கல்கத்தாவில் ஒரு நாள் “எல்லா வகையான மக்களையும்” நற்செய்தியால் எட்டுதல்
இந்தியாவில் கல்கத்தா என்னும் மாநகர் “எல்லா வகையான மக்களும்” ஏராளமாகக் காணப்படும் ஓர் இடம். இங்கு வாழும் ஒரு கோடி மக்கள் மத்தியில் யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை சுறுசுறுப்பாக பிரசங்கித்து வருகிறார்கள். வித்தியாசப்பட்ட இனம், சமுதாயம், கலாச்சாரம், மதம் மற்றும் பொருளாதார பின்னணிகளைக் கொண்ட இந்த அனைத்து மக்களையும் நற்செய்தியால் எட்டுவதற்கு விசேஷமான திறமையும் சகிப்புத் தன்மையும் தேவைப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுலின் மிஷினரி பயணங்கள் அவனை அன்றைய உலகத்தின் எல்லைமட்டும் கொண்டு சென்றது போல், கல்கத்தாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்க” “எல்லா வகையான மக்களுக்கும் எல்லாமாக” ஆகியிருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 9:22; கொலோசெயர் 1:23.
அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிரசங்க வேலையை எப்படி செய்துவருகிறார்கள்? தங்களுடைய ஊழியத்தில் அவர்கள் எப்படிப்பட்ட மக்களையும் சூழ்நிலைகளையும் எதிர்ப்படுகிறார்கள்? அண்மையில் நான் ஒரு பயனியருடன் அல்லது ஒரு முழு நேர பிரசங்கியுடன் கல்கத்தாவுக்கு ஒரு நாள் விஜயம் செய்தேன். அந்தத் தனித்தன்மைவாய்ந்த அனுபவத்தை நீங்களும் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
விரிவான வித்தியாசப்பட்ட ஒரு பிராந்தியம்
சுறுசுறுப்பான அக்கறைமிகுந்த அந்த ஊழிய நாளின் முடிவில் நானும் என் நண்பரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல புறப்பட்டோம். பேருந்துக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கும்போது இந்த மாநகரில் அவரும் மற்ற பயனியர்களும் எதிர்ப்படும் சவால்கள் குறித்து பேச ஆரம்பித்தோம்.
“சரி, இங்கு முழுநேர ஊழியத்தை செய்யும் எவரிடமாவது, இங்கிருந்து வேறொரு சுலபமான பிராந்தியத்திற்குச் செல்ல விரும்புகிறாரா என்று கேட்டுப் பாருங்கள். இது குறித்து அவர் அதிக அக்கறையுடையவராயிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.”
அவர் சொன்னது சரியே. கல்கத்தாவில் வாழும் பயனியர்கள் தங்களுடைய வேலையை உலகத்திலேயே மிகுந்த அக்கறைக்குரிய வாழ்க்கைப் பணியாகக் கருதுகின்றனர். மாறுபாடுகள் மிகுந்த இந்த மாநகரில் அவர்களுடைய பிராந்தியம் விரிவான வித்தியாசப்பட்ட ஒன்று.
இந்த நகரில் இந்து மதம் மேலோங்கிக் காணப்பட்டாலும் சர்ச்சுகளும் முகமதியரின் மசூதிகளும் ஏராளம். அங்குமிங்குமாக ஒரு சில புத்தமத ஆலயங்களும் காணப்படுகின்றன. சில பகுதிகளில் உலகிலேயே பணக்காரர்களாக விளங்கும் சிலர் குடியிருக்கும் பிரமாண்டமான மாளிகைகள் காணப்படுகின்றன. அந்தப் பகுதிகளுக்குப் பக்கத்திலேயே மாதத்துக்கு 150 ரூபாய் (ஏறக்குறைய U.S. $12) போல் மிகக் குறைவாக சம்பாதிக்கும் பரதேசிப் பணியாட்களின் குடிசைப் பகுதிகளும் இருக்கின்றன. அவர்களுடைய பழக்கவழக்கங்களும், மொழிகளும், தோற்றங்களும் அவர்களுடைய மதங்களைப்போலவும் வாழ்க்கை நிலைகளைப்போலவும் வித்தியாசப்பட்டிருக்கின்றன.
