எவ்வளவு ஆபத்தானது என்பதை எடுத்து காட்டினேன்.
“இது ஆவிக்கொள்கை என்ற பொருளின் பேரில் பற்பல சம்பாஷணைகளுக்கு வழிநடத்தியது. தான் முன்னறிவித்த எல்லாமே உண்மையில் நடந்ததாக அவள் விளக்கினாள். காரியங்களை நியாயமான முறையில் விவாதித்து பார்க்க நான் அவளுக்கு உதவி செய்ய முயற்சி செய்தேன். உபாகமம் 18:10, 11-ல் மோசேயின் வார்த்தைகளை நான் அவளுக்கு காண்பித்தேன்: “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.” அன்று நான் அவளைவிட்டு பிரிந்து செல்லுகையில் அவள் சொன்னாள்: ‘என்னுடைய பிரச்னைகளுக்கு ஒரு பரிகாரத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.’ அந்த வார்த்தைகள் எனக்கு அதிக உற்சாகமூட்டுவதாய் இருந்தன, ஏனெனில், அவள் ஒரே சம்பாஷணைக்குப் பின்பு, ஆவி சம்பந்தப்பட்ட காரியங்களைக் குறித்து கடந்தகால காரியங்களாக பேசிக்கொண்டிருந்தாள்! அவள் காரியத்தைத் தெளிவாக புரிந்துகொண்டாள் என்பது எனக்கு வெளிப்படையாக இருந்தது.
“ஆவிக்குரிய உணவுக்காக தீராத ஆவலுள்ளவளாய், அவள் காலை மூன்று அல்லது நான்கு மணிவரை பைபிளை வாசித்தாள். ஆரம்பத்தில் வாரத்தில் இரண்டு முறை அவளுடன் வேதப்படிப்பு நடத்தினேன். அவள் கூட்டங்களுக்கு ஆஜராகி, விரைவில் முன்னேறினாள். ஆவிக்கொள்கை பற்றிய பொருளின் பேரில், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரசுரங்களை உபயோகித்து நாங்கள் அதிக ஆழமாக காரியங்களை சிந்தித்தோம், பேய்தன காரியங்களின் சம்பந்தமாக தன்னிடமிருந்த எல்லா பொருட்களையும் சுட்டெரிப்பதற்கு அவள்தானே சொந்த தீர்மானத்தை எடுத்தாள்.
“இந்தப் பெண் விடாமுயற்சியுடன் காரியங்களைத் தொடர்ந்து, சீக்கிரத்தில் மற்றவர்களுக்கு ‘நற்செய்தி’யை அறிவிப்பதில் பங்குகொள்ள துவங்கினாள். முன்பு அவள் குறிசொன்ன ஆட்களிடமிருந்து அவ்வப்போது அவள் தொலைபேசி சந்திப்புகள் பெற்றாள். அவள் ஆவிக்கொள்கை சம்பந்தமான பழக்கங்களை விட்டுவிட்டதாக அவர்களுக்கு விளக்கினபிறகு, அதைவிட அதிக அக்கறைத்தூண்டும் விஷயத்தைப்பற்றி கேட்க அவர்களை அழைத்தாள். அவள் முழுக்காட்டுதல் பெற்று இப்போது நம்முடைய சகோதரியாக இருக்கிறாள்.” (w87 9⁄1)