இதன் மத்தியில்தான் ஏறக்குறைய நூறு சுறுசுறுப்பான ராஜ்ய பிரஸ்தாபிகளையுடைய யெகோவாவின் சாட்சிகளின் ஒரு சபை செழித்தோங்குகிறது. சவாலோ பெரியது, ஆனாலும் இங்குள்ள சாட்சிகள் மக்களுடைய தேவைகளுக்கேற்ப பிரதிபலிக்கத் தங்களை அமைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றனர்.
இந்தச் சமயத்தில்தான் 45-ம் எண்ணுள்ள பேருந்து எங்களுக்கு முன்னால் வந்து நின்றது. அது அவ்வளவு ஆள் நெருக்கமுடையதாய் இருந்ததால், “என்னால் பஸ்ஸில் ஏற முடியாது! என்றேன். எனக்குப் பின்னாலுள்ளவர்கள் என்னை அன்போடு தள்ள, நாங்கள் இருவரும் கைகளும் உடல்களுமாகிய அலைகளால் பேருந்துக்குள் அடித்துச் செல்லப்பட்டோம். நாங்கள் ஏறியதற்குப் பின்பும் கூடுதலாக பத்துபேர் ஏறினார்கள். அவர்கள் தேனீக்களைப்போல் நுழைவாயிலின் படிகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்தார்கள். நாற்பத்தாறு பேர் உட்கார்ந்து பயணம் செய்ய வேண்டிய அந்தப் பேருந்தில் என்னுடைய நண்பரோடு பேச ஆரம்பிப்பதற்குள் நூறு தலைகளுக்கு மேல் எண்ணிவிட்டேன்.
“இங்கு பேருந்துகள் எப்பொழுதுமே இப்படித்தான் இருக்குமா?”
“அவை அநேகமாய் நெருக்கடியாகத்தான் இருக்கும்,” என்று விளக்கினார் என் நண்பர், “ஆனால் செலவு குறைவு, எப்படியென்றால் ஒவ்வொரு நாளும் நாங்கள் ஏறக்குறைய 6 முதல் 9 மைல்கள் (10 முதல் 15 கி.மீ) பயணம் செய்து நகரின் தூர இடங்களுக்கும் சென்று பிரசங்கிக்க முடிகிறது.
“உங்கள் வீட்டுக்கு அருகாமையில் அடிக்கடி ஊழியம் செய்வது நல்லதல்லவா?”
“ஆம், முழுநேர ஊழியர்களாகிய எங்களில் சிலர் மற்ற பிராந்தியங்களிலுள்ள மக்களை நற்செய்தியால் எட்டுவதற்குத் தீர்மானித்திருக்கிறோம். எங்களுடைய பதிவுகள் கடந்த 50 ஆண்டுகளில் கல்கத்தாவில் பல சுற்றுவட்டாரங்களுக்கு நற்செய்தி செல்லவில்லை என்று காண்பிக்கிறது!”
என்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திலுள்ள சகல மக்களையும் சென்றெட்டுவது என்பது உண்மையிலேயே ஒரு பெரிய சவால், ஏனென்றால் மக்கள் தொகை அவ்வளவாக இருக்கிறது. ஒரு சமயம் கல்கத்தாவில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை அதே சமயத்தில் நியுயார்க் நகரின் மக்கள் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. அண்மைக் காலங்களில் அது அதிகரித்திருக்கிறது.
கல்கத்தா மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பஸ்டீஸ் என்றழைக்கப்படும் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். பஸ்டீஸ் என்பது, முழங்கை இடைவெளியில் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் குடிசைகளாகும். ஒவ்வொரு குடிசையும் மண் தரையும் மண்ணும் மாட்டுச் சாணமும் சேர்ந்து கட்டப்பட்ட சுவர்களும், சாணம் பூசப்பட்ட மரச்சட்டங்களும் களிமண் ஓடுகளாலான கூரையாலுமானது. ஒவ்வொரு குடிசையும் காற்று மற்றும் வெளிச்சம் உள்ளே வர வசதியற்றதாகவும் ஏழு, எட்டு பேருக்கு உறங்குவதற்கு இடமாகவும் இருக்கிறது. 150 பேருக்கு ஒரு தண்ணீர் குழாய் காணப்படுகிறது. அதிக காலமாக இருந்து வந்திருக்கும் குடிசைப் பகுதிகளில் அரசு ஒரு சில பொது கழிவுக் கூடங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறது.
இந்த பஸ்டீஸ் என்ற குடிசைப் பகுதிகளில் ஊழியம் செய்ய ஆரம்பிக்கையில் பெரும்பாலும் பிள்ளைகளாலான நூறு பேர் கொண்ட ஒரு கும்பல் எங்களோடு கூடவே வரும் காட்சி அசாதாரணமான ஒன்று அல்ல. ஒவ்வொரு வீட்டையும் சந்திப்பதற்கு முன்னால் தனக்கு முன்சென்று தன்னுடைய வருகையை அறிவித்து வந்த ஓர் இளைஞன் மீது எரிச்சலடைந்தவராய் ஒரு சாட்சி அந்த இளைஞனைப் பார்த்து அவனே மீதி பிரசங்கத்தைக் கொடுத்துவிடும்படி சொன்னார். இதைக் கேட்ட அந்த இளைஞன் நல்ல சுபாவமுடையவனாயிருந்ததால் சாட்சியிடமிருந்து துண்டுபிரதியை வாங்கி வார்த்தைக்கு வார்த்தை அதன் அளிப்பை செய்தது மட்டுமின்றி காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகையையுங்கூட அவர்களுக்கு அளித்தான்.
வித்தியாசமான மதத்தினரிடம் பேசுதல்
இம்மாநகரின் பாதி பஸ்டீஸ்களில் முகமதியர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நகர் வாழ் மக்களிடையே காணப்படும் ஒருவரையொருவர் பொறுத்துச் செல்லும் மனப்பான்மைதானே இப்படிப்பட்ட இடங்களில் வீடுவீடாகப் பிரசங்கிப்பதைக் கூடியகாரியமாக்குகிறது. இது பேரளவான முஸ்லீம் மக்கள் வாழும் நாடுகளில் கிடைக்காத ஒரு விசேஷ வாய்ப்பாக இருக்கிறது. இந்த மத பின்னணி கொண்டவர்களை அணுகுவதற்கு கல்கத்தா பயனியர்கள் விசேஷ அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்கள்
“மனிதனுடைய பிரச்னைகளை மனிதன் தீர்க்கமுடியாத நிலையிலிருக்கிறான் என்பதை எடுத்துக்காட்ட சிலர் உள்ளுர் பிரச்னைகளைக் குறிப்பிடுகிறார்கள்,” என்றார் என் நண்பர். “மற்றவர்கள் மத வெறுப்புணர்வை மேற்கொள்ள ஒரே கடவுளில் நம்பிக்கை (திரித்துவம் அல்ல) போன்ற பொதுவாக நிலவும் கருத்துக்களைப் பயன்படுத்துகின்றனர், அல்லது ஆரம்ப பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்ற பொதுவான நம்பிக்கை சம்பந்தமான குறிப்புகளை பேசுகின்றனர்.”
“பலன்கள் என்ன?” என்று நான் வியந்தேன்.
“ஒரு பைபிள் படிப்பை விரும்புவோர் வெகு சிலரே என்பதைக் காண்கிறோம். அவர்களுடைய மனதில் இருப்பதெல்லாம் பிழைப்புக்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பதும் வாழ்க்கையில் தங்கள் நிலைகுறித்து போராடுவதுமாகும். அதுவும் கல்வியறிவு சற்று இருந்தால், அந்த மிகக் குறைந்த கல்வியறிவும் சேர்ந்து அவர்களுக்கு நற்செய்தியை ஏற்றுக்கொள்வதை அதிக கடினமாக்குகிறது.
நகரில் இந்துமதக் கருத்துக்கள்தான் அதிகமாகக் காணப்படுகிறது.குறிப்பாக வங்காள மக்கள், 19-ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவரும், பிரசங்கித்து வந்தவருமானராமகிருஷ்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காண்பிக்க விரும்புவார்கள், “ஜோட்டோ மொத், டோட்டோ பொத்,” என்பதன் அர்த்தம் எல்லா மதங்களும் ஒரே இலக்கினிடமாக வழிநடத்தும் வித்தியாசமான சாலைகள்தான் என்பது.
“இந்தக் கருத்தை மேற்கொள்வது கடினமா?” என்று கேட்டேன்.
“இல்லை, அந்த நபர் திறந்த மனமுடையவராயிருப்பாரானால் கடினமல்ல. நன்கு அறியப்பட்ட வித்தியாசங்களை நாங்கள் சாதுரியமாக எடுத்துக்காட்ட முடியும். உதாரணமாக இந்தப் பூமியிலேயே பரிபுரண மனிதராக என்றென்றும் வாழக்கூடிய பைபிள் ஆதாரமுடைய நம்பிக்கையை எடுத்துக்காட்டலாம். அல்லது எதிரிடையான கருத்துக்கள் ஒரே சமயத்தில் உண்மையாக இருப்பது கூடாத காரியம் என்பதைக் குறிப்பிடலாம். உதாரணமாக ஒன்று அழியக்கூடாத ஆத்துமா இருக்கவேண்டும், அல்லாவிடில் அழியக்கூடியது ஒன்று இருக்க வேண்டும்.”
“அது நியாயமான ஒரு விவாதம்.”
“ஆனால் மக்கள் அநேகமாய் நாங்கள் சொல்லுவதை அதிக கவனத்துக்குரிய ஒன்றாக எடுத்துக்கொள்வதில்லை. நாம் என்ன நம்புகிறோமோ அதையே அவர்களும் நம்புவதாக உறுதியுடன் சொல்லிவிடுகிறார்கள். இந்த மனநிலை இருப்பதால், பலன்தரத்தக்க ஒரு கலந்தாலோசிப்பை கொண்டிருக்க முடியாமல் போகிறது. எனவே அவர்களிடம் ஒரு சில பிரசுரங்களை விட்டுச்செல்ல முயற்சி செய்து அடுத்த வீட்டுக்குச் சென்றுவிடுகிறோம்.”
“இந்து மக்களில் கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் ஆழமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையவர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா?”
“ஆம், ராமகிருஷ்ணாவின் சீடர்களுடன் கூட்டுறவு கொண்டு தெளிவுபெற்றதாக உணர்ந்த ஓர் இளம் மனிதனைப் பயணியர்கள் சந்தித்தார்கள்,” என்று என் நண்பர் சொல்ல ஆரம்பித்தார். “அவன் பத்திரிகைகளை ஏற்றுக்கொண்டான். இரண்டு நாள் கழித்து மறுபடியும் சந்திக்கப்படுவதற்கு முன்பு அவற்றை வாசித்துவிட்டார். பல கலந்தாலோசிப்புகளுக்குப் பின்பு அவன் விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை என்ற சிறு புத்தகத்திலிருந்து படிப்பு எடுக்க ஆரம்பித்தான். படிப்புக் கேள்விகளுக்காக விடைகளையும் குறிப்புகளையும் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதிக்கொள்வான். ஐந்து மாதத்துக்குள் இவன் முழுக்காட்டுதல் பெற்று தான் பெற்ற அறிவை மற்றும் பலருடன் கலந்து கொள்வதற்காக ஒரு துணைப்பயனியராக சேவை செய்கிறான்.”
“அது ஓர் அருமையான அனுபவம்! ஆனால் அவனுடைய குடும்பத்தின் பிரதிபலிப்பு என்னவாயிருந்தது?”
“அவன் விதவையான தன்னுடைய தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்து வந்தான், அவர்கள் இருவருமே வைராக்கியமுள்ள இந்துக்கள். அவர்களுங்கூட அக்கறை காண்பிக்க ஆரம்பித்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். விரைவிலேயே அயலகத்தார் அந்த ஸ்திரீயில் மாற்றங்களைக் காண ஆரம்பித்தனர். அதனால் வேறு மூன்று பேர் அக்கறை காண்பிக்க ஆரம்பித்தார்கள். அவனுடைய தாய் இப்பொழுது முழுக்காட்டுதல் பெற்றுவிட்டாள், அவனுடைய பாட்டிக்கு இப்பொழுது 70 வயது, ஆதலால் சற்று மெதுவாகவே படிக்கிறாள், விரைவில் முழுக்காட்டுதல் பெற்றிடும் நம்பிக்கையுடையவளாயிருக்கிறாள்.”
என்னுடைய நண்பர் இந்தக் கதையை விவரிப்பதில் காண்பித்த உற்சாகத்தைப் பார்த்தால், இப்படிப்பட்ட அனுபவங்கள் பயனியர்களுக்கு உண்மையிலேயே ஊக்கமளிப்பவையாயிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டேன். சில சமயங்களில் முன்னேற்றம் இல்லாததுபோல் தென்படும், ஆனால் யாராவது ஒருவர் அளவுகடந்த அக்கறை காண்பிக்க ஆரம்பிக்கிறார். இப்படியாக அக்கறையாக இருக்கக்கூடிய மற்றவர்களைக் கண்டுபிடிக்கும் தங்கள் பணியில் தொடர்ந்து செல்ல பயனியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மொழித் தடைகளைத் தாண்டிச் செல்லுதல்
பேருந்திலிருந்த கூட்டம் குறைய ஆரம்பித்தது, நானும் சில ஆங்கில வார்த்தைகளைக் கேட்க ஆரம்பித்தேன். “டிக்கட், அப்னார் டிக்கட்,” என்று சீருடையணியாத ஒரு சிறிய மனிதன் தன் வலது கையில் வண்ண ரூபாய் நோட்டுகளை விசிறி போல் அடுக்கிக்கொண்டும் தன் தோளில் ஒரு தோல் காசுப்பையை மாட்டிக் கொண்டும் தன்னை அந்தப் பேருந்து நடத்துநனாக அடையாளங் காட்டினான். நான் பணத்தை நீட்ட, இந்திய உபசரிப்பு முறை கொண்ட என் நண்பர் அதை அனுமதிக்கவில்லை. தன்னுடைய கைப்பெட்டியை என் கையில் கொடுத்து சில்லறை எடுக்க தனது சட்டைப் பாக்கட்டில் தன் கையை விட்டார்.
“இதில் என்ன வைத்திருக்கிறீர்களோ?” என்றேன். “ஒரு டன் எடை இருக்கும்போல்!”
“பைபிளின் இந்திய பதிப்புகள் சாதாரணமாகப் பெரியவை. கல்கத்தாவில் ஊழியத்துக்கு முழு ஆயத்தமாகச் செல்ல நாங்கள் மூன்று மொழி பைபிள்களை எடுத்துச் செல்ல வேண்டும்—வங்காளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம்—அதோடு பைபிள் பிரசுரங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.”
“நீங்கள் ஒரு ஆங்கில பைபிளை மட்டும் எடுத்துச் சென்று அதிலிருந்து வசனத்தை மொழிபெயர்த்திடலாமே.”
“அப்படியும் செய்யலாம். என்றாலும் வங்காளம் அல்லது ஹிந்தி வாசிக்கும் அநேகர் தங்களுடைய சொந்த மொழியில் முழு பைபிளையும் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு பிரதியைக் காண்பித்து அதிலிருந்து அவருக்கு வாசித்துக் காண்பிப்பது மிகவும் நல்லது என்று உணருகிறோம். நாங்கள் எடுக்கும் கூடுதலான முயற்சியும் எடையும் வீணல்ல.”
வித்தியாசமான மொழி பேசும் மக்கள் தொகுதியினருக்கேற்ப காரியங்களை அமைத்துக்கொள்வது பயனியர்களை சுறுசுறுப்பாக வைக்கிறது. இந்த மூன்று முக்கிய மொழிகளில் திறம்பட்ட சாட்சிகொடுக்க இவற்றை தாங்களே கற்றுக்கொள்கிறார்கள். சிலர் ஐந்து அல்லது ஆறுமொழிகளைப் பேசும் விசேஷ திறமையுடையவர்களாயிருக்கின்றனர். தங்களுடைய மொழியைப் பேச முயற்சி செய்யும் இவர்களுடைய முயற்சிகளை அந்தப் பிராந்திய மக்கள் போற்றுகின்றனர், அவர்கள் நீண்ட நேரம் செலவழித்து மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான பலன் அவர்களுக்குக் கவனமாக செவி கொடுக்கும் ஆட்களில் காணப்படுகிறது.
சவால் மிகுந்த பிராந்தியத்தில் மகிழ்ச்சியைக் காணுதல்
அப்பொழுதுதான் எங்களுடைய பேருந்து பழுதுபட்ட தேய்ந்துபோன தடைக் கருவியின் உதவியால் ஒரு குலக்கல் குலுக்கி நின்றது.
“ஏன் இங்கே இறங்க வேண்டும்?” என்று கேட்டேன். “நீங்கள் இங்கே வசிப்பதில்லையே.”
“இல்லை, இது ஒரு பஞ்சாபி பிராந்தியம். உங்களுக்குத் தெரியுமா இவர்கள் மிகச் சிறந்த தேனீர் தயாரிப்பார்கள். ஒரு கப் தேனீர் பருக விரும்புவீர்கள் என்று நினைத்தேன்.”
தேனீர் மிக நன்றாய் இருந்தது.
“இந்த இடம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.
“ஒவ்வொரு பிராந்தியமாக வேலை செய்துவரும் பயனியர்களாகிய நாங்கள் அந்தந்த இடத்தின் விசேஷம் என்ன என்பதையும் மிகச் சிறந்ததும் விலை மலிவானதுமான கடைகள் எது என்பதையும் தெரிந்து கொள்கிறோம். உங்களுடைய வயிறு பலமாக இருந்தால் நாம் போய் சில உணவு வகைகளை ருசி பார்ப்போம்.”
அதிக ஜாக்கிரதையாயிருக்கும் என் நண்பர்களில் சிலருடைய ஆலோசனைகள் என் நினைவுக்கு வந்தது. அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்தத் தேனீரை உண்மையிலேயே அனுபவித்தேன். பயனியர்கள் அதிக சமநிலையுள்ளவர்களாயிருக்கிறார்கள் என்பதையும் அவரவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப மிகச் சிறந்ததைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் என்னால் காண முடிந்தது. முதலில் தடைகளாகக் காணப்பட்ட காரியங்களுங்கூட மேற்கொள்ளப்பட்டு அவற்றில் மகிழ்ச்சி காண முடியும்.
“உங்களுடைய வேலையில் நீங்கள் மகிழ்ச்சி காணாத ஏதாவது காரியங்கள் உண்டா?” என்று கடைசியாகக் கேட்டேன்.
என்னுடைய நண்பர் இந்தக் கேள்வியை சற்று சிந்திக்க ஆரம்பித்தார். கோடைக் காலத்துக்கும் மழைக்காலத்துக்கும் நாங்கள் பழகிக்கொள்வது கடினம் என்று நினைக்கிறேன். நீங்கள் பயனியராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருக்கும் பிரச்னை அது. உஷ்ணமும் ஈரப்பதமும் அவ்வளவு அதிகமாக இருப்பதால் பைபிள் வசனத்தை வாசிக்கும்போது உங்கள் வியர்வை மூக்கின் நுனியிலிருந்து பைபிளின் பக்கங்களில் கொட்டுகிறது. இருந்தாலும் நாங்கள் அதை பொருட்படுத்துவதில்லை. ஏன், மிகக் கடுமையான கோடை காலமாகிய மே மாதத்தில் தானே எங்களுடைய பிரசங்க வேலையில் மிக அதிகமான துணைப்பயனியர்கள் சேர்ந்து கொள்கிறார்கள்.”
அந்த நாளையும் என் நண்பருடன் நான் கொண்டிருந்த உரையாடலையும் மீண்டும் எண்ணிப்பார்க்கும்போது, இவ்வளவு வித்தியாசமான சூழ்நிலைகளுக்கும் மக்களுக்கும் ஏற்ப அவர்களை நற்செய்தியால் சென்றெட்டுவதற்காக தங்களை அமைத்துக்கொள்ளும் இந்தக் கல்கத்தா பயனியர்களின் திறமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. உண்மைதான், உலகமுழுவதுமுள்ள பயனியர்கள் இதைத்தான் செய்கிறார்கள். ‘எல்லா வகையான மக்களுக்கும் எல்லாமாக இருப்பதில்’ அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறார்கள்.—அளிக்கப்பட்டது. (w87 2⁄15)
[பக்கம் 27-ன் வரைப்படம்/படம்]
கல்கத்தா
இந்தியா